தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
2. சங்க இலக்கியத்தில் களவு உணர்த்தும் சிறப்புகள்
முனைவர் ச. க. அழகாம்பிகை
தமிழாய்வுத்துறை, உதவிப்பேராசிரியர்,,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர், நாமக்கல் - 638182.
முன்னுரை
சங்க இலக்கியம் பழந்தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி. சங்க இலக்கியங்கள் அள்ள அள்ளக் குறையாத கருத்துக்களையும், தகவல்களையும் கொண்ட பழந்தமிழினச் சான்றுகளாக அமைந்துள்ளது. மேலும் இலக்கிய வாழ்வில் முக்கிய இடமாகக் களவு வாழ்க்கை நடைபெறுகிறது. இதன் பின்னரே கற்பு என்ற திருமண வாழ்க்கையை உணர்த்துவதாகும். எனவே இந்த ஆய்வின் சிறப்பாகக் களவு வாழ்க்கை பற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகிறது.
வாழ்க்கை இலக்கியம்
மனிதனின் இயல்பான உணர்ச்சிகளும் செயல்களும் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கை ஆண், பெண் இருபாலருக்கும் இடையே உருவாகும் காதலையும் அதன் அடிப்படையிலான குடும்ப உறவுகளையும் அவ்வுறவுகளைப் பேணுகிற வீரச்செயல்கள், புகழ் ஆகியவற்றையும் கொண்டது. காதல் தொடர்பான ஒழுக்கங்கள் அக இலக்கியங்கள் ஆயின. வீரம், புகழ் பற்றியவை புற இலக்கியங்கள் ஆயின. இவ்விரு வகையும் சங்க இலக்கியம் என்ற பேழையை அலங்கரிக்கின்றன.
கற்பின் இலக்கணம்
களவு நெறியில் ஒழுகி அன்புரிமை பூண்ட தலைமகன் தன்பால் அன்பு கொண்ட தலைவியைப் பெற்றோர் கொடுக்கப் பலரறிய மணந்து வாழும் மனைவாழ்க்கைதான் கற்பு என்று போற்றப்படுகிறது. அக்கற்பு வாழ்க்கை களவொழுக்கம் வெளிப்படுதல், களவொழுக்கமின்றி தமரானே பெறுதல், இவை முதலாகிய இயற்கை நெறியிற் தப்பாது மகிழ்தல், புலத்தல், ஊடல், ஊடல் தீர்தல், பிரிதல் என்று சொல்லப்பட்ட இவற்றொடு கூடி வருவது கற்பென்று சொல்லப்படுவது.
“மறைவெளிப் படுதலுந் தமரிற் பெறுதலும்
இவைமுத லாகிய இயனெறி திரியாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்து கற்பெனப் படுமே”
என்று தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார்.
கற்பு சொல் திறம்
தொல்காப்பியர் கற்பு என்ற சொல்லைக் களவியல், கற்பியல் என்ற பகுதிகளில் ‘கற்பொழுக்க வாழ்க்கை’, ‘பெண்ணின் பண்பு’, ‘திருமணம் என்ற சடங்கு’ நிகழ்ச்சியாகவும் கொண்டுள்ளார்.
இம்மூன்றுமே ஒன்றினை ஒன்று பிரிக்க முடியாத நெருக்கமான உறவினைக் கொண்டவை. திருமணம் என்ற சடங்குடன் ஏற்பட்ட கற்பொழுக்க வாழ்க்கையில் பெண் கற்புப்பண்பு உடையவளாக இருக்க வேண்டும். எனவே திருமணச் சடங்கும், அதில் தொடங்கும் வாழ்க்கையும் அதில் மேற்கொள்ள வேண்டிய பெண்ணின் பண்பும் ஒரே சொல்லில் குறிக்கப்பட்டுள்ளமை மூன்றினுடைய ஆழமான பொருளுக்குத் தொல்காப்பியர் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
கற்பின் விளக்கம்
“களவுநெறி கற்பாக திருமணமாக முடியுங்கால் அது ‘நன்னெறி’ எனப் போற்றப்படும்” என்கிறது அகத்திணைக் கொள்கைகள்,
ந. சுப்புரெட்டியார், “கற்பென்பது வளர்ச்சியடைந்த சடங்குகள் தோன்றிவிட்ட ஆண்வழித் தலைமை நிலைபெற்ற சமூகத்து மணமுறையைக் குறிப்பதாகும்” என்பார்.
நா.சிலம்பு செல்வராசு.
“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளக்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பதுக் கொள்வதுவே”
என்று விதி செய்துள்ளார்.
ஆண்மகன் தனக்குக் கொள்ளுதற்குரிய தலைவியைக் கொடுத்தற்குரிய சுற்றத்தார் கொடுப்ப, கரணத்தோடு பொருந்தி மணம் செய்து கொள்ளுதலைக் ‘கற்பு’ என்று கூறியுள்ளார்.
கற்பு உணர்த்தும் சிறப்புகள்
தொல்காப்பியர் கற்பு என்பதைப் பெண்ணின் பண்பாக உணர்த்தும் போது உள்ளத்தோடும் அதாவது, படி - படிப்பு என்பதுபோல், கல் - கற்பு என்கிற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது. அன்றியும் கற்பெனப்படுவது சொற்றிறம் பானம் என்கிற வாக்கியப்படி பார்த்தால் ‘கற்பு’ என்பது சொல் தவறாமை. அதாவது, நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாமல் நடப்பது என்கின்ற கருத்துக்கள் கொண்டதாக இருக்கின்றது.
பகாப்பதமாக வைத்துப் பார்த்தால், மகளிர் நிறை என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்பது பெண்களையேக் குறிக்கும் பதமாக எப்படி ஏற்பட்டது என்பது விளங்கவில்லை. நிறை என்கின்ற சொல்லுக்குப் பொருளைப் பார்த்தால் அழிவின்மை, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற பொருள்களே காணப்படுகின்றன. கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது என்பதற்குத் தக்க ஆதாரம் கிடைக்காவிட்டாலும் ‘அழவில்லாதது’, ‘உறுதியுடையது’ என்கின்ற பொருள்களே காணக்கிடக்கின்றன.
பாரதியார் உணர்த்தும் கற்புத்திறன்
‘கற்பு’ என்னும் பெயரில் பண்பு ஒன்றினைக் குறிப்பிட்டு, பண்புக்கு மிகுந்த மதிப்பளித்து, மாந்தர் போற்றி வருகின்றனர். இலக்கியங்களும் அப்பண்பினை மிகைப்படப் புகழ்ந்துள்ளது. கற்பென்னும் அருங்குணம், மாதரோடு மட்டும் இணைத்துச் சொல்லப்படுகிறது. பெண்ணினத்தை அடிமைப்படுத்தி தம் இச்சைப் பொருளாக வைத்திடக் கருதி, ஆடவர் அழகுறப் பின்னி அமைத்த ஒரு சூழ்ச்சி வலையே இதுவெனக் கண்டார். அதனால், கற்பு நிலையினும் ஆடவரும் மகளிரும் ஒரு நிகராகவே வாழ வேண்டும் என்று மொழிந்துள்ளார்.
“கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அ‘து பொதுவியல் வைப்போம்
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம்”
பெண் விடுதலைக்கு கும்மி என்னும் பாடலில் பாடப்பட்டுள்ளது.
பாரதியார் கவிதைகள் இ. சுந்தரமூர்த்தி கற்பு என்னும் மாண்பு இயல்பாய் அமைவதே அன்றி எந்த வற்புறுத்தல் காரணமாகவும் அமைவது அன்று என்பதை,
“குலத்து மாந்தர்க்குக் கற்பியல் பாகுமாம்
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”
என்ற பாடல் வரிகளால் அறியலாம்.
இலக்கியம் உணர்த்தும் கற்புத்திறன்
திருமணம் என்பது இன்பந்தரும் ஓர் இனிய சொல். இச்சொல் தங்கள் செவிகளில் கேட்டதுமே ஆண், பெண் இருபாலர் உள்ளத்திலேயும் ஒருவித இனிய உணர்வு, பூரிப்பு, புத்துணர்ச்சி, பழைய இனிய நினைவுகள் புதுக்கனவு எழாமல் இருப்பதில்லை.
திருமணம் என்ற சொல்லை நாம் திரு மணம் எனப் பிரிக்கலாம். மணம் என்பதே தமிழரின் பழைய மரபுதான். ஒரு கன்னிப் பெண்ணின் கூந்தலிலே மலர் சூட்டி அவளை ஊரும் உறவும் அறியத் தன் மத்திற்கு இனியவளாக, வாழ்க்கைத் துணைவியாக ஒருவன் ஏற்றுக் கொள்வதனாலேதான் மமண், திருமணம் என்ற பெயர்கள் அச்சடங்கிற்கு ஏற்பட்டன. இவ்வாறு கணவனும் மனைவியுமாக வாழத் தொடங்கும் நிகழ்ச்சிக்குத் திருமணம் என்று பெயர் வைத்தமை எண்ணி மகிழ்வதற்குரியதாகும்.
இருமணம் இணையும் மணவினை ‘திருமணம்’ என்ற சொல்லால் சுட்டப்படுகிறது. இன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் பெரும்பகுதியினர் திருணமத்தைக் கல்யாணம் என்பர் கல்யாணம் என்பதற்கு மங்கலம் என்று பொருள். திருணமத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் கடி, மணம், மன்றல், வதுவை, வதுவை மணம், வரவு என்பவையாகும்.
முடிவுரை
இலக்கியத்தின் வாழ்க்கைச் சிறப்பினை உணர்த்தும் பொருட்டாகக் களவு வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை இந்த ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.