தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
22. பாரதியாரின் தேசிய விடுதலைச் சிந்தனைகள்
சு. கருப்புச்சாமி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கே.எஸ். ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.
முன்னுரை
உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியான வரலாறு உண்டு. ஒவ்வொரு நாடும் ஏதோ ஒருவகையில் மேம்பாடு உடையதாக இருக்கும். சிலநாடுகளுக்கு மோசமான வரலாறும், சில நாடுகளுக்குச் சிறந்த வரலாறும் இருந்தே தீரும் என்பது உண்மை. பண்டைக்காலத்தில் நமது பாரதநாடு நாகரீகத்திலும், பண்பாட்டிலும், வியாபாரத்திலும், ஆன்மீகத்திலும் மிகச் சிறப்பானதொரு முன்னேற்றத்தைக் கொண்டிருந்தது எனலாம்.
ஆனால் கடல் வழியாக நமது நாட்டிற்கு போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் போன்றவர்கள் வியாபாரம் செய்வதற்காக வந்து சேர்ந்த பின்பு ஆங்கிலேயர்கள் பல்வேறு உத்திகளின் மூலம் படிப்படியாக நமது நாட்டைத் தங்கள் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்தனர். நாடு சுதந்திரம் அடைவதற்காகப் பல்வேறு பகுதிகளில் விடுதலப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இக்காலகட்டத்தில் தோன்றிய பாரதியார் நாட்டின் விடுதலைக்கான போராட்ட எழுச்சியை மக்கள் மனதில் தீவிரப்படுத்தும் விதமாக தமது கவிதைகளிலும், கட்டுரைகளிலும் மற்றும் பத்திரிகைகளிலும் எழுதி வந்தார். சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் தமது படைப்புகளில் மையமாகக் கொண்டதன் மூலம் அவர் நாட்டின் விடுதலைக்குத் தூண்டுகோலாக இருந்ததை அறியலாம். அவருடைய இக்கருத்தாக்கங்கள் இந்த இயலில் தேசிய விடுதலையும் சமூகமும் எனும் நிலையில் ஆராயப்பட்டுள்ளன.
பாரத நாட்டின் மேன்மை
நமது முன்னோர்களின் எண்ணத்தில் ஆயிரக்கணக்கில் கருத்துக்களும் சித்தாந்தங்களும் பல்கிப் பெருகியதன் மூலம் நமதுநாடு, உயர்நிலை பெற்றது என்பதனைப் பாரதியார்,
“முந்தையராயிர மாண்டுகள் வாழ்ந்து
முடிந்தது மிந்நாடே - அவர்
சிந்தையிலாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே”
என்னும் செய்யுளடிகளின் மூலம் உணர்த்துகிறார். மேலும் இத்தகைய பெருமை மிகுந்த தேசம் நமது வணக்கத்திற்கும் உரிமைக்கும் உடையது என்றும் இதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதையும்,
“வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?”
என்னும் பாடலடிகளில் வலியுறுத்துகின்றார்.
அதாவது இந்திய நாகரீகம் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்ததைப் பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. மேற்காசிய நாடுகளுக்கும் நமது நாட்டிற்கும், குறிப்பாகத் தமிழ் நாட்டிற்கும் இடையே நெருங்கிய நாகரீகமும் பண்பாட்டுத் தொடர்பும் இருந்ததாக அறியமுடிகிறது. சான்றாக, நமது நாட்டின் பெயரை யார் சொன்னாலும் அவர் வறுமை பற்றிய அச்சத்தை நீக்கிப் பகையை வெற்றி கொள்வர் என்றும், நிலவளத்திலும், நீர் வளத்திலும், பயிர் வளத்திலும் சிறந்தநாடு என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். மேலும்,
“தோட்டத்திலே அடங்காத நிதியின்
சிறப்பினிலேயுயர் நாடு”
என்னும் வரிகளின் மூலம் நாட்டின் செல்வச் செழிப்பினையும் உணர்த்துகின்றார்.
பாரததேசம் என்று தோன்றியது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூட அறியமாட்டார்கள் என்றும், இந்தியா என்ற பெயரை உச்சரித்தாலே கணக்கிலடங்காத நன்மைகள் விளையும் எனவும் கூறுகிறார். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் மாபெரும் இளைஞர்கள் உலகமே அஞ்சக்கூடிய வகையில் போர்க்குணமும் மாண்பும் உடையவர்கள் என்றும் கூறுகின்றார். அதாவது, “தமிழர் மட்டுமின்றி நம்நாட்டு மக்களனைவரும் வீரர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்று உலகிற்கு உணர்த்தியவர் பாரதியார்” ஆக, பாரதியார் பாரதநாட்டின் சிறப்பினை எடுத்தியம்புகிறார்.
தேசிய இயக்கம்
பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்திய நாடு ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் பல்வேறு இயக்கங்கள் தேசிய அளவில் நடைபெற்று வந்தன. பாரதியார் அரசியல் விடுதலையுடன் சமுதாயம், பண்பாடு போன்ற துறைகளில் நமது நாடு தன்னிறைவு பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதையும், தேசிய விடுதலைக்காகப் பாடுபட்ட பாரதி எவ்வளவோ துன்பங்கள் நேரிட்ட போதிலும் தேசிய இயக்கத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டதையும் உணரலாம்.
பாரத நாட்டைக் கடவுளாகப் பாவித்து நாடு எழுச்சி பெற உறக்கத்திலிருந்து விழித்தெழுமாறு பாரதியார் வேண்டுகிறார். இதனை,
“என்ன தவங்கள் செய்தெத்தனை காலம் ஏங்கும் நின்னருட் கோழையும் யாமே? இன்னமும் துயிலுதியேலிது நன்றோ? இன்னுயிரே பள்ளியெழுந்தருளாயே!”
மேலும் சுதந்திரம் சர்வநிச்சயம் என்று உறுதிபடக் கூறுகிறார். தேசியக் கொடியைப் பற்றிப் பாடும் போது பாரததேவியின் கொடி வெற்றிக்கொடி எனவும், வைரம் பாய்ந்தகொடி எனவும், கெட்டவர்களை நலிவடையச் செய்யும் கொடி எனவும் கூறுவதை,
“… … … … … அடிபணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றாவயிரக் கொடி”
என்னும் பாடலடிகளில் அறியலாம்.
அடிமைத்தளையில் கட்டுண்டு கிடந்த இந்திய மக்களின் மனதில் தோன்றிய விடுதலை உணர்வு மங்கிப் போகாமல் இருக்கப் பாரததேவியை வேண்டுகிறார். மேலும், அந்நிய ஆதிக்கத்தால் சீர்கேடடைந்த உயர்வான வாழ்க்கை முறையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பதை,
“இன்று புதிராயிரக்கின்றோமோ? முன்னோர் அன்று கொடு வாழ்ந்த அருமையெலாமோராயோ?”
என்னும் பாடலடிகளின் மூலம் தன்னுடைய சுதந்திர தாகத்தை வெளிப்படுத்துகின்றார்.
பாரதியார் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு, சென்னை திரும்பிய பிறகு திலகரின் தீவிரவழியை ஆதரித்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். சுயராஜ்ஜிய தினத்தைச் சென்னையில் கொண்டாடிய போது அது சமயம் நடந்த ஊஎவலத்தைத் தலைமை தாங்கி நடத்தியதிலிருந்து இதனை அறிய முடிகிறது.
மேலும்,
“கூட்டம் வானதிரும் ‘வந்தேமாதர’ கோஷத்திடையே கலைந்தது. இவ்வளவு சுதந்திர உணர்ச்சி வேகம் இருந்தும் கூட்டத்தில் களேபரமில்லை, கூச்சலில்லை, ஆர்ப்பாட்டமில்லை. அவ்வளவு அமைதியாக நடந்தது. லண்டன் ட்ரபால்கர் சதுக்கத்தில் கூட இவ்வளவு ஒழுங்காகக் கூட்டங்கள் நடப்பதில்லை”
என்று மற்றவர் வியக்கும் வண்ணம் தேசிய இயக்கத்தை நடத்திச் சென்றவர் பாரதியார்.
தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் புதுச்சேரியிலும் அவருடைய தேசபக்தி சுடர்விட்டு எரிந்தது. அங்கு ‘இந்தியா’ பத்திரிகையைச் சில காலம் நடத்தினார். அதில் அரசியல் கட்டுரைகள் அவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டன. பாரதியைப் பொறுத்தவரையில் அரசியலோடு நின்றுவிடவில்லை. பாரதநாட்டின் பண்பாடு, சமயம், சமூகம், கலை, மொழி ஆகியவைப் பற்றியும் எழுதியிருக்கிறார். ஜனங்கள் இடத்தில் பொதுவாயுள்ள தீயபழக்கங்கள், ஜனங்களுக்குள் வழங்கி வரும் பழமொழிகள், கர்ணபரம்பரையாகச் சொல்லப்பட்டு வரும் கதைகள், பாட்டுகள், இடிந்த கோட்டை கொத்தளங்கள், சரித்திரங்கள், மங்கிப் போன ராஜகுலங்கள், யுத்தவீரரின் குணங்கள், நவீன நிலைக்கு ஏற்றபடி இயற்றப்பட்ட நாடகங்கள், கவிதைகள், விநோதக் கதைகள் ஆகிய விஷயங்களைப் பற்றிய குறிப்புகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள் பல இந்தியாவில் வெளிவந்தன என்பதும் மேலே கூறப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததை அறியலாம்.
தேச விடுதலையில் தீவிரவாதத் தன்மையை ஆரம்பத்தில் ஆதரித்தவர் பாரதியார். மகாத்மாகாந்தி பல சத்தியாக்கிரக இயக்கங்களை நடத்தி வெற்றி கண்டு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அவரது அகிம்சா வழிமுறையைப் பல தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். அப்போதுதான் இந்திய அரசியலில் காந்தியுகம் தொடங்கியது. பாரதியும் இந்தச் சமயத்தில்தான் காந்தியின் அகிம்சை வழியைப் போற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முடிவுரை
பாரதியார் கவிஞராகவும், அரசியல்வாதியாகவும், பத்திரிகையாளராகவும் விளங்கினார். உண்மையான கவிஞன் தேசப்பற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டும் என விரும்பினார். தேசவிடுதலையின் மீது நாட்டம் சமூகத்தின் மீது நாட்டம் போன்ற சமுதாய முன்னேற்ற கருத்துக்களை ஒரு இலக்கியவாதி கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் பாரதியார். தேசவிடுதலையின் மூலமே சமூகம் முன்னேற்றம் அடையும் என நம்பி தேசிய விடுதலையும் சமூகமும் என்ற இயலில் பாரதநாட்டின் முற்காலப் பெருமைகளை எடுத்துரைக்கும் பாரதியார் அந்தப் பெருமைகளெல்லாம் இழந்து ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் நாடு அடிமைப்பட்டது என்றும், அடிமைத் தளையை நீக்க விடுதலை வேள்வியில் தேசியத் தலைவர்களின் பங்களிப்புப் பற்றியும் எடுத்துரைக்கிறார். தமது தேசீய கீதங்கள் பாடல்கள் மூலம் மக்களின் உள்ளத்தில் விடுதலை உணர்வைத் தட்டியெழுப்பி தாம் பணியாற்றிய பத்திரிகைகளின் வாயிலாக ஆங்கிலேயருக்கு எதிராகச் சமரசமற்ற கருத்துக்களையும் அஞ்சாமல் வெளிப்படுத்தினார்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.