தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
24. தமிழ் இலக்கியங்களில் இராமாயணச் சிந்தனை
நா. கீதா
கௌரவ விரிவுரையாளர்,
அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம்.
முன்னுரை
“தர்மத்தின் வாழ்வுதன்னை சூதுகவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்’
என்ற உயர்சிந்தனையை உள்ளடக்கியது ஒப்பற்ற இதிகாசமாகிய இராமாயணம் எனலாம். தமிழர் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் பிரதிபலிப்பவையாகவும் திகழ்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் உலகில் மக்களுக்கு நற்பண்புகளைப் போதிக்கும் விதமாக இராமாயணக் கதைகளும் கதை நிகழ்வுகளும் பல்வேறு இலக்கிய வடிவங்களில் வழங்கப்பட்டு வருகின்றன எனலாம். இராவணனாகிய பெருந்தீமையைஅழிக்க நற்பண்பினனாகிய இராமன் அவதாரமெடுத்தான் என்பர். எத்தகையப் பெருந்தீங்கு தழைத்தோங்கினாலும் இறுதியில் நன்மையே வெல்லும் என்பர். வன்கொடுமைகள் பெருகிஅகப்புற ஒழுகலாறுகள் பேணப்படாத இக்காலச் சுழலுக்கும் இக்கருத்தானது பொருந்தும் எனலாம்.
தர்மத்தையும். அறச்சிந்தனையையும் போதிக்கும் இராமாயணக் கதை நிகழ்ச்சிகள் சங்ககாலந்தொட்டு இக்காலம் வரையிலும் பல்வேறு இலக்கிய வடிவங்களில் இடம் பெற்றுள்ளன. இதைப் பற்றி இக்கட்டுரையின் வழியாகக் காண்போம்.
சங்க இலக்கியத்தில் இராமாயணச் செய்திகள்
சங்க இலக்கியங்களாகிய புறநானூறு, அகநானூறு, பரிபாடல், கலித்தொகைப் பாடல்களில் இராமாயணக் குறிப்புகள் காணப்படுகின்றன.
புறநானூறு
“கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகையரக்கன் வவ்வியஞான்றை
நிலஞ்சேர் மதரணிகண்டகுரங்கின்
செம்முகப் பெருங்கிளையிழைப் பொழிந்தாஅங்கு
அறாஅவருநகையினிதுபெற்றிகுமே” (புறநானூறு-378)
என்ற இப்பாடலில், சீதையை இராவணன் பர்ணகசாலையுடன் தூக்கிச் செல்லும் போது, சீதையினுடைய அணிகலன்களைக் கழற்றிக் கீழே தூக்கி வீசுகிறான். அதைக் கையில் எடுத்துக் கொண்ட குரங்குகள் அணிகலன்களை அணியத் தெரியாது மாற்றி மாற்றிப் போட்டு மகிழ்ச்சியடைந்தன. இந்நிகழ்ச்சிக் காண்போருக்கு நகைப்புண்டாகும் வண்ணம் இருந்தது. இப்பாடலில், பிறர் மனைவியாளை கைத்தொட்டுத் தூக்கிச் செல்லுதல் தமிழர் மரபு இல்லை என்பதால், பர்ணகசாலையுடன் தூக்கிச் சென்றான் என்று கம்பர் குறிப்பிட்டுள்ளார் என்பர். பிறர் மனை நயந்தானுக்கு, இறுதியில் அழிவே மிஞ்சும் என்ற கருத்தையும் உணர்த்தியுள்ளது.
அகநானூறு
>எட்டுத்தொகை நூல்களில் நெடுந்தொகையெனச் சிறப்பிக்கப்படும் அகநானூற்றுப் பாடலிலும் இராமன் இலங்கை மேல் படையெடுத்துச் செல்லும் பொருட்டுத் திருவணைக் கரையருகேயிருந்த ஆலமரத்தின் கீழ் தமக்குத் துணையான வானர வீரருடன் மறைச் செய்திகளைக் கூறும் பொழுது, மரத்திலிருந்த பறவைகள் ஒலியெழுப்பாதவாறு தன் ஆணையால் அடக்கினான் என்றதொரு இராமகாதைச் செய்தியும் கூறப்பட்டுள்ளது. மேலும், இராமனது ஆணைக்கு ஆரவாரிக்கும் கடல் ஒலியும் அடங்கிய வீரப்பண்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
கலித்தொகை
இராவணன் சிவன் உமையம்மை வீற்றிருந்த கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயன்று முடியாமல் தோல்வியடைந்த நிகழ்வினை,
“இமையவில் வாங்கியஈர்ஞ்சடைஅந்தணன்
உடையமர்ந்துயர் மலை இருந்தனனாக
ஐயிருதலையின் அரக்கன் கோமான்
தொடிப் பொலிதடக்கையிற் கீழ் புகுந்தம்மலை
எடுக்கல் செல்லாதுழப்பவன் போல” (கலி-38)
என்று சுட்டிகாட்டியுள்ளது. அதாவது, இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்த கங்கையான் ஈரத்தையுடைத்தானாகிய சடையினையுடைய இறைவன், இறைவியோடேபொருந்தி, உயர்ந்த கயிலை மலையிலே இருந்தானாக. அரக்கர்க்கரசனாகிய பத்துத் தலையுடைய இராவணன் வரை (மலை) எடுப்பதற்குக் கையைக் கீழேச் செருகித் தொடி பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுத்தலாற்றாது வருந்தியதைப் போல, புலியினது வடிவை ஒத்த பூத்த வேங்கை மரத்தைப் புலியெனக் கருதி, மதத்தையுடைய யானை வருந்தியதுப் போலிருந்தது என்று மலையைப் பெயர்த்தெடுக்க முடியாது நின்ற இராவணனது செயலும், கொம்பை வாங்க மாட்டாதே நின்ற மத யானையின் செயலும் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. மதயானைப் போன்ற வலிமையுடையவனாயினும் இறைவன் இராவணனின் செருக்கையழித்தான் என்பதனை,
“பரக்கும் பெருமை இலங்கைஎன்னும்;
பதியிற் பொலிவாய
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும்
இரக்கம் புரிந்தார்… … … (திருஞானசம்மந்தர் தேவாரம் பகுதி-1)
என்ற பாடல் மூலம் அறியலாம். அதாவது, இறைவன் இராவணனின் முடியையும் தோளையும் தன் விரலால் அடர்த்துப் பின் இரந்து வேண்டிட அருளினான்; என்பதும் புலனாகிறது.
பரிபாடல்
கற்பு என்பது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும் என்று தொல்காப்பியர் முதல் பெரியார் வரைஅறிவுறுத்தியதாகும் என்பர். பரிபாடலில் அகலிகை சாபம் பற்றிய சித்திரம் திருப்பரங்குன்றத்துச் சித்திர மண்டபத்தில் வரையப்பட்டிருந்தது எனக் குறிக்கப்பட்டுள்ளது.
“இந்திரன் பூசைஇவன் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றிய படியிது என்றுரை செய்வோரும்” (பரிபாடல்-19)
என்ற பாடலானது மால்முருகன் பரங்குன்றத்து துணி எழுத்து நிலை மண்டபத்தில் திருமால் மருமகனாகிய முருகன் எழுந்தருளியுள்ள திருப்பரங்குன்றத்துத் தெளிந்த ஒவியத்தைப் பார்த்து மனைவிமார் தங்களது கணவனிடம் இது யார் என வினவ, கணவன் அதற்குப் பதில் கூறும் விதமாக, இப்பூனை உருவம், இந்திரன். இவள் அகலிகை, இவ்விந்திரனால் காமுறப்பட்ட கௌதமன் மனைவியாகிய அகலிகையாவாள். இதோ சிறிது சேய்மையினிற்கின்ற இத்துறவிதான் இந்திரனுடைய சூழ்ச்சியாலே அகலிகையைத் தனியே விட்டு ஆற்றிற்குச் சென்ற கௌதமன் என்பவன் ஆவான். இதோ வீழ்ந்துக் கிடக்கின்ற பெண்ணுருவம் அக்கௌதமன் சினந்து சாபமிடுதலானே அவ்வகலிகைக் கல்லாகிக் கிடந்தனைக் காட்டுவதாம் என்று அவ்வகலிகை தன் கணவனுக்குத் தவறிழைத்தமையாலே உண்டான தண்டத்தை விளக்கிக் கூறி நிற்பர் என்ற கருத்தை விளக்கியுள்ளது எனலாம்.
இந்திரனும் ஒரு பெண் மீது ஆசைப்பட்டதாலே உடல் முழுவதும் ஆயிரம் கண்ணுடன் இருக்கும்படியாகச் சபிக்கப்பட்டான். சீதையின் மீது காமுற்ற இராவணனனும் செருக்கு அழிந்தான்.இவற்றிலிருந்து கற்பு என்பது இருவருக்கும் பொருந்தும் எனலாம். இக்காலத்திற்கும் இக்கருத்தானது ஏற்புடையதாகும்.
மதுரைக் காஞ்சி
“தென்னவற் பெயரியதுன்னருந் துப்பிற்
றொன்முதுகடவுட் பின்மேய” (மதுரைக்காஞ்சி 40-41)
- இதில் குறிக்கப்படும் தென்னவன் என்ற பெயரானது இராவணனைக் குறிக்கும். அகத்திய முனிவர் உரையிலும் இராவணன் பற்றிக் குறிப்புக் காணப்படுகிறது எனலாம்.
சிலப்பதிகாரக் காப்பியத்தில் இராமன்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் இராமாயணக் கதை நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. இதனை,
“பெருமகன் ஏவலல்லதுயாங்கணும்
அரசேதஞ்சமென்றுஅருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்திபோலப்
பெரும்பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும்” (சிலப்பதிகாரம்-13,63-66)
என்ற பாடல் மூலம் அறியலாம். அதாவது, இராமனைப் பிரிந்த அயோத்தி நகர் வருத்தமுற்றுக் கலங்கிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றுமோர் சிலப்பதிகாரப் பாடலில், கவுந்தியடிகள் இராமன் செயல் குறித்து கூறிய பாடலானது,
“தாதைஏவலின் மாதுடன் போகிக்
காதலிநீங்கக் கடுந்துயருழந்தோன்”
என்பதாம். அதாவது, கைகேயி ஏவலால் இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறிய போதும், நாடாளுக என்று கூறியபோது இருந்தது போலவே மலர்ந்த முகத்துடன் இராமன் இருந்தான் என்பதைச் சுட்டிக்காட்டவே கம்பர்,’சித்திரத்தில் அலர்ந்தசெந்தாமரை’என்றார். கவுந்தியடிகளும் இராமன் சீதையுடன் காட்டிற்குச் சென்ற ஓர் நிகழ்வினைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
பக்தி இலக்கியங்களில் இராமாயணம்
இடைக்கால இலக்கியங்களாகிய நாயன்மார், ஆழ்வார் இலக்கியப் பாடல்களிலும் இராமாயணக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர், தேவாரப் பாடல்களிலும் இராமாயணக் கதை நிகழ்வுகள் காணப்படுகின்றன. குலசேகராழ்வாழ் இராமன் மீது நீங்காத பற்றுக்கொண்டவர் என்பதையும் அறியலாம்.
திருஞானசம்மந்தர் தேவாரம்
திருஞானசம்மந்தர் தேவாரத்தில் ஈசன், பிறர்க்குத் துன்பம் புரிந்து, பிறன்மனைக் கவர்ந்த இராவணனனுக்கும் இரங்கி அருள் புரிந்த பாங்கும், வாலி, சுக்ரீவன் திருகுரங்காடுதுறை எனும் திருத்தலத்திலே வழிப்பட்ட விதமும், மாவலிசக்ரவர்த்தியின் செருக்கை அடக்கியத் தன்மையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இறைவன் இராவணனுக்கு இரங்கியதைக் காணலாம்.
“திருசோற்றுதுறைசிவனின் மெய்யருள்
பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகம் கலந்தநுதலினர்
என்னாதுஅரக்கன் எடுக்கஊன்றிய
அண்ணல் சோற்றுத்துறைசென்றுஅடைவோமே” (திருஞானசம்மந்தர் தேவாரம் பகுதி-1-பா-436)
என்னும் இப்பாடலில், குதிரைகள் பூட்டிய தேரில் சென்ற வலிமை மிகுந்த அரக்கனான இராவணனை அடர்த்தியப் பின் அவன் அழுது வேண்டி சாமமறையை இசைக்க அவன் பால் இரக்கம் கொண்டு அருள் செய்த தன்மைக் கொண்ட இறைவன் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மாமழபடிவாழ் இறைவன்
“தென்னிலங்கையர் மன்னன் செழுவரை
தன்னில் அங்குஅடர்த்தருள் செய்தவன்” (திருஞானசம்மந்தர் தேவாரம் பகுதி 1-பா-880)
- அதாவது, பிறன்மனை நோக்கிய கீழ்மகனான இராவணனை அடர்த்திப் பின் இறைவன் அருளினன் என்பதாம்.
இராவணனுக்கு இரங்குதல்
பத்துத்தலைகளும் இருபது பெரிய கைகளும் கொண்டு ஒளிவீசும் கயிலையை அசைத்த இராவணனின் செருக்கையும், வலிமையையும் அடக்கி அழித்துப் பின், இராவணனுக்கு இரங்கி அருள் புரிந்ததை,
“தலையொடுபத்தும் தடக்கையது இரட்டி
தானுடைஅரக்கன் ஒண் கயிலை
அலைவதுசெய்தஅவண்திறல் கெடுத்த
ஆதியார் ... ... ... ... ...
... ... ... ... ... வடதளியதுவே”
(திருஞானசம்மந்தர் தேவாரம் பகுதி 1-பாடல்-461)
மற்றும் நம்மாழ்வார் பாடல்களிலும் இராமாயணக் கதைக் குறிப்புகள் இருப்பதைக் காணலாம்.
மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து, இமயம் முதல் குமரி வரையும் பாரத தேசம் முழுமையும் இராமாயணச் சரிதம் வழங்கி வந்துள்ளது எனலாம். மேலும் சங்ககாலம் தொட்டு இக்காலம் வரையிலும் இராமாயணம் பற்றிய குறிப்புகள் பல இலக்கியங்களில் காணப்படுகின்றன. இதில் கூறப்படும் அறக்கருத்துகள் இன்றுமுதல் மக்களை நன்னெறிப்படுத்துகின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
1. திருஞானசம்மந்தர், தேவாரம் பகுதி 1, உரையாசிரியர் பி. ரா. நடராசன், உமா பதிப்பகம், சென்னை-600001.
2. கலித்தொகை மூலமும் உரையும் உரையாசிரியர், நச்சினார்க்கினியர், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-18
3. இராமசரிதமும் தமிழ்நாடும் - எஸ். வையாபுரிப்பிள்ளை.
4. அயோத்தி கதை (இராமாயணம்) பதிப்பாசிரியர்: வை. தி. நடராசன், இராஜேஸ்வரி வெளியீடு, நாகர்கோவில்.
5. தமிழ் இலக்கிய வரலாறு, உரையாசிரியர்: க. கோ. வேங்கடராமன்.