தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
25. சங்கஇலக்கியத்தில் களவியல் பாத்திரங்கள்
பெ. காளிதாஸ்
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்காடு.
முன்னுரை
சங்க இலக்கியத்தில் மானிடப் பாத்திரங்கள் மிகமிகத் தேவை என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். சங்கப் பாடல்களில் விலங்குகளும் பறவைகளும் புரியும் காதலும் சாதனைகளும் உவமைகளின் மூலம் முதன்மைப் பாத்திரங்களாக இருக்கக்கூடாது. தொல்காப்பியரின் இலக்கணக் கோட்பாட்டின்படி காதல், வீரம் ஆகியவற்றிற்கே இலக்கியத்தில் முதலிடம் இருப்பதால் மானிடப் பாத்திரங்களுக்கே சங்க இலக்கியத்தில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது எனலாம். சங்க இலக்கியத்தில் களவியல் பாத்திரங்களான தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய் போன்ற பாத்திரங்களின் தன்மையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்காப்பியர்
தொல்காப்பியர் (492) என்ற நூற்பாவின் அடிப்படையில் பார்த்தால் தொல்காப்பியர் இப்பாத்திரங்களை மட்டுமே களவில் பேச அனுமதித்திருக்கிறார் என்பது இதன் பொருளாகும். தொல்காப்பியர் கூறும் கூற்றுக்கான நிகழ்ச்சிகளைக் கொண்டு இப்பாத்திரங்களின் தன்மையினை நாம் வரையரை செய்ய முடியும்.
தலைவன்
எல்லா சங்க இலக்கியத்திலும் இருப்பது போலவே தொல்காப்பியமும் நாயகன் என்ற பாத்திரத்தையே கதாநாயகனாகக் கொண்டிருக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் முல்லை முதலிய நிலத்தின் அடிப்படையில் ஐவகைத் தலைவர்கள் உள்ளனர் என்பதை நம்மால் அறிந்துக் கொள்ள முடிகிறது. தலைவனுக்கு நற்குடிபிறப்பு, ஆண்மை, பருவத்தோற்றம், அன்பு, சான்றாண்மை, கருணை, செல்வம் ஆகிய பத்து பண்புகள் தலைவனிடம் இருக்க வேண்டும் என்கிறது. நூற்பா (269) நூற்பா (270) போன்ற நூற்பாக்களில் தெளிவுபடுத்தி இருக்கின்றார் தொல்காப்பியர். காழ்ப்புணர்வு, கொடுமை, கர்வம், புறங்கூறல், கடுஞ்சொல், துணிவின்மை, சோம்பேறித்தனம், குடியிருப்பு பற்றிய கர்வம், பிறன்பழிகூறல், ஏழ்மையை மறுத்தல், பொருந்தாக் காமம் ஆகிய பன்னிரு பண்புகள் இருத்தல் கூடாது.
“முன்னிலை யாக்கல், சொல்வழிப்படுத்தல்
நன்னயம் உரைத்தல், நகைநனி உறாஅது”
(தொல்.களவியல்.நூற்.1047)
“குறை அவள் சார்தி மெய்யுறக் கூறலும்
மேய்தொட்டு பயிரல், பொய்பாராட்டல்”
(தொல்.களவியல்.நூற்.1048)
அவனிடம் மனிதப் பண்புகள் இருப்பதைக் கண்டு ஆசைமொழியில் தன்னுடைய நிலையினை சொல்லுகின்றான். பின்பு பறவையிடமோ, விலங்கிடமோ பேசுவது போன்று அடுத்த நாள் பேசுகிறான். மனவடக்கத்தால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறான். அவளைப் புகழ்ந்தால் அவன் மகிழ்ச்சி அடைவாள் என்று அவன் மனநிலையை நினைக்கிறான். தன்னுடைய நிலையினைக் கூறுகிறான். அவன் மனதை அளக்கிறான். பின்பு, அவள் தன்னை உண்மையில் என்ற முடிவிற்கு வருகிறான்.
இரண்டாம் சந்திப்பின் போது அவளது அவயங்களைத் தொடுகிறான். மன்னிப்பும் தலைவன் கோருகிறான். அவளைச் சந்தித்து தன் விருப்பத்தைத் தெரிவிப்பதில் விருப்பமுடையவனாக இருக்கின்றான். தற்காலிகமான பிரிவிற்கும் வருந்துகிறான். தலைவியைச் சந்திக்கத் தன் நண்பனிடம் வேண்டுகிறான். உடன்படாவிட்டால் தலைவியின் தோழியிடம் தங்களது சந்திப்பிற்காக முறையிடுகிறான். பரிசுகளைக் கொடுத்து மகிழ்விக்கின்றான். அவள் ஆர்வம் கொள்ளவில்லை என்றால் மடலேறுவதாகப் பயமுறுத்துகிறான்.
இரவிலோ, பகலிலோ குறிப்பிட்ட நேரத்தில் அவளைச் சந்திக்க விரும்புகிறான். குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் அவளிடம் மன்னிப்பும் கேட்கிறான். தன் வரவினை தலைவிக்கு அறிவிக்கச் சந்கேதக் குறிப்புகளைச் செய்கிறான். சந்திக்க முடியாமல் போனால் வருந்துகிறான் வரவில்லை என்றால் தன் வரவையுணர்த்தச் சில தடயங்களை விட்டுச் செல்கிறான்.
சந்திப்பதில் இடர்கள் ஏற்பட்டால் மகிழ்ச்சி காண்கிறான். திருமணம் செய்து கொள்ள பொறுப்புணர்வு இருந்தாலும் தனியாகச் சந்திப்பதையே விரும்புகிறான். தனியாகச் சந்திப்பது பெற்றோருக்கு தெரிந்துவிட்டால் மணப்பதற்கு விருப்பமுடையவன் என்ற செய்தியை அவர்களுக்கு உணர்த்துகிறான். அனுமதி கிடைத்தால் சமயச்சடங்குகளோடு மணம் செய்து கொள்கிறான் இல்லை என்றால் உடன்போக முடிவு செய்கிறான். தலைவியினுடைய பெற்றோர் அறியாவண்ணம் அவளை அழைத்துச் செல்லும் முன், போக வேண்டிய வழியைப்பற்றி முடிவு செய்கிறான். செல்லும் பயணம் இன்பமாகவும், பருவகாலம் சரியாக இல்லை என்றாலும் அழைத்துச் செல்வதில்லை, சில நேரங்களில் பாலைகளங்களிலே அழைத்துச் செல்கிறான். பல சமாதான மொழிகளைக் கூறி இடர்களை மறக்குமாறு செய்ய முயலுகிறான் தலைவன், தந்தையோ தமையனோ குறுக்கிட்டால் மணக்கப் போகவதாகக் கூறி பிறிதோர் இடத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோர் வரவிற்காக காத்திருந்து பிறகு மணம் முடிப்பதாகத் தலைவனின் பாத்திரப்பண்புகளை இலக்கியங்களில் அமைக்கின்றனர்.
தலைவி
அகத்திணையில் தலைவியைப் பற்றி பேசும் சந்தர்ப்பங்களைத் தனிச் சூத்திரங்களாகத் தொல்காப்பியர் கூறவில்லை. தலைவியின் கூற்றாக களவியலில்
“இருவகைக் குறி பிழைப்பாகிய இடத்தும்
காணா வகையில் பொழுதுநனி இசுப்பினும்“
(தொல்.களவியல். 1053)
முதல் சந்திப்பில்லே தலைவனைத் காதலிப்பதை உணர்ந்து நாணத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள். இரண்டாவது சந்திப்பில் பலசாக்கு சொல்லித் தொடும் போது, அவன் ஆசையும் உணர்ச்சியும் கொண்டிருக்கின்றான் என்பதை அறிந்து உடன்படுகிறாள். உடலுறுப்புகளில் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். எல்லா வகையிலும் தலைவனுக்கு ஏற்றவள் ஆகுகின்றார். தலைவனைப் போலவே அவளும் பத்துப் பண்புகளைக் கொண்டு இருக்கின்றாள். தன் உணர்ச்சியினைத் தோழியின் மூலம் எடுத்துரைத்துத் தனியே சந்திப்பதற்குரிய இடத்தைச் சுட்டுகின்றாள். காதலின் விருப்பத்திற்கு இணங்குவதே தன் கடமை என்றறிந்து அவனுக்கு எதிராக அவள் செல்வதில்லை.
தலைவன் இடையூறுகளை எடுத்துக் கூறும் போது, பொறுமையோடு கேட்டு, அவளை ஏற்றுக் கொள்ளத் தவறுகின்றாள். ஆசையுடையவளாகிறாள். அவனைக் காணாதவாறு அவளைப் பார்க்கின்றாள், சிறிய இடைவெளி செல்லா வண்ணம் காவல் வறுத்தாலும் சந்திக்கும் வாய்ப்பைத் தேடுகிறாள். குறித்த காலத்தில், நேரத்தில் வந்துவிட்டான் என்றறிந்து மற்றவர்கள் உறங்கிய பின் மெதுவாக எழுந்து வர முயலுகின்றாள்.
சந்திப்பில் தடை ஏற்பட்டால் வருந்தி வெளிப்படையாகவேப் பேசுகின்றாள். களவில் கண்டு மகிழ்ச்சி அடைகிறாள். தன் உடல்உறுப்புகள், உயிரற்ற பொருள்கள் பார்த்து பேசுகின்றாள். தலைவர் பிரிவில் உணவு கொள்வதில்லை, வேலனிடம் அழைத்து சென்றால் உண்மையைத் தலைவி கூறுவதில்லை. தலைவன் காலம் தாழ்த்தி வந்தாள் வேதனை அடைபவளாகவும், பெற்றோர் திருமணம் பற்றிப் பேசும் போது தலைவனுக்கு அறிவுறுத்தியும், கற்பினைக் காக்க மன்றாட முடிவு செய்பவளாகவும், மறுத்தால் உடன்போக்கிற்கு போகவும், சரியான நேரத்தில் தம் காதலைப் பெற்றோரிடம் கூறி அறிவுறுத்துபவளாகவும், படைக்கப்படுகிறாள். தன்னுடைய உடலில் தோற்றம் மாற்றங்கள் தன் காதலை பெற்றோருக்கு வெளிப்படுத்தி விடுவதாகச் சங்க இலக்கியங்களில் தலைவியின் பாத்திரத்தின் தன்மையை நம்மால் பார்க்க முடிகின்றது.
தோழி
களவியலில் தலைவியின் முக்கியப் பாத்திரம் தோழி ஆவாள். தலைவியின் குழந்தைப் பருவம் முதல் வளர்க்கப்படும் செவிலித்தாயின் மகள்தான் தோழி களவியலில் முக்கியமான பாத்திரத்தை ஏற்றுக் கொள்கிறாள்.
“தோழி தானே, செவிலி மகளே” (தொல்.களவியல்.நூற்.123)
மூன்று நிலைகளில், தலைவனின் காதலை தோழி உணர்ந்து கொள்கிறாள். காதலன் உதவியை நாடும் போது, உளப்பாங்கு, சந்திக்க வருதல் போன்ற நிலைகளில் காதலைப் புரிந்து கொள்பவளாகவும் தோழி படைக்கப்படுகிறாள். தலைவன், தலைவிக்குச் சந்திக்க வேண்டிய இடங்களையும், சந்திக்கும்பொழுது தலைவியுடன் உடன் இருப்பவள் தோழியாகவும் தலைவியின் மனம், தோற்றம், நடத்தை, மறதி, நடை செயல்கள் மூலம் புரிந்து கொள்பவளாகவும், கேள்விகளைக் கேட்டு அவள் மனதினை அறிபவளாகவும், திருமணம் செய்து கொள்ளத் தலைவனை அறிவுறுத்துபவளாகவும், தலைவியைப் பற்றி ஐயுறும் நிலைகளில் நம்புமாறு செய்பவளாகவும், தலைவனுக்கு உதவுபவளாகவும், தோழியின் துயரத்தை விபரத்தை அறிவுறுத்துபவளாகவும் தோழி பாத்திரம் படைக்கப்படுகிறது.
தலைவியைச் சில நாள்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்று கூறுவது அவளது கடமையாகும். தலைவனின் குடிபிறப்பு, பெருந்தன்மை பற்றி நினைவுறுத்தித் திருமணம் செய்து கொள்ள வேண்டுபவளாகவும், தலைவியின் உறவினர்கள் சந்தேகப்பாட்டினை நீக்குபவளாகவும், தலைவியை வேலனிடத்தில் அழைத்துச் செல்லும் போது சாமர்த்தியமாகவும் நடந்து கொள்பவளாகவும், பெற்றோர் வேறெருவருடன் மணம் முடிக்க நினைத்தால் தலைவியிடம் அறிவுத்துபவளாகவும் படைக்கப்படுகின்றாள். திருமணத்திற்கு ஒப்புவித்தால் தோழியே தலைவனிடம் கூறுகின்றாள். பெற்றோர் அறியாமல் சென்றுவிட்டால் தனக்கு ஆறுதல் கூறுபவளாகவும், தலைவனைப் புகழ்ந்தோ, இகழ்ந்தோ பேசும் உரிமை தோழிக்கு உண்டு என்பதைத் தோழியின் பாத்திரப் படைப்பினைச் சங்க இலக்கியத்தில் தெரிந்து கொள்ள முடிகின்றது.
செவிலித்தாய்
தாயைக் காட்டிலும் தலைவியிடம் நெருக்கம் உடையவள் செவிலி. தொல்காப்பியர் செலித்தாயின் கூற்றாக அகத்திணையியலில் ஒரு நூற்பா (38) செலித்தாயின் பண்புகளை கூறிச் சென்று இருக்கின்றார். குழந்தைப்பருவம் முதல் உடனிருந்து, ஊட்டி வளர்த்து, தாய்நாட்டின் பண்பாட்டையும் கற்றுக்கொடுத்தவள் செவிலியே, வளர்ந்த பின்னும், தலைவி செவிலியுடனே உறங்குவதை நம்மால் சிந்திக்க முடியும். தலைவியுடன் படுக்கும் தனியுரிமை பெற்றவளாகவும், தலைவி தூக்கத்தில் உளறுவதைக் கொண்டு அவளின் காதல் நடவடிக்கைகளை அறிவபவளாகவும், நன்மைக்காக இறைவனை வழிபடுவளாகவும், தலைவனுடன் போய்விட்டாள் என்பதற்காக வருந்தினாலும், அவள் தன் கற்பைக் காத்துக் கொண்டதற்காகப் பெருமை கொள்பவளாகவும், வழியில் ஏற்படும் இடர்களுக்காகத் தலைவனால் விடப்பட்ட பின்பும் அவள் மனஉறுதி கண்டு பெருமை கொள்பவளாகவும், தலைவனின் குடிப்பிறப்பு முதலியவற்றோடு தலைவியின் குடிப்பிறப்பு முதலியவற்றை ஒப்பு நோக்கி, தகுந்த தலைவனைத் தேர்ந்தெடுக்கிறாளா என்று ஆராய்கின்றவளாகவும். அவள் தான் பெற்றோர்க்குத் தலைவியின் காதல் விவகாரங்களை அறிவிக்கின்றவளாகவும் செவிலித்தாயின் பாத்திரம் சங்க இலக்கியங்களில் படைக்கப்பட்டு இருக்கின்றது.
முடிவுரை
காதலையும், வீரத்தையும் கூறும் இலக்கியங்களில் மானுடப்பாத்திரங்கள் மிகமிகத் தேவை என்பது தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய் பாத்திரப்படைப்பின் தன்மையினைக் கொண்டு அறிந்து கொள்ள முடிகின்றது. தொல்காப்பியரின் இலக்கியக் கோட்பாட்டின்படி காதல், வீரம் ஆகியவற்றிற்கே இலக்கியத்தில் முதலிடம் இருப்பதால் மானிடப் பாத்திரங்களுக்கே இலக்கியத்தில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.