தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
4. தொல்காப்பியர் கூறும் அறநெறி கருத்துக்கள்
கு. அன்பரசி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, கடலூர்.
முன்னுரை
அறநெறி என்றால் முறையாக செயல்படுவதையே அறநெறி என்று அழைக்கின்றோம். இப்படிப்பட்ட அறத்திணை ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு பின்னே சென்று பார்த்தால் எங்கும் இருள் சூழ்ந்து, எந்தவொரு தொடர்பும் இல்லாத சூழலில் வாழ்ந்தவர்கள் காலம் அது. அப்படிப்பட்ட காலத்தில் அறத்தினை எவ்வாறு பின்பற்றினார்கள் என்பதனை இங்கு காண்போம்.
ஐந்திணைகளின் இயல்புகள்
அகத்திணையினை ஏழாகப் பகுத்தார் தொல்காப்பியர். அதில் ஐந்து மட்டும் அன்பின் ஐந்திணையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்பனவாகும். அன்பின் ஐந்திணைகளுக்கும் ஏற்ப முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் என முறையாகப் பிரிக்கப்பட்டது.
அன்பின் ஐந்திணையில் முதலாவதாக இருக்கக்கூடிய குறிஞ்சித் திணையில் மலைமீது வாழ்பவர்க்குக் கிழங்கு அகழ்தல், தேனெடுத்தல், தினைப்புனம் காத்தலுடன் முக்கியமாக வேட்டையாடும் தொழிலையும் செய்பவர்கள். இது தவிர மூங்கிலரிசி கூட உண்பதற்கு பயன்பட்டுள்ளது. தினைப் பயிரினை பாதுகாக்க கன்னிப் பெண்களை அனுப்பி பறவைகளை விரட்டிக் காக்கும் படி செய்தனர். வேட்டையாடித் திரியும் ஆண்மகனும் தினைப்புலம் காக்கும் கன்னிப் பெண்ணும் காதல் கொள்ளுமாறு, சந்திக்க இது வாய்ப்பாயிற்று. அதனால் குறிஞ்சி நிலத்தவர்களின் பாடல்களில் களவு மணம் பற்றி பாடல்களே மிகுதியாயின.
காடும் காடு சார்ந்த இடமாக இருக்கக்கூடிய முல்லை நிலமானது காத்திருத்தலை முன்வகிக்கிறது. முல்லை, தோன்றி, பிடவம், குல்லை போன்ற மலர்களும், மரங்குளும் முக்கியமாக இங்கு கார்காலத்திற்கும் அக வாழ்விற்கும் அதிகமான ஒற்றமையினை தொல்காப்பியர் இலக்கணத்தில் முறையாக வகுத்துள்ளார். முல்லை நிலத்தில் காத்திரத்தலின் உறுதிப்பாட்டினை சிறப்பாக விளக்கியுள்ளது வியக்கத்தக்கதாக உள்ளது.
அன்பின் ஐந்திணையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மருதத்திணையின் அறத்திணை கூறுகிறார். இந்திரனை தெய்வமாக வணங்கக் கூடியவர்கள் மருதத்திணையில் வாழ்பவர்கள். இந்திரன் எப்படி மன்மதலீலைக்குச் சொந்தக்காரரோ, அதேபோல், அந்நிலத்தில் வாழக்கூடியவர்களும் அத்தன்மை படைத்தவர்கள். ஊடலை மட்டும் அதிகமாக கூறுகிறது. உளவியல் ரீதியான உண்மையினை வெளிப்படுத்துகிறது. மனம் என்பது மாறும் தன்மைக்கொண்டது என்பதனை கூடா ஒழுக்கத்தின் வழி விளக்கியுள்ளார். மருத நிலத்தில் ஆற்று நீர், ஏரி நீர், குளத்து நீர், கிணற்று நிர் இந்த நீர் நிலைகளில் நண்டுவின் செயல்பாடு போல தலைவனின் செயலாகும். சமுதாயக் கட்டுக்கோட்பினை சிறப்பாகக் கூறியுள்ளார் என்பதனை அறிய முடிகிறது.
கடலும் கடல் சார்ந்த இடத்தில் நிகழும் நிகழ்வுகளையும், கடலுக்குள் சென்று மீன்பிடிப்பவர்களுக்காக வழிபாடு செய்யும் முறையினையும் விளக்குகிறது. நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், சேர்ப்பன், வருணன் போன்ற மக்கள் வாழக்கூடியப் பகுதியாகும். இங்கும் அகவாழ்வின் சிறப்பினை சிறப்பாகக் எடுத்துக் கூறியிருக்கிறார் என்பது புலனாகிறது.
அதே போல், பாலை நிலத்தில் நிகழும் இயல்பு நிலைகளான சூறையாடுதல், போல் செய்தல் அவர்களின் தொழிலாகும். துர்க்கை வழிபாடும், வழிப்பறி செய்தல் மூலம் உணவு உண்ணப்படுகிறது. இதில் அக வாழ்வு பிரிந்திருக்க கூடிய சூழலை மட்டுமே மிகைப்படுத்துகிறது. பிரிந்திருக்கும் நிலையிலும் அவர்களின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது அன்பின் வெளிப்பாட்டினைக் காட்டுகிறது.
களவு என்பதின் உண்மைப்பொருள்
எல்லா நிலத்திலும் அகத்திணையினைப் பற்றி சிறப்பாகக் கூறியிருக்கிறார். அகத்தை களவு, கற்பு என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அதில் `களவு’ என்பது பிறர் பொருளை அவர்களுக்கு தெரியாமல் எடுப்பது தான் களவு (திருட்டு) ஆகும். இது மற்ற இடங்களில் தவறாக இருக்கும் போது, மனிதனிடம் மட்டும் அது சரியென எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்ன் ஐயம் நம்மில் பலருக்கும் உண்டு. அதுமட்டும் இல்லாது இன்றைய காலகக்கட்டத்தில் காதல் திருமணங்களுக்கும், காதலுக்கும், உடன் போக்கிற்கும் முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனைப் பல நிகழ்வுகளின் வழியாக அறிகின்றோம். ஆனால் தொல்காப்பியர் கூறும் இலக்கணம் வியக்க வைக்கிறது.
தொல்காப்பியர் `களவியல்’ பற்றிய கோட்பாடுகளை விளக்கத் தொடங்கும் போது, ``யான் சொல்லப் புகுவது, தவறான களவு பற்றி அன்று; அறநெறி தவறாத களவு நெறி பற்றியது’’ என கூறத் தொடங்குகிறார்.
``அந்நிலை மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப’’
(நூற்பா :1363)
என்ற பொருளதிகாரம் செய்யுளியலில் பாவகையில் இந்த இலக்கணத்தை கூறுகிறார். நாம் சொல்லக்கூடிய கருத்துக்கள் சமுதாயத்திற்கு ஏற்புடையதாய் இருக்க வேண்டும் என எல்லைக்கோடு வகுக்கின்றார். எனவே தான் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் தேவை என்பதனை கருத்தில் கொண்டு இலக்கியங்களை வகுக்கச் சொல்லுகிறார் என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.
மக்களிடம் காணப்படும் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தி, எழுதிச் சமுதாயத்தைப் அழிவுப் பாதையில் செலுத்துபவன் படைப்பாளி அல்லன்; சமூக கொலையாளி ஆவான். எனவேதான் தொல்காப்பியர் `களவியல்’ என்பதனைத் தவறான சொல்லால் குறிக்கப்படினும், அது எல்லோரும் கருதுவது போன்ற தவறான பொருளில்லை என விளக்குகிறார்.
``இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே’’
(நூற்பா-1038)
என்ற களவியல் நூற்பா வழி களவு என்பதனை `களவெனப்பபவது’ என்று தொடங்காமல் `காமக் கூட்டம்’ என்று தொடங்குகின்றார். களவொழுக்கம் என்பது உயிர்களிடம் வயிற்றுப்பசி, உடற்பசி என்பன உள; மக்களிடம் உடற்பசி என்பது ஒன்றும் உளது. வயிற்றுப் பசி தீதன்று; உயிர்ப் பசி தன்னம்பிக்கையுடன் கூடிய தன் முன்னேற்றம் பற்றியது. இடையேயுள்ள உடற்பசி தான் காமம். காமம் என்பது முன் மரபுப்படி இழி சொல்லன்று. காமம்-உடல் சார்ந்த பசி, காதல், இது உயிரின் இயற்கை. எனவே `காமக் கூட்டம்’ என்றார்கள். அதுவும் மற்றவர்கள் சொல்கின்ற `கந்தர்வ மணம்’ போன்றது தான் என்று, இணைபிரியாத நற்காதலரைப் பற்றிய கற்பனையைச் சான்றாகக் காட்டுகின்றார். எல்லாவற்றுக்கும் மேலாகத் தாம் சொல்லப் புகுவது. `இன்பம் பொருள் அறம்’ என்று மூன்று, நிலையான மாந்தர் விழுமியங்களுடன் கூடியது; அன்பொடு கூடிய ஐந்திணை பற்றியது என்று விளங்குகின்றார். கைக்கிளை, பெருந்திணையை இங்கு நீக்கிவிடுகின்றார். இது `கற்பு வாழ்க்கையை நோக்கிய’ `திருமணத்தில் முடிகிற `களவு’ என்பதை உறுதிப்படுத்துகின்றார் என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.
தமிழர் மரபில் பல அரிய கருத்துக்களை நம்மில் வைத்துக் கொண்டு, நாம் பிறருக்காக வாழும் நிலையினை மட்டுமே உறுதிப்படுத்துகிறோம். தொல்காப்பியர் கூறிய அறநெறியினை ஒருமுறை சாந்தமான நிலையில் நினைத்து பார்த்தாலே, இச்சமூகம் வேறொரு பாதையை சென்றடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பினை நம்மொழியில் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் நம் சமூகம் தெளிவற்ற நிலையினையும், பல கௌரவ கொலைகளில் செய்வதில் மட்டுமே சிறப்பாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டுமெனில் அறிவை விரிவடையச் செய்து அறத்தின் வழி சென்றாலே போதும் என்பதனை தொல்காப்பியர் கூறும் அறநெறி கருத்துக்களில் இருந்து அறிய முடிகிறது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.