தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
41. சிலப்பதிகாரத்தில் சங்க மரபுகளின் தாக்கம்
முனைவர் து. சரசுவதி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.
முன்னுரை
தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். இச்சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. கதையில் வரும் திருப்பங்களுக்கெல்லாம் சிலம்பே முதற்காரணமாய் இருப்பதால் இந்நூல் சிலப்பதிகாரம் என்றாயிற்று. சிலம்பில் சங்க மரபுகளின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சங்க மரபு
தமிழ் மொழியின் இலக்கியங்களில் அவற்றின் வளமும் ஆற்றலும் தமிழர்களிடையேயும் பேணிக்காக்கப்பட்டன. சங்க மரபினை அதனுடைய வாழ்வியல் குருதி எனவும், தமிழ்ச் செய்யுள் தோன்றி வளர்த்த பழம்பெரும் இலக்கியமாகத் தோன்றிய சங்க இலக்கியைத்தைச் சுட்டுவது பொருத்தமான மரபாகும்.
வேலனை அழைத்தல்
தலைவி தலைவனுடன் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டதால் தலைவியின் மேனியில் காணப்பட்ட மாற்றத்தினை அறியாமல் தாயானவள் வேலன்தான், தன் மகளின் மீது அமர்ந்துள்ளான் என நினைத்துக் கொண்டு வேலன் வருவானோ எனத் தலைவி தோழியிடம் கூறுவதனை,
“இறைவளை நல்லாய்! இது நகையாயன்றே
கறிவளர் தன் சிலம்பின் செய்த நோய்தீர்க்க
… … … … … … … … … … … … … …
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக” (சிலம்பு-குன்றக்-10)
என்ற பாடல்வழிச் சுட்டப்பெறுகிறது. மேலும், ஐங்குறுநூற்றில் தலைவிக்கு ஏற்பட்ட மேனியின் மாற்றத்தினைப் போக்குவதற்காகத் தாயானவள் வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்துகின்றாள். இதனை,
“நாமுறு துயர நோக்கியன்னை
வேலன் தந்தா ளாயின் அவ்வேலன்” (ஐங்-241)
எனும் பாடலடி மூலம் அறியலாம்.
கோவலன் கண்ணகி திருமணம்
கோவலன் கண்ணகி திருமண நிகழ்வானது சந்திரனும் ரோகிணி நட்சத்திரமும் சேர்கின்ற இனிய நாளில் அந்தணர் வேதத்தினை ஓத, மணமக்கள் தீயினை வலம்வர இவர்களுடைய திருமண நிகழ்வு நடைபெற்றன என்பதை,
“வான் ஊர் மதியம் ஆகுஅனைய வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட
தீவலம் செய்வது காண் பார்க்க நோன்பு என்னை” (சிலம்பு-மங்க-1:50-53)
எனும் பாடலடிகள் உணர்த்துகின்றன. மேலும் சங்க காலத் திருமண நிகழ்வானது சற்றே மாறுபட்டு நடந்துள்ளதை அகநானூற்றுப் பாடல் மூலம் அறிய முடிகிறது. இங்குத் தீ வலம் வராமல், அந்தணர் மந்திரம் ஓதாமல் தமிழர்களின் திருமண முறையானது நடைபெற்றது என்பதை,
“கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கோடுஇல் விழுப்புகழ் நாள் தலைவந்தென
உச்சிக் குடத்தார் புலத்தல் மண்டையின்
பொது செய் சாம்பலை முது செம்பெண்டிர்
… … … … … … … … … … … … … …
வதுவை நல் மணம் கழிந்த பின்றை” (அகம்.பா-86)
என்ற பாடலடிகள் உணர்த்துகிறது.
கோவலன் கண்ணகியைப் பாராட்டல்
கோவலனும் கண்ணகியும் ஞாயிறும் மதியும் ஆகியவற்றின் ஒளிக்கதிர்கள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று கூடி மகிழ்கின்றனவோ அதைப்போல மல்லிகையால் தொடுத்த மாலையினைக் கோவலனும் செழுங்கழுநீரால் தொடுத்த மாலையைக் கண்ணகியும் அணிந்து கொண்டனர். இருவரும் அணிந்து கொண்ட மாலைகள் ஒன்றோடொன்று தழுவி நிற்பதைப்போல கோவலனும் கண்ணகியும் தழுவி நிற்பதைப்போல கோவலனும் கண்ணகியும் தழுவி நின்றனர். கோவலன் கண்ணகியின் முகம் நோக்கிப் பாராட்டினான். இதனை,
“கரும்பு உனக்கிடந்தற்றும் பூஞ்சேர்க்கைச்
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
முதிர்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
… … … … … … … … … … … … … …
தீராக் காதலின் திருமுகம் நோக்கி”
(சிலம்பு.மனையறம்2.29)
எனும் பாடலடி எடுத்தியம்புகிறது. நலம் பாராட்டும் இம்மரபு கலித்தொகையிலும் தலைவன் தலைவியைப் பாராட்டுவதாக அமைந்துள்ளது. இதனை,
“உழுதாய்
கரும்பு இமிர் பூங்கோதை அம் நல்லாய்! பான் நீ
திருந்து இழை மெந்தோள் இழைத்த மற்றுஇஃதோ
… … … … … … … … … … … … … …
துகள் அறுவாள் முகம் ஒப்ப மலர்ந்த”
(கலி:பா-64)
எனும் பாடலடி வலியுறுத்துகிறது.
கண்ணகி உணவு சமைத்தல்
உணவு சமைத்தல் என்பது பெண்களுக்குரிய இயல்பாகும். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன் கணவனான கோவலனுக்குத் தன்னுடைய மெல்லிய விரலினால் பசுமையான காய்கறிகளை அறிந்து உணவினைச் சமைக்கிறாள். சமைக்கும்போது அவளின் முகம் வியர்ப்பதாகவும் கண்கள் சிவப்பதாகவும் கண்ணகி காணப்படுவதை அறிய முடிகிறது.
மேலும் அடுப்பில் சமைக்கும் பொருட்டு வைக்கோலை வைத்து ஊதும்போதும் புகையானது எழும்பும்போதும் அதனைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய கணவனுக்கு உணவினைச் சமைத்து பரிமாறுவதை,
“மெல்விரல் சிவப்ப பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யக்
கையறி மடைமையின் காதலர்க்கு ஆக்கி” (சிலம்பு:கொலைக்:30)
எனும் பாடலின் வழி அறிய முடிகிறது. மேலும் குறுந்தொகை, திருமணமான முதல்நாளிலே தலைவி தலைவனுக்கு உணவு சமைப்பதனை எடுத்துக்காட்டுகிறது.
குறுந்தொகைத் தலைவியானவள் புளித்த தயிரினைத் தன்னுடைய மெல்லிய விரலினால் பிசைந்து கையினைக் கழுவாமல் தன்னுடைய புது ஆடையிலே துடைத்துக்கொண்டு அடுப்பினுடைய புகையினால் கண்கள் கலங்குவதையும் பொருட்படுத்தாமல் தன் கணவனுக்கு உணவினை பரிமாறுவதை,
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே” (குறுந்-பா-167)
எனும் இப்பாடல் அடிகள் புலப்படுத்துகின்றன. மேலும் தலைவி சமைப்பதனைப் பற்றித் தொல்காப்பியரும்,
“ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென
அடிசிலும் பூவுந் தொடுத்தற் கண்ணும” (தொல்-கற்-5)
எனும் நூற்பா மூலம் சுட்டுகிறார்.
தலைவி பொழுது கண்டு புலம்பல்
நாட்டில் நல்ல அரசர்கள் ஆட்சி மாறினால் மாற்றரசர் வந்து வரி வாங்குவார்கள். அப்படிப்பட்ட நாட்டில் கணவனைப் பிரிந்த மகளிர் துன்பப்படுகின்றனர். காதலருடன் இருக்கும் மகளிர் இன்பத்தில் மகிழ்கின்றனர். கணவனைப் பிரிந்த தலைவி மாலைப்பொழுதினைக் கண்டு புலம்புகிறாள். மாலைப்பொழுதிலே கோவலர்கள் குழலினை ஊதும் போது, முல்லை மலரின் உள்ள (தும்பி) வண்டுகள் தன்வாய் வைத்து முல்லைப் பண்ணை இசைக்கின்றன. ஆறுகால்களை உடைய வண்டுகள் அம்மணத்தை நுகர்கின்றன. தென்றல் மணத்தை தெருவெல்லாம் பரப்புகிறது. இப்படிப்பட்ட மாலைப்பொழுது வந்தும் கணவனை காணவில்லையே என்று தலைவி புலம்புவதனை,
“வலம்படுதானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ்துனை துறந்தோர் தனித்துயர் எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்தக்
… … … … … … … … … … … … … …
மல்லல் மூதூர் மாலைவந்து இறுத்தென” (சிலம்பு.அந்திமாலை.:11-20)
எனும் பாடல் தலைவியின் புலம்பலை எடுத்துரைக்கிறது. மேலும் குளத்தில் பூத்த மலர்போல இருக்கின்ற நீ என்னுடைய அழகினைக் கண்டு இகழ்கிறாய், அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டு ஆரவாரிக்கின்றது. நீ மயக்கத்தினையுடைய மாலையாய் வந்தாயே,
“போதுபோல் குவிந்த என்எழில் நலம் எள்ளுவாய்
ஆய்சிறை வண்டு ஆர்ப்ப சினைப்பூப்போல தளைவிட்ட
காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்
காதலர்ப் புணர்ந்தோர் கழிமகிழ்வு எய்தக்
மாலை நீ கோவலர் தனிக்குழல் இசைகேட்டு
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புதுநலம் கடிகல்லாய்” (கலி 118)
எனும் பாடல் வலியுறுத்துகிறது. குழலின் இசையினைக் கேட்டு வருந்துகின்ற நெஞ்சத்தினர் பக்கமே நீ வராதே என்று தலைவி புலம்புகின்றாள்.
முடிவுரை
சிலப்பதிகாரத்தில் சங்க மரபுகளின் தாக்கம் எனும் தலைப்பில் அமைந்துள்ள தலைப்பில் தலைவிக்குத் தாயானவாள் வெறியாட்டு நிகழ்த்துதல் பற்றியும், கோவலனுக்கும் கண்ணகிக்கும் நிகழும் திருமணம் பற்றி சிலம்பில் பார்ப்பனரை வைத்தும், அருந்ததி பார்த்துச் சடங்குகள் வைத்துத் திருமணம் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் சங்க இலக்கிய அகநானூற்றில் தமிழர் திருமணம் பார்ப்பனர் இல்லாமல், அருந்ததி பார்க்காமல் நடத்துதலையும், கோவலன் கண்ணகியைப் பாராட்டுதலும், மனைவி கணவனுக்கு அறுசுவை உணவினைச் சமைத்துப் பரிமாறுதலும் தலைவி பொழுது கண்டு புலம்பல் பற்றியும் இக்கட்டுரையின் மூலம் ஆய்ந்தறியப் பெற்றன.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.