தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
43. புறநானூற்றில் பண்பாட்டுச் சிந்தனைகள்
சு. சாந்தி
உதவிப் பேராசிரியர், தமிழ்துறை,
கே. எஸ். ஆர். கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.
முன்னுரை
புறநானூறு பழங்காலக் கருவூலம். பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுச் சேமிப்பு. இந்நூலால் பழந்தமிழர்களின் வாழ்க்கை வரலாறுகள் பலவற்றையறியலாம். தமிழ் மக்கள் உலகத்தை ஒன்றெனக் கருதினர். உலக மக்களை ஒரே குலத்தவராக எண்ணினர். இத்தகைய உயர்ந்த பரந்த நோக்கம் தமிழர்களின் ஒப்பற்ற பண்பாட்டுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். புறநிகழ்வுகள் ஒவ்வொன்றையும் விளக்கும் இந்நூலில் பழந்தமிழர் வேந்தர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் பெருவாழ்வையும், அரசர் - புலவர் என்ற பாகுபாடு இன்றி பாடல் பாடியுள்ள விதத்தையும் இந்நூலால் அறிய ஏதுவாகின்றது. புறநானூற்றில் இடம் பெறும் பண்பாட்டுச் சிந்தனைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பண்பாடு - விளக்கம்
பண்+பாடு = பண்பாடு. பண் என்றால் ‘இசைவு’ என்றும் பாடு என்பது படு எனும் வினைப்பகுதியைக் கொண்டுள்ளது. பண்பாடு என்பது ‘பண்படு’ எனும் சொல்லின் வினையடியாகப் பிறந்தது. இசைவு பெறுதல், பண்படுதல், ஒன்றுபடுதல், இசைந்து ஒழுகுதல் போன்ற பொருளைக் குறிக்கிறது. அதாவது பண்படுதலே பண்பாடு ஆகும்.
தமிழர் பண்பாடு
பழந்தமிழர் பண்பாடு மிக உயர்ந்தது. உலகமெல்லாம் பாராட்டிப் பின்பற்றக் கூடியது. தமிழ்மக்கள் உலகத்தை ஒன்றென்று கருதினர். உலக மக்களை ஒரே குலத்தவராக எண்ணினர். இத்தகைய உயர்ந்த பரந்த நோக்கம் தமிழர்களின் ஒப்பற்ற பண்பாட்டுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். கணியன் பூங்குன்றனார் “ யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார். இப்பாடல் தமிழர்களின் தனித்த பண்பாட்டை விளக்குவதாக அமைகின்றன.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர்தர வாரா”
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” (புறம். 192)
மேற்கூறிய பாடலில் தமிழரின் தனித்த பண்பாட்டை அறியலாம்.
ஆட்சியின் அடிப்படை
அனைவரையும் நன்றாகக் கருதி விருப்பு வெறுப்பின்றி சமநீதி வழங்கும் அறநெறியைப் பின்பற்றுவதே ஆட்சியின் அடிப்படை இந்த அடிப்படையை மறந்துவிட்டு அதிகாரச் செருக்கால் படை பலத்தால் மக்களை அடக்கி ஆளமுடியாது. ஆயுத பலத்தால் மக்களை அடக்கி ஆண்டு விடலாம் என்று நினைப்பவர்கள் அரசின் அடிப்படையை அறியதாவர்கள். இவ்வுண்மையை ஒரு புறநானூற்றுப் பாடலால் உணரலாம்.
‘கடுஞ்சினத்த கொல்களிறும்
கதழ் பரிய கலிமாவும்
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ (புறம்.55)
மதுரை மருதன்இளநாகனார் என்ற புலவர் இயற்றிய இப்பாடலில் பொதிந்துள்ள உயர்ந்த உண்மையை இங்கு நமக்கு உணர்த்துகின்றார். நாட்டை நாசமாக்கும் நவீன போர்க்கருவிகளைக் செய்வதிலே பணத்தை பாழக்கமாட்டார்கள். அறிவையும் வீணாக்கமாட்டார்கள். “ படைபலம் வெற்றி தராது. மக்களின ஆதரவே ஆட்சியை நிலை நிறுத்தும் அடிப்படை” என்ற உண்மையை இங்கு நாம் அறியலாம். வள்ளுவரும் இவ்வுண்மையை பின்வரும் குறளில் குறிப்பிடுகிறார்.
“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி” (குறள்.390)
வறுமையற்ற வாழ்வு
இவ்வுலகிலே எல்லோரும் இன்புற்று வாழ்வதற்கான எல்லாச் செல்வங்களும் அமைந்திருக்க வேண்டும். இரப்போர், ஈவோர் என்ற பாகுபாடு மறைய வேண்டும். கொடுப்பது உயர்ந்த செயல் தான். ஆனால், இரப்பதைக் காட்டினும் இழிந்த செயல் ஏதொன்றுமில்லை. அதைவிடச் சிறந்தது “நீ கொடுப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று கூறுவது. பண்டைத் தமிழர்கள் இவ்வுண்மையை உணர்ந்திருந்தனர்.
“ஈயென இரத்தல இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
கொள்ளேன் என்றல் அதினினும் உயர்ந்தன்று” (புறம்.204)
இதை உணர்த்தும் விதமாகத்தான் கம்பனும் “கொள்வாரிலாமையால் கொடுப்பாருமில்லை” என்று கூறுகிறார்.
அறிவுரைகள்
“நன்றி மறப்பது நன்றன்று” என்பது தமிழர்களின் தலைசிறந்த கொள்கை. பிறர் தமக்குச் செய்த நன்றியை மறக்காதவனே மற்றவர்க்கு நன்றி செய்ய முன் வருவான். இதற்காகவே நன்றியறிதலைப்பற்றி அறநூல்கள் எல்லாம் வலியுறுத்திக் கூறுகின்றன. நன்றி மறப்பதை மிகவும் கடிந்து கூறுகின்றன. மேலும் தீமை செய்யாமல் அடங்கியிருப்பதே நன்மை செய்வதற்குத் தூண்டும் கருவி என்ற கருத்தினை பின்வரும் பாடல் எடுத்துரைக்கின்றது.
“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே” ( புறம்.195)
வள்ளுவரும் இதனையே
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு ண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள்.110)
என்ற குறளில் எடுத்துரைக்கிறார்.
உலக இன்பம்
பண்டைத் தமிழர்கள் இவ்வுலக வாழ்வைப் பற்றியும் நன்கு ஆராய்ந்து எடுத்துரைத்துள்ளனர். எந்த முறையில் வாழ்ந்தால் எல்லா மக்களும் இன்புற்று வாழலாம் என்பதை கண்டறிந்துள்ளனர். தமது நன்மைக்கென்று முயலாமல் என்றும் பிறர் நன்மைக்காகவே முயல்பவர்களும் இவ்வுலகில் இருக்கின்றனர். ஆதலால் இவ்வுலகில் என்றும் புகழப்படுகிறார்கள். இதனைப் பின்வரும் பாடல் இயம்புகின்றது.
“உண்டால் அம்ம! இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிது எனத்
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
பிறர்க்கென முயலுநர் உண்மையானே” (புறம்.182)
மேற்கூறிய பாடலை கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் பாடியுள்ளார். எல்லோரும் இன்புற்றிருக்க இப்பாடல் மூலம் வழிகாட்டுகின்றனர். தமிழனின் உயர்ந்த பண்பாட்டை இப்பாடல் மூலம் நாம் சிறப்புற அறிந்து கொள்ள முடிகின்றது.
விருந்தோம்பல் பண்பு
விருந்து என்றால் புதுமை, புதியவர் என்று பொருள் இன்று விருந்தினர் என்று உற்றார், உறவினர், நண்பர்கள் போன்றோரைக் கூறுகிறோம். ஆனால் பண்டைக்காலத்தில் முன்பே அறியாதவர்களாய் வீடு தேடி வருவோர் விருந்தினர் எனப் பெற்றனர். தமிழர்கள் அவர்களை அகமும், முகமும் மலர வரவேற்று விருந்தோம்பினர். விருந்திiரை முக மலர்ச்சியோடு உபசரித்தால் தான் விருந்து சிறக்கும். இதனையே திருவள்ளுவர் தம் குறளில்
“மோப்பக்குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (குறள். 90)
என்று கூறுகிறார்.
விருந்தினர் ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்லது பல நாட்கள் தொடர்ந்து பலரோடு சென்றாலும் முதல்நாள் எவ்வாறு அன்போடும் ஆர்வத்தோடு இனிது வரவேற்றனரோ அதே போல் ஒவ்வொரு நாளும் விருப்புடன் வரவேற்கும் பண்பினன் அதியமான் நெடுமான் அஞ்சி என்பதை ஔவையார் தம் பாடல் மூலம் எடுத்துரைக்கின்றார்.
“ஒருநாட் செல்லல் மிருநாட் .....
..... விரும்பினன் மாதோஞ்” (புறம்.101)
தமிழரின் சிறந்த தலையாய பண்பை நாம் இப்பாடல் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.
முடிவுரை
நாட்டின் வளம் மக்கள் கடைபிடிக்கும் பண்பாட்டிலே அடங்கியிருக்கிறது. நம் முன்னோர்கள் இலக்கியங்கள் வாயிலாக சிறந்த அறங்களைக் கூறியுள்ளனர். தமிழ் மக்கள் உலகத்தை ஒன்றெனக் கருதியும் உலக மக்களை ஒரே குலத்தவராக எண்ணியதும் புறநானூற்றுப் பாடலால் அறிய முடிகிறது. மேலும் மனிதனின் வாழ்க்கைக்கு பண்பாடு எந்த அளவிற்கு முக்கியத்துவமானது என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் சிறப்புற எடுத்துரைப்பதை இங்கு நினைவு கூர்வது சாலப் பொருந்தும்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.