தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
44. பள்ளு இலக்கிய மக்களின் வாழ்வியல் சிந்தனைகள்
க. சித்ரா
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, நாமக்கல்.
பள்ளு இலக்கியம்
நாயக்கர் காலத்தில் தோன்றி வளர்ந்த சிற்றிலக்கியங்களுள் ‘பள்ளு’ இலக்கியமும் ஒன்று. பள்ளு என்பது பள்ளர்களின் வாழ்வியல் முறைகளைக் கதைப்போக்கில் விளக்கிக் கூறும் ஒருவகைச் சிற்றிலக்கியம் ஆகும். தமிழ் இலக்கியப் பரப்பிலே, சமூகத்தின் அடிமட்டத்தினரைச் சித்தரிக்கும் பொதுமக்கள் இலக்கியங்களாகப் பள்ளு இலக்கியம் அமைந்துள்ளது. முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்திலே வேளாண்மைத் தொழிலாளராகிய பள்ளர் சமூகத்தை அறிமுகப்படுத்தியமை அதன் தனித்துவத்தை இனங்காட்டுவதாக உள்ளது. இவ்விலக்கியம் இலக்கியச் சுவை கொண்டு அமைந்திருப்பதோடு மக்கள் சமூகத்தின் ஒரு பகுதியினரின் சமூக நிலை, குடும்ப உறவுகள், சமய நோக்குகள் நம்பிக்கையுணர்வுகள் முதலானவை பற்றி அறிந்து கொள்ளவும் உதவுகின்றது.
தெய்வ நம்பிக்கை
உலகில் வாழும் உயிர்கள் யாவும் இன்பத்தில் விருப்பும் துன்பத்தில் வெறுப்பும் இயல்பாகக் கொள்வதைக் காண்கிறோம். இன்பம் பெற நினைக்கும் பொழுது செய்யும் முதல் நிலை இறைவனைத் தொழுதலே, பழந்தமிழர் காலம் முதற்கொண்டே தெய்வ நம்பிக்கை இருந்து வந்துள்ளது. தெய்வவழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு என இருநிலையில் அமைகிறது. திருமால், சிவன் போன்ற பெருந்தெய்வங்களுக்குப் பலியிடும் மரபு இல்லை. சிறு தெய்வங்களான கிராம தேவதை, காவல் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி இடுவர். மக்கள் செய்நன்றி மறவாதவர்கள் தங்கள் கருத்தை ஈடேற்றிய, உதவிய தெய்வங்களுக்கு நன்றிக் கடனாகவே உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பெருந்தெய்வ, சிறுதெய்வ வழிபாடுகள் பற்றி பள்ளு நூலாசிரியர்கள் தாம் படைத்த பாத்திரங்கள் வாயிலாக சமய உண்மைகளையும் தெய்வத்தின் சிறப்புகளையும் குறிப்பிடுகின்றனர். அதே வேளையில் பள்ளர் சமூகத்தவரை முக்கியப் பாத்திரங்களாக கொண்டமையாக அவர்கள் கடைப்பிடிக்கும் சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகளையும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
“கங்கணங் கட்டியே ஏழுசெங் கடாயும்
கரையடிச் சாத்தா முன்னே
விரைய வெட்டும்”
என்பதிலிருந்து சிறு தெய்வங்களுக்கு, கள், சாராயம் படைத்தல், சேவல் அறுத்தல், கிடாவெட்டுதல் முதலிய செயல்களைச் செய்வதில் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதையும்,
“களைமிகுந் தருள்மொழிதா மரைப்பாடிக்
கன்னிமார்க் குத்தானே இளநீர்பச் சைப்பாலை
காதோலை சிற்றாடை ஈந்ட்டோ மென்னையளே”
என்பதிலிருந்து பெண் தெய்வங்களுக்குக் காதோலை, ஆடை, கருகமணி போன்றவைகளையும் படைக்கும் வழக்கம் இருந்துள்ளது என்பதும் தெளிவாகிறது. குயில் கூவுதல் என்ற பகுதியில் நூலாசிரியர்கள் தமது சமயச் சார்போடு தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். சமய நிறுவனங்களாகிய கோயில்கள், மடங்கள், திருச்சபைகள் முதலானவற்றிற்கு திருப்பணிகள், அறச் செயல்கள் நடைபெறவும், மழைபொழிந்து வேளாண்மை சிறந்தோங்கிச் சமயச் சடங்குகள் நடைபெறவும், மக்கள் நல்வாழ்வு பெறவும் வெண்டுமெனவும் குயிலே! நீ கூவுவாயாக என்று பள்ளியர் விளித்துக்கூறுவதிலிருந்தும் மக்கள் கடவுள் மீது வைத்திருந்த தெய்வ நம்பிக்கையைக் எடுத்துக் காட்டுகின்றது.
விழாக்கள் கொண்டாட்டங்கள்
வாழ்க்கையை முழுமையாகவும் நன்றாகவும் வாழ விரும்பிய பள்ளர் இன மக்கள் பொழுதினைப் போக்க குரவையாடுதல், கும்மியடித்தல் போன்றவற்றைச் செய்தனர். பெண்கள் கூடிக் காப்புகள் ஒலிக்க அணிகள் அசைந்தாட அங்கும் இங்கும்மாகத் தம் சிவந்த உள்ளங்கைகளை நீட்டி நீட்டிக் கும்மியடித்து குரவைக் கூத்தாடுகின்றனர். மேலும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் குரவை ஒலியை மங்கல வேளைகளில் எழுப்பினர். வரிவசூலித்துக் கணியன் கூத்து, தெருக் கூத்து, வில்லுப்பாட்டு ஆகியனவும் நிகழ்த்தியுள்ளனர். இதனை,
“கூத்துக்கும் கொட்டுக்கும் நல்லான்”
என்பதிலிருந்தும்,
“சீவலப்
பேரிக்குள் கணியான் வில்லென்னும்
வில்லுப் பாட்டுக்குப் பொறித்தான்”
என்பதிலிருந்தும் தெய்வங்களுக்கு நன்றிக்கடன் செய்து மகிழ்ச்சிஆராவாரத்துடன் விழாக்கள் கொண்டாடினார்கள் என்பது புலப்படுகிறது.
நிமித்தம், சகுனங்களில் நம்பிக்கை
பழமையான எல்லா இனங்களிடத்தும் பல நம்பிக்கைகள் நிலவி வருகினறன “நன்மையின் பால் உள்ள ஆர்வமும், தீமையின் பால் உள்ள அச்சமும் பெரும்பான்மையான நம்பிக்கைகளுக்கு அடிப்படை எனலாம்” என்கிறார் அ. தட்சணாமூர்த்தி. ‘நாள் செய்வதை நல்லார் செய்யார்’ என்பது பழமொழி. தான் செய்யும் செயல் வெற்றியோடு முடிய வேண்டுமெனில் நல்ல நாளிலும், நல்ல வேளையிலும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது. போர் தொடங்கும் முன்னர் குடையையும், வாளையும், நல்ல நாளில் செல்ல வேண்டிய திசையில் எடுத்துச் சென்றதை இலக்கியங்களில் வரும் குடைமங்கலம் வாள்மங்கலம் என்பன காட்டுகின்றன.
“புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளி வருநர் பழியலர் அதனால்
புலவேன் வாழியர் ஓரி”
வல்வில் ஓரியை கழைதின் யானயார் பாடிச் சென்றபோது பரிசில் கிடைக்கவில்லை. அதற்கு தாம் புறப்பட்ட வேளையும், எதிர்ப்பட்ட புள்ளையும் நோவது தவிர மன்னனை நோவது பயனற்றது என்று புலவர் கூறுவது போல் உள்ளது. இப்பாடல் நல்லநேரம் மீது கொண்ட நம்பிக்கையைத் தான் இது காட்டுகிறது. பள்ளு இலக்கியத்தில் வரும் மக்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. பள்ளன் நல்ல நாள், நேரம் பார்த்து ஏருழத் தொடங்குகிறான். அதனை,
“சத்தமி புதன்சோதி தைதலுக் கரணம்
தவறாத சுபயோகந் தருபஞ் சாங்கம்”
என்பதன் மூலமும், பண்ணைக்காரன் பஞ்சாங்கம் பார்த்துக் குறித்த நாளன்று பள்ளர்கள் குரவையிட்டு ஏர்பூட்டி உழுதனர். கதிர் அறுக்கும் போதும் நல்ல நாள் பார்த்தனர் என்பதையும் அறுத்த நெல்லை முதலில் தெய்வங்களுக்கும், திருவிழாக்களுக்கும் வழங்கினர் என்பதையும் சகுனம் பார்த்துச் செயல் தொடங்கும் வழக்கமும் இம்மக்களிடையே இருந்தமையை அறிகிறோம்.
உழவு மக்களின் வாழ்க்கை முறை
பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது. உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. அனைத்துத் தொழில்களும் உழவை மையமிட்டே அமைந்திருந்தன. உழவர்கள் கடுமையாகப் பாடுபட்டாலும் அவர்கள் வறுமை மிக்க வாழ்க்கையே வாழ்ந்தனர். வரகுந் தினையுமாத் தன் மனையில் உள்ளவற்றை யெல்லாம் இரவலர் உண்டதானலும் கொண்டதனாலும் தீர்ந்தன. தம் மனைக்கு விருந்தினராக வந்த பாணரை உண்பிக்கும் பொருட்டு வரகைக் கடனாகப் பெற முடியாமல் கதிரிடத்தே முற்றி உலரவிட்ட விதைத் தினையை உரலில் பெய்து குற்றிச் சமைத்து மனைத்தலைவியானவள் உணவிட்டாள் என்று உழவனின் வறுமை நிலையை, புறநானூற்றுப் பாடல் இயம்புகிறது. இவ்வுழவர் பெருமக்கள் வறுமையில் வாடினாலும் பண்பில் உயர்ந்து ஓங்கி நின்றதைக் காண்கிறோம். இவ்வுயர்வுக்கு அவர்கள் வாழ்ந்த சமூகஅமைப்பே காரணம். அவர்கள் ஒருங்கிணைந்த குழச் சமூகமாக வாழ்ந்தனர்.
“தள்ளு மண்ணுங் கல்லுஞ் சற்றே
நெல்லுஞ் கலந்தே - பங்கு
தந்தோ மென்றெனக் கிம்மட்டும்
தந்தான் பள்ளீரே”
தள்ளும் மண்ணும் கல்லும் அதனோடு சற்று நெல்லுதான் உழைத்த பள்ளர்களுக்கு மீதம் என்பதனையும் இதன்மூலம் உழவர்களின் நிலையானது பண்ணைக்காரன் பண்ணைகளில் குடும்பத்தோடு உழைத்தாலும் உண்பதற்குக் கல்லும் மண்ணும் நிறைந்த நெல்லே என்பதை எடுத்துக் காட்டுகிறது.
பொருளாதாரமும் வாழ்வுச் சூழலும்
உழவுத் தொழில் பள்ளர்களின் தலையாய தொழிலாக உள்ளது. சேறு, புழுதி, வெயில், மழை, இவற்றை ஒரு பொருட்டாக கருதாமல் உழைத்தனர். இருப்பினும் இவர்களின் பொருளாதார வாழ்வு உவப்பிற்குரியதாக இல்லை. நில உரிமை இல்லாமல் அவற்றைக் கூலிகளாகப் பணிபுரிந்த இவர்கள் வாழ்வில் பொருளாதாரம் என்பது கேள்விக்குரியதாக உள்ளது. “உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது” என்னும் பழமொழிக்கு ஏற்ப சேர்த்து வைக்கும் நிலையில் இவர்களின் வாழ்க்கை இல்லை. அதிலும் பள்ளு இலக்கியத்தில் வரும் பண்ணைக்குடும்பனைப் போல் இரு மனைவியர் கொண்டவனின் நிலை இன்னும் கீழாகவே உள்ளது. இதனை,
“வள்ளத்தைப் பனங்கள்ளுக்கு விற்றான்
பள்ளேச லுக்குங்கள் சாரா யத்துக்கும்
பத்தெரு தையும்வித் தான்கா ணாண்டே”
என்பதிலிருந்தும் ஊருக்குள் பெருமையுடையவனாக இருந்தாலும் குடும்பத்திற்காக எதையும் சேர்த்து வைக்காமல் ஊராருக்காக உழைத்தான் என்றும் வரவை மீறிச் செலவு செய்கிறான் என்பதும் அதனால் ஏழ்மை தவழ்கிறது என்பதையும் அறிகிறோம். மேலும் இவன் கோவிலுக்குக் கொடை கொடுப்பதில் வல்லவன், கூத்து, வில்லுப்பாட்டு இவற்றிற்குச் செலவு செய்வதில்தான் தன் கருத்தைச் செலுத்துகிறான் என்று மூத்த பள்ளி குற்றம் சுமத்துகிறாள். இத்தகு பண்புகளை எல்லாம் ஏழ்மை நிலை தன்னை வருத்துவதால் தான் சுட்டிக்காட்டுகிறாள் என்பது தெளிவாகிறது. பள்ளு காட்டும் பள்ளர் வாழ்வு எத்தகைய பொருளாதார இடர் பாட்டில் இருந்ததென்று அறியமுடிகிறது.
பள்ளர்களின் சமூக நிலை
அடிமைச் சமுதாயத்தில் உழைப்பாளி மக்கள் ஆளும் வர்க்கத்தினரிடம் சிக்கிச் சீரழிந்தனர் என்பது தமிழிலக்கியக் குறிப்புகளில் தெளிவாகத் தெரிகிறது. வேளாண் தொழில்நுட்பத்தில் வல்லவரான பள்ளர்கள், நாயக்கர் பிராமணரிடமும் பிற பிராமணரிடமும் பிராமரல்லாத நாயக்கர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரிடமும் அடிமைகளாகவே மாறிய வேதனை மிக்க வரலாறு உருவானது. பள்ளு இலக்கியம் பள்ளர்கள் நாயக்கர்களிடம் அடிமைகளாக வேளாண் பணிபுரிந்த நிலையினைப் பதிவு செய்கிறது.
இவ்விலக்கியம் நாயக்கர் காலத்தில் இயற்றப்பட்டது என்பதால், நாயக்கரை ரேநடியாக விமர்சிக்கும் பாங்கில் இல்லை. மாறாக நாயக்கப் பண்ணையாரை உயர்த்தி, பள்ளரே பாடுவதாக உள்ளது. இறுதிப்பகுதியில் பள்ளி பண்ணையாரைத் திட்டுவதாக மட்டும் உள்ளது. ஆயினும் அக்கால பள்ளர் நிலை எந்தளவு தாழ்த்தப்பட்டது என்பதை இவ்விலக்கியத்திலிருந்து நாம் உணரலாம். ஆண்டை - அடிமை என்ற முறைக்கான ஆவணம் இதுவாகும். இதில் பள்ளர்கள் பண்ணையாரை ‘ஆண்டையே’ என அழைக்கும் முறை இவ்விலக்கியத்தில் குறிப்பிடத்தக்கதாகும். மூன்று நதிகள் கூடும் தெற்குச் சீமை அழகை விவரிக்கும் போது, “சாதி நால்வளம் நீதி பெருக்கும்” என்கிறார் புலவர். நால்வருணமே நீதி என்கிறது இவ்வரி. வாழ்த்துப்பாட குயிலை அழைக்கும கற்பனையில்
“பார்பூத்த கீர்த்திபெறும் வைணவரும் தானிகரும்
அருள் பெருந் தருமநிதி சாத்தூரிற் பெரிய நம்பி
அய்யங்கார் வாழவே
கூவாய் குயிலே”
என்று பள்ளர் பெண்களான பள்ளியர்கள் பாடினார்கள். இந்தப் பண்ணையார் நாயினாரே என்று சில இடங்களில் பள்ளரால் அழைக்கப்படுகிறார். முக்கூடல் பள்ளு காலத்திலும் வானியற் அறிவரான கணியர் சாதியினர் வாழ்ந்தனர் என்பதும். அவர்கள் ‘கணியர்’ என்ற அதே பழந்தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஆனால் எண்ணற்ற தத்துவ ஆசான்களை அளித்த கணியார் குலம் கேலியான பொருளில் கையாளப்பட்டுள்ளது. காரணம் அக்காலத்தில் கணியார்கள் அப்படியான நிலையில் வைக்கப்பட்டார்கள் என்பதே. ‘ஆருக்கும் பணியான் சீவலப்பேரி கணியான்’ என்கிறது அவ்வரி, ஊரில் எவருக்கும் அடங்காதவன் கணியான் சும்மா வந்து தொந்தரவு செய்தான் என்ற பொருளில் உள்ளது. இதற்கு உரை எழுதியுள்ள புலியூர் கேசிகன் என்னும் உரையாசிரியர் ‘கணியான் என்றால் பறை அடிப்பவர்’ என்று குறிப்பிடுகிறார்.
இன்றைய பறையர் சாதி, கணியார்குலத்துடன் தொடர்புடைய குலமாக இருந்தமையின் அடையாளமே இது. தமிழர் மரபில் அந்தணராகப் பறையர்கள் இருந்தனர். நான்கு மறைகளை ஓதும் பறையர்கள் வாழ்ந்ததாகக் குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது. “சேரன் செங்குட்டுவன் முன் நால்வகை மறைகளைப் பாடும் பறையூர் கூத்தச் சாக்கையர்கள் வந்து ஆடினர்” என்கிறது. இப்பாடலில் வரும் சாக்கையர்கள் ‘நால்வகை மறையோர் என்றே அழைக்கப் படுகின்றனர். இவர்கள் ஊர் பறையூர் என்பதனால் இவர்கள் பறையர் ஆகின்றனர். நால்வகை தேவங்களையும் பாடி ஆடும் தொழிலில் பறையர் இருந்தனர் என்பதும் அவர்களுக்கு மறையோர் எனப் பட்டம் சூட்டப்பட்டதும் கவனிக்கத்தக்கது. மேலும் பறையர், பள்ளர், கணியார், வள்ளுவர், அம்பட்டர் தச்சர் உள்ளிட்ட குலத்தவர் சங்க காலத்தில் அறிவுச் சமூகத்தவராகவே வாழ்ந்தனர். இதற்கான சான்றுகள் ஏராளம். ஆனால் நாயக்கர் ஆட்சியில் மேற்கண்ட குலங்கள் மிக இழிவாக நடத்தப்பட்டன.
சமுதாய உளவியல் சிந்தனைகள்
* பள்ளர்களைத் தூரப் போ என்று விலக்கும் சமுதாய நிலை.
* பண்ணைக்காரனை வேடிக்கை மனிதனாக வர்ணிப்பதின் மூலம் மக்கள் மனதில் பண்ணையின் கங்காணியான பண்ணைக்காரனின் தாழ்நிலை.
* ஆண்டை, நாயனார் என்று பண்ணைக்காரணை அழைக்க வேண்டிய அடிமைத் தொழிலாளி.
* வேலை செய்யத் தவறிய பள்ளனுக்குக் காலில் கட்டையை கட்டித் தொழுவத்தில் அடைக்கும் அளவுக்குத் தண்டனை அளிக்கப் பண்ணைக்காரணுக்கு அதிகாரம் அளித்திருந்த அரசியல் நிலை.
* விளைந்த நெல் விளைவித்தவனுக்கு உரிய அளவில் கிடைக்காமல் மடத்துக்கும் சுவாமி கட்டளைக்கும் பிற வற்றிற்கும் சென்ற நிலை.
* இரண்டு மனைவிகளின் மனச் சிக்கல், அதனால் குடும்பத்தில் விளையும் துன்பம் அங்கு ஆணின் நிலை.
* அந்த மனைவியரிடையே எழும் பூசல் அவரவர் கடவுள் வரை சென்று தூற்றல், தூற்றினாலும் கடவுளைப் போற்றும் உளவியல்
என்று பள்ளு காட்டும் சமுதாய வாழ்வானது உளவியல் சிந்தனைகளைத் தூண்டக் கூடியவையாக உள்ளது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.