தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
5. தமிழ் இலக்கியங்களில் பண்டைய பெருமைகள்
முனைவர் பொ. அன்பானந்தன்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி,,
நவலூர் குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
முன்னுரை
பாரதப் பண்பாட்டின் ஆதிநாட்களில் பெண் இனத்துக்கு சமுதாயத்தில் உரிய அந்தஸ்து அளிக்கப்பட்டு வந்தது என்பதற்குப் போதிய சான்றுகள் இருக்கின்றன. பெண்கள் வெறும் கிருஹலட்சுமிகளாகவும் வம்சம் தழைக்க உதவுபவர்களாகவும் மட்டும் இருக்கவில்லை. சமுதாயப் பணிகளில் சம பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். தமிழ் இலக்கியங்களில் பண்டையக் காலப் பெருமைகளை இக்கட்டுரையின் வாயிலாக தெளிவாகக் காண்போம்.
பெண்களின் அறிவுத்திறன் மேம்பட்ட காலம் பண்டைய காலம்
பெண்களின் அறிவுத்திறன் பண்டைய காலத்தில் மேலோங்கி நின்றதை பற்றி நாம் நன்கு அறிவோம். இதற்கு உதாரணமாக யாக்ஞவல்கியர் என்ற முனிவர் வானப்பிரஸ்தாசிர மத்திலிருந்து முற்றிலும் சந்நியாசம் மேற்கொள்ள விழைந்த பொழுது தமது உடைமைகளை மைத்ரேயி, காத்யாயணி என்ற தமது இரு மனைவிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க நினைத்தார். ஆனால், மைத்ரேயி கணவருடைய சொத்தில் பங்கு பெற விரும்பவில்லை. அவருடைய அறிவுச் செல்வத்தில் பங்கு வேண்டுமென்று கேட்டாள். யாக்ஞவவல்கியருடன் சரிசமமாக வாதாடி அவரிடமிருந்து தத்துவ விளக்கங்களைக் கேட்டறிந்து ஞானஒளி பெற்றாள் மைத்ரேயி. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உபநிடத்தில் வரும் கதை இது. அப்பண்டைய காலத்தில் பெண்கள் தங்கள் அறிவை எவ்வாறு வளர்த்தனர் என்பதற்கு ஒரு சிறிய சான்றாகவே இக்கதை கருதப்படுகிறது.
போர்த்திறமையிலும் வல்லவர்கள் பெண்கள்
அறிவுத்திறமையில் மட்டுமல்லாமல், பெண்கள் போர்த்திறமையிலும் ஆண்களுக்கு நிகராக இருந்தனர் என்பதற்குப் புராணக்கதைகளில் பல சான்றுகள் கிடைக்கின்றன. போர்க்களத்தில் கைகேயி தனக்கு உதவியாயிருந்து எதிரிகளை முறியடிக்கக் காரணமாயிருந்ததற்காகத்தான் தசரதன் அவளுக்கு இரண்டு வரங்களை எப்போது வேண்டுமானாலும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
நரகாசுரனுடன் கிருட்டிணப்பரமாத்மா போரிட்டபோது சத்யபாமா தன் கணவருக்கு துணையாக ஆயுதம் ஏந்திச் சென்றிருந்தாள். கடைசியில் சத்யாபாமாவின் வில்லிருந்து புறப்பட்ட கணைதான் நரகாசுரனை மாய்த்தது. இதை வெறும் புராணக்கதை என்று அலட்சியம் செய்ய முடியாது. பெண்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதைகளை தெரிவிக்கும் விதமாகவே இருந்தது.
அநீதியை எதிர்த்துப் போராடுபவர்கள் பெண்கள்
ஆண்களின் அநீதியை எதிர்த்துப் போராடவும் பண்டைய காலத்து பாரதப்பெண் தயங்கியதில்லை. கௌரவர் சபையில் பாஞ்சாலி என்ற போர்க்களத்தில் எழுப்பிய குரல் இன்றும் நம் மனத்தை உலுக்குவதாயிருக்கிறதே! எவ்வளவு ஆக்ரோசத்துடன் அவளது ஆவேச வார்த்தைகள் ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த அந்தச் சபா மண்டபத்தில் ஒலித்திருக்க வேண்டும்! தருமரைக் கூட அவள் விட்டு வைக்கவில்லையே! ‘தன்னையேப் பணயம் வைத்துத் தோற்ற பிறகு, என்னைப் பணயம் வைத்துச் சூதாட என் கணவருக்கே என்ன உரிமை இருந்தது? என்று எவ்வளவு தர்க்கரீதியாக நீதியை எடுத்துரைத்தாள்! அதையும் மீறி நடந்த அக்கிரம செயலிலிருந்து கண்ணன் அருளால் மீண்ட பிறகு எத்தகைய கொதிப்புடன் சூளுரைத்தாள்! ‘என்னை அவமானப்படுத்த துணிந்த கொடியவர்களின் ரத்தத்தை இருகரங்களிலும் வாரி கூந்தலில் பூசிய பின்பு தான் என் கூந்தலை அள்ளி முடிப்பேன்!’ - என்ன பயங்கர சபதம்! அநீதியை சகிக்க மாட்டேன், என்று அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தாள். பண்டையகாலப் பெண்கள் அநீதியை எதிர்த்தனர் என்பதற்கு ஒரு சான்றாக இதைக் கொள்ளலாம்.
கல்வி, கேள்விகளில் ஆண்களுக்கு சற்றும் சலிக்காதவர்கள்
காக்கைப்பாடினியார் என்ற பெண் கவி சங்க காலத்தில் மற்ற கவிகளால் மதிக்கப்பட்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் மற்றப் புலவர்களுக்குச் சமமாக அமரும் பெருமை பெற்றிருந்தார். காக்கை கரையும் அழகையே தமது பாட்டுக்குரிய வடிவமாகக் கொண்டு இவர் புனைந்த கவிதை புறநானூற்றில் இடம் பெற்றிருக்கிறது. அதனாலேயே அவருக்கு காக்கைப்பாடினியார் என்ற சிறப்புப் பெயர் வந்தது. இவர் தன்னைப் பற்றிப்பாடிய ஒரு பாட்டுக்காக சேரமன்னன் இவருக்கு ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசுகளும் பரிசாக வழங்கினராம். இந்தப்பாட்டு பதிற்றுப்பத்து ஆறுபதில் இடம் பெற்றிருக்கிறது. இதைத்தவிர புறநானூற்றில் 278-ம் பாட்டும் இவர் பாடியது தான்.
நாம் நமது ஔவையாரைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இளமை வேண்டாம் முதுமை வேண்டும் என்று தனது இஷ்டக் கடவுளான விநாயகரை வேண்டி மக்களுக்கு அறிவுரை வழங்கும் செயலை செய்தார்.
பெண்ணிற்கு சுதந்திரம், மதிப்பும் அளிக்கப்பட்டது
ஆண் தன்னிடம் வரம்பு மீறி உரிமை எடுத்துக் கொள்ள விடாமல் தன்னைக் காத்துக் கொள்ளும் சமயோகித சாமர்த்தியமும் பெண்ணுக்கு இருந்தது. காதல் திருமணத்தைக் கண்டிக்கும் மனப்போக்கைப் பெரியவர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை. இளம் உள்ளங்கள் காதலில் ஒருமித்திருப்பதை அறிந்து பெரியவர்கள் மகிழ்ச்சியே கொண்டார்கள். திருமணத்தையும் மனமுவந்து நடத்தி வைத்தார்கள். அக்காலத்துத் தமிழ்ச் சமுதாயத்தில் திருமணத்துக்கு முன்பே ஆணும் பெண்ணும் அளவோடு பழகுவதற்கும் அன்பு கொள்வதற்கும் சுதந்திரம் இருந்தது. பிற்காலத்தில் இம்முறையால் ஏற்பட்ட பொறுப்பற்ற தவறுகள் தான் கடுமையான சமுதாயக் கட்டுப்பாடுகளுக்குக் காரணமாயிருக்க வேண்டும்.
பெண்களே பெண்ணுரிமையைப் பற்றி சிந்திக்காத நேரங்கள்
திரௌபதியை தெய்வாம்சம் பொருந்தியவளாகக் கருதி வழிபடுவோரும் உண்டு. அப்படிப்பட்ட திரௌபதியைப் பணயம் வைத்து ஆடித் தோற்றார் தருமர். கௌரவர் சபையில் வாதாடிய திரௌபதி தன்னைப் பணயம் வைப்பதற்கு தருமருக்கு உரிமை கிடையாது என்பதை கூற என்ன காரணம் கூறி வலியுறுத்தினாள்? தருமர் ஏற்கனவே அவரை பணயம் வைத்து ஆடித் தோற்றுவிட்டார். அவர் மீண்டும் எப்படித் தன் மனைவியை வைத்துச் சூதாடினார். அவ்வுரிமை அவருக்குக் கிடையாது. எனவே அவர் தம் மனைவியை வைத்துத் தோற்றார் என்பதற்கே இடமில்லை. அந்தப் பணயமே நியாயத்திற்குப் புறம்பானது.
- இப்படித்தான் அவள் வாதாடினாளே ஒழிய தருமர் தன்னை பணயப் பொருளாகக் கருதியது தவறு என்றும், மற்ற உடமைகளைப் பணயப் பொருளாக வைத்ததுப் போன்று தன் மனைவியைப் பணயம் வைக்க அவள் என்ன ஜடப்பொருளா? உணர்ச்சியற்ற பதுமையா? இஷ்டம் போல் பரிவர்த்தனை செய்து கொள்ளக்கூடிய ஆடுமாடுகளுக்குச் சமமானவளா? - இப்படியெல்லாம் திரௌபதி வாதாடியிருந்தால் பெண்ணுரிமைக்காகவும் போராடியவள் என்று வாழ்த்தத் தோன்றும். ஆனால் திரௌபதி எடுத்துரைத்து சூதாட்ட விதிகளுக்கு மாறாக நேர்ந்த குறைப்பாட்டைத்தான். இந்த வகையில் கவியின் கற்பனை ஒருவரம்புக்கு உட்பட்டதாகி விட்டது, என்றே சொல்ல வேண்டும். அன்றைய சூழ்நிலையில் பெண்ணுரிமைப் பிரச்சனையே அவர் மனதில் எப்படி எழுந்திருக்க முடியும்.
பெண்களை விற்கும் வழக்கம்
பண்டைய பாரதப் பெண்களை விற்கும் வழக்கமும் இருந்ததென்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இல்லாவிட்டால் அரிச்சந்திரன் அவ்வளவு சர்வ சாதாரணமாக சந்திரமதியை விற்பது சாத்யமாகி இருக்குமா? உண்மை ஒன்றையே உறுதியாய்ப் போற்றி நிற்பதற்காக, மனைவியைக் கூடத் தியாகம் செய்யத் துணிந்தான் என்ற உன்னத லட்சியமும் ஒருபுறம் இருக்கட்டும். அந்த நாளில் பெண்ணை விலைகூறி விற்பதும் வாங்குவதும் சமுதாயத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட சாதாரண நடவடிக்கைகளாக இருந்தன என்று எண்ணிப் பார்க்கும் போது, இன்றைய நிலையை எவ்வளவோ மேல் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?
ஆண்களின் ஆணவம் மேலோங்கி இருந்தமை
இராவணன் சிறையிலிருந்து மீட்கப்பட்ட சீதாப் பிராட்டியை ராமபிரான் அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னதும் பின்பு நிறைமாதக் கர்பிணியாக இருந்த தேவியை (ஓர் அல்ப அவதூறுக்குப் பயந்து) தன்னந்தனியே காட்டில் விட்டு வரச் சொன்னதும் இராமபிரானின் உயரிய பண்புக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
அப்பண்டையக் காலத்தில் பெண்கள் அறிவுத்திறத்திலும், வீரத்திரத்திலும், கல்விக் கேள்வியிலும் பெருமை வாய்ந்திருந்தன என்பதையும், சில பெண்கள் பெண்ணுரிமையைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்பதையும், ஆண்களின் ஆணவத்தையும் தமிழ் இலக்கியங்களில் பண்டைய காலப் பெருமைகள் என்ற தலைப்பில் அறிந்து கொள்ள முடிகிறது.