தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
52. மலையாளி இனக்குழுத் தலைவர் தேர்வும் தகுதியும் (ஏற்காடு)
செ. சுபாஷ்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி.
முன்னுரை
பழங்குடி அமைப்பிற்கென்றே சில தனித்தன்மைகள் உண்டு. அவற்றின் அடிப்படையிலேயே ஒரு குடியைப் பழங்குடி என மானிடவியலார் கூறுகின்றனர். பழங்குடிகள் அனைவரும் தங்களுக்கென்று ஒரு நிலப்பகுதியினைக் கொண்டு வாழ்வர். அந்நிலப்பகுதி துண்டு துண்டாகச் சிதறிக் காணப்படாமல் ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருக்கும். அந்நிலப் பகுதியில் வாழும் அனைவரும் ஒரு பொதுவான முதாதையிடமிருந்து தோன்றியவர்கள் என்றும் ஒரேப் பொதுப்பண்பாட்டை கொண்டவர்களாகவும் இருப்பர். இவை மட்டுமின்றி சமயம், அரசியல், தலைமை போன்றவையும் ஒன்று போலவே அமையும். மலையாளிப் பழங்குடிகளும் ஓரினத்தவர் என்ற உணர்வும், சமயம், தலைமை, பண்பாடு மற்றும் ஒற்றுமைத் தன்மை கொண்டவர்களாக இருப்பர். மேலும் தன்னாட்சியும் தற்சார்புடையவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வினக்குழு சமுதாயம் அரசியல்முறை சாராத போக்கில் காணப்படுகின்றது. தங்களுக்கென்று ஒரு தலைவர், தங்களுக்கென்று ஒரு இனக்குழு சமுதாயம் என்ற வரைமுறைகளோடு இருந்து வருகின்றனர்.
இனக்குழு அமைப்பு
மலையாளிகள் இனக்குழுவில் தலைவனுக்கு அளிக்கப் பெறும் மரியாதை எண்ணற்றவை. அவனது அதிகாரத்திற்கு மறுப்பு செய்யவோ அல்லது அவரது கட்டளைகளுக்கு கீழ்படிய மறுக்கவோ எவருக்கும் உரிமை இல்லை. பழங்காலம் முதற்கொண்டே இவ்வினக் குழுவிற்கென்று தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவர் வழியின் படி நடக்கின்றனர். “சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பிய நூல்களில் எண் பேராயம், ஐம்பெருங்குழு ஆகியவைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அமைச்சர், புரோகிதர், சேனைத் தலைவர், சாரணர், தூதுவர் ஆகியோர் ஐம்பெருங் குழுவிலும். கரணத்தலைவர், கருமக்காரர், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், இவுளிமறவர் ஆகிய எண்போர் கூடியது எண்பேராயம் ஆகும்” (2). இக்குழுவைப் போல இம்மலையாளிப் பழங்குடியினத் தலைவரின் கீழ் பல நபர்கள் கொண்ட குழு இயங்குகிறது.
1. தலைவர் (நாட்டார்)
2. பட்டக்காரர்
3. காணியாளர் (கணியான்)
4. பத்து பிள்ளை துறை (10நபர்கள்)
தலைவர் பணியின் நிமித்தமாகவோ அல்லது சுய வேலைக் காரணமாகவோ வெளியில் சென்றிருந்தால் தலைவருக்குப் பதிலாக பட்டக்காரப் செயல்படுவாப். ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் ஒரு தனித் துறை இருப்பது போல, தலைவர், பட்டக்காரர், காணியாளர், பத்து பிள்ளைத்துரை ஆகியோருக்குத் தனித் தனியாகச் சடங்குகள் சார்ந்தும் பண்பாட்டைச் சார்ந்தும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மலையாளி இன மக்களின் தலைவன் நாட்டார் என அழைக்கப்படுகிறார், முன் காலத்தில் இம்மலையில் உள்ள ஊர்கள் தனித் தனி நாடாக இருந்து வந்தது, இன்றும் சில ஊர்களின் பின்னால் நாடு என்ற பெயர் இருந்து வருவதைக் காணமுடிகிறது. இந்நாட்டு மக்களைச் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க ஒரு தலைவன் தேவைப்பட்டான், அதற்காக மக்களால் பிற மலைகளில் உள்ள இனக்குழுத் தலைவர்களால் நியமிக்கப்பட்டவர் தான் நாட்டார். ஒரு மலைக் கிராம தலைவன் (நாட்டார்) இறந்து விட்டால் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டால் புதிதாக ஒரு நாட்டரை தேர்வு செய்வர். கொலை, கொள்ளை, சூது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அல்லது இவ்வினக்குழுவிற்கு எதிர் மாறாக செயல்பட்டால் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
தலைமை (நாட்டார்)
தலைமை என்பது உலகியலில் ஒருவர் பெற்றுள்ள சிறப்பு நிலையில் தத்தம் தொழில் வகையாலும் பண்பினாலும் உயர்த்திக் கூறப்படும் புகழுரை என
“தலைமைக் குணச்சொலுந் தத்தமக் குறியதோர்
நிலைமைக் கேற்ப நிகழ்த்துப என்ப” (தொல்காப்பிய மரபியல்-76)
தலைமைக்கு விளக்கம் தருகிறது (3)
பொதுமக்கள் தன்னிடம் இல்லாத ஆற்றல், கவ்வியறிவு, செல்வம், திறன், தரநிலை, குணங்கள் ஆகியவை தலைவனிடம் இருப்பதாக நம்புகின்றனர். இத்தகு தலைவர்கள் ஒரு கிராமத்திற்குத் தலைவர், 10 கிராமத்திற்கும் ஒரு தலைவர், ஒரு மலைக்கு ஒரு தலைவர், ஒட்டு மொத்த மலையாளி பழங்குடி இனத்திற்கு ஒரு தலைவர் என இச்சமுதாய தலைமைக்குழு பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் இவ்வின மக்கள் தலைவரை எளிதாக அணுகிப் பேசும் நிலை காணப்படுகிறது.
நெடுங்காலம் வரை கூட்டத்தில் வலிமையுடையவர், வயதில் முதிர்ந்தவர் தலைமை எய்தி, தன் கீழுள்ள குழுவை கட்டுபடுத்தி இருத்தல் வேண்டும், தலைவன் இறந்து விட்டால் அவருக்கு அடுத்தப்படியாக அவரது வாரிசுகளில் மூத்தவருக்குப் பட்டம் சூட்டப்படுகிறது. பட்டம் சூட்டப்பட இருப்பவருக்கு திருமணம், பிள்ளைப் பேறு இருக்கும் ஒருவருக்கு பட்டம் சூட்டப்படுகிறது. இம்மலையாளி இனக்குழுவில் திருமணமாகாதவர், சிறுபிள்ளை என்பதால் சடங்கு சம்பிரதாயங்களை ஏற்று நடத்தக் கூடிய தன்மை இராது என்பதாலும் சடங்கு, பஞ்சாயத்து போன்ற நிகழ்வுகளில் இவர்களின் செயல்பாடு ஏற்புடையதாக இருக்காது. முறையறிந்து பேசுதல், தீர்ப்புக் கூறுதல் போன்றவற்றில் அனுபவம் இல்லாததாலும் பல்வேறு இடையூறு ஏற்பாடும் என்பதாலும் திருமணம் ஆகாதவரை நாட்டாராக தேர்வு செய்வது இல்லை. ஏதேனும் குற்ற தண்டனை பெற்றவராக இருப்பின் பட்டம் கட்ட இயலாது.
தலைமையின் வகைகள்
குழுத்தலைமை கூட்டத் தலைமை தெருத் தலைமை, ஊர்த் தலைமை என இத்தலைமை படிப்படியாக வளர்ந்திருத்தல் வேண்டும். தமிழ் நிலத்தைப் பொருத்த வரையில் உணவு சேகரிப்பு நிலையிலிருந்தே தலைமை நிலை கொண்டிருக்க வேண்டும். க.ப.அறவாணன் அவர்கள் காலந்தோறும் ஏற்பட்ட தலைமையின் வகைகளை பின்வருமாறு கூறுகிறார். அவை;
1. வலிமை
2. முதுமை
3. திறமை
4. பிறப்பு
5. சார்பு
6. பொறுப்பு
7. தேர்ந்தெடுப்பு
8. அயல்நாட்டவர் வரவு
9. தொண்டு
என்பனவாகும் (4)
தலைமைத் தகுதிகள்
இலக்கியங்களில் தலைமைக்கான தகுதிகளாக 11 வகைப்பண்புகளைக் காணமுடிகின்றது. அவை.
1. மிகை பட உண்ணாதவர்
2. சிறிய அளவு சினமுடையவர்
3. சில சொற்களே பேசுபவர்
4. நிறைய கேட்பவர்
5. நுண்ணுணர்வினர்
6. கொடையாளி
7. மற்றவருக்கு கள் அளிப்பவர்
8. விருந்தோம்புபவர்
9. பணிந்த இன்சொல்லர்
10. பலருக்குப் பயனுடையன ஆற்றுபவர்
11. பாதுகாவலராக இருப்பவர்
இத்தகைய பண்புடையவர்களே தலைவனாகவும் அரசனாகவும் இருந்திருத்தல் வேண்டும். (5)
பட்டம் சூட்டுதல்
பட்டக்காரர், காணியான், பத்துப்பிள்ளைதுரை (10நபர்கள்) ஆகியோர் கொண்ட குழு மற்றும் அருகில் உள்ள வேறு கிராம நாட்டார் ஆகியோர் இவருக்கு பட்டம் சூட்டலாமா? வேண்டாமா? என ஊர்ப் பொதுவிடத்தில் அமர்ந்து பேசி முடிவு செய்கின்றனர். யார் வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். மறுப்பு தெரிவிப்பவர் அதற்கான காரண காரியங்களைச் சபையில் தெரிவிக்க வேண்டும். பின் இந்நாளில் பட்டம் சூட்டும் விழா நடத்தலாம் என குழுவில் முடிவு செய்கின்றனர். ஏற்காடு மலைக்கென உள்ள தலைவரிடம் காணியான் என்பவர் இந்நாளில் இக்கிராமத் தலைவரைத் தேர்வு செய்து பட்டமளிக்கிறோம் தாங்கள் வரவேண்டும் என அழைப்பு விடுக்கின்றார்.
பட்டம் சூட்டப்படும் நாளன்று காலை எட்டு மணி முதல் 10 மணிக்குள்ளாக மக்கள் இனக்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கோவில் (அ) பொது இடத்தில் கூடி நிற்பர். அம்மலைத் தலைவர் வந்ததும் அவரைக் கணியான் மற்றும் பட்டக்காரர் வரவேற்று அவருக்கென தனியாக கட்டில் (அ) நாற்காலியில் அமர வைக்கின்றனர். பின் கணியான் பட்டக்காரர், பத்துபிள்ளைதுரை ஆகியோர் நாட்டாராக பட்டம் சூட்டிக் கொள்பவரின் வீட்டிற்குச் சென்று வெள்ளைத் துணியை நான்கு மூலையிலும் மூங்கில் கோலால் கட்டி உயரே தூக்கிப் பிடித்துக் கொள்கின்றனர். அதனுள் நாட்டாராகப் பட்டம் சூட்டப்பட இருப்பவர் நடந்து வர வேண்டும்.
பொது இடத்தில் உள்ள கல்திட்டு அல்லது மரப்பலகை மீது அமர வைத்து விட்டுச் சந்தனம், குங்குமத்தால் பொட்டு வைத்து மாலை அணிவிக்கின்றனர். மலை நாட்டார், காணியான், பத்துபிள்ளைத் துரை ஆகியோருக்கும், சந்தனம் மற்றும் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்படுகிறது, அதன் பின் அருகில் உள்ள கிணறு, ஆறு, குளம் போன்றவற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரில் மஞ்சள் கலக்கப்பட்டு கும்பமாக நாட்டார் முன் வைக்கப்படுகிறது. அதில் மூன்று அங்குலம் நீளம் அரை அங்குலம் அகலம் உடைய வெள்ளி (அ) தங்கத்தால் ஆன பட்டயம் ஒன்றினை வைத்திருப்பர், மலைத்தலைவரிடம் இன்னார் மகன் இவர், இவருக்குப் பட்டம் சூட்டலாமா? என கேட்கின்றனர். பின் புனித நீரால் பட்டயத்தைக் கழுவி விட்டு நாட்டாராக தேர்வு செய்யப்பட்டவரின் நெற்றியில் கட்டுகின்றார் பட்டக்காரர். பின் பட்டுத் துண்டால் மலைநாட்டார் கிராம நாட்டாருக்குப் பரிவட்டம் கட்டுகிறார். காணியாளர் இனி இக்கிராமத்திற்கு இவர்தான் தலைவர் என கூறுகிறார்.
ஒரு மலையின் தலைவர் என்றால் பிற மலைகளின் தலைவர்களும் பங்கு கொள்வர். அனைத்து மலைகளின் தலைவராக இருந்தால் அனைத்து மலைகளிலும் உள்ள நாட்டார்களும் தவறாது பங்கு கொண்டு இவ்வினக் குழுத் தலைவருக்கு பட்டம் சூட்டப்பட வேண்டும். இவை வழிவழியாக நடைபெற்று வருகிறது. அனைத்து மலையாளிப் பழங்குடிகளின் தலைவர் சவ்வாது மலையில் உள்ளார். பெரும்பாலும் இந்நிகழ்ச்சி ஞாயிறு அல்லது விடுமுறை நாட்களில் நடைபெறுகிறது, இனக்குழுத் தலைவர் தேர்வில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் தேனீர் அல்லது உணவு விருந்தாகக் கொடுத்து உபசரிக்கப்படுகிறது.
நாட்டாரின் (தலைவரின்) செயல்பாடுகள்
தனியொரு கிராமம் என்றால் அம்மலை கிராமத்தைச் சார்ந்த நாட்டார் மட்டுமே திருமணம், இறப்பு, பஞ்சாயத்து போன்றவற்றில் கலந்து கொள்கின்றார். ஒட்டு மொத்த இனக்குழுவின் தலைவர் நேரடியாகக் கலந்து கொள்வது இல்லை. சிறுசிறு பிரச்சனைகள் காணியார் தேர்வு மற்றும் சடங்குகளில் உள்ளுர் நாட்டார்களே பங்கு கொள்கின்றனர்.
கிராமப் பகுதியில் ஏதேனும் களவு, சூது, சண்டை, விவாகரத்து போன்ற தீர்வுகள் பல இவர்கள் எதிர் கொள்கின்றனர். பலதரப்பட்ட வழக்குகளை ஊர்ப் பொது இடத்திலேயே விவாதம் செய்கின்றனர். இதில் தலைவரும் தலைவரின் கீழ் உள்ளவர்களும் இருதரப்பு வாதங்களைக் கேட்டு உடனே தீர்ப்பு வழங்கப்படுகின்றது. “இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்புறப் பகுதியில் திபாங் பள்ளத்தாக்கில் “இது-மிஸ்மி” என்னும் பழங்குடிகள் கிராமத்தில் உள்ள முதியவர்களைக் கொண்ட குழு “அப்பாலா” என்று அழைக்கப்படுகிறது. இக்குழு பல்வேறு வழக்குகளை தீர்த்து வைப்பதன் மூலம் இரு தரப்பிலிருந்தும் பணம் பெறப்பட்டு குழுவினர் அதை பங்கு பிரித்துக் கொள்கின்றனர்” (6) இவர்களைப் போலவே மலையாளிப் பழங்குடிகளும் இரு தரப்பு வாதங்களைக் கேட்டு அறிந்த பின்பு தீர்ப்பு வழங்குவர். அதிக அளவில் தண்டத்தொகையே பெறப்படுகிறது. இத்தொகையில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பங்கும் பஞ்சாயத்துக் குழுக்களுக்கு ஒரு பங்கும் என்று பிரித்துக் கொள்கின்றனர். மேலும் பஞ்சாயத்து செய்யும் படி அழைத்தவர்கள் உணவும் மதுபானமும் வழங்குகின்றனர்.
ஒரு மலை கிராமத்தைச் சார்ந்த இருவர் சண்டையிட்டுக் கொண்டால் பஞ்சாயத்து முன்பு அழைத்து வந்து பசுமாட்டுச் சாண நீரால் கழுவி, பின் கோவிலில் உள்ள புனித நீரால் கழுவிப் பாவத்தைப் போக்குகின்றனர். செருப்பு, முறம், துடைப்பம் போன்றவை ஒதுக்கி வைக்கப்பட்ட பொருள் என்பதால் அதில் சண்டையிட்டவர்களுக்கு இவ்வாறு செய்கின்றனர், யாரால் சண்டையிட நேர்ந்தது என நாட்டார் கேட்டு அறிந்து இருவரும் அடுத்த திருவிழா முடியும் வரை எந்த சுப நிகழ்வு, இறப்பு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என நாட்டார் தீர்ப்பு வழங்குகிறார். மேலும் தண்டத்தொகையும் வாங்கப்படுகிறது.
பஞ்சாயத்து அவமதிப்பு
இம்மலை மக்கள் நேரடியாக நாட்டாரைப் பஞ்சாயத்திற்கு (மகாநாடு) அழைக்கலாம். அவர்கள் வழங்கும் தீர்ப்பை மீறி எதுவும் செய்ய இயலாது. “கி.பி.1860 ஆம் ஆண்டு போதமலையில் காத்தாகவுண்டன் என்பவரது நியாயத்தை தீர்ப்பதற்காக கீழுட் பஞ்சாயத்தில் வழக்குரைக்கப்பட்டது. காத்த கவுண்டனுக்கு சாதகமாக அமையவில்லை ஆதலால் நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் மகாநாட்டினட் கீழுரில் கூடி அவமதிப்பு இனத் துரோகம் செய்ததற்காக அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் தண்டித்து அவனுக்கு இருந்த அதிகாரத்தையும் குறைத்தனர்” (7) இச்செய்தியினை கீழுரில் கிடைத்த செப்பேட்டின் துணைகொண்டு அறிய முடிகிறது.
இறப்புச் சடங்கில் நாட்டரின் பங்கு
மலைக் கிராமங்களில் யாரேனும் இறந்து விட்டால், முதலில் காணியாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். காணியாளர் ஊராருக்கும் நாட்டாருக்கும் தகவல் கொடுக்கிறார். வெளியூர்களுக்குச் செய்தி சொல்ல வேண்டுமெனில் சாணர் குடும்பத்தார் செல்ல வேண்டும். பிற மலை மக்களுக்கு தகவல் தெரிவிக்க, வெடி வெடித்துத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இறப்பு சடங்கிற்கு ஆகும் செலவுத் தொகையை இறந்தவரின் உறவினர் செய்ய வேண்டியது இல்லை. நாட்டார் கணியானிடம் பேசி இவ்வளவு தொகை ஒரு தலைக்கட்டிற்கு என வசூல் செய்து வருமாறு அறிவுறுத்துகிறார். பிணத்தை எப்போது எடுத்துச் செல்வது போன்ற கட்டளைகளைச் செயல்படுத்துவது காணியானின் செயல்களாகும்.
பிணம் புதைக்கப்பட்டு பின் 11ம் நாள் சடங்குகளிலும் நாட்டார் பங்கு கொள்கிறார். இச்சடங்கிற்கு இறந்தவரின் குடும்பத்தின் சார்பாக இருவர், நாட்டார் வீட்டிற்குச் சென்று இன்று 11ம் நாள் சடங்கு வைத்துள்ளோம், தாங்கள் வர வேண்டும் என அழைப்பு விடுக்க வேண்டும். சடங்குளைக் காணியான் நிகழ்த்துகிறார். இரவு முழுவதும் நடைபெறும் சடங்குகளில் ஏதேனும் மாற்றம் இருப்பின் நாட்டார் இன்ன செய்க என கணியானுக்கு அறிவுறுத்துகிறார்.
திருமணத்தில் நாட்டாரின் பங்கு
மணமக்கள் வீட்டார் பேசி முடிவு செய்த பிறகு, இன்ன நாளில் திருமணம் செய்யப்படவிருக்கிறது. தாங்கள் வரவேண்டும் என நாட்டாருக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். திருமணத்திற்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே நாட்டார் மணமகன் வீட்டிற்கு வந்து வீட்டில் போடப்பட்டுள்ள பந்தலில் பன்னிரெண்டு கால்கள் உள்ளதா? என எண்ணிப் பார்த்துத் திருமணத்திற்கு ஆகவேண்டிய காரியம் எல்லாம் முடிந்து விட்டதா? என மாப்பிள்ளை வீட்டாரிடம் வினவுகிறார். பின் கணியான், பத்துபிள்ளைத்துரை ஆகியோரிடம் எல்லாம் சரியாக இருக்கிறது உட்காரலாம் எனக் கூறியதும் நாட்டாருக்கென தனி கட்டில் கம்பளி போர்வை வைக்கப்படுகிறது. இரவு உணவு உண்டு பெண் வீட்டார் வரும் வரை காத்திருக்கின்றனர்.
பெண் அழைப்பு நடைபெறும் போது பெண்ணின் கிராமத்து நாட்டார், காணியாளர்களும் உடன் வருவர். அவ்வூர் நாட்டரை இவ்வூர் நாட்டார் வரவேற்று அழைத்துச் செல்கிறார். பெண்ணின் உடன் வந்த நாட்டாருக்கும் தனி கட்டில் கொடுக்கின்றனர். திருமண நாளன்று திருமணம் நடைபெறும் இடத்திற்கு மணமகனுக்கு முன்னதாக நாட்டார்கள் மேளதாளத்துடன் அழைத்து வரப்படுகின்றனர். அதன் பின்பு தான் மாப்பிள்ளையும் மணப்பெண்ணையும் அழைத்து வருகின்றனர். நாட்டார்கள் கட்டிலில் அமர்ந்து அவருக்கு முன் பட்டக்காரர், பத்துபிள்ளைத்துரை போன்றோர் தரையில் அமர்ந்து கொள்வர். காணியாளர் திருமணச் சடங்குகளை நடத்துகிறார். மணமகனின் தந்தை நாட்டார், பட்டக்காரர், பத்து பிள்ளைத் துரை ஆகியோருக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து அனைவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டுச் சிறப்பு செய்யப்படுகிறது. அதன் பின் கணியான் மணமகனுக்கு மாலை அணிவித்து சடங்குப் பாடல்களைப் பாடித் திருமணத்தை நடத்தி வைக்கிறார். மணமகன் தாலி கட்டியதும் பெற்றோர் காலில் விழுந்து ஆசிபெற்றதும் நாட்டார் காலில் விழுந்து ஆசி பொறுகின்றனர். அதன் பின் வழங்கப் பெறும் மாமிச விருந்தில் மதுவுடன் நாட்டார் உபசரிக்கப்படுகிறார்.
மாலையில் வீடு திரும்பும் பெண் வீட்டார், மாப்பிள்ளை கிராம நாட்டார் மற்றும் பட்டக்காரரிடம் எங்கள் பெண்ணை உங்களை நம்பியே விட்டுச் செல்கிறோம். பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டுச் செல்கின்றனர். ஏனெனில், பெண்ணுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் நாட்டாரே பதில் கூற வேண்டும். இனக்குழுத் தலைவன் தேர்வு செய்யப்பட்ட பின்பு தான் தலைமைப் பொறுப்பில் இருந்து செயல்படுகிறார்.
முடிவுரை
தலைவர்களாக இருந்து பொதுமக்களை வழி நடத்திச் செல்கின்ற போக்கு இங்குள்ளது. இயல்பான வாழ்க்கைச் சூழுலில் நாட்டாருக்கெனத் தனிச் சலுகைகள் கிடையாது. தேவை ஏற்படும் போது மட்டுமே மக்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு தங்கள் பொறுப்புகளை எல்லாம் தலைமை பார்த்து கொள்ளும் என நம்பி இருக்கின்றனர். தலைமைக்கு கட்டுப்பட்டு வாழ்வதால் இச்சமூகத்தை அடிமைச் சமூகம் என்றெண்ணிவிடக் கூடாது. மக்கள் எப்போது வேண்டுமென்றாலும் தங்களது நிறை குறைகளை நேரடியாகப் பேசவும் வழக்குரைக்கவும் உரிமையுண்டு. இம்மலையாளிகளின் தலைமைத் தன்மை கட்டுப்பாடு போன்றவற்றின் காரணமாகத்தான் ஆங்கிலேயர் ஆட்சி அடக்கு முறை போன்ற பலவற்றாலும் சமூக அமைப்பு பண்பாடு, கட்டுப்பாடு, தனித்தன்மை முதலியவற்றில் மாற்றம் பெறாமல் இன்றளவும் இருந்து வருகிறது.
குறிப்புகள்
1. அறவாணன்.க.ப, தமிழர் தம் தலைமை வழிபாடு (1990), பாரிநிலையம், சென்னை.
2. சுப்பிரமணியன். ந., சங்ககால வாழ்வியல் (2010), நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை.
3. வெள்ளைவாரணர். தொல்காப்பியம்.
4. அறவாணன். க. ப, தமிழர் தம் தலைமை வழிபாடு (1990), பாரிநிலையம், சென்னை.
5.மேலது.
6. சக்திவேல். சு, இந்தியப் பழங்குடிகள், கலைமகள் காரியாலயம், சென்னை.
7. தமிழ்நாடன், தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடிகள் (1996), சேலம் மாவட்ட ஓவியர் எழுத்தாளர் மன்றம், சேலம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.