தாசர்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள், சூத்திரர்கள், அவணர்கள், புலையர், இழிசினர், இழிபிறப்பாளர், அரிஜன்கள், அட்டவணைச் சாதியினர், ஆதி திராவிடர், தாழ்த்தப்பட்டோர், தலித்துக்கள் எனப் பல பெயர்களில் வேத காலம் தொட்டு இன்று வரை சாதியக் கோபுரத்தின் அடித்தட்டில் வாழும் மக்கள் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இப்பெயர்களில் பெரும்பாலானவை இம்மக்களை எதிரியாகக் கருதி செயல்பட்டவர்களாலும் சேவை சமூகத்தினராகப் பயன்படுத்திக் கொண்டவர்களாலும் சூட்டப்பட்ட நாமகரணங்கள் ஆகும். இம்மக்களால் விரும்பியோ, விரும்பாமலோ திணிக்கப்பட்டவைகளில் இத்தகைய பெயர்களும் கூட அடங்கும். அவ்வகையில் ‘அரிஜன்’ என்ற பெயரும் கூட அம்மக்களின் விருப்பமின்றி சூட்டப்பட்ட பெயர் எனக் கொள்வதில் தவறேதும் இல்லை. எனினும் அரிஜன் என்னும் இச்சொல்லாடல் வரலாற்றில் சாமர்த்தியமாகப் பல்லாண்டு காலம் நிலைபெற்று விட்டதோடு மட்டுமல்லாமல் அடித்தட்டு மக்களில் சிலராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பது ஓர் அரசியல் நிகழ்வாக அவதானிக்கப்பட வேண்டியுள்ளது.
தொன்னூறுகளுக்கு முந்தைய ஆண்டுகளில் கட்டுரையாளரின் ஊரில் சுதந்திர தின நாட்களில் கொடியேற்று விழா நடைபெறுவது வழக்கம் அவ்விழாவானது தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளின் மத்தியில் நடைபெறும். அப்போது கட்டுரையாளரின் தாத்தா தலைமை வகித்து கொடியேற்றி வைத்துப் பேசுவார். ‘அவரது பேச்சில் மகாத்மா காந்தி நமது நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தார். அரிஜனங்களுக்காகப் பாடுபட்டார்’ என்பது முக்கியக் கருத்துக்களாக அமையும். அதைத் தொடர்ந்து பேச வரும் அனைவரும் அதே கருத்துக்களை வலியுறுத்திப் பேசுவர். இவர்களது பேச்சுக்களை நினைவு கூர்கையில், “தலித்துக்களை அவர் (காந்தி) ‘அரிஜன்’ என்று இனிமையான பெயரிட்டு அழைத்தார். தலித்துக்கள் ‘கடவுளின் குழந்தைகள்’ என்ற இனிமையான பெயரிட்டு அழைத்தார். தலித்துக்கள் விரும்பத் தொடங்கினார்கள்” என்ற கவிஞர் இந்திரனின் கூற்றை அரண் செய்வதாய் உணர முடிகிறது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வியறிவற்றவர்களாய் இருப்பினும் காங்கிரஸ் இயக்கத்தின் அங்கத்தினர்களாய் இருந்தனர் என்பதனை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். மகாத்மா காந்தியைப் பற்றியும் அவர் கூறிய ‘அரிஜன்’ என்னும் சொல்லாடலைப் பற்றியும் அறிந்து வைத்துள்ள இவர்களிடம் அம்பேத்கரைப் பற்றி கேட்டால் பெரும்பாலானோரின் வாயிலிருந்து பதில் வருவதில்லை. ஓரிருவர் மட்டும் ‘சட்டம் எழுதினார்’ என்ற பதிலை மட்டுமே தந்து முடித்து விடுகிறார்கள். அதற்கு மேல் வேறெந்த வகையான புரிதலும் அவர்களிடம் இல்லை. இதற்குக் காந்தியும் அவரின் அரிஜன் என்ற சொல்லாடலும் காந்தியைப் பின்பற்றிய இயக்கவாதிகளால் தேசம் முழுவதும் முன்னெடுத்து செயல்பட்டு பரப்புரை செய்யப்பட்டதும் தாழ்த்தப்பட்டவர்களை அவர்களின் இயக்கத்தில் உட்செரித்து தங்களது கருத்துக்களை திணித்து விட்டதும் அதே போல் அம்பேத்கரையோ அவரது கொள்கை முழக்கங்களையோ எடுத்துச் சென்று பரப்பிட அறிவு ஜீவிகள் போதிய அளவில் அன்றில்லை என்பதுமே காரணங்கள் எனலாம். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல காந்தியும் அவர் நடை பயின்ற இயக்கத்தாரும் சொல்லி வைத்ததையே சொல்லி வந்துள்ளனர் என்பதனை அறிய முடிகிறது.
‘அரிஜன்’ என்ற இப்பெயரை தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சூட்டி, அதனைத் தேசம் முழுவதும் பிரபலப்படுத்தியவர் அனைவராலும் மகாத்மா என்று அழைக்கப்படும் காந்தியடிகளாவார். இன்றும் பெரும்பாலான ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களை அரிஜன்கள் என்றும் அவர்களது குடியிருப்புகளை அரிஜன காலனி என்றும் அழைக்கப்படுவது தொடர்ந்து வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்.
அன்றைய காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் விடுதலை சமத்துவம், உரிமை போன்றவைகளை முன் வைத்து மிகப் பெரிய புரட்சிகரமான போராட்டங்களை இந்திய அளவில் முன்னெடுத்து செயல்பட்ட தலைவர் அண்ணல் அம்பேத்கர் என்றால் அது மிகையாகாது. அவர் தமது கல்விப் புலமையாலும், கூர்ந்த மதி நுட்பத்தினாலும் சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர் படும் அவலங்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் எடுத்துக் கூறியும் போராடியும் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்து கொண்டிருந்தார். அத்தகைய உன்னதமான வெற்றிகளில் ஒன்றான தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ‘இரட்டை வாக்குரிமை’ என்னும் வரலாற்று சிறப்பு வாய்ந்த மிகப் பெரிய சாதனையினை நோக்கிச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். வட்ட மேசை மாநாடுகளின் இறுதியில் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் இவரது வேண்டுகோளுக்குச் செவி சாய்த்திருந்த வேளையில் அதனை எதிர்த்துச் சாகும் வரை உண்ணாவிரதம் என்னும் ராஜதந்திரத்தினை அரங்கேற்றினார் காந்தியடிகள். இதன் மூலம் மிகக் கடினமான நெருக்கடியை அம்பேத்கருக்கு ஏற்படுத்திய காந்தியடிகள் தனது சனாதன தருமத்தினை 1932இல் நடந்த புனே ஒப்பந்தத்தின் மூலம் வெற்றி பெறச் செய்து விட்டார். தொடர்ந்து அழுகல் நாற்றமடிக்கும் சனாதனக் குளத்திலிருந்து தனித்து வெளியே செல்ல விடாது தலித்துகளைத் தடுத்து அதன் பரப்பினைக் குறைய விடாமல் பார்த்துக் கொண்டார்.
அன்னாரின் தந்திரம் பலித்தாகி விட்டது. ஆயினும் அறிவுஜீவிகள் மத்தியில் அவரது சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. இக்குறைபாட்டினைக் களைய அப்போது முதல் தலித் மக்களுக்காக பாடுபடுவது போல செயல்படத் துவங்கி விட்டார். தலித்துக்களின் ஏகோபித்தத் தலைவன் போல தன்னை நிலை நிறுத்தும் வேளைகளில் இறங்கினார். தலித்துக்களை அரிஜன்கள் அதாவது கடவுளின் குழந்தைகள் (தந்தையின்றி முறை தவறிப் பிறந்தவர் என்பதாக) என அழைக்கத் தொடங்கியவுடன், அரிஜன் யாத்திரை, அரிஜன் ஆலயப் பிரவேசம் நடத்தியும் அரிஜன சேவாசங்கம் என இயக்கத்தைக் கட்டியும் தாம் நடத்திய யங் இந்தியா இதழை ‘அரிஜன்’ என்று பெயர் மாற்றியும் செயல்பட ஆரம்பித்தார். இச்செயல்களை அவர் சார்ந்த இயக்கத்தின் மூலமாகப் பரப்புரை செய்யப்பட்டு தலித் மக்கள் மத்தியிலும் பிரபலமடைய செய்யப்பட்டது. இச்செயல்கள் அனைத்தும் ஒரு வகையான நூதனமான அரசியல் செயல்பாடுகள் என்பதால் முற்றும் உணர்ந்த தலித் அறிவுஜீவிகள் பங்கொள்ளாது விலகியே இருந்தனர். இவை அனைத்தும் பெயரளவில் செய்யப்பட்டவைகளே புரட்சிகர எண்ணத்துடன் செயல்பட்டு நல்ல முடிவுகளை இவர்கள் பெற்றுத் தரவில்லை என்பதே உண்மை என நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அரிஜன் என்னும் இச்சொல்லாடல் தாழ்த்தப்பட்ட மக்களை அழைப்பதை அன்றிருந்த பல தலித் அறிவுஜீவிகள் முற்றிலுமாக விரும்பவில்லை. அரிஜன் என்றால் அரியின் (விஷ்ணு) கடவுளின் குழந்தைகள் என்ற பெயரில் பயன்படுத்தப்படுவதாக காந்தியாரால் விளக்கப்பட்டது. ஆயினும் அதனை ஏற்க மறுத்த அம்பேத்கர் காந்தியை நோக்கி, “மொத்த மக்கள் கூட்டத்தில் தலித்துகள் மட்டும்தான் அரியின் குழந்தைகளா? அப்படியானால் பார்ப்பனர்களும், பிற உயர் சாதியினரும் யார்? அவர்கள் அரக்கர்களின் குழந்தைகளா?” என எதிராக வினாத் தொடுக்கிறார். அண்ணலின் கேள்விக்கு காந்தியாலும் அவரது அடிப்பொடிகளாலும் இதுவரையிலும் பதில் கொடுத்ததாகத் தெரியவில்லை.
காந்தியாருக்கு முன்பாக அரிஜன் என்ற சொல்லாடலை நரசிம்ம மேத்தா என்ற குஜராத்திப் பார்ப்பன நாவலாசிரியர் தமது படைப்பில் பதிவு செய்துள்ளார். தந்தையாரைத் தெரியாமல் முறைதவறி தவறான வழியில் தேவதாசிக்குப் பிறந்த குழந்தையினைக் குறிக்கவே அவர் அரிஜன் என்ற சொல்லாடலை பயன்படுத்தியுள்ளார். இத்தகைய பொருளின் ஆழத்தினைத் தெரிந்து கொண்ட அம்பேத்கர் முதலான அனைத்துத் தலித் தலைவர்களும் இச்சொல்லாடலால் தங்களைக் குறிப்பதை எதிர்த்துத் தமது உணர்வைக் கொட்டியுள்ளனர்.
இன்று போலவே அன்றிருந்த தாழ்த்தப்பட்ட தலைவர்கள் ‘அரிஜன்’ என்ற சொல்லாடலை ஏற்கவில்லை. அன்று, “சென்னை மாநகரத் தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்தைச் சார்ந்த இரட்டை மலை சீனிவாசன், ராவ் சாகிப் தர்மலிங்கம் பிள்ளை, சுவாமி சகஜானந்தர், வி.கே.புஸ்பராஜ், பி.வி.இராஜகோபால் பிள்ளை, எச்.எம்.ஜகந்நாதன் ஆகியோர் டிசம்பர் 22, 1933 அன்று காந்தியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். பூனா ஒப்பந்தம் நேர்மையாக அமல்படுத்தப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோர் உண்மையிலேயே தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகச் சட்டங்களை அமுல்படுத்துவதில் காந்தியின் அரிஜன சேவா சங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அரிஜனங்கள் சொல்லாக்கம் குறித்த தமது மறுப்பையும் அதில் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்”
மேற்குறிப்பிட்டத் தலைவர்களின் கேள்விக்கு, “தாழ்த்தப்பட்டவர் ஒருவரே இப்பெயரைத் தேர்வு செய்ததாகக் காந்தி பதிலளித்தார். தன்னைச் சந்தித்த ஒரு தாழ்த்தப்பட்டவர் என்றென்றைக்கும் எங்களைக் கீழானவர்களாக வைத்திருக்கும் எந்தச் சொல்லாலும் எங்களை அழைக்காதீர்கள். தாழ்த்தப்பட்டவர் என்ற சொல் எங்களை அடிமையாக்குகிறது. என்று கூறியதாகச் சொன்னார். நீங்களே ஒரு பெயரைச் சொல்லுங்களேன் எனக் காந்தி கேட்ட போது ‘அரிஜன்’ என்ற பெயரை அவரே கூறினாராம். குஜராத்திக் கவி நரசிம்ம மேத்தா தாழ்த்தப்பட்டோரை அரிஜன் என விளித்திருப்பதையும் அவர் காந்தியிடம் காட்டினாராம்.
மேற்கண்ட காந்தியாரின் கூற்றை மறுதலிக்கும் விதமாக தலித்தியச் சிந்தனையாளர் வி. டி. ராஜசேகர் அரிஜன் என்கிற வார்த்தையை ‘நர்சிமேத்தாவிடமிருந்து காந்தி இந்த வார்த்தையைக் காப்பியடித்துக் கொண்டார்” என்கிறார். இக்கூற்று உண்மையாகும்பட்சத்தில் காந்தியார் தலித் ஒருவர்தான் இவ்வார்த்தையை தங்களை அழைக்க வேண்டும் என்ற கூற்று பொய்யாகி விடுகிறது. மேலும் அரிஜன் என்கிற வார்த்தை தங்களை அவமானப்படுத்துவதாகவும் மனதைப் புண்படுத்துவதாகவும் காந்தியிடமே பல தலித் தலைவர்கள் முறையிட்டும், மகாத்மாவானவர் ஏன் சொல்லாடலைத் தவிர்க்காமல் தொடர்ந்து பயன்படுத்தினார் என்ற வினாவுக்குப் பதில் இல்லாததால் சந்தேகம் வலுப்பது இயல்பே.
மேலும் அம்பேத்கர் அவர்கள் இந்து மதம் தம் மக்களை வஞ்சித்துக் கொடுமைகள் புரிவதையுணர்ந்து, இந்து மதத்தைச் சாடிப் பகடி செய்தும், அதற்கு எதிராகச் செயல்பட்டும், தன் பின்னால் தம் மக்களை ஒன்று திரட்டும் வேலையில் இறங்கிச் செயல்படுகிறார். இந்துமதக் கொடுங்கோன்மையினையுணர்த்தி அவர்களை வெளியே அழைத்துத் தனிப்பாதை காட்ட விழைகிறார். அதற்கு எதிராகக் காந்தியார் தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜன் அதாவது அரியின் (இந்துக் கடவுள்) குழந்தைகள் என அழைப்பதன் வழியே அவர்களை சனாதன தர்மத்திலிருந்து பிரிய விடாது ஒட்டி வைக்கும் அவரின் சுய விருப்பே இப்பெயரைச் சூட்டக் காரணமாக இருக்கலாம் என நாம அவதானிப்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
காந்தியார் சூட்டிய அரிஜன் எனும் இப்பெயர் நற்பெயரோ? அவப்பெயரோ சனாதன தர்மத்தின் வழியில் நின்று சூட்டப்பட்ட பெயர். இச்சொல்லாடல் (சார்பு, எதிர்ப்பு) இரு வழியிலும் விசையூக்கத்துடன் இன்றும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
1. ந. ஞானதிரவியம், சமகாலப் படைப்புகளில் சாதி
2. அ. மார்க்ஸ், காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்
3. பா. பிரபாகரன், அம்பேத்கரும் அவதூறுகளும் ஜெயமோகனுக்கு மறுப்பு
4. அருணன், காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும்
5. இரா.குருநாதன், பத்மாவதி விவேகானந்தன் (தொ.ஆ) தலித்தியல்.