தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
60.தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியரும் மொழி வளர்ச்சியும்
ம. தங்கேஸ்வரி
முனைவர் பட்ட ஆய்வாளர், கந்தசாமிக் கண்டர் கல்லூரி, ப. வேலூர், நாமக்கல் மாவட்டம்.
தமிழின் தொன்மை
தென்னிந்தியாவில் வழங்கும் திராவிட மொழிகளுள்ளேத் தமிழ்மொழி தனிப்பட்ட சிறப்புடையதாக விளங்குகின்றது. அதன் சிறப்பியல்புகளுள் ஒன்று ஒருவர் கண்ணையும் தப்ப முடியாததாக உள்ளது. தெலுங்கு மொழியை எடுத்துக் கொண்டால், அதன் ஆதியிலக்கியமாகிய நன்னைய பாரதம் என்ற நூல் கி.பி.11-ம் நூற்றாண்டில் தோன்றியதாகும். கன்னட மொழியை எடுத்துக் கொண்டால் அதன் ஆதியிலக்கியமாகிய ‘கவிராஜமார்க்கம்’ என்ற நூல் கி.பி. 9-ம் நூற்றாண்டில் தோன்றியதாகும். மலையாள மொழியை எடுத்துக் கொண்டால் அதன் ஆதியிலக்கியமாகிய ‘ராமசரிதம்’ என்ற நூல் கி. பி.14-ம் நூற்றாண்டில் தோன்றியதாகும். ஆனால் தமிழ் மொழியின் ஆதியிலக்கியங்களோ, இப்போது அறுதியிட்டிருக்கின்றபடி கிறித்துவப்பதத்தின் ஆரம்ப காலத்திலே தோன்றியதாகும். இலக்கியங்களின் திருந்திய வடிவங்களையும், செய்யுளழகுகளையும் முதிர்ந்த பக்குவத்தையும் நோக்கினால், கிறித்துவப்பதத்திற்கு மிகமிக முற்பட்ட காலத்தே தமிழிலக்கியங்கள் தோன்றி உள்ளதை அறியலாம்.
பொருண்மைச் சிறப்பு
இத்தொன்மை பற்றி, தமிழ் மக்களாகிய நாமனைவரும் பெருமை கொள்வது இயல்பே. திராவிட வகுப்பில் பிற மொழிகட்குரிய ஆதியிலக்கியங்களெல்லாம் வடமொழி நூல்களில் இருந்து வந்தவை. உதாரணமாக, தெலுங்கு நூல்களுள் காலத்தால் முந்திய நன்னைய பாரதம் என்ற நூல் வடமொழியிலுள்ள வியாச பாரதத்தைப் பின்பற்றியதாகும். தமிழிலக்கியங்களுள் காலத்தால் முந்தைய நூல்கள் இவைப்பற்றியது அல்ல. இயற்கையொடு ஒன்றி நின்று இயற்கை நலன்கள் அனைத்தையும் ஆழ்ந்து நுகரும் உணர்ச்சிகளையும், பொருள்களை நுணுகி ஆராய்ந்தறியும் அறிவாற்றலும் உடைய தமிழ்ப் புலவர்கள் தாமே புதுச்செய்யுள்களை இயற்றினர். புறநானூறு என்ற சங்க காலத்துத் தொகை நூலை எடுத்துக் கொண்டால் கண்ணுள்ள செய்யுட்கள் வடமொழி நூலொன்றினைப் பின்பற்றி இயற்றப்பட்டது எனக் கூற முடியாது. இதுபோலவே பிற தொகை நூல்களும் அமைந்துள்ளன. பொருண்மை பற்றிய சிறப்பியல்பு பெரும்பாலும் தமிழ் மொழிக்கெனத் தனியுரிமை பெற்றுப் பிறமொழி நூற்கருத்துக்களோடு ஒப்புமையுடையதாய் இருக்கிறது. தெலுங்கு முதலிய பிறமொழிக்குரிய ஆதியிலக்கியங்கள் வடமொழியிலக்கணங்களைப் பின்பற்றிய செய்யுட்களால் இயன்றுள்ளன. ஆனால் தமிழ் மொழியிலுள்ள ஆதியிலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களோ தமிழிற்கே சிறந்துரியனவாய் வடமொழியிலக்கண இலக்கியங்களில் காணமுடியாத இலக்கணச் செய்யுளில் அமைந்துள்ளது. அகவற்பா, கலிப்பா, வெண்பா, முதலியன தமிழிற்கேத் தனித்துரிய செய்யுள் வகைகளாம். தமிழ் மக்களது கருத்து நிகழ்ச்சிக்கும், தொன்றுதொட்டு வந்து வழக்கு நிரம்பிய தொடரமைதிக்கும், தமிழ் மக்களது செவியுணர்விற்கொத்த இசையினிமைக்கும் பொருந்துமாறு அமைந்து உள்ளது. தமிழிற்கேத் தனியுரிமையென முத்திரையிடப் பெற்று உள்ளது.
தமிழின் தனிப்பண்பு
இலக்கியத் தொன்மையாலும், இலக்கியப் பொருண்மையாலும் இலக்கியத்துக்குரிய செய்யுள் மரபாலும் திராவிட மொழிகளுக்குள்ளே தமிழ்மொழி சிறப்புடையதாகும். தமிழ்மொழியின் இயற்கையில் அமைந்த தத்துவமொன்றே இச்சிறப்பியல்களாகப் பரிணமித்தது என்றே அமைந்துள்ளது. இத்தத்துவத்தை “Individuality” அல்லது “Genius” என்று ஆங்கில அறிஞர் கூறுவர். இப்பண்பு யாவர்க்கும் எளிதில் வேறுபட்டுக் காணக்கூடியதாய் அமைந்து இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழியின் சரிதத்தை ஒரு வகையாக நாம் அறியலாம். தமிழ் மொழியின் பண்பு சரிதத்தில் ஓரிடத்தேனும் காணப்படாமற் போகவில்லை. மொழி வளர்ச்சியின் கதியையும், இலக்கிய வளர்ச்சியின் கதியையும் ஒருவாறு நெறிப்படுத்தப்படுகிறது. இயற்கைச் சக்திகளை வெல்லவேண்டுமாயின் இயற்கைச் சக்திகளைக் கொண்டே வெல்லுதல் வேண்டும். இயற்கைச் சக்திகளை ஒரு நெறிப்படுத்த வேண்டுமாயின், அவ்வியற்கைச் சக்திகளைக் கொண்டே அவ்வாறு செய்ய முடியும். இயற்கைச் சக்திகளுக்கு அடங்கினாலன்றி, இயற்கையை வெல்லுதல் கூடாது. பண்பு ஒரு கடுந்தளை போன்றதாயின், வளர்ச்சியென்பதும் அபிவிருத்தியென்பதும் இல்லாமல் போய்விடும். இவ்விரண்டும் இல்லையெனில், வெகு சீக்கிரத்தில் கேடு விளையும் என்பது எண்ணம். கேடு ஏதும் வராது வளர்ந்தோங்கி வந்த தன்மையினாலும் அவ்வப்போது புதியனவாக எழுந்த நூல்களாலும் மொழிவளர்ச்சியினாலும் மேற்குறித்த தனிப்பண்பு மொழி வளர்ச்சி முதலியவற்றிற்கு இடையூறு விளைவிக்காதபடி பயன்பட்டு வந்தது. சமுதாய வளர்ச்சியிலே இரண்டு வகையான சக்திகள் உள்ளன. ஒன்று வளர்ச்சியை மட்டும் குறியாக உடையதாய்ப் பிறிதொன்றனையுங் கணியாதபடி நம்மை ஈர்த்துச் செல்லும் சக்தி, இதனை “Liberalism” என்ற ஆங்கில பதத்தால் குறிப்பிட்டால் எளிதில் அறியலாம்.
தொல்காப்பியரது கல்வி பெருமை
தொல்காப்பியர் இயற்றிய பெருநூல் ‘தொல்காப்பியம்’ எனப் பெற்ற சிறந்த தமிழ் இலக்கண நூலாகும். இதன் சிறப்புப் பாயிரத்திலே ‘ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்’ என ஆசிரியர் குறிப்பிடுகிறார். ‘ஐந்திரம்’ என்ற வடமொழி வியாகரணங்களுள் ஒன்றென்பதும், பாணினீய வியாகரணத்திற்குக் காலத்தால் முற்பட்டது. சர்வவர்மன் என்பவர் இயற்றிய காதந்த்ரமும், வேதங்களுக்குரிய ப்ராதிசாக்கியங்களும் இவ்வைந்திர வியாகர முறையைப் பின்பற்றியது என டாக்டர் பர்ணல் கூறுவர். தொல்காப்பியர் வடமொழியை நன்கு பயின்றவரென்பதும், அதனுள் உள்ள ஒன்பது வியாகரங்களுள் ஒன்றாகிய ஐந்திரத்திலே நிறைந்த புலமையுடையதாகத் திகழ்கிறது. வட மொழியறிவையும், ஐந்திரப் புலமையையும் மாத்திரந் துணையாகக் கொண்டு தமது பேரிலக்கணத்தைத் தொல்காப்பியர் இயற்றினார். முதலாவது அவர் காலத்துத் தமிழ் கூறு நல்லுலகத்துள்ள உலக வழக்கையும் செய்யுள் வழக்கையும் நன்கு ஆராய்ந்து ‘நல்லுலகு’ என்ற செந்தமிழ் நிலத்தையும் அதனொடு சேர்ந்த பன்னிரு நிலங்களையும் எனக் கொள்ளுதல் வேண்டும். எனவே தமிழ்நாடுகளுடைய இருவகை வழக்குகளையும் ஆராய்ந்தார். இரண்டாவதாக செந்தமிழ் நிலத்து வழக்குகளையும் அவற்றை ஆராய்ந்தெழுதிய நூல்களையும் தமது நூலுக்குச் சிறப்புரிமை உடையதாகக் கருதி அவற்றை தொல்காப்பியர் பன்முறை நன்கு கற்று அதன் உண்மை நிலையைக் கண்டார். மூன்றாவதாக தம் நூலுக்குரிய பொருட்களை நெடுங்காலமாகச் சிந்தித்து முற்ற ஆராய்ந்து தெளிந்தார். ஆராய்ச்சிகளைத் துணை கொண்டு தொல்காப்பியர் தமது பேரிலக்கணத்தை இயற்றினார். இவரோடு உடன் கற்ற பனம்பாரனார்,
“வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளுமாயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே”
எனத் தாம் இயற்றிய சிறப்புப் பாயிரத்தில் கூறியுள்ளார்.
மொழி வளர்ச்சியில் வாணிகம்
‘மொழி வளர்ச்சி’ தான் எத்தகையதென நோக்குதல் வேண்டும் எனவும் மிக பூர்வகாலந்தொட்டு, நம் தமிழ்நாடு வாணிகத்தில் மிகச் சிறந்த ஒன்றாகத் திகழ்ந்தது. கிரேக்கர்களும் ரோம் நகரத்தினரும், அராபியரும், சீனதேசத்தவரும் வாணிகத்தின் பொருட்டுத் தமிழ்நாடு வந்து, தங்கள் பண்டங்களைக் கொண்டு தங்கள் தேசத்திற்குச் சென்று வருவார்கள்.
“குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு
குணதிசை மருங்கிள் காரகில் துறந்து”
என வரும் சிலப்பதிகார அடிகள் இவ்வாணிகத்தின் தன்மைகளை விளக்குகிறது. அயல்நாட்டினருள் ஒரு சிலர் தமிழ்நாட்டில் பலவிடங்களிலும் நிலையாய் குடியேறினர். இவர்கள் வாழ்வதற்கு என தனியே அமைக்கப்பட்ட ஊர்ப்பகுதிகளும், காவிரிப் பூம்பட்டிணம் முதலிய நகரங்கள் இருந்தனவென்பது
“கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவன ரிருக்கையும்”
எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அயல்நாட்டு வணிகர்கள் கூட்டுறவினால் தமிழ் மொழி நல்ல பயன் அடைந்திருக்க வேண்டும். தமிழ்ச் சொற்கள் அனைத்திற்கும் சொல்லாக்கங்காட்டும், நூலொன்று தக்க ஆராய்ச்சிப் பயனாக வெளிப்படுமாயின், அப்பொழுது பிறமொழி மக்களால் தமிழ் அடைந்துள்ள வளத்தினை அறியக்கூடும். எழினி என்ற சொல்லைத் தமிழறிஞர்கள் அறிவர். இச்சொல் “திரைச்சீலை” என்று பொருள்படும். இது ‘யவனிகா’ என்ற சொல்லின் திரிபாகும். எனவே இச்சொல் யவனர்களோடு தொடர்புடையதாகும். இதன் மூலம் தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பிய மொழி வளர்ச்சியையும் அறிய முடிகின்றது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|