தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
68.சித்த மருத்துவம் - சில குறிப்புகள்
சி. பாரதி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
முன்னுரை
இந்தியாவில் குறிப்பாகத் தென்னிந்திய மாவட்டங்களில் பண்டைக் காலத்து மரபு இன்னும் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதற்குச் சித்த மருத்துவம் ஒரு சான்று. மனிதன் பழங்காலத்திலேயே மூலிகை இலைகளைக் கண்டுபிடித்து அதை மருத்துவக் குணமாக்கும் சக்தியாக மாற்றிக் காட்டினான். சித்த மருத்துவம் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்பது அதன் தனிச்சிறப்பு. இந்தச் சித்த மருத்துவம் யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், அலோபதி, நரம்பியல் வைத்தியம் எனப் பலவகையுண்டு. இவற்றில் சிறந்த மருத்துவம் சித்த மருத்துவம்தான் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. இப்படிப்பட்டச் சித்த மருத்துவத்திலிருந்து சில மருத்துவக் குறிப்புகளை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
மருந்து வாழ்மலை
நாகர் கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் மேற்குத் தொடர்ச்சி மலை துவங்குகிற இடம்தான் இந்த மருந்து வாழ்மலை. அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துச் சென்ற போது விழுந்த துண்டு மலைதான் இந்த மருந்து வாழ்மலை என்ற சஞ்சீவி மலை என்கின்றனர்.
காலம்காலமாக இந்த மலையும் சித்தர் பூமியாகவே இருக்கிறது. அகத்திய முனிவரின் கிருபை பொருந்திய பொதிய மலையருகாமை என்பதால் இங்கு அகத்திய முனிவரின் ஒளியுடலைத் தரிசிக்கலாம்.
இங்கு இல்லாத மூலிகைகளே இல்லை. அகத்திய முனிவர் தனது நூலான வைத்திய காவியம் 1500 என்ற நூலை எழுதிய இடமும், தனது மருத்துவத்துக்கான மூலிகைக் களஞ்சியங்களுள் ஒன்றாக வைத்திருந்ததும் இந்த இடம்தான்.
தென்பகுதியில் மூலிகைகள் நிறைந்த இடங்களான சதுரகிரி, தென்மலை, கழுகுமலை, பொதியமலை, அத்திரி மகரிசி தபோவனம் (சம்பங்குளம், தென்காசி) இவற்றோடு மருத்துவ மலையும் ஒன்றாகும்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நிலங்களில் வளர்ந்த தாவரங்களையே மருந்துப் பொருட்களாகக் கொண்டு இயற்கை நெறியில் வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். காலம்காலமாக அறிந்திருந்த அம்மருத்துவப் புலமையை இழந்த நிலையில் உள்ளோர் நம் இல்லத்தருகே வளரும் செடி, கொடிகளின் தன்மையையும் அவற்றின் பெயர்களையும் கூட அறியாத சூழலில் வாழ்கின்றோம். கிராமத்தில் வளரும் செடி கொடிகளின் தன்மையையும் அவற்றின் மருத்துவ இயல்பையும் அறிய வேண்டுவது இன்றியமையாததாகும்.
கொல்லி மலையில் உள்ள மரம், செடி, கொடிகள் இன்றும் உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து பாதுகாப்புத் தரும் அபூர்வ மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
மான்கொம்பு கலைக்கோடு என்றும் இருங்கி என்றும் அழைக்கின்றனர். மான்கொம்பு மருத்துவம் குறித்துத் தெளிவுபடுத்துகிறது. இப்பாடல்
“அவயவத்தின் வென்னமதியத்தி மேகங்
கவிழ் திரிதோடம் பெருந்தா கங்களிவை
நிலைக்குமோ மார்பு நோய் நேந்திர நோய் நீங்குங்
கலைக் கொம்பாற் பேயு மிலைகாண்’’
என்ற சித்தர் பாடலால் அறியலாம்.
இப்பாடலின் பொருள் கலைமான் கொம்பினால் கைகால் எரிவு, எலும்பைப் பற்றிய மேகம், எலும்புறுக்கி, முத்தோஷம், பெருந்தாகம், மார்பு நோய், விழிநோய், பிசாசம் இவைகள் நீங்கும்.
இந்தியாவில் இரண்டாயிரம் மூலிகைகள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றில் 500 மூலிகைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. மூலிகை ஏற்றுமதியில் இந்தியா பதினைந்தாவது இடத்தை வகிக்கிறது.
அமெரிக்கா, ஜெர்மணி, இத்தாலி, நெதர்லாந்து, ஹங்கேரி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
“நோய்நாடி, நோய்முதல் நாடிஅது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’’
மூவகை நோய்களையும் அறிந்து, அவற்றுள் வந்த நோய்க்கு காரணம் அறிந்து, அதன் பின் நோயைக் குறைப்பதற்கு உரிய வழியறிந்து, பொருந்தும் முறையால் மருத்துவன் மருந்து கொடுப்பானாக என்பதன்வழி அறியலாம்.
தமிழ் மருத்துவத்தில் பச்சிலைகளும், வேர்களும் சிறப்பான மருந்துகள் என்பர். பஸ்பம் (பொடி) கசாயம் (கியாழம்) என மருந்துககளைக் குறிப்பர். மிக எளிதாகக் கிடைக்கும் சமையல் பொருட்களே நோயைப் போக்கும் மருந்தாக்கினர் நம் முன்னோர்கள்.
“காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்பவன்
கோலை வீசிக் குலாவி நடப்பாரே’’
மேற்சுட்டிய வரிகள் கருத்தாழமும் மருத்துவ நுட்பமும் கொண்டது குறிப்பிடத்தக்கது.
“மருந்தே உணவு - உணவே மருந்து’ என்ற தொடர் நாம் அறிந்த ஒன்றே.
உண்ணும் உணவிலேயே மருத்துவ முறை இருப்பதைத் திருவள்ளுவர்
“மாறுபா டில்லாத உண்டி மறுத்திண்ணின்
ஊறு பாடில்லை உயிர்க்கு’’
காலநிலை உடல்நிலைகளுக்கு மாறுபடாத உணவுகளை மனம் போனபடி உண்ணாது, உடலின் வளர்ச்சியளவுக்கு உண்ணுவானானால், இடையூறின்றி உயிர் உடலோடு வாழலாம் என்பது திண்ணம்.
நோயுற்றவன், மருத்துவன், மருத்துவன் சொற்படி சிகிச்சை செய்வோர், மருந்து ஆகிய நான்கும் மருந்தினுடைய கூறுகள் என்பார் வள்ளுவர்.
துளசி தீர்த்தம்
100 கிராம் துளசி இலையைப் பறித்து நல்ல இலைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு குடம் தண்ணீரில் போடவும். சிறிது நேரம் சென்ற பின் இதையே குடிநீராகப் பயன்படுத்தவும்.
1. நோய் எதிர்ப்பு சக்தி
2. கிருமி நாசினி
3. இரத்த சுத்தி
4. இரத்த விருத்தி
5. இருமல் சளி நீங்கும்
6. சுவாச காசம் நீங்கும்
7. இருதய நோய் நீங்கும்
வெண்தாமரைப் பூ
* வெள்ளைத் தாமரைப் பூவால் ஈரலின் வெப்பமும், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும்.
* இப்பூவில் கிடைக்கும் விதை அலசம், சுவையின்மை முதலியன போகும்.
* இப்பூவில் கிடைக்கும் கிழங்கின் மூலம் கண் ஒளி, குளிர்ச்சி இவைகளைத் தரும்.
அதிமதுரம்
மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிறப் பூக்களையும் உடைய சிறு செடியினம், அதிமதுரம் சளி, இருமல் போக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.
ஒன்று அல்லது இரண்டு கிராம் அதிமதுரப் பொடியைத் தேனில் குலைத்துச் சாப்பிட்டுவர மார்பு, ஈரல், இறைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி தீரும்.
அத்தி
மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெருமரவகை. பால்வடிவச் சாரு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடிமரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சி, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
* அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து, 1 தேக்கரண்டி காலை மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.
* அத்திப் பாலைத் தடவிவற மூட்டுவலி விரைவில் தீரும்.
* நம்மிடம் உள்ள மருத்துவப் பழச்செல்வத்தை அறியாது வாழும் அறியாமையைப் போக்கும்.
* இயற்கையின் கொடையான நிகரற்ற நற்குணம் வாய்ந்த மூலிகைகளைக் கீரையாகச் சமைத்தும், துவையலாக அரைத்தும், பொடியாக உணவில் கலந்தும் சாப்பிடுவதன் மூலம் சித்த மருத்துவம் உணவு மருத்துவமாக மாறுகிறது.
* நமது அன்றாட வாழ்வில் அறுசுவைகளான இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உப்பு, கைப்பு இவைகளைச் சம அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நோயின்றி வாழ முடியும்.
புதினாக் கீரை
புதினாக் கீரை மிகுந்த மருத்துவ குணம் கொண்ட சிறந்த கீரையாகும். இதனைப் பாசிப்பருப்புப் போட்டுத் துவட்டலாகவும், கழுநீருடன் மண்டி செய்தும், பொறியல் செய்தும் சாப்பிட்டு வரச் சிறந்த பயனையும், பலனையும் அடையலாம்.
இதனால், பசியை உண்டாக்கி நிறைந்த தீபனத்தை ஏற்படுத்தும். இரத்தம், தாது இவைகளின் அழுக்கு அசுத்தங்களை நீக்கி இரத்த விருத்தி, இரத்த சுத்தி தரும் தாது விருத்தி ஏற்படும். மேனி அழகிற்கு சிறப்பு சேர்க்கும்.
வெந்தயக்கீரை
“பொருமந்தம் வாயுகபம் போராடுகின்ற
விருமல் ருசியிவை யேகுந் - தரையிற்
நீதி லுயர் நமனைச் சீறும் விழியனங்கே
காதில் வெந்தயக்கீரை கொள்’’
வெந்தயக்கீரை சமைத்துச் சாப்பிட மிகவும் நல்லது. மருத்துவத் தன்மை உடையது. கூட்டாகவோ, பொறியல், மசியல் செய்தோ சாப்பிட்டுவர உடல் நலமும், வளமும் பெருகும்.
இதனைச் சாப்பிடுவதால், வாத, பித்த, கபம் என்னும் முத்தோடங்களால் ஏற்படும் நோய்கள் யாவும் நீங்கிக் குணமாகும். பசியின்மை நீங்க வெந்தயக் கீரையைத் துவையலாக அரைத்து சாப்பாட்டுடன் சேர்த்துக் கொள்ள பசி உண்டாகும்.
தூதுவளைக் கீரை
50 கிராம் தூதுவளைக் கீரையுடன் சிறிய வெங்காயம் 50 கிராம் குறுக நறுக்கிப்போட்டு, கல் மணல் நீக்கிய பனங்கற்கண்டு பசுநெய் 25 கிராம் இலைகளைச் சட்டியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு பாகை பதம் வேக விட்டு எடுத்துச் சாப்பிட்டுவர இருமல், சளி, தோல் நோய் யாவும் நீங்கும்.
மாதுளம் பழம்
இயற்கை நல்கிய இனிய பழங்களில் ஒன்று மாதுளம் பழம். சத்து நிறைந்ததும் நீண்ட ஆயுளைத் தருவதுமான மாதுளம் பழம் ஆப்பிளை விட சக்தி நிறைந்த பழமாக போற்றப்படுகிறது. மாதுளம் பழம், மாதுளம் சாறு, விதை, தோல் ஆகிய அனைத்தும் மனித குலத்திற்கு மாமருந்தாகவும் இனிப்பும் துவர்ப்பும் கலந்த நல் அமுதமாகவும் திகழ்கிறது. பல்வகைச் சத்துகளைத் தன்னகத்தேக் கொண்டு நோய் நொடிகளையும் நீக்கும் உயர் மருந்தாகவும் விளங்குகிறது.
இதயத்தைப் பராமரிக்கும் இணையிலாப் பழமாக மாதுளைத் திகழ்கிறது. மாதுளம் பழம் மனத்திற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சித் தரவல்லது. நினைவாற்றலைத் தரக்கூடியது. மூளை வளர்ச்சிக்கும் துணை நிற்பது. பசியைத் தூண்டக்கூடியது. நல்ல தூக்கத்தைத்தர வல்லது. நரம்பு மண்டலத்திற்கும் நல்லது. நெஞ்சு வலிக்கு நிவராணம் அளிக்கும் மருந்தாகவும் மாதுளைத் திகழ்கிறது.
முடிவுரை
இன்றைய காலகட்டத்தில் மருத்துவ முறைகள் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருந்தாலும், பணம் என்ற மிகப்பெரிய மாயையின் பின்னால் மனித உயிர்கள் விளையாடப்படுகிறது என்பது வேதனைக்குரிய ஒன்று. இதனை மனதில் நிறுத்திக்கொண்டு வருமுன் காப்பதே சிறந்தது என்பதற்கினங்க உணவே மருந்து என்பதை உணர்ந்து இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து நோய்க்கிருமிகளை விரட்டியடிப்போம் சித்தர்கள் வழியில் பயணிக்கத் தொடங்குவோம் நோயின்றி வாழ்வோம், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.