தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
7. சங்கப்பெண்பாற் புலவர்களின் சமூகப் பதிவுகள்
சு. ஆஷா
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.
முன்னுரை
உலகம் நிலைப்பெற்றிருந்த காலம் தொட்டே ஏராளமான நிகழ்வுகள் நிகழ்வுறத் தொடங்கின. அதில் மனித உயிர்களின் பரிணாமமும், குழு அமைப்பைச் சார்ந்த வாழ்க்கைப் பிண்ணனியும் குறிப்பிடத்தக்கது. தாங்கள் வாழ்ந்த வாழ்க்கைப் பதிவுகளை எதிர்காலமும் உணர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு சாரரும், தங்கள் பெருமைகளைக் காலம் பறை சாற்ற வேண்டுன்றுமென்ற நோக்கில் ஒரு சாரரும் பதிவுப்படுத்தலாயினர்.
அங்ஙனம் தங்கள் பதிவுகளை பனை ஓலை முதல் கல்வெட்டுகள் வரை கிடைத்த பொருட்களில் எல்லாம் பதியத் தொடங்கினர். அவ்வாறு பதிக்கப்பட்டவைகள் நமக்கு காலம் கொடுத்த பழம் பெரும் கொடைகள். தற்போது நூல்களுக்குள் தங்களை வளர்த்துக் கொண்டன. சங்கம் முதல் தற்காலம் வரை சமூகப் பதிவுகளை உணர்வுப்பூர்வமாய் வெளிப்படுத்தும் கவிதை நடைக்குத் தனித்துவம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, மாறுபட்டக் கோணங்களில் சமூக நிலைப்பாடுகளை எடுத்துரைப்பதில் பெண்பாற் கவிகளுக்கு தனி இடம் உண்டு.
சங்கப் பெண்கவிகள்
மகளிர் அறிவுத்திறன், பேசுந்திறன், பண்பாட்டுணர்வு, வாழுங்கலை முதலியவற்றில் ஆடவர்க்கு ஒருவகையிலும் தாழ்தலின்றி, ஒப்ப வைத்தும் உயர்வாக மதித்தும் எண்ணற்கு உரியர் என்பதைச் சங்ககாலந்தொட்டே இன்று வரையிலான சமூகப்பதிவுகள் உணர்த்துகிறது.
காதல் சமூகம்
ஒரு தனிமனிதனின் அடிப்படை உணர்வினில் உணர்வுப் பூர்வமானது காதல். காதலின் பரிணாமத்தில் உருப்பெற்றதே மனித உயிர்கள். அதற்கு ஒரு தனி வரையறையே வகுத்து இருந்தது. அக்காலச் சமூகக் கட்டமைப்பு என்றால் மிகையல்ல.
அள்ளூர் நன்முல்லையார் பாடல்களில் காதலனானவன் காதலியை விட்டுச் சென்று, திரும்பும் காலம் கனிந்தும் வாராமையால் காதலியானவள் தன் நெஞ்சை பலவாறு ஆற்றுப்படுத்துவதாக பாடலை அமைத்துள்ளார். இதைச் சற்று ஆழ்ந்து நோக்குகையில் ஒரு பெண் பொறுமையோடு தன் மனம் விரும்பியவனுக்காக எவ்வளவு ஆற்றொண்ணா துயரையும் தாங்குகிறாள் என்பதைச் சித்தரிக்கிறது.
“பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்
நிலம்கரி கள்ளிசும் காடு இறந்தோரே” (பக் 169 குறுந்தொகை 67)
என்ற குறுந்தொகைப் பாலை பாடலனாது தலைவன் கள்ளிச்செடி மிகுந்த காட்டின் நடுவே இருப்பதனால் தான், இளவேனில் காலத்தில் பூக்கும் வேப்பம்பூவைக் காணாது. நம்மைக்காண வரவில்லை என்று தன்னைத் தானே தோழியிடம் கூறி ஆற்றுப்படுத்திக் கொள்கிறாள். என உணர்த்துகிறது.
காலம் கடந்தாலும் தலைவியைக் காண விழையாத தலைவன் பால் காதல், மாறது விளங்கும் பெண்கள் அன்றையக்காலத்தில் போற்றுதற்குரியவர்களாக விளங்கியுள்ளனர்.
ஊடல் மறுப்பு
பிரிவின் நிமித்தமும் தலைவி ஊடல் கொள்வதைக் கூட விரும்பாதவளாய் கற்பின் கண் களவு வாழ்வு வாழ்ந்துள்ளாள்.
“தலைவனைத் தலைவி காய்தற்கண் வந்தது”
தொல் காப்பியம், கற்பியல் 6 ஆக தொல்காப்பியமும்
“புலவி அஃது எவனோ, அன்பிலங் கடையே” (பக் 229 குறுந்93)
என்ற குறுந்தொகையின் பாடலுக்கு அணி செய்வதாக விளங்குகின்றது. அன்பில்லாத தலைவனுடன் அன்பு மாறாத தலைவி ஊடல் கூட கொள்ள மறுக்கிறாள்.
பிரிவு நோய்
பெண்களுக்கு காதலன் பிரிவால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைப் “பசலை” என்ற அடைமொழியோடு கூறி வந்தனர். பொலிவிழந்த பெண்ணாக, ஊண் உறக்கமின்றி பிறர் அலர் பேசும் வண்ணம் திகழ்வாள்.
பூங்கண் உத்திரையாரோ காதலியானவள் தனக்கு நேர்ந்த பசலை நோயினை ஊரார் பார்ப்பதையே பெருமையாக நினைப்பதாய் அமைத்துள்ளார். அவ்வாறு பசலை ஏற்பட்டால் அந்நிகழ்வினை ஊரார் மூலம் ‘தலைவன் அறிவான்’ என்ற எண்ணமே அவளைப் பெருமிதப்பட வைத்திருக்கிறது.
“நன்னுதல் பசலை நீங்க, அன்ன
நச ஆகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ, காதலட் தமக்கே” (குறந் 48 பக் 127)
என, சொல்லா மரபின் சொல்வது போலக் கூறுதல் என்ற மரபு ஈண்டு குறிக்கப்பட்டது. தானே நினைத்துச் செய்ய வேண்டியதை ஆயத்தார் கூறிச் செய்ய முற்படுகின்றனர்.
ஆக, குறிப்பிட்ட காலம் வரையில் தலைவிக்குப் பிரிவு நோய் ஏற்படவே செய்யும் என்பதாய் வரிகள் அணிவகுத்துக் காட்டுகிறது.
காதலில் கடமை
எல்லாப் பாடல்களும் தலைவன் தலைவியை நினைவுக் கூறாததாய் அமைக்கப் பெறவில்லை. சில பாடல்களில் தலைவியையே மிஞ்சும் கடமை உணர்வு கொண்டப் பாங்கு காதலின் நடுநிலைத் தன்மையை எடுத்தியம்புகிறது.
பெண் கவிகளின் பார்வையில் காதல் சமூகமானது தலைவியையே மையப்படுத்தி நகர்கிறது. உண்மைக்காதல் இருவருக்கும் பொதுவாயினும் பெண்ணுக்கே அதிகம் பங்கினைத் தருவதாய் அமைந்துள்ளது. களவு வாழ்க்கையைக் காக்க அவளே பற்பல முயற்சிகளை மேற்கொள்கிறாள் இறுதியில் அவளுக்கு தலைவனின் அன்புக் கைக்கொடுத்தால் தான் கற்பு வாழ்வின் அடியினை கைப்பற்ற இயலுகிறது.
மடலேறுதலும், உடன் போக்கும்
“மடல்மா கூறும் இடனுமார் உண்டே” (தொல்காப்பியம் - பொருள் - 99)
என தொல்காப்பியமும் மடலேறுதல் ஐந்திணைக்கு உரியது இல்லை. அது பொருந்திணைக்குரியது என்று விளக்கமளிக்கிறது.
பெற்றோர், தம் திருமணத்திற்கு உடன்படார் என எண்ணிக் காதலர் “உடன் போக்கு நிகழ்த்துவர்” எனக் கூறலாகாது. பெற்றோர் அறியின், காதலர்தம் திருமணத்திற்குத் தடையாக இரார் திருமணத்தை நடத்தி வைப்பர். ஆனால் ஊர்அலர், வெறியாட்டு, வேற்றும் திருமணம், அன்னை அறியின் என் செய்வானோ என்னும் அச்சம் ஆகிய இசையே உடன்போக்கிற்குக் காரணங்களாக அமைகிறது.
சங்க காலத்தில் இவ்வுடன்போக்கானது சிறப்பாகவே மதிக்கப்பட்டது.
இல்லற நெறி
அக்கால இல்லற வாழ்வில் ஒரு வரையறையை நியமித்து அதன் வழியே ஒழுகலாயினர் இல்லற தர்மத்தைப் போற்றுவதில் தலைவியின் பங்கு அளப்பரியது.
பொருளுக்காக தலைவன் பிரிந்து செல்லும் காலங்களில் எல்லாம், தனது அன்பு நெகிழ்ந்த நெஞ்சத்தையும் உடன் கொண்டு சென்றானே என கண்ணீர் பெருக்கிக் கூறும் தலைவியின் காதல் பயிற்றி கூறற்கரியது எனலாம். தோழி, தலைவனை வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தாலும் தான் உற்றநோய் உரைக்காது தன் நெஞ்சை கலிழும் கண்ணீரால் ஆற்றுபடுத்துகிறாள். இத்தகைண மாண்புடை தலைவியாலே அக்கால இல்லறம் தலைசிறந்கு விளங்கி உள்ளது. இதற்கு,
“வேறுபுலன் நல்நாட்டு பெய்த
ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே” (குறுந் 176 (பக் 406))
வருமுலையாரித்தி என்ற பாடல் நல் உவமையாகின்றது.
என வள்ளுவமும் தன்நிலை புரியாமல் பொருத்தமின்றி விட்டுச் சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும் பொழுது உடல் மெலிவும், உள்ள மெலிவும் உண்டாவதாகக் கூறுகிறது.
“துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இதையே, இன்னும் இழத்தும் கவின்” (நெஞ்சோடுகிளத்தல்) (1250 குறள் - கற்பியல்)
கைம்மை நோன்பு
சங்கமே கைம்மை நோன்பை வலிதாய் எடுத்துரைக்கிறது. அரச மகளிர் முதல் பொது மகளிர் வரை அனைவருமே கைம்மை நேன்பிற்கு ஆளாகியுள்ளனர். சிலர் கைம்மையின் துயர் தாளாது உடன்கட்டை ஏறவும், முற்பட்டனர். புற வாழ்வைச் சித்தரிக்கும் புற இலக்கியப் பாடல்களும் கணவனை இழந்த பெண்ணின் சூழலை எடுத்தியம்புவதிலே பெண்ணிற்கு நிகழும் இல்லற வாழ் சமூக சிக்கல் புலப்படுகிறது. ஆக,
“உயவல் பெண்டிரேம் அல்லேம்மாதோ” (புறம் 246)
- பெருங்கோப்பெண்டு இப்பாடலில் மன்னன் பூதப்பாண்டின் இயற்கை எய்தியவுடன் மனைவி பெருங்கோப்பெண்டானவள் கைம்மை நோன்பின் துயரினை எடுத்தியம்பி, தான் விரைந்து முடியும் தீக்கிரையாவதையே விரும்கிறேன். மெல்ல, மெல்லச் சுடும் அக்னியான கைம்மை துயரை விட, உடன்கட்டை ஏறுவதே சிறந்தது என அறிவாட்ந்த பெண்கள் முடிவெடுப்பர். தானும் அதையேச் செய்ய விழைவதாகக் கூறுகிறாள்.
ஒரு பெண்ணானவள் தன் மணாளன் மறைவிற்குப் பின், வாழும் வாழ்வின் கடுமையை எண்ணியே தீப்புக ஆரம்பித்தக் காலம் சங்கம் என்பதை அறியலாம்.
மனித வாழ்வைத் தழுவிய பழமையே தொன்மை என்பர்.
“தொன்மை தானே
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” (தொல் - செய்யுளியல் - 1493)
என்ற தொல்காப்பியரின் கூற்றுபடி, தற்காலமும் இப்பழமைப் பண்பாடுகள் தொடராதவாறு இருப்பது சிறப்பானதொன்று கல்வியும், துணிவும், முற்போக்கும் சங்க மரபுகளின் களைகளை வேரறுக்கு உதவுகிறது.
முடிவுரை
ஆக, சங்கக் காலத்திலேயே குடும்பம் குறித்த பெண்ணிய விமர்சனமானது வீட்டு வேலை தொடர்பான பொருளாதாரத்தின், மீது கவனம் செலுத்துவது போலவும், ஆணானவன் வெளி உலகம், வேலை, வளர்ச்சி தொடர்பானதாகவும் அமைந்து இருக்கிறது.
திருமணம், குடும்பம், பாற்பாகுபாடுடைய தொழிற்பாகுபாடு, பொருளாதார நிலை சட்டம் தகுதி ஆகிய முதலாளித்துவம் தந்தைவழிச் சமூகத்தியல்கள் எல்லாம் சங்க இலக்கியங்கிலே தோற்றம் பெறலாயின.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.