தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
70.ஔவையாரின் சமுதாயச் சிந்தனை
சி. பிரபாவதி
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
அரசு கலைக்கல்லூரி, தருமபுரி.
முன்னுரை
விண்ணுயர்ந்த வளமான செந்தமிழில் எண்ணற்ற இலக்கியங்களை அறிஞர் பெருமக்கள் படைத்துள்ளனர். இலக்கியங்களே நமது வாழ்வியலுக்கு மூலக் கருவாக விளங்குகின்றன. இலக்கியப் படைப்பாளர்களுள் ஔவையார் வாழ்வியல் நெறிகள் பலவற்றை ஒருசேரத் தொகுத்தும் பகுத்தும் வழங்கியுள்ளார். பண்டைக்காலத் தமிழர் வரலாற்றையும், வாழ்வியில் முறைமைகளையும், அறச்செயல்களையும், ஈதல் சிறப்பையும், நிலையானத் தத்துவத்தையும், தம் படைப்புகளில் ஔவையார் எடுத்துரைத்துள்ளார். தென்னாட்டுப் புலவரான ஔவையாரின் சமுதாயச் சிந்தனையை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஔவையின் குடியும் வரலாறும்
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். சங்க காலம், நாயன்மார் காலம், கம்பர் காலம், இக்காலம் எனப் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. சங்ககால ஔவையார் இலக்கியப் புலமை அறிவுமிக்கவர். அதியமானின் அவைக்களப் புலவர், நட்பாற்றலும், தன்முனைப்பும், பேரன்பும் கொண்டவர். இவர் இன்தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமது பாடல்கள் மூலம் அருந்தொண்டாற்றியவர். பெண்பாற் புலவர்களுள் முதன்மையானவர். தமிழகத்தின் முதல் பெண் தூதுவர் ஆவார். ‘ஔவை’ என்னும் சொல்லுக்கு ‘தாய், தவப்பெண்’ என்னும் பொருள்களைக் கழகத் தமிழகராதி தருகிறது. ஔவை கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவர் என்றும் இவர் பாண் குடியைச் சார்ந்தவர் என்றும் குறிப்பிடுவர்.
“மடவரல், உண்கண், வாள்நுதல் விறலி!” (புறம்.89)
என்று இவரை விளக்கப்பெறுவதாலும்,
“காவினம் கலனே; சுருக்கினெம் கலப்பை” (புறம்.206)
எனக் கூறுவதாலும் இவர் பாண்குடியினர் என்பது அறியலாகின்றது. இவர் சங்க இலக்கியத்துள் 59 பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் அகப்பாடல்கள் 26, புறப்பாடல்கள் 33 அடங்கும். அற இலக்கியங்களையும் படைத்துள்ளார்.
ஔவையின் தனித்தன்மை
ஔவையின் கருத்து சமூகத்திற்கு நலன் அளிப்பதாக விளங்குகிறது. ஆடவரைச் சார்ந்து பெண் ஒழுகவேண்டும் என்ற அடிமைத்தனத்தை முன்மொழியவில்லை. காதலை உரக்கப்பாடியவர். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற வகையில் அவர் படைப்பு அமையவில்லை. புறப்பாடல்களில் ஔவையின் சொற்களில் வீரம் கொப்பளிக்கிறது.
“எவ்வழி நல்வலர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே” (புறம்.187)
என்று பாடுவதிலிருந்து ஔவை அறச்சிந்தனை பற்றி அறியமுடிகிறது.
மன்னர்களைப் பாடும் திறன்
அதியமான் நெடுமான் அஞ்சியை முழுதும் பாடிய ஔவையார் சில பாடல்களில் பிறமன்னர்களின் இயல்புகளையும் பாடியுள்ளார். தொண்டைமான், பொகுட்டெழினி, நாஞ்சில் வள்ளுவன், பாரி, முடியன், பசும்பூட்பொறையன், சேரமான், மாரிவெண்கோ, பாண்டியன் காணப்பேரெயில் கடந்த உக்கிர பெருவழுதி, சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கைவண்கிள்ளி, அதியர், கோசர், மழவர் முதலான மன்னர்களைப் பாடியுள்ளார். அதியமான் நெடுமான் குடும்ப நட்பினராக வாழ்ந்துள்ளார். தான் வாழ்ந்த காலத்து மன்னர்களின் தன்மையை ஔவையார் தம் பாடல்களில் வரலாற்று ஆதாரமாகக் கொள்ளத்தக்க அளவு பதிவு செய்துள்ளார். ஔவையார் அரசர்களைப் புகழ்ந்து பாடினாரயினும் தன்னிலை தாழாதவர். ஒருமுறை அதியமான். பரிசு வழங்காது காலம் நீட்டித்த போது ஔவையின் கூற்றான,
“மரம்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக்காட்டகத்து அற்றே -
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே” (புறம்.206)
என்ற பாடலடியின் மூலம் தன்னுடைய தன்மான உணர்வை எடுத்துரைக்கின்றார்.
ஔவையாரின் சமூக அக்கரை
சங்கப் புலவர்கள் தன் அறிவுநுட்பம் கொண்டு அரசர்களுக்கு நேர்ந்த பல இடையூறுகளைக் களையும் வண்ணம் செயலாற்றியுள்ளனர். ஔவையார் அதியமானுக்காக, போர்த்தூது சென்றதற்கான சான்றுகள் புறநானூற்றில் உள்ளன. பெண்பாற்புலவர் ஒருவர், அரசருக்காகத் தூது சென்று சொல்லாற்றலால் வென்றமை அக்காலப் பெண் விடுதலை நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது.
“தீராக்கோபம் போரா முடியும்” (கொ.வே.40)
என்ற வரிகள் மூலம் போரினை மறுக்கின்றார். மேலும் போர் புரிவதால் ஏற்படும் அழிவை உணர்ந்த ஔவையார்,
“போர்த் தொழில் புரியேல்” (அத்தி.87)
என்ற வரியின் மூலம் போர்த்தொழிலைச் செய்யக்கூடாது என்று எடுத்துரைள்ளார்.
ஔவை காட்டும் வாழ்வியல் நெறிகள்
“வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புனைபிறிது இல்லை” (புறம்.367)
என்பது ஔவையாரின் வாழ்வின் நெறியாகும். ஔவையார் மருவினிய சுற்றமும், வான்பொருளும், உறவும், உயர்குலமும் நிலையானவை அல்ல என்ற கருத்தையும் கற்றாரைத் கற்றாடும், மூடரை மூடரும் விரும்புவர். ஊழின்படியே எல்லாம் அமையும் என்ற அறக்கருத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தான்
பொல்லாச் சிறகை விரித்து தாழனாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி” (மூதுரை.14)
என்று கல்லாதவன் கற்ற நிலையில் கவிதைப் பாடுகிறார். மேலும்,
“மன்னனும் மாசறக் கற்றேனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னனுக்குத்
தன்நேசம் அல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற விடமெல்லாஞ் சிறப்பு” (மூதுரை.26)
என்ற பாடலடிகளின் மூலம் அரசனுக்குத் தன்னுடைய நாட்டில் மட்டுமே சிறப்பு உண்டு. புலவனுக்கோ அவன் செல்லும் நாடுகளில் எல்லாம் சிறப்பு உண்டாகும் என்று இப்பாடலில் எடுத்துரைத்துள்ளார். ஔவையார் சமூகக் கருத்துக்களை வெளியிடுவதிலும், மக்களிடத்தே அக்கருத்தை சொல்வதிலும் தமக்கென தனிவழியினை வகுத்துள்ளதை அறியமுடிகிறது.
நட்பறம்
கலைத்திறனில் சிறப்புற்ற சூழல் சங்க காலத்துக்குரியதாக இருந்ததன் விளைவால் மன்னர்கள் பலர் புலவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்துள்ளனர். புலவர்களும், மன்னர்களை வெறுமனே புகழ்ந்து பாடிப் பரிசில் பெறவில்லை. ஒருவருக்கொருவர் தமிழால் உறவுகொண்டிருந்தனர்.
“ஆசு ஆகு எந்தை யாண்டு ஊன் கொல்லே?
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுறளும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள்மாமலர்
சூடாது வைகியாங்கு பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே!” (புறம்.235)
என்ற பாடலடியில் அதியமான் இறந்தபோது புலவர் என் வீரத்தலைவன் எங்கு சென்றானோ? இனி நான் பாட யாருமில்லை. எனக்குப் பரிசில் தர ஒருவருமில்லை என்று ஔவையார் மன வருத்தமுற்ற செய்தியின் மூலம் அவரது நட்புறவு மேலோங்கி நிற்பதைக் காணமுடிகிறது.
உயிர்க்கொடை
தன் நண்பனுக்கு உயிரைக் கொடுப்பதைவிட மேலான நட்பு வேறொன்றும் இல்லை என்பதை அதியமான் ஔவை நட்பின் மூலம் அறியலாம். அதியமான் நெடுநாள் வாழ்வதற்காகத் தமக்குக் கிடைத்த நெல்லிக்கனியை, தமது உயிராகக் கருதப்படும் ஔவைக்கு ஈந்து நட்பினைச் சிறக்கச் செய்தவன். அதற்கு ஔவையார் நீலமணிமிடற்றுச் சிவபெருமான் போல நிலைப்பெற்று வாழ்வாயாக என்று அன்பு கொண்டு வாழ்த்துவதை,
“நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே, தொல்நிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடக்கி,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே” (புறம்.91)
என்ற வரிகள் செம்மைப்படுத்திச் சிறப்பு செய்கின்றன. தான் நெடுங்காலம் வாழவேண்டும் என் எண்ணாமல் தமிழ் தழைக்கவேண்டும். தமிழ் தழைத்தால் மக்கள் சிறப்புடன் வாழ்வார்கள் என்ற எண்ணத்துடன் ஔவையாருக்குக் கொடுத்த கனியின் மூலம் தன் நட்பை உயிராக மதித்து உயிர்க்கொடை, வழங்கிய அதியமானை ஔவை பாராட்டியுள்ளதை அறியமுடிகிறது.
முடிவுரை
ஔவையார் அறிவுமிகுந்த செயல்கள் செய்தவர். சமூக சிந்தனை மிக்கவர். அறிவு மிகுதியால் அன்பையும், வெளிக்காட்டியவர். அரசர்களிடம் அன்பாகப் பழகி நல்லுள்ளம் கொண்டவர்களாக மாற்றியவர். பெண்களை வீர உணர்ச்சிக்கு வித்திட்டவர். நாட்டிற்கிடையே போர் நடைபெறாமல் தடுத்து நிறுத்தி மன்னர்களிடம் ஈகை அறத்தை வளர்த்தவர். தன்னம்பிக்கையும், சமுதாயச் சிந்தனையும் கொண்டவராக ஔவையார் வாழ்ந்தமையை அறிய முடிகிறது. ஔவையின் பாடல்களை ஆய்வாளர்கள் அதிகமாக ஆராய்ந்துள்ளனர். தமிழ் இலக்கியம் வாழும் வரை ஔவையின் படைப்புகளும் வாழும்.
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்
1. முனைவர் அ. மா. பரிமணம், சங்க இலக்கியம் புறநானூறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.
2. துரை. தண்டபாணி, நீதி நூல்கள், உமாபதிப்பகம், சென்னை.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.