தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
72.ஆற்றுப்படை நூல்களில் அறச்சிந்தனை
தி. ச. பிரபு
ஆய்வியல் நிறைஞர்,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர், நாமக்கல் மாவட்டம்.
முன்னுரை
நமது சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டு நூலானது அக்கால அரசுமுறை, போர்க்களம், வீரர் குணம், போர்மறம், காதல் அறம், ஈகைச் சிறப்பு, இல்லற மாண்பு என வாழ்க்கையின் பல கூறுகளைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாகும். அப்பத்துப் பாட்டு நூல்களில் அறத்தினை மேம்படுத்திக் கூறுவது ஆற்றுப்படை நூல்கள் மட்டுமே. “தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்ற நோக்கில் பரிசில் பெற்ற பாணன் பரிசில்பெற வருவோனுக்கு வழிகாட்டி ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படையாகும். இந்நூலானது தமிழக மக்களை வாழ்க்கைப் பாதையில் தவறின்றி நடக்க உதவும் அறவழி நூலாக அமைகிறது. அவ்வாற்றுப்படை நூல்களின் மூலம் வெளிப்படும் அறங்களைப் பற்றிக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பாணர் மரபில் அறம்
இனக்குழுச் சமூகத்தில் பின்பற்றப்பட்ட பாதீடு என்ற பகுத்துண்னும் முறையின் எச்சமே ஆற்றுப்படை நூல்களில் பாணர் மரபினர் பின்பற்றப்படும் அறமாகும். ஏனெனில், ஆற்றுப்படை நூல்களில் பாணன் ஒருவன் தன்னலம் கருதாமல் தான் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். தன்னைப் போல் வறுமையில் வாடும் மற்றொரு பாணனும் வளம்பெற நினைக்கும் அவனது குணமும், செயலும் இனக்குழச் சமூகத்தில் பின்பற்றப்பட்ட பாதீடு முறையின் எச்சச்செயலாகும். இவ்வாறானது உடைமைச் சமூகத்திலும் பின்பற்றப்படுவது சிறப்புக்குரியது.
ஆற்றுப்படை நூல்களில் அறச்சிந்தனை
சங்ககாலத் தமிழகத்தில் மக்கள் பிரிவினை தொழில் அடிப்படையில் அமைந்திருந்தது. கலை வாழ்வுக்கென சமூகத்தில் ஒரு சாராரை ஒதுக்கி வைத்திருந்தனர். அத்தகையவர்களாகிய பாணர், கூத்தர், விறலியர் ஆகியோர் ஆடல், பாடல்களில் சிறந்து இசை, நடன, நாடகக் கலைகளை வளர்க்க முற்பட்டனர். இக்கலைஞர்கள் பெரும்பாலும் வறுமையில் வாடினாலும் இக்கலைஞர்களுக்கு உதவும் வகையில் சில மன்னர்களும் வள்ளல்களும் பரிசுப் பொருளைத் தந்து பாணர்களையும், அவர்களின் கலைகளையும் வளர்த்தனர். இம்மன்னர்கள் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தாலும் தன்னை நாடி வந்த பாணர்களைத் தன் சுற்றத்தாரைப் போல அரவணைத்து உபசரிக்கும் அறப்பண்பாளனாக விளங்கியுள்ளார்கள் என்பதைப் பாணன் கூற்று வாயிலாகவேப் புலனாகிறது. இதனைப் பின்வருமாறு ஆராயத்தக்கன.
வந்தோரை வரவேற்றல்
இல்லறத்தில் சிறப்பான அறம் தம் இல்லத்திற்கு வந்தோரை இன்முகமாக வரவேற்கும் முறையாகும். இவ்வறமானது பொருநர் ஆற்றுப்படையில பாணன் ஒருவன் “காலையில் அரசவைக்கு நான் செல்லுகையில் அரசன் எம்மைச் சேய்மைக் கண்னே கண்டபோது ‘வருக வருக’ என ஆர்வத்தோடு இன்முகமாகக் கூவுதலால் யாங்களும் போய் அவ்விடத்தில், யாங்கள் செய்யவேண்டியவற்றை முறைப்படி செய்து முடித்தோம் என்று கூறுவதிலிருந்து கரிகால் சோழன் வந்தோரை உபசரிக்கும் நல்ல அறப்பண்பாளன் என்பது புலனாகிறது.
கொடுஞ்சொல் கூறாமை
அறம் என்பது சமூக உறவுகளில் ஈடுபடுகின்ற குழு மற்றும் தனி நபர்களுக்காக உருவானதாகும். இத்தகைய உறவுகளுக்கு அடிப்படையானவை தொடர்பு சாதனங்களாகும். மொழி அன்று தோன்றுவதற்கு இத்தகைய தொடர்பு சாதனத்தின் அவசியமேயாகும். எனவே, மொழியின் பேச்சுச்செயல் மிகுந்த அறமுக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் திரு. ராஜ்கௌத்தமன். திருவள்ளுவரும் ‘கடும்சொல்’ கூறாமைப் பற்றி பின்வரும் குறள் மூலம் கூறியுள்ளார்.
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்”
ஆற்றுப்படை நூல்களிலும் பாணரை அரசன் உபசரிக்கும் போது அரசன் கடுஞ்சொல் கூறாமல் இனிய மொழிகள் பேசப்பட்டதை “இனிய முகமன் மொழிகள் பல பேசித்தன் கண்ணீர் கானத்தகும் அணித்தாகிய இடத்தே என்னை இருக்கச் செய்தான்” என்ற பாணன் கூற்று மூலம் புலனாகிறது.
அருளோடு நோக்குதல்
தன்னிடம் பொருள் கேட்டு வந்துவிட்டாரே என்று அரசனிடம் சினம் கொள்ளாமல் வந்தாரை இனிய மொழிகள் பேசியும், தனது அருட்பார்வையால் நோக்கியும் புரிந்தான் என்ற செய்தியை,
“பருகு அன்ன அருகா நோக்கமோடு
உருகு பவைபோல் என்பு குளிர்கொளீஇ”
என்று பொருநர் ஆற்றுப்படை வரிகள் மன்னனின் சிறந்த அறச்செயலை உணர்த்துகிறது.
விருந்தோம்பல்
இல்லறத்தில் முதன்மையான அறம் விருந்தோம்பல். இது தமிழருக்குரிய அறமாகவும் கருதப்படுகிறது. திருவள்ளுவரும் “விருந்தோம்பல்” என்ற அதிகாரத்தில் நாள்தோறும் தனது இல்லத்துக்கு வந்த விருந்தினரைப் போற்றுகின்றவனுடைய வாழ்க்கையானது துன்பத்தால் கேடுறுவதில்லை என்கிறார்.
“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று”
இந்த விருந்தோம்பல் அறமானது ஆற்றுபடை நூல்களில் ஓங்கி காணப்படுகிறது. இதனைப் பின்வரும் பாணன் கூற்று மூலம் உணரத்தக்கன.
உண்ணுதற்குரிய காலம் அறிந்து எம்மை அழைத்துச் செம்மறியாட்டின் இறைச்சியையும், இரும்பு நாராசத்தைக் கோத்துச் சுடப்பட்ட கொழுத்த இறைச்சியாகிய பரிய தசைத்துண்டத்தையும் தின்னுங்கள்! தின்னுங்கள்! எனப் பன்முறையும் எம்மை வற்புறுத்திக் கொடுத்தலான்.
பரிசுகொடுத்தல்
தன்னை நாடிவந்த இரவலர்களுக்குப் பரிசு கொடுத்தல் அரசனின் சிறந்த கடமையாகும். இக்கடமையை மீறுபவன் அரசன் ஆகமாட்டான். அது அறமும் ஆகாது. ஆற்றுப்படை நூல்களில் கூறப்படும் அரசன் பாணர்களுக்குப் பரிசில் நல்கும் பண்பாளனாக உள்ளான். இதனை, “யாங்கன் எங்கள் பழைய ஊருக்கு மீண்டும் செல்ல எண்ணுகின்றோம் என்று மெல்லக் கூறினோம். அதுகேட்டு நீயிர் விரைவில் எம் கூட்டத்தை விட்டுப் போகின்றீரோ? எனக்கூறி எம்மை வெகுண்டான் போன்று வருந்தும்படி பார்த்து உடுக்கைக் கண் போன்ற அடியையுடைய கன்றுகளோடு பிடியானைகளையும் களிற்று யானைகளையும் நீவிர் விரும்பிய ஆடைகளையும் கொள்வீராக” என்று கரிகால் சோழன் கூறியதாகப் பாணன் கூறுவதிலிருந்து அறிய முடிகிறது.
பாலின அறம்
நமது சமுதாயத்தில் பொதுவாகப் பெண்கள் எதும் அறியாதவளாய் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் பெண்ணாகக் கருதப்படுகிறாள். ஆனால் ஆற்றுப்படையிலே சித்தரிக்கப்படும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துக் கலைகளையும் அறிந்தவளாக உள்ளாள். ஆண்களுக்கு நிகராகவும் கருதப்படுகிறாள். இதனை,
“பெடைமயில் உருவின் பெருந்தகு பாடினி
பாடின பாணிக்கு ஏற்ப நாடொறும்”
என்ற பொருநர் ஆற்றுப்படை வரிகள், பாணர் போலவே பாடினியும் கலைகள் பெற்றவளாகத் தெரிகிறது. எனவே ஆற்றுப்படை நூலில் ஆணும் பெண்ணும் சமம் என்ற பாலின அறமே மேலோங்கியுள்ளது எனலாம்.
முடிவுரை
ஆற்றுப்படை நூலை நாம் பொதுவானக் கண்ணோட்டத்தோடு பார்க்கமால் அறநிலையில் பார்க்கும் பொழுது கடும்சொல் கூறாமை, அருளோடு நோக்கல், விருந்தோம்பல், பரிசுகொடுத்தல் மற்றும் பாலின அறம் என பலவும் தெரிய வருகிறது. மேலும் பாணர் மரபினர் பின்பற்றும் ஆற்றுப்படுத்துதல் அறமானது இனங்குழுச் சமூகத்தில் பாதீடு முறையின் எச்சச்செயல் என்பதும் புலனாகிறது. பொருளாதார நிலையில் உயர்ந்தவராயினும், தாழ்ந்தவராயினும் அறச்செயலை மேற்கொண்டு சமூகத்தில் அறப்பண்பாட்டை நிலைநாட்டியுள்ளனர் என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.