தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
73.கட்டடக்கலையின் மரபும் வளர்ச்சியும்
வி. பிரியதர்ஷினி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
அரசுக் கலைக் கல்லூரி (தன்னாட்சி), சேலம்.
முன்னுரை
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவையாகக் கருதப்படுபவை உணவு, உடை, உறையுள். மனிதன் பாதுகாப்புடன் வாழத் தனக்கொரு இருப்பிடம் அமைக்க எண்ணிய எண்ணம் கட்டடக்கலையின் தோற்றத்திற்கு வித்திட்டது. கட்டடக்கலை சமுதாயத்தின் பிற கலைகளும், தொழில்களும் நடைபெற இடமளிப்பது. பழந்தமிழர் பல்வேறு விதமான கட்டடங்களை அமைத்து வாழ்ந்தனர் என்பதனையும், அவை சிறந்த கலைத்திறனோடு தேவைக்கு ஏற்ற வகையில் வசதிகள் நிரம்பப் பெற்றவையாய் அமைந்திருந்தன என்பதனையும் சங்க இலக்கிய நூல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. இவ்வகையில் “கட்டடக்கலையின் மரபும் வளர்ச்சியும்” என்னும் தலைப்பில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
கட்டிடக்கலை
கட்டு + இடம் = கட்டடம், கட்டிடம் என்னும் சொல்லுக்குரிய அதே பொருளில் மயக்கு வழக்காக கட்டடம் என்ற சொல் தமிழ்ப் பேரகராதியில் எவ்வாறோ இடம் பெற்றமையால் ‘கட்டட’ ஆட்சி இன்று தமிழில் அதிகமாகக் காணப்படுகிறது. எனினும் ‘கட்டிடம்’ என்பதே சரியான சொல்.
கட்டிடங்களின் வடிவமைப்பு மற்றும் கட்டிடப்பணி இவற்றுக்கானக் கலை மற்றும் தொழில்நுட்பமே கட்டிடக்கலை என்பது தெளிவு. மேலும், கட்டிடக்கலை நடைமுறை என்பது பரந்த இடத்தின் ஒட்டுறவுகள், கட்டிட அமைப்பு, ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் நிலவ வேண்டிய இணக்கமான நடவடிக்கைகள், கட்டிடப் பொருள்களின் ஒருங்கமைவு மற்றும் தோற்றம், பொலிவு ஆகியவற்றைக் கட்டுமான ஒருங்கமைவுகளின் தன்னியல்பான திட்டத்திலிருந்து மாறுபடுத்தி வலியுறுத்துகிறது என்கிறது பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம்.
சங்க காலத்தில் கட்டிடக்கலையில் சிறந்த வல்லுநர்கள் இருந்துள்ளனர் என்பதை,
“நாலறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டு
தேயங் கொண்டு தெய்வ நோக்கிப்
பெரும்பெயர் மன்னர் கொப்ப மனைவகுத்து” (நெடுநல் வரி - 76-78)
என்று நெடுநல்வாடைப் பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகின்றது.
கட்டிடக்கலையில் மரபு
கட்டடக்கலை மரபானது வீடுகளையும் (Dwellings) குடியிருப்புகளையும் (Settlements) இணைத்தே காணப்படுகின்றது.
கட்டிடக்கலை மரபு எனக் குறிப்பிடும் பொழுது ‘மரபு’ என்னும் சொல் பழமை, கடந்த காலம் என்னும் பொருளையும், நாட்டுப்புறம் அல்லது ஊரகம் (Rural) என்னும் விளக்கத்தையும் உணர்த்தும் அடிப்படைச் சொல்லாகவும் அமைகிறது.
மரபுக்கட்டங்களின் பற்றிய சிறப்பான செய்தியினை “தமிழக நாட்டுப்புறக் கட்டிடக்கலை மரபு” எனும் நூலின் வாயிலாக இராசு பவுன்துரை குறிப்பிடுகிறார்.
கட்டிட வளர்ச்சி
நாகரீக வளர்ச்சியின் படிநிலையில் கட்டிட வளர்ச்சி மிகுந்த சிறப்பிடம் பெற்றுள்ளது. அவ்வகையான வளர்ச்சியில் நீர்த்தேக்க வளைவு, வீடுகள், செங்கல், கட்டிடம், தானியக்கூடம், மண்டபம் எனப் பலவாறு வளர்ச்சி அடைந்துள்ளது.
நீர்த் தேக்கங்களை வளைவாக அமைப்பது வழக்கம். அவ்வாறு வளைவாக அமைத்தால் நீரின் விசைவேகம் கட்டுப்படும் என்கிற தொழில் நுட்பத்தைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர் என்பதை,
“எண்ணாட் திங்கள் அணைய கொடுங்கரை
தெண்ணீட் சிறுகுளம்” (புறநானூறு 118 : 2-3)
என்ற புறநானூற்று தொடரின் மூலம் அறிய முடிகிறது.
செங்கற் கட்டடங்கள்
சுடுமண் ஆகிய செங்கற்களை மண் அல்லது சுண்ணக்கலவைக் கொண்டு அடுக்கி எழுந்த சுவர்களை இட்டிகை என்று பண்டையக் காலத்தில் கூறினர். இதனை,
“இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சேர் மாடக்
கெழதணி கடவுள் போகலின்” (அகநானூறு 167 : 1-3)
என்ற அகநானூற்றுப் பாடலடிகளில் மூலம் கோயில் சுவர்கள் உயர்ந்து இருந்தமையும், மரவிட்டங்கள் இருந்தமையும் அறிய முடிகிறது.
வீடுகளின் மேல் தளத்தில் நிலா முற்றங்களும், திறந்த வெளி மாடங்களும் இருந்தன. இந்தத் திறந்த வெளி மாடங்களில் நிலவின் பயனை அனுபவித்து மகிழ்ந்து வாழ்ந்தனர் சங்கத் தமிழர்கள்
“நிரைநிலை மாடத்து அரமியம் தோறும்” (மதுரைக்காஞ்சி - 451 வரி)
“நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றம்” (நெடுநல்வாடை - 95 வரி)
என நிலா முற்றங்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
வானிலிருந்து விழுகின்ற வெப்பம் வெளியே போவதற்கும், காற்று இல்லங்களுக்குள் நுழையவும் ஏற்ற வகையிலான வசதிகளையும் தொழில்நுட்ப முறையில் வீடுகளில் நிலா முற்றங்கள் பண்டையத் தமிழர்களால் கட்டப்பட்டுள்ளன.
எழுநிலை மாடங்களைக் கொண்ட பெரும் மாளிகைகள் தமிழகத்தில் முற்காலத்தில் இருந்துள்ளன. இதனை,
“இடஞ் சிறந்துயரிய எழுநிலை மாடம்” (முல்லைப்பாட்டு - 86 வரி)
என்ற முல்லைப் பாட்டுபாடல் வரியின் மூலம் அறியலாம்.
தானியக் கூடுகள்
வீடுகளில் தானியங்களைச் சேமித்து வைக்க உதவும் தானியக் கூடுகள் மிக உயரமாக ஏணி வைத்து ஏற வேண்டிய நிலையில் அமைக்கப்பட்டிருந்தன. இதனை,
“ஏணி எய்தா நீள்நெடு மார்பின்
முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவின்
குமரி மூத்த கூடு ஒங்கு நல்இல்”(பெரும்பாணாற்றுபடை 245-247)
என்ற பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகிறது. மேலும், தானியங்களைத் தலைப்பகுதியிலிருந்துக் கொட்டுவதற்குரிய திறந்த தலையுடன் தானியக் கூடுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
மண்டபம்
கோயில் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக மண்டபங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பொதுவாக மண்டபங்களை தாங்கி நிறுத்தவே தூண்கள் கட்டப்பட்டன. இந்தத் தூண்களின் எண்ணிக்கை மண்டபங்களுக்கு ஏற்ப நான்முகன் இருக்கை, வெற்றிமண்டபம், மங்கல மண்டபம், சித்தமண்டபம், தாமரை இதழ், நிருத்தமண்டபம், கொலுமண்டபம், அலங்கார மண்டபம், மறைமண்டபம் என மண்டபங்களின் பெயர்கள் மாறுபடுகின்றன.
தூண்
தூண் என்பது ஒன்றைத் தாங்கி நிற்பது என்ற பொருளில் வழங்கப்படுகின்றது. இதனை சால்பூன்றிய தூண் எனத் திருக்குறள் வரையறுக்கின்றது. மேலும், தூண் என்ற சொல்லுக்கு இணையாகக் கால் என்ற சொல்லும் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளன. இதனை,
“பகுதியுகுவிற் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சியூவ நெடுந்தூண்” (புறம் - 224)
என வரும் புறநானூற்று அடிகளிலும்
“அருங்குடி நெடுந்தூண் போலி” (அகம் - 220)
என வரும் அகநானூற்று அடிகளிலும்
“வெடிபடா வொடி தூண்” (பரி - 4:20)
என வரும் பரிபாடல் வரியிலும் தூண் என்ற சொல் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
நகரங்களின் அமைப்பு
தற்காலம் கணினிக்காலமாக மாறிய நிலையில் எல்லா அறிவியல் வளர்ச்சிகளையும் எட்டிவிட்ட நிலையில் நம்முடைய நகர அமைப்பு இன்னும் சீர் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால், பண்டைய காலத்தில் நகரங்கள் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன எனவும் காவற்காடும், வயல்களும் சூழ்ந்த காஞ்சி மாநகரம் தாமரை பூப்போல காட்சி அளித்ததெனப் பெரும்பாணாற்றுப்படைக் கூறுகிறது.
“நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்இதழ்
தாமரை பொருட்டின் காண்வரத் தோண்றி” (பெரும் : 402-405)
பல இதழ்களை உடைய தாமரை மலரின் நடுவே உள்ள பொருட்டினைப் போல செங்கற்களால் கட்டப்பட்டு விளங்கும் உயர்ந்த மதில்களை உடையவைக் காஞ்சி மாநகரம் என்று காஞ்சி மாநகரின் நகரமைப்பைப் பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் மூலம் அறியலாம்.
முடிவுரை
சங்ககாலம் தொட்டுக் கட்டிட வளர்ச்சி, கோயில் கட்டடங்கள், மண்டபம், தூண் போன்றவை மக்களின் வாழ்வியலோடு ஒன்றாகக் கலந்து அவற்றின் பண்பாட்டு மரபுகள் வளர்ச்சியடைந்திருப்பதையும் அறிந்து கொள்வதற்கு பெரும் துணையாக நின்றது. இதன்வழி பழந்தமிழர் அறிவியல் திறனையும், தொழில்நுட்பத் திறனையும் அறிந்து கொள்ள முடிகிறது.
பார்வை நூல்கள்
1. தெய்வநாயகம் . கோ, தமிழர் கட்டிடக்கலை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600 098.
2. இராசு பவுன் துரை, தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
3. தட்சிணாமூர்த்தி. அ, தமிழர் நாகரீகமும் பண்பாடும், யாழ் வெளியீடு, சென்னை - 600 040.
4. பாலசுப்பிரமணியன் கு.வெ., புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600 098.
5. பாலசுப்பிரமணியன் கு.வெ., அகநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600 098.
6. பாலசுப்பிரமணியன் கு.வெ., பரிபாடல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600 098.
7. பாலசுப்பிரமணியன் கு.வெ., சங்க இலக்கியம் பத்துப்பாட்டு முழுமையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600 098.
8. பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் தொகுதி 1.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.