தமிழகத்தில் பெண்ணோடு தொடர்புடைய பூப்பு, திருமணம், மகப்பேறுக்கு முன்னும், பின்னும் செய்யப்படும் சடங்குகள் என அனைத்திலும் தாய்த்தெய்வ மற்றும் வளமை வழிபாட்டுக் கூறுகள் அதிகம் இடம்பெறுகின்றன. வளமைப் பெருக்க வழிபாட்டு மரபின் நீட்சியாகக் காணப்படும் கொற்றியார், சக்கராயி அம்மன், பேச்சியம்மன் ஆகிய தாய்த்தெய்வ வழிபாடுகளையும், யோனித்தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய துடுப்புக்குழி சடங்கையும் இதற்குச் சிறந்த சான்றாகக் கூறலாம். பேறுகாலத்திற்குப் பின் செய்யப்படும் இவ்வழிபாடுகள் மற்றும் சடங்குகள் பற்றிய சிறு தொடக்க நிலை அறிமுகமே இக்கட்டுரை.
பழந்தமிழகத்தில் கொற்றியார் எனும் பெண் தெய்வத்தைப் பிள்ளைப்பேற்றின் அதிதேவதையாகக் (நிலைக்களனாகக் கொண்ட தெய்வம்) கருதி வழிபடும் மரபு இருந்தது. குழந்தை பிறந்த ஐந்தாம் நாள் நற்பிள்ளைப் பேற்றை வழங்கும் தெய்வமாகக் கருதப்படும் கொற்றியாரை உரிய மரியாதை செய்து வழியனுப்பும் பாவனைச் சடங்காகப் பிரசவித்தப் பெண் படுத்திருந்த பாய், அவள் உட்கொள்ளும் அனைத்து வகை உணவிலும் சிறிதளவும் கொடுத்து பிரசவம் பார்த்த மருத்துவச்சியை ஊருக்கு வெளியே போகச் செய்யும் நிகழ்வே கொற்றியார் வழிபாடு ஆகும். கொற்றி எனும் சொல் துர்க்கையைக் குறிக்கும். தற்போது இவ்வழிபாடு வழக்கத்தில் இல்லை.
தமிழகத்தின் கிராமப்புற தெய்வங்களில் பரவலாக வணங்கப்படும் பெண் தெய்வ வழிபாடுகளுள் பேச்சியம்மன் வழிபாடு முக்கியமான ஒன்றாகும். கிராம தெய்வங்களான அங்காளம்மன், பாவாடைராயன், மாரியம்மன் கோவில்களில் பரிவார தெய்வமாக பேச்சியம்மனைக் காண முடியும். குழந்தை பிறந்த 16 அல்லது 30 ஆம் நாளோ பேச்சியம்மனுக்கு படைக்கும் வழக்கம் உண்டு. இவ்வழிபாடு வீட்டின் வாசலில் பெரும்பாலும் மாலை அல்லது இரவு நேரம் நடைபெறும். வழிபாட்டின் இறுதியில் பிரசவம் பார்த்த மருத்துவச்சிக்கு சிறப்பு உணவும் வழங்கப்படும்.
பேச்சியம்மன், பெரியாச்சி எனும் தேர்ந்த மருத்துவச்சி என்றும், சீறூர் மன்னன் (வல்லாளன்) ஒருவன் காட்டில் தலைமறைவாக வாழ்ந்த போது அவனது மனைவிக்கு (கார்குழலி) பிரசவவலி ஏற்பட, பெரியாச்சியின் உதவி கோரப்படுகிறது. அவளும் சம்மதித்துப் பிரசவத்திற்கு உதவக் காட்டிற்கு செல்கிறாள். பிரசவத்தில் சிக்கல் ஏற்பட, காட்டில் ஏதும் ஆயுதங்கள் இல்லை என்பதால் கார்குழலியை பெரியாச்சி தன் மடியில் கிடத்தி, கைகளாலேயே வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கிறாள். அப்போது, சோதிடத்தின் மீது அம்மன்னன் கொண்டிருந்த நம்பிக்கை காரணமாக பிறந்த குழந்தையைக் கொல்ல முற்பட்டதாகவும், சுதாரித்துக் கொண்ட பெரியாச்சி ஈட்டியால் அம்மன்னனைக் குத்திக் கொன்று குழந்தையைக் காப்பாற்றியதாக ஒரு தொன்மம் உண்டு.
பேச்சியம்மன் சிற்பவமைதியும் இத்தொன்மத்திற்கு வலு சேர்க்கும் வண்ணமே உள்ளது. கைலாசபதி குறிப்பிடும் ‘பேரன்னையாகப்’ (Great Mother) பேச்சியம்மனைக் கருதுவது இங்கு பொருத்தமாக இருக்கும். உக்கிரமான பெண் தெய்வம் சாந்தப்படுத்தப்பட்டு, பச்சிளம் குழந்தைகளின் காவல் தெய்வமாகப் பேச்சியம்மன் வணங்கப்படுவதை இதன் பின்னணியிலேயே நோக்க வேண்டும். இன்றும் கூட குழந்தைகளை இத்தெய்வத்தின் முன் கிடத்தி வழிபட்டால் ‘பாலாரிஷ்ட்டம்’ எனும் தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. குழந்தைப்பேறு வேண்டியும் பேச்சியம்மனை வழிபடுவர். யூத மற்றும் செல்டிக் நாட்டுப்புறவியல் கதை ஒன்று பேச்சியம்மன் தொன்மத்தை ஒத்துள்ளதையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தாராசுரத்தில் நெடுஞ்சாலை ஓரமாக அமைந்துள்ள சக்கராயி கோயில் யோனித் தெய்வக் கோயிலாகும். குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் ஆடையின்றி, பெருத்த மார்பகங்களோடும், சற்றே பெருத்த வயிறோடும், பிறப்புறுப்பைக் காட்டியவாறு உள்ள இந்த அம்மன் சிற்பத்தில் முகத்திற்குப் பதிலாகத் தாமரை மலர் உள்ளது. இச்சிறு கோவிலுக்கு மகப்பேற்றுத் தீட்டுக் காலம் கழிந்தவுடன் பிறந்த குழந்தையோடு வந்து, சற்று நேரம் அக்குழந்தையை இத்தெய்வத்தின் முன் கிடத்தி வழிபடுவது இன்றும் வழக்கமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள பிராமணர்கள் உட்பட அனைத்து சாதியினராலும் வணங்கப்படும் இத்தெய்வம் சௌராஷ்டிர சாதியினரால் மிகுந்த விருப்பத்தோடு வணங்கப்படுகிறது. பேரா. ஆர். மகாலெக்ஷ்மி இதன் தோராயமான காலம் பொ.ஆ. 12 ஆம் நூற்றாண்டு எனவும் இங்கு தாந்ரீக வழிபாடு நடைபெற்றுள்ளது என்றும் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. பூர்வகால வளமைப் பெருக்க வழிபாட்டின் சில கூறுகள் தாந்ரீக வழிபாட்டிலும் பின்பற்றப்பட்டன. இதனடிப்படையில் தாய்த் தெய்வ வழிபாட்டின் மூல வடிவமான யோனித் தெய்வ வழிபாட்டிற்கான கோயிலாக இதனைக் கொள்ளலாம்.
இதே போன்று சுமார் 18 / 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு சிற்பம் புதுக்கோட்டையில் கிடைத்துள்ளது. இதனையும் ‘சக்கராயி’ என்றே குறிப்பிடுகின்றனர். எனவே, அங்கும் யோனித் தெய்வத்திற்கான கோயில் மக்களின் வழிபாட்டில் இருந்து பின் காலப்போக்கில் செல்வாக்கை இழந்திருக்கலாம். பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு, பெண்களே சடங்கியல் தலைமை ஏற்று, மறைவாக நடத்திய யோனித் தெய்வ வழிபாடு மிக வழக்கொழிந்ததற்கு தமிழகத்தில் பரவிய வைதீக சமயத்தின் வளர்ச்சியும், ஆணாதிக்க சமூகத்தின் தாக்கம் இவற்றோடு அறிவியல் வளர்ச்சியும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.
பண்டைக் காலந்தொட்டு தாய்வழிச் சமூகங்களில் பெண்ணின் மார்பகம், பிறப்புறுப்பு, பிட்டம் ஆகியன வளமைக் குறியீடாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் கருதப்பட்டன. உலக அளவில் பல பெண் தெய்வச் சிற்பங்கள் மூன்று முலைகளோடும், பெருத்த பிட்டங்களுடனும் காணப்படுகின்றன. இந்தியாவிலும் தாய்வழிச் சமூகத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்துள்ளது. இந்திய அளவில் பொ.ஆ.மு. 200 - பொ.ஆ. 300 காலகட்டத்திலேயே பெண் தெய்வ வழிபாடு நடந்ததற்கான பல தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இத்தகைய பெண் தெய்வங்கள் பெருத்த மார்பகங்களையும், பருத்த பிட்டங்களையும் கொண்டதாகக் காணப்படுவது இவற்றின் பொதுவான அம்சம் ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள இனாம்கவான் (Inamgaon) மற்றும் நெவாசா (Nevasa) ஆகிய இடங்களில் நடந்த அகழாய்வுகளில் தலையற்ற பெண் உருவங்கள் சில கிடைத்துள்ளன. இவை வளமை, குழந்தைப்பேறு, குழந்தை நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் குறிப்பிடப்படுகிறது. பிற்கால வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த குருவிநாயனப்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம்.) என்ற இடத்தில் காணப்படும் பாறை ஓவியங்களில் மனித இனப்பெருக்க உறுப்புக்களைக் குறிக்கும் குறியீடுகள் வரையப்பட்டுள்ளன.
பழந்தமிழச் சமூகத்தில் வளமை வழிபாடு, செழிப்புச் சடங்குகள் காணப்பட்டதை இலக்கியம், தொன்மம் மற்றும் சிற்பங்கள் மூலமாகவும் அறியமுடியும். கன்னிப் பெண்களின் மார்பகத்தில் அணங்கு ஆற்றல் உறைவதாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரம், கண்ணகி தன் இடப்பக்க முலையைக் கிள்ளி எறிந்து மதுரையை எரித்ததாகக் குறிப்பிடுகிறது. திருவிளையாடல் புராணம் மதுரை மீனாட்சி மூன்று முலைகளையுடையவளாகக் குறிப்பிடப்படுகின்றது. இத்தொன்மத்தை உறுதிப்படுத்தும் விதமாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலேயே சில சிற்பங்களும் உள்ளன. தமிழகத்தில் உள்ள சில வைதீகக் கோவில்களில் காணப்படும் பெண் கடவுள்கள் பெருத்த முலைகளை உடையவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். (உம்.) பெருநலமாமுலையம்மை (திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவில்), குன்றுமாமுலையம்மை (திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்). மேற்கண்ட இலக்கிய / தொன்மச் சான்றுகள் மூலம் தமிழ்ச் சமூகம் பெண்களின் மார்பகங்களை வளமையின் குறியீடாக மட்டுமின்றி, ஆக்கவும் / அழிக்கவும் வல்லமை மிக்க உறுப்பாகவும் நோக்கியது தெளிவாகிறது.
அதே போன்று, ஆதிசங்கரர் இயற்றியதாகக் கருதப்படும் ‘சௌந்தர்யலஹரி’யில் முக்கிய வைதீகப் பெண் கடவுளான பார்வதி தேவி மலை போன்ற நிதம்பங்களை உடையவளாக வர்ணிக்கப்படுகின்றாள். தமிழகத்தில் அல்குலைத் தொடர்புபடுத்தி பல நாட்டார் பாலியல் கதைகளும் உள்ளன. அவ்வையாரம்மன் வழிபாட்டில் சிறப்பு உணவாகக் கொழுக்கட்டை படையலிடப்படுகிறது. இதில் ஆண், பெண் பிறப்புறுப்பு வடிவிலான கொழுக்கட்டைகளும் இடம்பெறுகின்றன. இவ்வழிபாட்டின் போது சுவற்றில் மஞ்சளினால் பெண்ணுறுப்பை வரைந்து வணங்கும் வழக்கமும் உண்டு. இவற்றை கொச்சையாகப் பார்க்காமல் வளமை பெருக்க வழிபாட்டு மரபின் (Fertility cult) பின்னணியில் மேற்கண்ட செய்திகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி நோக்கினால் தமிழ்ச் சமூகத்தில் வளமை வழிபாட்டுக் கூறுகளின் வேர்கள் ஆழமாக ஊடுருவி உள்ளதைத் தெளிவாக உணரமுடியும். இதன் பின்னணியிலேயே தாய்த் தெய்வ வழிபாட்டின் ஒரு கூறான சக்கராயி வழிபாட்டையும், யோனித் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய வளமைச் சடங்கான தொடுப்பு / துடுப்புக்குழி சடங்கையும் நோக்க வேண்டும்.
சில வைதீகச்சடங்குகளை ஆழமாக நோக்கினால் அவை வளமைப் பெருக்கச் சடங்குகளின் பல அம்சங்களை உட்செறித்துள்ளதை உணரமுடியும்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழகக் கிராமப்புறங்களில் வீடுகளிலேயே உள்ளூர் மருத்துவச்சிகளைக் கொண்டு பிரசவம் பார்க்கும் நடைமுறை இருந்தது. அச்சமயம், குழந்தைப் பேறின் போது வெளியேறும் நஞ்சுக்கொடியை ஆற்றல் மிக்கதாகக் கருதி அதைப் பிறர் பார்வையில் படாதவாறு வீட்டின் பின்புறம் உள்ள மண் தரையில் ஆழமாகப் புதைத்து விடுவர். பின்னர் அந்த இடத்தைச் சுற்றி ஓலை அல்லது தட்டி கொண்டு வேலியிட்டு மறைக்கின்றனர். குழந்தை பெற்ற தாய் தீட்டுக் காலம் நீங்கும் வரை அம்மறைப்பையே தற்காலிகக் குளியலறையாகப் பயன்படுத்துவாள். அவள் குளித்த நீர் வெளியில் வராதவண்ணம் அந்தக் குழிக்குள்ளேயே செல்லுமாறு விடப்படும்.
பதினாறாம் நாள் தீட்டுக் கழிக்கும் சடங்கு இக்குழியின் முன்பே நடைபெறும். மூன்று இலைகளில் படையல் உணவான கருவாட்டுக்குழம்பு சோறு, அவித்த முட்டை, காயம், கருப்பட்டி, சுக்கு ஆகியவை சேர்த்த மகப்பேற்று மருந்து உருண்டை ஆகிய அனைத்தையும் இட்டு குழியின் முன்னால் வைத்துப் படைக்கப்படுகிறது. சோற்றின் மீது ஒரு சிறு குச்சி ஊன்றப்படுகிறது. நீர் நிறைந்த செம்பில் உதிரிப்பூக்கள் தூவி பிறகு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. பிறகு மூன்று இலைகளில் உள்ள உணவையும் குழந்தை பெற்ற தாய், மருத்துவச்சி, பிரசவத்தில் உதவிய பெண் என மூவரும் உண்பர். படைக்கும் போது இக்குழிக்கு முன் ஒரு நிமிடம் குழந்தையையும் கிடத்துவது வழக்கம். துடுப்புக்குழி என்பது சடங்கு நடைபெறும் நாள் வரை யோனித் தெய்வம் உறையும் இடமாகக் கருதப்படுகிறது. பிரசவத்தின் போது தாயையும் சேயையும் காப்பாற்றிய யோனித் தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வகைச் சடங்காகவும் இதைக் கருதலாம். இச்சடங்கு முழுவதும் பெண்களாலேயே நடத்தப்படுகிறது. படைக்கப்பட்ட உணவினைப் பார்க்கக்கூட ஆண்களுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாய், சேய், மருத்துவச்சி, பிரசவத்திற்கு உதவிய பெண் (தொட்டுப் பிடித்த பெண்) என அனைவரும் இவ்வழிபாட்டில் பங்கேற்கின்றனர். பிறந்த குழந்தை உயிரோடு இருந்தால் மட்டுமே இச்சடங்கு நடைபெறும். ‘தொடுப்பு’ எனும் சொல் கழனி, கலப்பை ஆகியவற்றையும் குறிக்கும். ‘குழி’ எனும் சொல்லுக்கு வயிறு என்றும் பொருள் உண்டு. இவற்றைத் தொடர்புபடுத்தி நோக்கினால் சூலுற்ற பெண்ணின் கருப்பையே இங்கு தொல்படிவக் குறியீடாக (Archetypal Type) உள்ளது.
தமிழகம் முழுவதும் இது போன்ற மகளிர் தொடர்புடைய பல வளமைப் பெருக்கச் சடங்குகள் இருந்துள்ளன. அவற்றில் பல காலப்போக்கில் வழக்கொழிந்து போனாலும் அவற்றின் எச்சக்கூறுகளாக ஒரு சில சடங்குகள் தற்போதும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவை வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன. இச்சடங்குகள் பற்றிய காத்திரமான ஆய்வுகளுக்கும், அவற்றுக்குப் பொருள் விளக்கம் தரவும் (Interpretation) நாட்டுப்புறவியல் மற்றும் மானிடவியல் பின்புலத்தில் அவை நோக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
* தமிழ் அகரமுதலி, சென்னை பல்கலைக்கழகம், ப. 1167.
* லிப்கோ தமிழ் அகராதி, 1978, ப. 250.
* பெரிய - மூத்த, ஆச்சி - தாய், பாட்டி, பெருமாட்டி. அவ்வகையில் பெரியாச்சியை மூத்த தாயாக / மருத்துவச்சியாகக் கொள்ளலாம். (தமிழ் அகராதி, ப. 65 & 501)
* https://en.wikipedia.org/wiki/Periyachi> & http://www.phenomenalplace.com/2014/01/periyachiammanworldsmostfearsome.html
* கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், 1999, ப. 68.
* ஆரியக் கலப்பில்லாத பேச்சியம்மனை, பேச்சு + அம்மன் என உள்நோக்கத்தோடு பொருள் தந்து வாக்தேவியாக / சரஸ்வதியாக மாற்றும் விஷமத்தனமான முயற்சியும் சமீப காலமாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
* பாலாரிஷ்ட்டம் - கிரகங்களின் தீய பார்வையால் சிசுக்களுக்கு ஏற்படும் நோய். (தமிழ் அகராதி, ப. 465.)
* சண்முகசுந்தரம், நாட்டுபுறத் தெய்வங்கள், காவ்யா, சென்னை, 2009, ப. 409.
* Josepha Sherman (Ed.,), Story telling - An Encyclopaedia of Mythology and Folklore, Vols. 1,2 & 3, Sharpe Reference, New York, 2008, pp. 157 - 58.
* ஆயி - தாய் (லிப்கோ தமிழ் அகராதி, லிப்கோ பதிப்பகம், 1978, ப. 74)
* தொ.பரமசிவன், பண்பாட்டு அசைவுகள், 2006, ப.81.
* ஆ.சிவசுப்ரமணியன், மந்திரமும் சடங்குகளும், காலச்சுவடு, 2010, ப. 58.
* R.Mahalakshmi, The making of the goddess - Korravai - Durga in the tamil tradition, OUP, New Delhi, 2011, p. 309.
* டி. டி. கோசாம்பி, பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும், என்.சி.பி.எச், 2006, ப. 187.
* Rare sculpture found in Pudukottai, The Hindu, 8.8.2012.
* D.P.Chattopadhyaya, Lokayata, People’s Publishing House, New Delhi, 2006, pp. 302 - 305.
* Upinder Singh, A History of Ancient and Early Medieval India, Pearson, 2016, p. 235 & 431 - 432.
* K.Rajan, Rock art in Tamil nadu - A status report, Man in India, 91 (2), pp. 355 - 356. . எஸ்.இராமச்சந்திரன், கொள்கை பரப்புதலில் கொங்கை கோட்பாடு, மழை, 2002.
* “இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்ளெறிந்தாள்……..”
(வஞ்சினமாலை, மதுரைக் காண்டம், சிலப்பதிகாரம்)
* “தெள்ளமுத மென்மழலை சிந்திவிள மூரல்
முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய தோர்பெண்
பிள்ளையென மூவொரு பிராயமொடு நின்றாள்
எள்ளரிய பல்லுயிரும் எவ்வுலகு மீன்றாள்”
(திருவிளையாடற்புராணம் - 537)
- இங்குக் குறிப்பிடவேண்டிய மற்றொரு செய்தி, முலை என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவது கொச்சை என்ற தவறான புரிதல் தற்போது பொதுப்புத்தியில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதால் முலை என்ற பின்னொட்டுடன் கூடிய இப்பெண் கடவுள் பெயர்கள் கோவில்களில் எழுதப்படுவதில்லை. இங்கு முலை என்னும் சொல்லுக்கு மாற்றாக குஜம், ஸ்தனம் என்ற வடமொழிச் சொற்களே பரவலாகக் கோவில்களில் பயன்படுத்தப்படுகின்றன. (உம்.) பெருமாமுலையம்மை - ப்ருஹத்குஜாம்பிகை, முயங்குபூண் முலையம்மை - ஆலிங்கபூஷண ஸ்தனாம்பிகை.
* நிதம்பம் - பிருஷ்ட்ட பாகம், அல்குல் பகுதி (தமிழ் அகராதி, லிப்கோ பதிப்பகம், ப. 408.)
* காண்க - ஸெளந்தர்யலஹரியின் 81 ஆம் ஸ்லோகம்.
* காண்க - கி.ராஜநாராயணன், மறைவாய் சொன்ன கதைகள், அன்னம் அகரம், தஞ்சாவூர் & தமிழ்நாடன் ‘அல்குல்’ என்ற பெயரில் நூலே வெளியிட்டுள்ளார். (தமிழகத்தில் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் விலக்குச் சொற்கள் அல்லது வசவுச் சொற்கள் பலவும் பெண்ணுறுப்பைத் தொடர்புபடுத்தியே வழங்கப்படுகின்றன).
* செந்தீ நடராசன், பண்பாட்டுத் தளங்கள் வழியே, என்.சி.பி.எச், சென்னை, 2014. பக். 1 - 23.
* பொதுவாக இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பிரசவங்களை அனுபவமிக்க மருத்துவச்சிகளே மேற்கொள்கின்றனர். (Samantha Pottu, Skilled Dais, The Hindu Folio, 8.10.2000.) அது மட்டுமின்றி பெரும்பாலான தெற்காசிய நாடுகளின் ஊரகப் பகுதிகள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் வறுமையான குடும்பங்களிலும் சுமார் 65 விழுக்காடு பிரசவங்கள் வீடுகளிலேயே பாரம்பரிய மருத்துவச்சிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. (Smita Bajpai and CHETNA Team, “Advocay for Recognition of the Dai (India’s Traditional Midwife) - A case presentation by CHETNA”, in (eds.) A.V.Balasubramanian and T.D. Nirmala Devi, Traditional Knowledge Systems of India and Sri Lanka, Compas Series on Worldviews and Sciences 5, p. 157.) இன்றளவும் ஆங்கில மருத்துவம் எட்டிப்பார்க்காத தமிழகத்தின் சில கிராமங்களில் மருத்துவச்சிகளே பிரசவம் பார்க்கின்றனர். குளித்தலைக்கு அருகில் உள்ள கீழவாழியப்பட்டி எனும் ஊரில் வசிக்கும் கம்பளத்துநாயக்கர் சமூகத்தில் தற்போதும் கூட மருத்துவச்சிகளே பிரசவம் பார்க்கும் வழக்கம் உள்ளது. (காண்க: வெ.நீலகண்டன், ஊர்க்கதைகள், சந்தியா பதிப்பகம், ப. 17.)
* பூப்புச் சடங்கு, திருமணச்சடங்கு, தொப்புள் கொடியை மண்ணில் புதைக்கும் சடங்கு ஆகிய அனைத்துமே பெண்ணுடல் இனவிருத்தி சக்தியை தொடர்ந்து பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்தை முன்னிட்டே செய்யப்படுவதாக மானிடவியலார் (Anthropologists) கருதுகின்றனர். (காண்க - Pascale Hancart Petiter and Vellore Pragathi, “Ethnographical views on the valaikāppu. A pregnancy rite in Tamil Nadu”, in Laurent Pordié (Ed.,) Special Issue on the Ethnography on Healing 37(1). 2007, P. 2.)
* நீர் நிறைந்த இச்செம்பு நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றைக் குறிக்கும் குறியீடாகக் கொள்ளலாம். கோவில்களில் மூலக்கடவுள் உறையும் இடமும் கருவறை என்றே வழங்கப்படுகிறது. கருவறையின் மேற்புறம் அரைக்கோள வடிவில் உச்சியில் கலசத்துடன் காணப்படுவது பூர்ண கலசத்தை ஒத்துள்ளது. செழுமையின் அடையாளமாகக் கருதப்படும் பூர்ண கலசம் கருவுற்ற பெண்ணின் வயிற்றையே உருவகப்படுத்தப்படுத்துவதால் இவற்றைத் தொல்படிவத் தாய்வழிக் குறியீடுகளாகக் ( Archetypal - matrilineal symbols) கொள்ளலாம்.
* பொருளியல் நோக்கமின்றி பிரசவம் பார்ப்பதை ஒரு சேவையாகக் கருதிய மருத்துவச்சிகளை நன்றி கூறும் விதமாக அவர்களின் பங்கேற்போடு தமிழகத்தில் பல தாய்த் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளும் நடைபெற்றுள்ளன. தமிழ்ச் சமூகம் காலப்போக்கில் மருத்துவச்சிகளை மறந்ததோடு பல தாய்த் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளையும் கைவிட்டுவிட்டது (i) தொ.பரமசிவன், பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு பதிப்பகம், 2006, பக். 80 - 81.
(ii) பெண்கள் மட்டுமே பின்னிரவில் கூட்டாகப் பங்கேற்று வழிபடும் ‘செவ்வாய் பிள்ளையார்’ வழிபாட்டிலும் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்காகவே தயாரிக்கப்பட்டு படைக்கப்படும் கொழுக்கட்டை போன்றவற்றைக் கூட ஆண்களுக்குத் தராமல் பெண்கள் மட்டுமே உண்பர். கேரளத்தில் உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பெண்கள் மட்டுமே பொங்கல் பொங்கி வழிபடுவர். இங்கும் ஆண்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு ஆண்களை அனுமதிக்காது முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் இது போன்ற சடங்குகளைக் தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே கருதவேண்டும். தொ.பரமசிவன், பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு பதிப்பகம், 2006, ப. 81. (குறிப்பு - துடுப்புக்குழி போடுதல் அல்லது தொடுப்புகுழி போடுதல் என இச்சடங்கு வழங்கப்பட்டாலும், இது பேச்சு வழக்குச் சொல்லாகவே இருக்கக்கூடும். பிறப்பு / இறப்பினால் ஏற்படும் அசுத்த நிலையைக் குறிக்க (தீட்டு) துடக்கு, தொடக்கு ஆகிய சொற்கள் குறிக்கின்றன. (காண்க: Minron Winslow, A Comprehensive Tamil and English Dictionary, p. 600 & 630) இச்சடங்கு ஒரு வகையில் பிறப்பினால் ஏற்பட்ட தொடக்கையும் நீக்குவதால் ‘தொடக்கு குழி சடங்கு’ என்பதே காலப்போக்கில் தொடுப்புக்குழி / துடுப்புக்குழியாக மருவியிருக்கலாம் என ஆய்வாளர் கருதுகின்றார். மேலும், யாழ்பாணத்தில் குழந்தை பிறந்த வீடு ‘துடக்கு வீடு’ என அழைப்பது இன்றும் வழக்கில் உள்ளது. (மனோன்மணி சண்முகதாஸ், பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலம் - இருப்பிடம், ப. 76.)
* தமிழ் அகராதி, லிப்கோ பதிப்பகம், 1978, ப. 387.
* தமிழ் அகராதி, லிப்கோ பதிப்பகம், 1978, ப. 227.