காலந்தோறும் பல்வேறு வகைமையிலான இலக்கியங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. அவ்வகையில் படைக்கப்படுகின்ற எல்லா இலக்கியங்களும் நிலைபெறுவதில்லை. தொடர்ச்சியான வாசிப்புகளுக்கும் புதிது புதிதான அனுமானங்களுக்கும் இடம் தரும் இலக்கியங்களே காலத்தையும் மீறி நிலைபெற்ற படைப்பாக அங்கிகாரம் பெற்றுவிடுகின்றன. அதாவது காலத்திற்குக் காலம் துரிதமாக வளர்ந்து வரும் வாசகனின் புலமையினையும், விமர்சகனின் திறனையும் மேலும் மேலும் கிளர்ந்தெழச் செய்வதற்கான பரந்த வெளியினை உடைய இலக்கியப் பனுவல்களே செவ்வியல் தன்மை அடைகின்றன. அத்தகைய பண்புக் கூறுகளை சங்க இலக்கியம் பெற்றுள்ளன. எனவேதான், சங்க இலக்கியம் செவ்விலக்கியமாகவும், அவற்றின் வழியே தமிழ்மொழி செம்மொழியாகவும் தகுதிப் பாட்டைப் பெற்ற இலக்கியமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. மரபான வாசிப்பில் சங்க இலக்கியப் பனுவல்களில் பரந்துபட்ட பன்முகப் பொருண்மைகள் ‘பொருள்-விளக்கம்’ என்பதாகச் சிறுத்துப் போய்விடுகின்றன. ஆனால் பனுவலின் பன்மைத்துவத்தையும் பனுவலுடனான வாசகனின் உறவில் முழுமையான சுதந்திரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நவீன அணுகுமுறைகளைப் (குறிப்பாக பின் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவம்) பயன்படுத்திச் சங்க இலக்கியப் பனுவல்களை ஆராயுமிடத்தே அவற்றினூடாகப் புலப்படும் நவீனக் கோட்பாடுகளையும் கருத்தாக்கங்களையும் இனங்கண்டு வெளிக்கொணரும் சாத்தியக்கூறுகள் மிகுதியாக உள்ளன.
நவீனக் கோட்பாடுகளில் முன்வைக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வாசிப்பு முறை டெரிடாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடு ஆகும். மையத்தகர்ப்பின் மூலம் விளிம்புகளை அர்த்தப்படுத்துதலை இக்கோட்பாடு வலியுறுத்துகிறது. ஒரு பனுவலைக் கட்டவிழ்த்து (மையத்தைத் தகர்த்து) விளிம்பிலுள்ள பொருள்கள் மையத்தை நோக்கி நகரும். அதன் வழியாக புதிய பனுவல்களும், கிளைப்பனுவல்களும் (சிறுகதையாடல்கள், நுண் கதையாடல்கள்) பன்மைத்துவத்துடன் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் என்பதே ‘கட்டவிழ்ப்புக் கோட்பாட்டின்’ சாரம். “டெரிட்டாவின் வாசிப்பு முறை - அதாவது பனுவலுக்குப் பொருள் கொள்கின்ற முறை பெரும்பாலும் இப்படித்தான் அமைகின்றது. பனுவலின் சாராம்சமாக இல்லாமல் ஓரப்பகுதிகளிலுள்ளவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, வாசகத்தின் முழுமையை ஆளுகின்ற எதிர் முனைக்கூறுகள் சிதறுண்டு போகிற அளவுக்கு அவர் தனது பார்வையில் தீவிரம் செலுத்துவார். இதனால் கட்டவிழ்ப்பு, இலக்கியத் திறனாய்வுக்கு ஒரு புதிய கோணத்தை நல்கியது. பனுவல்கள், எவ்வாறு தருக்கவியலான தம்முடைய சொந்த விதிமுறைகளையே சங்கடத்துக்குள்ளாக்குகின்றன என்பதை இத்திறனாய்வுமுறை காட்டுகின்றது. இவை சிரமங்களுக்கு உள்ளாகின்ற இடத்திலும், அறிகுறிகளாக இருப்பவற்றின் மீதும் பொருள்களின் ஊசலாட்டங்களின் மீதும் கட்டவிழ்ப்பு, தனது பிடியை இறுக்கிக் கொள்கிறது. கட்டவிழ்ப்பின் பணி, இப்படி வித்தியாசமான தளத்தில் நிகழ்கிறது. இதன் மூலமாகப் பனுவலுக்கு ஒரு புதிய பாpமாணம், புதிய வீச்சு கிடைத்துவிடுகிறது.” என்கிறார் தி.சு. நடராசன்.
(திறனாய்வுக் கலை, ப. 153. நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை)
புதுமைப்பித்தன் இராமாயணத்தைக் கட்டவிழ்த்து ‘சாபவிமோசனம்’, வாதவூரார் புராணத்தைக் கட்டவிழ்த்து ‘அன்றிரவு’ ஆகிய பனுவல்களை ஆக்கியுள்ளனர். எஸ் .இராமகிருஷ்ணன் மகாபாரதத்தைக் கட்டவிழ்த்து ‘உபபாண்டவம்’, ஜெயமோகன் பாகவதக் கதைகளைக் கட்டவிழ்த்து ‘விஷ்ணுபுரம்’, சிலப்பதிகாரத்தைக் கட்டவிழ்த்து ‘கொற்றவை’ ஆகிய பனுவல்களை ஆக்கியுள்ளனர். இவ்வாறாக நவீனத் தமிழ்ப் புனைகதை வெளியில் ‘கட்டவிழ்ப்பானது’ தொழிற்பட்டு புதிய பனுவல்கள் ஆக்கப்பட்டுள்ளன. இவை போன்று சங்க இலக்கியப் பனுவல்கள் சிலவற்றில் ‘கட்டவிழ்ப்பு’ மிகுதியாகத் தொழிற்பட்டுள்ளன. இவ்வகையான தொழிற்பாடுகளை தமிழ் மரபில் நிகழ்ந்துள்ள கட்டவிழ்ப்பின் புராதான வடிவங்களாக இனங்காணவியலும். இக்கருத்தினை வலுப்படுத்தும் விதமாக “சங்ககாலக் கவிஞா;கள் சிலரின் கவிதைகள் அவர்கள் காலத்திய கவிஞர்களாலேயே ‘கட்டவிழ்ப்பு’ மூலம் புதிய பனுவல்களுக்கு ஆளாகியிருக்கின்றன” எனும் தி.சு. நடராசனின்
(தி.சு. நடராசன், திறனாய்வுக்கலை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை. ப.153,) கூற்று அமைகிறது. அவ்வகையில் சங்க இலக்கிய பனுவல்களில் இதற்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன.
“காலே பரிதப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற இவ் உலகத்துப் பிறரே”
(குறுந்தொகை. 44)
என்று தலைவி தன் தலைவனை பெரும் வனத்திடையே தேடித் துயர்பட அலைவதை வெள்ளிவீதியாரின் பனுவில் காணமுடிகிறது. இதை,
“நெறிபடு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளிவீதியைப் போல நன்றுஞ்
செலவயர்ந்த திசினால் யானே பலபுலந்து
உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய்
தோளும் தொல்கவின’ தொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி
மருந்து பிறிது இன்மையின் இருந்துவினை இலனே”
(அகம். 147)
என்று ஔவையார் பழைய பனுவலைக் கட்டவிழ்த்து புதிய பனுவலை உருவாக்கியுள்ளார். இவ்விடம் உவமையாகக் கையாளப்படும் ‘வெள்ளிவீதி’ எனும் பெயர் இப்பனுவலை வெள்ளிவீதியின் பனுவல், வெள்ளிவீதியின் காதல் எனப் பலதளங்களில் அர்த்தப்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. மேலும் பனுவலைக் கட்டவிழ்த்து பனுவலில் காணப்படுகின்ற அர்த்தத்தை, பனுவலின் மைய வீச்சை நீளச் செய்கிறது.
“மள்ளர் குழீஇய விழவினானும்,
மகளிர் தழீஇய துணங்கை யானும்,
யாண்டும் காணேன், மாண் தக்கோனை;
யானும் ஓர் ஆடுகள மகளே என்கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலும், ஓர் ஆடுகளமகனே”
(குறுந்தொகை. 31)
என்பது ஆதிமந்தியாரின் பனுவல். நடனமாடும் தலைவனை இழந்த ஆதிமந்தியாகிய நடனமகள் விழாக்கள் நடைபெறும் இடங்களிளெல்லாம் தன் தலைவனை மாய்ந்து மாய்ந்து தேடித் துயருறுகிறாள் என்பதே இப்பனுவலின் பொருண்மை. இப்பனுவலை,
“காதலற் கெடுத்த சிறுமையோடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல பேதுற்று,
அலந்தனென் உழல்வென்கொல்லோ - பொலந்தார்
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்
உடை மதில் ஓர் அரண் போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே!”
(அகம். 45)
என்று வெள்ளிவீதியார் கட்டவிழ்த்துள்ளார். ‘ஆதிமந்தியைப் போல காதலனைப் பிரிந்து நானும் துயர்பட அலைந்து உழல்வேனோ?’ என்கிற பொருண்மையில் புதிய பனுவலை உருவாக்கியுள்ளார். இதுபோல் பரணர்,
“… … … … … அந்தில்,
கச்சினன். கழலினன், தேம் தார் மார்பினன்,
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்,
கரியல் அம் பொருநனைக் காண்டிரோ?’ என,
ஆதிமந்தி பேதுற்று இனைய,
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
அம் தண் காவிரி போல
கொண்டு கைவலித்தல சூழ்ந்திசின் யானே!”
(அகம், 76)
“ஆதி மந்தியின் அறிவுபிறிது ஆகி,
பேதுற் றிசினே - காதல்அம் தோழி!”
(அகம்.135)
“ஆட்டன அத்தி நலன்நயந்து உரைஇ,
தாழ்இருங் கதுப்பின் காவிரி வவ்வலின்,
மாதிரம் துழைஇ, மதிமருண்டு அலந்த
ஆதி மந்தி காதலற் காட்டி
படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண்புகழ் பெறீஇயர்,
சென்மோ… … … ... ...”
(அகம். 222)
“ஆட்டன் அத்தியைக் காணீரோ?’ என
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
‘கடல்கொண் டன்று’ என, ‘புனல்ஒளித் தன்று’ என,
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த
ஆதி மந்தி போல,
ஏதம் சொல்லி பேதுபெரிது உறலே!”
(அகம். 236)
என்று வெள்ளிவீதியாரின் பனுவலைக் கட்டவிழ்த்துப் பல புதிய பனுவல்களை உருவாக்குகிறார். பரணரின் இத்தகைய ‘கட்டவிழ்ப்பின்’ வழியாக ‘ஆட்டனத்தி-ஆதிமந்தி’ யாகிய காதலர்களின் வரலாற்றுப் புனைவு பனுவலாக்கம் பெறுகிறது. இப்பனுவலின் வழி ‘மருதி’ எனும் விளிம்புநிலைப் பாத்திரத்திறம் குறித்த கதை நிகழ்வும் கிளைப் பனுவலாக்கமும் நிகழ்கிறது. ஒரு பனுவலைக் கட்டவிழ்ப்பின் மூலம் களைத்துச் சிதறடித்து புதிய பனுவல்களையும், கிளைப் பனுவல்களையும் மீட்டுருவாக்கம் செய்துள்ளார் பரணர். இவ்வாறாக சங்க இலக்கியப் பனுவல்களில் நிகழ்த்தப்பெற்றுள்ள கட்டவிழ்ப்பானது கிளைப் பனுவலாக்கமாக வளட்ந்துள்ளது.
உதாரணமாக பின்நவீனத்துவக் கோட்பாட்டு அணுமுறைகளில் ‘படைப்பாளியின் மரணம்’ என்கிற கோட்பாட்டை எடுத்துக் கொள்ளலாம். இக்கோட்பாட்டை முன்வைத்தவர் ரோலண்ட் பர்த். இக்கோட்பாடு ஒருபனுவலின் மீதான சகலவிதமான உரிமைகளையும்; கோரும் படைப்பாளியின் சர்வாதிகாரத்தை மறுத்து வாசகனின் சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. “மொழியியில் ரீதியில் ‘நான்’ என்பது அக்கணத்தில் ‘நான்’ என்பதன்றி வேறு அல்ல என்பதைப்போல கணம் எழுதுகிறது. ஒரு படைப்பாளிக்கு இதில் முக்கியத்துவமில்லை. மொழிக்கு ‘வருணனைப் பொருள்’ தான் தெரியுமே தவிர ‘நபரைத் தெரியாது”
(ரோலண்ட் பர்த், படைப்பாளியின் மரணம், உன்னதம் இதழ், கவுண்டம்பாளையம், ஈரோடு. டிசம்பர். 98. ப..36) என்று ஒருபனுவலுக்குச் சொந்தம் கொண்டாடும் படைப்பாளியின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்து அப்பனுவலை வாசகனுக்கு பாத்தியப்பட்டதாக்குகிறார் பார்த். ஒரு பனுவலை அணுகுமிடத்தே நிகழும் படைப்பாளியின் குறுக்கீடு அப்பனுவலின் பன்மைத்துவத்தைச் சிதைத்துவிடும். எனவேதான் “படைப்பாளியின் மரணத்தால்தான் வாசகனின் பிறப்பு நிகழ வேண்டும்”.
(ரோலண்ட் பர்த், படைப்பாளியின் மரணம், உன்னதம் இதழ், டிசம்பர். 98. ப.37) என ரோலண்ட பர்த் குறிப்பிடுகின்றார்.
இத்தன்மையில் வாசகனின் சுதந்திரமான இயங்கு தளத்திற்கான வெளியைச் சங்க இலக்கியப் பனுவல்கள் அர்த்தப்படுத்துகின்றன. அவற்றைச் சில பனுவல்களில் இனங்காணமுடிகிறது. ‘செம்புலப் பெயல்நீரார், சிறுகல் பொறுநுறையார், காக்கைப் பாடினியார், அணிலாடு முன்றிலார், ஓரேருழவர் போன்ற புலவர்கள் பனுவலின் வழி இனங்காணப்பட்டவர்கள் ஆவர். சங்கப் பெரும் புலவர்களான கபிலர், பரணர், ஔவையார் போன்றோருக்கு இருக்கும் வரலாறுகள், வாழ்வியல் நிகழ்வுகள் முதலான மதிப்பீடுகள் பனுவலின் வழி உயிர் பெற்றுள்ளன. ஒருபனுவலின் வழியாகத்தான் படைப்பாளியை உயிர்ப்பிப்பதென்பது நிகழவேண்டும். மாறாக படைப்பாளியின் வழியாக பனுவலை அணுகக் கூடாது என்பதைத்தான் ‘படைப்பாளியின் மரணம்’ என்கிற கோட்பாடு முன்வைக்கிறது. இத்தன்மையில் அமையப் பெற்ற சங்க இலக்கியப் பனுவல்கள் வாசகனின் முழுமையான சுதந்திரத் தன்மையை அர்த்தப்படுத்தல்களுக்கு இடமளிக்கும் வெளியை உடையதாக விளங்குகின்றன. உதாரணமாக,
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”
(குறுந். 40)
என்கிற எல்லோரும் நன்கறிந்த பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பனுவலைப் படைத்தது யார் ஆணா? பெண்ணா? ‘ஆண்’ என எடுத்துக்கொண்டால் ஓர் அர்த்தத்தையும் ‘பெண்’ எனக் கருதினால் ஓர் அர்த்தத்தையும் பெறமுடியும். இவ்விடம் ‘ஆணோ, பெண்ணோ எந்த நபராயினும் படைப்பாளி என்கிற கருத்தாக்கத்தை மட்டுப்படுத்தி ‘கணம்’ எழுதுகிறது. அதன்வழி ‘மொழியானது’ செயல்படுகிறது எனக் கொள்ளும் போது இப்பனுவலின் ஊடாக இரண்டாம் நிலை அர்த்தப்படுத்தலுக்கான சாத்தியக் கூறுகள் விரிவடையும். அதனடிப்படையில் இப்பனுவலை,
1. உள்ளப்புணர்ச்சி
2. உடல் புணர்ச்சி
3. காதலின் தத்துவம்
4.காதலர் உளவியல்
எனப் பலவாறாக அர்த்தப்படுத்தலாம். இது போன்று படைப்பாளியை விலக்கி வைத்து வாசகனின் சுதந்திரத்திற்கான வெளியை தன்னகங்கொண்டுள்ள எழுத்துக்கள் சங்க இலக்கியப் பனுவல்களில் மிகுதியாக விரவியுள்ளன. சமகாலத்தில் இலக்கியப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், விமரிசகர்கள் முதலானோரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு கருத்தாக்கம் ‘மாந்திரீக யாதார்த்தம்’ (Magical Realisam) ஆகும். “மாந்திரீக யதார்த்தம் என்பது வளமாகவும் சிக்கலாகவும் உள்ள நிஜத்தை சிறப்பாகச் சொல்லவல்லது” என்கிறார் இசபெல் ஆலன்தே.
(இசபெல் ஆலன்தே, மாயமில்லை மந்திரமில்லை, கிழக்கு பதிப்பகம், சென்னை) சங்க மரபில் வளமையாக உள்ள ‘உள்ளுறை, இறைச்சி’ ஆகிய கருத்தாக்கங்கள் ‘மாந்திரீக யதார்த்தத்தோடு பெரிதும் தொடர்புறுகின்றன.
“உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிகென
உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவம்”
(தொல். பொருள். 51)
அதாவது ஒரு பனுவலின் பொருண்மை நேரிடையாகப் புலப்படாதவாறு சிந்தனைத் திறத்தால் உணர்ந்து கொள்ளுமாறு மறைபொருளாக ஒரு உவமையை வைத்துப் படைப்பதை உள்ளுறை எனலாம். மாந்திரீக யதார்த்தமும் கிட்டத்தட்ட இவ்வகையிலான வரைமுறையினையே கொண்டுள்ளது.
“அம்மா வாழி, பாண! எவ்வைக்கு
எவன்? பெரிது அளிக்கும் என்ப - பழனத்து
வண்டு தாது ஊதும் ஊரன்
பெண்டு என விரும்பின்று, அவள் தன் பண்பே”
(ஐங். 89)
பாணனே! நீ வாழ்க! நான் சொல்வதைக் கேள். தலைவன் என் அக்காவாகிய தலைவிக்குப் பெரிதும் தலையளி செய்வான் என்று கூறுவார் பலர். அது எதற்காகவாம்? ஊர்ப்பொது நிலத்தில் உள்ள மலர்களில் வண்டுகள் தாதுண்டு மகிழ்தற்கு இடனான ஊரன் தலைமகளைத் தன்பெண்டு என்று கருதியதற்குக் காரணம் அவள்பால் அமைந்த நல்ல பண்புகளே எனப் பாணனிடம் காதற்பரத்தை கூறுவதாக அமைவதே இப்பனுவல் தரும் நேரடிப் பொருண்மை. ஆயினும் சிந்தனையின் வழியாக உணரத்தக்க பொருண்மைகளை இப்பனுவல் மறை பொருளாகக் கொண்டுள்ளது. ‘பழனத்து வண்டு தாது ஊதும் ஊரன்’ என்பதால் தலைவன் பொது மகளிரான பரத்தையரைக் கூடி அவர் நலம் நுகரும் இயல்பினன் என்கிற உள்ளுறைப் பொருள் இதனால் புலனாகிறது. ‘பெண்டு என விரும்பின்று, அவள் தன் பண்பே’ என்கிற பாடலடிக்கு மேற்குறித்த நேரடிப் பொருண்மை இருப்பினும் ‘தலைவி இளமையும் வனப்பும் அற்றவள், தலைவனுக்கு காம இன்பத்தை வழங்கி மகிழ்விக்கும் இயல்பினை இழந்தவள் என்பதால் தலைவனுக்கு காதல் இன்பம் நல்குவதில் அவள் எப்பொழுதும் எமக்கு இணையாக மாட்டாள் என்கிற காதற் பரத்தையின் மனக்குரல் பனுவலின் அடி ஆழத்திலிருந்து வெளிப்படுகிறது. இத்தன்மையில் பல சங்க இலக்கியப் பனுவல்கள் (அகப்பாடல்கள்) அமைந்துள்ளன. இதன் வழியாக ‘மாந்திரீக யதார்த்த வாதத்திற்கு’ இணையாக அதன் பூர்வாங்கப் பண்புகளை தன்னகங் கொண்டுள்ள ‘உள்ளுறை - இறைச்சி’ கோட்பாட்டினை நவீனச் சூழலுக்கேற்ப வளர்த்தெடுக்க இயலும்.
சங்க இலக்கியப் பனுவல்களின் வழி உருப்பெறும் ‘திணைக்கோட்பாடு’ நவீன சூழலுக்கும், சூழலியலுக்கும் ஏற்ப உலகப் பாங்குடன் வளர்த்தெடுக்க வேண்டிய கோட்பாட்டு அம்சங்களைத் தன்னகங்கொண்டுள்ளன. எனவே திணைக்கோட்பாட்டின் வழி நவீனத் தமிழ்த் திறனாய்வு நெறிமுறையினை கட்டமைக்கும் சாத்தியக்கூறுகள் பேரளவில் உள்ளன. பண்பாட்டு மானிடவியலின் ஒரு துறையான இனவரைவியல், பின்நவீனத்துவ வாசிப்பு முறைமைகளின் தொடர்ச்சியாக இலக்கியப் பனுவல்களின் வழி இனவரைவியலைப் பனுவலாக்கும் ‘இலக்கிய இனவரைவியலாக’ வளர்ச்சியடைந்துள்ளது. ‘படைப்பாளியைத்’ தகவலாளியாகவும் ‘பனுவலைத்’ தரவுகளாகவும் கொண்டு சங்க இலக்கியப் பனுவல்களின் வழியாக ‘இலக்கிய இனவரைவியலைப்’ பனுவலாக்குவதற்கான பரந்துபட்ட பொருண்மைகள் சங்கப் பனுவல்களில் உள்ளன. சங்க இலக்கியப் பனுவல்களில் இவைபோன்ற நவீனக் கோட்பாடுகள், புதிய கருத்தாக்கங்களுக்கு இணையான பல்வேறு குறிப்புகளை இனங்காணமுடிகிறது. இத்தகைய ஆதாரங்களை உட்கிரகித்து சங்க இலக்கியப் பனுவல்களின் ஊடாக நவீனக் கோட்பாடுகளையும் கருத்தாக்கங்களையும் கட்டமைத்து ‘நவீனத் தமிழ்த் திறனாய்வாக’ வளர்த்தெடுக்க இயலும். சங்க இலக்கியப் பனுவல்களின் தாக்கம் நவீன இலக்கியங்களில் படிந்துள்ளன. சங்கப் பனுவல்களின் தொடர்ச்சி என்பது இலக்கியங்களில் ஊடாட்டமாகியுள்ளன. எனவேதான், சங்கப் பனுவல்களின் அடையாளத் தொடர்ச்சியை, நவீன வாசிப்பில் இனங்காணமுடிகிறது.