தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
84.இதழ்களில் செய்திப் புலப்பாடு
முனைவர் சு. முப்பிடாதி
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
கே. எஸ். ஆர். கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.
முன்னுரை
அறிந்த கருத்துக்களையும், உணர்ந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வல்ல ஒரு கருவியே மொழி ஆகும். மொழியைப் பயன்படுத்தியே மனிதன் தன் எண்ணங்களைப் பிறரிடம் தெரிவித்து வருகிறான். பல எழுத்துக்களின் சேர்க்கையைச் சொல் என்கிறோம். மொழிக்கு உறுதுணையாக இருப்பது இந்தச் சொல் என்கிறோம். இந்தச் சொல்லைப் பயனாக வைத்தே மனிதன் தன் விருப்பு, வெறுப்புகளைப் பிற மனிதனிடம் புலப்படுத்துகின்றான்.
“திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊஉங்கு இல்”
என்று திருவள்ளுவர் சொல்லை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே ஒரு மனிதன் தன் வேட்கையைப் பிற மனிதன் ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்யப் பல வகையான உத்திகளைக் கையாளுகின்றான். இந்த உத்திகள் பல நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இக்கால இதழ்களில் புலப்பாட்டு நெறிமுறைகள் அமைந்திருப்பதை ஆராய்வது தற்காலத்தில் அடிப்படைத் தேவையாக அமைகிறது.
இதழ்களில் செய்திப்புலப்பாடு
இதழ்களில் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் சுவை, அழகு, பயன் வெளிப்படும் இதழ்களைத்தான் மக்கள் வாங்குவர். படிப்பவர் மன நிறைவைப் பெறும் வகையில் ஒவ்வொருவரின் சுவைக்கும் ஏற்ற வகையில், ஒவ்வொரு பக்கத்தையும் பற்றிப் பத்திரிக்கையாளர் சிந்தித்து உருவாக்கப் பல உத்திகளைக் கையாண்டு செய்திகளைப் புலப்படுத்துகின்றனர்.
புலப்பாட்டுநெறி - விளக்கம்
ஒருவன் தன் மனக்கருத்தை மற்றவனுக்குப் புலப்படுத்த மொழியைக் கருவியாக்குகிறான். சொல்ல வந்த கருத்தை மற்றவன் மனம் கொள்ளும்படி கூற வேண்டி இருப்பதால் படிப்பவனிடத்தோ அல்லது கேட்பவனிடத்தோ ஒரு விரும்பும் தன்மையை ஏற்படுத்த வேண்டும். விருப்பத்தை உருவாக்கப் பல உத்திகள் கையாளப்படுகின்றன. அந்த உத்திகள் சில நெறிமுறைகளுக்கு உட்படுகின்றன. சொற்பொருள் புலப்பாட்டிற்குரிய நெறிமுறைகள் பேச்சிலும், எழுத்திலும் உள்ளன. பொருளைப் புலப்படுத்துவதுடன் வேட்ப மொழியும் சொல்லாகச் சொற்கோப்பு கலை விளங்குவதால் அதனைத் தமிழில் “புலப்பாட்டு நெறி” என்றழைக்கின்றனர்.
இதழ்களில் மொழிநடை
இன்றைய நாளிதழ்களில் செய்திகளை வாசகர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் எழுத்து, சொல் மற்றும் தொடர் நிலைகளில் பல்வேறு மாற்றங்களை வெளிப்படுத்திச் செய்திகளை நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன.
மொழி நடையின் மூன்று நிலைகள்
நடையியற் கூறுகளை மூன்று நிலைகளில் இனங்காண முடியும் என்பார் உல்மாண். மொழியியலை ஒட்டியே இவை விளக்கப்படுகின்றன. ஒலிநிலை, சொல்நிலை, தொடர்நிலை ஆகியவையே அம்மூன்று நிலைகளாகும். ஒலிநிலையில் காணும் உத்திகளை ஒலிக்கோலங்கள் என்றும், சொல்நிலையில் காணப்படும் உத்திகளைச் சொல் தேர்வு எனவும், தொடர்நிலையில் அமையும் உத்திகளைத் தொடர்க்கட்டு எனவும் விளக்கிச் சொல்வார் ஜெ. நீதிவாணன்.
இக்கட்டுரையில் மொழிநடையின் மூன்று நிலைகளில் முதல் நிலையாகக் கருதப்படும் ஒலிநிலை மட்டும் கட்டுரைக்கான பொருண்மையாக அமைகிறது. ஒலிநிலை என்பது எதுகை, மோனை, முரண், இயைபு, சந்தநயம் போன்றவற்றை ஆராய்வது ஒலிநிலையாகும்.
எதுகை, மோனை நயம்
அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை, அடிதொறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும் என்கிறது தொல்காப்பியம்.
எ.கா.
1. கரைவேட்டி
கட்டாத கழகங்கள் - தினமலர்
2. தமிழர் பகுதியில் இடைக்கால அரசு
தடைபோடுகிறார் இலங்கை அதிபர் - தினகரன்
3. போக்குவரத்து தொழிற்சங்க
போராட்டக்குழு உண்ணாவிரதம் - காலைக்கதிர்.
எதுகை
“அஃதொழித் தொன்றின் எதுகையாகும்”
தொல்காப்பியர் கூறிய படி அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.
எ.கா.
1. அன்று பிறந்தால் புகழ்
இன்று பிறந்தால் மரணம் - தினமலர்
2. மண்ணாசி அருகே
மின்சாரம் தாக்கி 2பேர் பலி - காலைக்கதிர்
இயைபுத்தொடை
“இதுவாய் ஒப்பினஃதிலையென மொழிப”
எ.கா.
1.சேலம் பகுதியில் ரூ30லட்சம்
கைத்தறி சேலைகள் தேக்கம் - தினமலர்
2. சைதை தொகுதியில் பொதுக்கூட்டம்
டாக்டர். ராமதாஸ் இன்று பிரச்சாரம் - காலைக்கதிர்
முடிவுரை
பொருளைப் புலப்படுத்துவதுடன் வேட்பமொழியும் சொல்லாகச் சொற்கோப்பு கலை விளக்குவதால் அதனைத் தமிழில் புலப்பாட்டு நெறி என்று அழைக்கின்றனர். சொல்தேர்வு, தொடர்தேர்வு, எழுத்துத்தேர்வு ஆகிய மூன்றும் பத்திரிகை நடையாகும். எதுகை,மோனை, இயைபு போன்ற இலக்கிய நடைகளை இன்றைய பத்திரிகை நடையில் நாம் அதிக அளவு காணமுடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. வரதராசனார்.மு. திருக்குறள் தெளிவுரை ப.133
2. தெட்சணாமூர்த்தி.பி.,முனைவர், புலப்பாட்டுநெறி ப.5
3. தொல்காப்பியம் எழுத்து நூற்.397
4. மேலது நூற்.398
5. மேலது நூற்.401
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.