சங்க இலக்கியங்களில் மருதம் முல்லை நிலங்களில் வாழ்ந்தவர்கள் ‘கழனி உழவர்’ (குறுந்தொகை-155), ‘கொல்லை உழவர் (அகநானூறு-194,314) என அழைக்கப்பட்டனர். இவர்கள் ‘ஏரின் வாழ்நர்’ (புறம்-33,375) என்று குறிப்பிடுவதைப் புறப்பாடல் மூலம் அறியமுடிகின்றது. தொல்காப்பியம் இவர்களை வேளாண்மாந்தர் என்றும், உழுதுண்டு வாழ்பவர் என்றும், அரசனைப் போல் படைவகை உடையவர்களாகக் குறிப்பிடுகின்றது. (தொல் 3:9, 77,80, 81,) எனவே, வேளாண்குடியினர் நாட்டின் தலைமைச் சிறப்பு பெற்ற உயர்குடியினருள் ஒருவராக விளங்கினர் எனலாம்.
சங்க காலத்திற்குப் பின்னர் தமிழகத்தில் காணப்படும் பெரும்பாலான பகுதிகளில் வேளாண் சமூக ஊர்களாகவே காணப்படுகின்றன. இவற்றைக் கல்வெட்டுகள் மூலம் காணலாம். நாட்டை ஆளும் பிரதிநிதிகள் என்ற பொருளிலும், உடையான் என்பது நிலவுடைமையாளர்கள் என்ற பொருளாலும் குறிக்கப்பிடப் பட்டுள்ளனர். (1) இடைக்காலத்தில் கிடைக்ககூடிய கல்வெட்டுகளில் இவர்கள் ‘வேளாண்’ என்றே அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்தணர்களுக்கு அடுத்த நிலையில் அதிக அளவில் இடம் பெற்றுள்ள வேளாளர்கள் அரசு நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகித்தவர்களாகக் காணப்படுகின்றனர். வேளாளர்களுக்கு ‘மூவேந்த வேளான்’ என்ற சிறப்பு பெயரும் தரப்பட்டுள்ளது. திருமந்திர ஓலைகளுள் ஒருவராகச் சரணாலய மூவேந்த வேளாரும், முதல் ராஜராஜர் முதல் ராஜேந்திரன் வரை திருமந்திர ஒலை நாயகங்களாக மதுராந்தக மூவேந்த வேளாரும் பணிபுரிந்துள்ளனர். புரவு வரி திணைக்களத்தைச் சேர்ந்தவர்களுள் பெரும்பாலோர் வேளார்களே என்பது இங்கு அறியத்தக்கதாகும். வேளாளர்கள் தங்கள் நிலவுடமை இருந்த ஊர்களின் பெயரை ‘உடமை’ என்ற சொல்லுடன் இணைந்து உடையான், என்னும் பின்னொட்டாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் ராஜராஜனின் பொ.ஆ 1009 முதல் பொ.ஆ 1010 வரை உள்ள காலக்கட்டத்தில் குலகுடி வேளான், (2) மூவேந்தவேளான், (3) பராந்தக மூவேந்த வேளான், (4) மூவேந்தவேளான், இருமடிசோழன் வளவன், (5) பராகிரமசோழ மூவேந்தவேளான், செம்பியன் மூவேந்தவேளான், (6) ஆகிய வேளளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. முதலாம் ராஜேந்திரன் பொ.ஆ 1013, வில்லவன் மூவேந்தவேளான், பிராந்தகன் மூவேந்தவேளான் ஆகியோர்பணியாற்றிள்ளனர். (7) முதலாம் குலோத்துங்கனின் பொ.ஆ b1091 திருமந்திரஒலைநாயகமாக மூவேந்தவேளான்,8 விக்ரமசோழனின் (பொ.ஆ1121) மூவேந்தவேளான், (9) இரண்டாம் ராஜாதிராஜன் (பொ.ஆ1163) காலத்தில் ராஜேந்திர சிங்க மூவேந்தவேளான், (10) மூன்றாம் குலோத்துங்கனின் பொ.ஆ 1180 முருகான்ந்த வேளான், (11) மூன்றாம் ராஜராஜனின் பொ.ஆ1216, அரிந்தவன் மூவேந்தவேளான், (12) ஆகியோர் பெயர்கள் நிர்வாகத்தில் பதவி வகித்தைக் குறிப்பிடுகின்றன. காலம் கணிக்க இயலாத கல்வெட்டுகளில் சிலவற்றில் அம்பல மூவேந்தவேளான், (13) வாணவன் மூவேந்தவேளான் (14) மற்றும் வேளாண் என்ற பின்னொட்டுடன் கொண்டப் பெயரிலர் நிர்வாகத்தில் பதவி வகித்ததைக் குறிப்பிடுகின்றது.
வேளாண் சமூகக் கொடை பற்றி தெரிவிக்கும் 7 கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. முதலாம் பராந்தகனின் (பொ.ஆ 923) காலத்தில் திருபுறம்புயம் இறைவனுக்கு ஊரன் நிலையன் நொந்தா விளக்கெரிக்க ஆடு கொடையளித்தைக் குறிப்பிடுகின்றது. (15) உத்தமசோழன் பொ.ஆ 963 பெருங்குடிகிழான் பாலாசிரியன் நக்கன் அமராபிதன் நொந்தா விளக்கிற்க்கு 90 ஆடு கொடை அளித்ததைக் குறிப்பிடுகிறது. (16) உத்தமசோழன் பொ.ஆ983 மணர்குடிநாட்டு மணர்குடையான் செட்டி பெருமான் நொந்தா விளக்கிற்குக் கொடையளித்துள்ளார். (17) முதலாம் ராஜராஜன் பொ.ஆ993 பயன்படாத நிலத்தை விற்று நொந்தா விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளார். (18) முதலாம் ராஜராஜன் பொ.ஆ1010 குலகுடி வேளான் சுந்தரன் தும்பைப் பூவிற்குக் காசு கொடையளித்துள்ளார். (19) முதலாம் ராஜேந்திரனின் பொ.ஆ1028 வேளநாட்டு நெற்குப்பை உடையான் வெண்காடன் குடிதாங்கி தேவர் பண்டாரத்தில் காசு 50 கொடுத்துள்ளார். (20) முதலாம் குலோத்துங்கனின் பொ.ஆ1121 கைலாசநாதருக்கு அரையன் அழகுடையான் 1 1\2வேலி நிலம் அளித்தைக்குறிப்பிடுகின்றது.159 மூன்றாம் குலோத்துங்கனின் பொ.ஆ1199காலத்தில் பிரம்மபுரிஸ்வரருக்கு களத்தூர் உடையார் , திருவெண்காடுடையார் ஆகியஇருவரும் 12 வேலி நிலம் கொடையளித்துள்ளனர். ஆற்றுபாக்க முடையான், திருவெண்காடு தேவன் சிவபுரமுடையார், ஆரா அமுதன், கையெழுத்துட்டுள்ளனர். (21) மூன்றாம் ராஜராஜனின் பொ.ஆ1222காலத்தில் கைலாசநாதருக்கு நெடுவாயிலுடையான் இறைவனுக்கு ஆபரணங்களையும் , வெள்ளிப் பாத்திரங்களையும் அளித்துள்ளார். (22) வேளாண் சமூகத்தினர் பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தமையை மேற்சுட்டிய கல்வெட்டுச் செய்திகள் வாயிலாக அறியலாம்.
அடிக்குறிப்புகள்
1. கே.எ. நீலகண்ட சாஸ்திரி, சோழர்கள், தொகுதி. 1, 1989, ப.62
2. இ.க.ஆ., 1927-336
3. கு.வ.க., 1979-16, தெ .இ.க. தொகுதி. , 8-217
4. கு.வ.க.,1979-17,
5. தெ .இ.க. தொகுதி. , 32-71
6. தெ .இ.க. தொகுதி. , 8-222
7. வரலாறு 17-2
8. வரலாறு 17-1
9. இ.க.ஆ., 1917-307
10. குடவாயில் பாலசுப்புரமணியன், இராஜராஜேஸ்வரம் குடவா.க-15
11. இ.க.ஆ., 1927-317
12. கு.வ.க.,1979-5
13. தெ .இ.க. தொகுதி. , 6-34
14. இ.க.ஆ., 1927-327
15. தெ .இ.க. தொகுதி. , 6-30
16. கு.வ.க.,1979-4
17. இ.க.ஆ., 1927-317
18. தெ .இ.க. தொகுதி. , 8-222 மற்றும் 223
19. வரலாறு17-1
20. இ.க.ஆ., 1927-303
21. வரலாறு22-2
22. இ.க.ஆ., 1927-316