தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
87.பாரதியார் கவிதைகளில் அறிவியல் சிந்தனைகள்
முனைவர் சி. யசோதா
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி - 624601.
முன்னுரை
பாரதியார், கவிதையைத் தொழிலாக்கிக் கொண்டு, அந்தத் தொழிலையும் இந்நாட்டு மக்களுக்காகச் செய்தவர். தமிழ்ச் சமுதாயத்திலும் இலக்கிய உலகிலும் ஒரு புரட்சி யுகத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருமை பாரதிக்கு உண்டு. பாரதியின் கவிதைகள் அனைத்தும் மனித முயற்சியை வளர்ப்பவை. மாற்றங்களை வரவேற்பவை. அவ்வடிப்படையிலான அவருடைய கவிதைகளில் பொதிந்துள்ள அறிவியல் சிந்தனைகளைச் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அறிவியல் சிந்தனை
அறிவு என்ற சொல்லுக்கு ஞானம், உணர்வு, போதனை எனப் பொருள் தருகிறது கழகத்தமிழகராதி. (1) தனி மனிதனின் உரிமை, உணர்வு பற்றிய எண்ணங்கள், சமுதாய நீதி பற்றிய தத்துவங்கள், சமவாய்ப்பு, சமத்துவம் போன்ற சிந்தனைகள் உருவாகவும், வளரவும் உறுதுணையாக நிற்பது அறிவியல் அணுகுமுறையே என்பார் வா.செ.குழந்தைசாமி. (2) பாரதியின் கவிதைகள் அனைத்தும் அறிவியல் அடிப்படையில் வளர்ந்தவை என்பதில் ஐயமில்லை.
பாரதியின் அறிவியல் சிந்தனைகள்
‘வானநூற் பயிற்சிகொள்’ (3)
‘லோகநூல் கற்றுணர்’ (4)
என்று புதிய ஆத்திச்சூடி படைத்த பாரதியின் கவிதைகளுக்குள் அறிவியலைத் தேடவேண்டிய கட்டாயமில்லை. அவருடைய கவிதைகள் அனைத்திலுமே அறிவியல் சிந்தனை இழையோடுகிறது. இயற்கையைப் பாடும் கவிஞர் மழை தோன்றும் அறிவியல் முறையை அழகாக வசனக் கவிதையாக்குகிறார். (5) தொழில், பொருளாதாரம், கல்வி, மொழி (மொழிபெயர்ப்புச் சிந்தனை) அனைத்திலும் பாரதியின் பரந்துபட்ட அறிவு வியக்கத்தக்கது.
“வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் எங்கும் பலப்பல பள்ளி
தேடுகல்வி இலாததோர் ஊரைத்
தீயினுக் கிரையாக மடுத்தல்” (6)
என்ற பாடல் வரிகள் அவரின் அறிவியல் அணுகுமுறைக்குச் சிறு சான்று.
உயிர்கள் பற்றிய சிந்தனை
உயிர்கள் தோன்றி வளர்ந்த முறைகள் பற்றியும் பரிணாமம் பற்றியும் டார்வின் போன்ற அறிவியலார் ஆராய்ந்தனர். தொல்காப்பியர் (7), நன்னூலார் (8) போன்றோரும் உலக உயிர்களை நாம் பேணிப் போற்றுவோம் என்பதை,
“மஹத் - அதனினும் பெரிய மஹத் - அதனினும் பெரிது - அதனினும் பெரிது -
அணு - அதனினும் சிறிய அணு - அதனினும் சிறிது
இரு வழியிலும் முடிவில்லை. இருபுறத்திலும் அநந்தம்
புலவர்களே,
காலையில் எழுந்தவுடன் உயிர்களையெல்லாம் போற்றுவோம்” (9)
என்று ஆழமாக விளக்குகிறார்.
இலக்கியப் புதுமை
எளிய நடை, புதிய பாவினங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கவிதை புனைந்த பாரதி தன்வழி நடக்கும் ஒரு புதிய பரம்பரையைத் தோற்றுவித்தார். பழைமைத்தளையை உடைத்துப் புதிய தலைமுறை வீறுடன் எழுந்தது.
ரஷ்யப்புரட்சியின் உந்துசக்தியாக இருந்த புரட்சி எழுத்தாளர் மாக்சிம்கார்க்கி ‘இலக்கியம்’ என்பதற்கு விளக்கம் தரும் போது, “புத்தகம் என்கிற முப்பட்டைக் கண்ணாடியின் மூலம் வாழ்க்கையின் உண்மை நிலையைக் காணவேண்டும்” என்று குறிப்பிட்டார். கலை, இலக்கியம் குறித்துப் பாரதியின் போக்கும் இதற்கு மாறுபட்டதல்ல என்றே கூறலாம்.
பாரதியின் தொழில்நுட்பச் சிந்தனை
பிற நாடுகளும் சமுதாயங்களும் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகின்றன. நம் முன்னேற்றத்தை விரைவாக்கத் தொழில்நுட்பக் கல்வி, செயலாற்றல் பெருகிட வேண்டும் என்பதைத் தெளிவாக உணர்ந்த பாரதி,
“வானையளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” (10)
என்றும்,
“குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்
உலகத்தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்” (11)
என்றும் கூறி உழைப்பவர்க்கு உறுதுணையாய் நிற்கிறார். மேலும் தொழில், வேளாண்மை அனைத்திற்கும் அண்டை நாடுகiளைச் சார்ந்திராமல் நாம் விஞ்ஞான அறிவு பெற்று முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
முடிவுரை
பாரதியின் தேசியப்பார்வை, சமயம், சமுதாயம், இலக்கியம் போன்ற பல நோக்கங்களிலும் பரவி நிற்பது அறிவியல் சிந்தனையே. வரலாறு தெரிந்த நாள் முதலாக, மனித சமுதாயத்தின் வளர்ச்சியை ஆராய்ந்தால் அறிவியலின் ஆற்றல் நமக்கு விளங்கும். அதை உணரச் செய்த முக்கியமான பங்கு பாரதியைச் சாரும். எனவேதான் வைரமுத்து,
“நீதான் தெய்வப்பற்றை முதலில்
தேசப்பற்றாக்கியவன்
புராணத்தை முதலில்
சரித்திரத்தோடு சம்பந்தப்படுத்தியவன்”
என்று ‘கவிராஜன் கதை’ என்ற புத்தகத்தில் புகழ்கிறார்.
திருமதி கவிக்குயில் சரோஜினிநாயுடு பாரதியைப் பற்றிக் குறிப்பிடும்போது, “Poet Bharathi has fulfilled the true mission of a poet” என்று குறிப்பிடுகிறார். அவர்கள் வழியில் நாமும் பாரதியின் அறிவியல் அறிவையும் கவியுள்ளத்தையும் நினைந்து போற்றுவோமாக.
அடிக்குறிப்புகள்
1. எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை(ப.ஆ.), கழகத் தமிழகராதி, ப.29.
2. வா. செ. குழந்தைசாமி, அறிவியல்தமிழ், ப.72.
3. பாரதியார் புதிய ஆத்திச்சூடி, 104.
4. மேலது, 101.
5. பாரதியார் கவிதைகள், வசன கவிதை, தலைப்பு: கடல் - 2.
6. பாரதியார் கவிதைகள், தெய்வப் பாடல்கள், தலைப்பு: வெள்ளைத் தாமரை.
7. தமிழண்ணல் (உ.ஆ.), தொல்காப்பியம், நூ.எண் : 1526-1532.
8. புலவர் கோ. வில்வபதி (உ.ஆ.), நன்னூல், நூ.எண் : 444-449.
9. பாரதியார் கவிதைகள், வசன கவிதை, தலைப்பு: காற்று.
10. பாரதியார் கவிதைகள், தலைப்பு: பாரததேசம்.
11. மேலது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.