தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
88.இலக்கிய சிந்தனையில் பெண்ணின் பெருமைகள்
முனைவர் வ. சு. யசோதா
கருமாண்டம்பாளையம், மலையம்பாளையம், ஈரோடு - 638 154
முன்னுரை
பழந்தமிழ் இலக்கியங்களில் பெண்களின் வாழ்க்கை முறையாகிய காதல், கற்பு, கொடை, வீரம், பிரிவு, ஒழுக்கம் போன்ற பல்வேறு பழக்கவழக்கங்கள் காணப்படுகின்றன. சங்ககால இலக்கியங்களில் தமிழ்ப்பெண்களின் அகவாழ்க்கை முறைகள் குறித்துச் சங்கப் புலவர்கள் சுவையுடன் தங்கள் இலக்கியங்களில் எழுதியுள்ளனர். இவ்விலக்கியப் பெண்களின் வாழ்வியல் முறைகளைக் குறித்து ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம்.
காதல்
தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் ஒருவரோடு ஒருவர் அன்பு கொள்ளுதலே காதல் ஆகும். தொல்காப்பியரும் தன்னுடைய நூலான தொல்காப்பியத்தில் களவு என்னும் இயலில் காதல் வாழ்க்கையைக் குறித்து வருணித்துள்ளார். பிறர் அறியாமல் ஒருவரோடு ஒருவர் காதல் கொள்ளுதலைக் களவுக்குறி என தொல்காப்பியர் வருணித்துள்ளார்.
புன்னைமரக் காதல்
ஏழு வயது பெண் ஒருத்தி, கடற்கரை மணலில் புன்னைக் காயைக் கொண்டு, மறைத்து விளையாடும் கீச்சுக்கீச்சு தாம்பலம் என்னும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தாள். மழை வந்து விட்டது. ஒரு வாரமாக மழை. வெளியில் செல்லவில்லை. ஒரு வாரம் கழித்துக் கடற்கரைக்குச் சென்றவள், தான் வைத்து விளையாடிய புன்னை விதை முளைத்துவிட்டதைக் கண்டு மகிழ்ந்து வீட்டின் பின் தோட்டத்தில் வளர்த்தாள். அது வளர்ந்தது. தானும் வளர்ந்தாள். திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் பெற்றாள். அப்பெண் குழந்தையிடம் தான் வளர்த்த புன்னை மரமே முதல் குழந்தை எனவும், உனது அக்கா எனவும் சொல்லி வைத்தாள். அக்குழந்தை பெரியவளாகிக் காதலனுடன் பேச நாணுகிறாள். இதை நற்றிணையில்,
”விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முனை அகைய”
என்னும் பாடல் விளக்குகிறது.
காதல் ஆழம்
தலைவி தலைவனிடம் கொண்டுள்ள காதலைச் சொல்லுகிறாள். அவனிடம் இவள் கொண்டுள்ள காதல் நிலத்தைக் காட்டிலும் உயர்ந்தது. கடலின் ஆழத்தைக் காட்டிலும் ஆழமானது என்பதைக் குறுந்தொகையில்,
”நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று”
என்னும் பாடல் வரிகள் விளங்குகிறது.
இரவுக்குறி விலக்கல்
தலைவனை விரைவில் மணந்து கொள்ள வேண்டும் என்று கருதி, இரவுக்குறியை விலக்குகிறாள் தோழி. ஊரில் மிகுதியான பேச்சும் தலைவன் தலைவி பற்றி என்பது அவளுடைய கருத்தாகும்.
அகவாழ்க்கை முறை
களவுக்காலம் முடிந்தவுடன் கற்புக்காலம் தோன்றுகிறது. திருமணமானவுடன் கற்பு தொடங்குகிறது. பழங்காலத்தில் திருமண நிகழ்ச்சிகள் குறைவு, பொய், குற்றங்கள் பெருகிய பின்பு திருமண நிகழ்ச்சி தேவைப்பட்டது. அதனால் மணம் செய்து கொண்டனர். திருமணமான பின்பு கணவன் மனைவியாக வாழ்கின்ற அகவாழ்க்கை முறையாகும்.
தாயின் துயரம்
தலைவன் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டான், தேடிச் செல்கிறாள் வளர்த்த தாயாகிய செவிலி. இடைவழியில் வந்தவரிடம் ஓர் ஆண்மகனைப் பார்த்தீர்களா? என்று கேட்கிறாள். தலைவனையும் தலைவியையும் கண்டோர் வாழ்க்கைப் பற்றித் தெளிவுப்படுத்துகின்றனர். சந்தனம் மலையில் பிறக்கிறது. அது மலைக்குப் பயன்படுவதில்லை. சந்தனத்தை அரைத்துப் பூசுபவர்களுக்கே பயன்படுகிறது. முத்து அணிபவருக்கே பயன்படுகிறது. அதுபோன்று உம் மகள் உம்மிடம் தோன்றினாலும் உமக்குப் பயன்படாள், தலைவனுக்கேப் பயன்படுவாள் என்று கூறிப் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தெளிவுபடுத்துகின்றனர்.
தலைவனின் பரிவு
தலைவனைப் பிரிந்த தலைவியும் வாடைக் காற்றால் துன்புறுகிறாள். தலைவிக்குத் தலைவனைப் பிரிந்து இருக்கும் சிறுபொழுதுகூடப் பெரும்பொழுதாக, நீண்டபொழுதாகத் தோன்றுகிறது.
விரிச்சி கேட்டல்
தலைவி, தலைவனுக்காக அவன் கூறிச் சென்ற காலம் கடந்த பின்பும் பொறுமையுடன் இருக்கிறாள். தலைவன் வரும் வரை ஆற்றியிருக்கும் தலைவி, அவன் சொன்ன கார்காலம் வந்ததும் அவன் வராததால் துன்புறுகிறாள். பெருமுது பெண்டிர் அவளை ஆற்றியிருக்கச் செய்ய முயல்கின்றனர். தலைவன் எப்போது வருவான் என்பதனை விரிச்சி கேட்டு (சகுனம் பார்த்து) கூறுகின்றனர்.
மணிமேகலையின் கொடை
மணிமேகலை என்னும் நூலை எழுதியவர் சீத்தலைச் சாத்தனார். இவர் மாதவிக்கும், கோவலனுக்கும் பிறந்த மணிமேகலையின் கொடைப் பண்பை கூறுகிறார். மணிமேகலை ஒரு முறை மணிபல்லவத் தீவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறாள். அங்கு எடுக்க எடுக்கக் குறையாத உணவைத் தரும் தெய்வீகத் தன்மை பொருந்திய அமுதசுரபி என்ற பாத்திரத்தை பெற்றுக் கொள்கிறாள்.
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற நிலையில் கூன், குருடு, ஊமை, செவிடு, நோயாளிகள் போன்றவர்க்கும் திக்கற்றவர்களுக்கும் தன் அமுதசுரபியால் பசிப்பிணியைப் போக்குகிறாள்.
ஒழுக்கமுடைய பெண்கள்
மணிமேகலை தன் தாயார் மாதவியின் மணவாழ்க்கையை நினைத்துக் கசப்புற்றுத் தன்னை காதலிக்கும் உதயகுமாரனின் காதலை ஏற்காமல், வேறு எந்த ஆடவனையும் மணமுடிக்காமல் தன் மனதை எவ்விதத்திலும் திசை திருப்பாமல் ஒழுக்கமுள்ள பெண்ணாக வாழ்கின்றாள்.
மணிமேகலையின் தாய் மாதவியும், கண்ணகியின் கணவனான கோவலனை மணமுடித்தாலும் தன்னுடைய குலத்தொழிலான பரத்தையர் தொழிலை விட்டுத் தன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் கோவலனையே கணவனாக நினைத்து வாழ்கிறாள். கோவலனின் மனைவியான கண்ணகியும் கற்புக்கு அரசியாகத் திகழ்கின்றாள்.
வீரம்
நம்முடைய தமிழர் பண்பாட்டில் பெண்கள் வீரமுடைய பெண்களாகக் காணப்படுகின்றனர். நம்முடைய தமிழ் இலக்கியங்களிலும் வீரமுள்ள பெண்களை நாம் பார்க்கிறோம்.
பத்திரை
பத்திரை என்ற வணிக மகள் காளன் என்ற கள்வனை நேசிக்கிறாள். சிறையிலிருந்து தன் தந்தை உதவியால் மீட்டு அவனை மணந்து கொள்கிறாள். ஊடலின் போது பத்திரை சினத்தால் தன் கணவனை 'கள்வன் தானே' என்று கூறுகிறாள். சினமடைந்த காளன் அவளை மலையுச்சிக்கு அழைத்துச் சென்று கொல்ல முயல்கிறாள். மலையுச்சி சென்றவுடன் உண்மையை உணர்ந்த பத்திரை, இறுதியில் கணவனை வலம் வந்து வணங்க அனுமதி பெற்று, காளனைத் தான் வலம் வரும்போது தள்ளிக் கொன்று விடுகிறாள். இது பெண்ணின் வீரத்தைக் காட்டுகிறது.
போர்க்களம்
போர்க்களத்தில் ஒரு வீரமகள் செல்கிறாள். அவள் கணவன் களத்தில் மார்பில் புண்பட்டு மடிகிறான். அவன் மண்ணில் விழுமுன் தான் தாங்கிக் கொள்கிறாள். மண்ணில் வீழந்தால் மண்மகளோடு அவன் சேர்ந்து விடுவானாம். பின்பு அவன் உயிர் போய் மேலுலகம் சென்று இவனுக்காகக் காத்திருக்கிறாள்.
தொகுப்புரை
சங்க இலக்கியங்கள் பெண்களின் வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. சங்க நூல்களை எழுதிய புலவர்கள் பெண்களின் அகவாழ்வையும், புறவாழ்வையும் குறித்து எழுதியுள்ளனர். இதில் வீரம், காதல், கொடை, கற்பு போன்ற பண்புகள் எடுத்தாளப்படுகின்றன. தலைவனின் பிரிவு, ஏக்கம், ஊடல் போன்ற பெண்களின் மன உணர்வுகளை வெளிப்படையாக காட்டுகின்றது. இச்சங்ககால இலக்கியங்கள் விரிச்சி கேட்டு நிற்றல் போன்ற தமிழருடைய பழக்கவழக்கங்களையும் எடுத்தியம்புகின்றது.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|