நம் பெரியோர் சொல்வதுபோல் உன்னிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ அது போல நீ அடுத்தவரிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் பண்பாடாகும்.
நம் முன்னோர்கள் கூறிய நெறிமுறைகளையும் ஒழுக்காறுகளையும் பின்பற்றி வாழ்வதே பண்பாடு.
தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரீகத்திலும் சிறந்திருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது. சங்கத் தமிழரின் நாகரீகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், வாழ்க்கைமுறை எனத் தமிழர் பண்பாடு விரிந்து கொண்டே செல்கிறது.
வீரம்
பண்டையத்தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்புமுறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாப்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. தொல்காப்பியத்தில் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை என்ற நான்கு புறத்திணைனளிலும் தமிழர்களின் போர்முறைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புண்பட்டார். முதியோர், இளையோர் இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பது புறநானூற்றால் அறிய முடிகிறது.
காதல்
தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூய காதல் வாழ்க்கையாகும். இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள் அறிவும், செல்வமும் உடைய நல்ல குலத்தில் பிறந்தவர்கள். இக்காதலில் தலைவன், தலைவி, நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வெளிப்பாடாக அமையும்.
“மங்கலம் என்பமனைசாட்டிமற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”
என்று வள்ளுவரும் காதல் வழிவந்த மனைமாட்சியைச் சிறப்பிக்கின்றார்.
நட்பு
சங்கத் தமிழர் நட்பினைப் பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.
“முகம்நகநட்பதுநட்பன்றுநெஞ்சத்து
அகநகநட்பதுநட்பு”
அதாவது உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.
இலக்கண, இலக்கிய, அமைதி அறியாத ஒரு கிராமத்துத் தாயின் சிந்தனையில் தமிழரின் பண்பாடு எவ்வாறெல்லாம் உறைந்து கிடக்கின்றது. மேலும் தாலாட்டு என்பது தமிழ்ப் பண்பாட்டின் முதற்பாட்டு. தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவமே தாலாட்டாகும். இத்தகைய தாலாட்டில் தான் பண்பாட்டு வெளிக் கொணரப்படுகிறது.
இயற்கை வளம்
தமிழன் வாழ்ந்த இடம் நிலவளமும், நீர்வளமும் நிறைந்தது. இதனை ஒரு தாய் புதிதாய்ப் பிறந்ததன் குழந்தைக்குப் பாட்டாகச் சொல்லி மகிழ்ச்சி அடைவாள்.
“மாடுகட்டிச் சூடடித்தால் என்னரசேமாளாதுகதிர்களென்று
குதிரைகட்டிச் சூடடித்துஎன்னரசே கூளம் புரளுமென்று
ஆணைகட்டிச் சூடடித்துஎன்னரசேஉங்கஐயாஅம்பாரிநெல்சேர்த்து”
என்று வரும் பாடல்கள் மூலம் நம் நாட்டின் செல்வச் செழிப்பினை உணரலாம்.
உறவுமுறை
தமிழர் ஒவ்வொரும் உறவுகளால் பிணிக்கப்பட்டவர். அன்பினால் அடிமைப்பட்டவர். தமிழ்ப் பெண்கள் பிறந்த வீட்டின் பெருமை பேசுவதிலும், புகுந்த வீட்டில் குணங்களைக் குத்தலாய்ச் சாடைப் பேசுவதிலும் வல்லவர்கள்.
“அத்தை அடிச்சாளோஅரளிப்பூச் செண்டாலே
மாமன் அடிச்சாளோ மல்லிகைப்பூச் செண்டாலே
பாட்டி அடிச்சாளோ பால்வார்க்கும் சங்காலே”
என்ற தாலாட்டுப் பாடலில் கணவனின் சகோதரிக்குத் தீங்கு விளைவிக்கும் அரளிப்பூவையும், தன் சகோதரனைக் கூறும்போது மல்லிகைப் பூவைக் கூறுவதன் மூலம் இப்பாடலில் தாயின் உள்மனதை நாம் அறியலாம். இதன்படியே உறவுமுறை பண்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பல்லுயிர் ஓம்பல்
தமிழன் பல உயிர்கள் மீது அன்பு வைத்துள்ளான். என்பதனை வள்ளுவர்,
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”
என்று கூறுகிறார். இதனைத் தாலாட்டு மூலம் ஒரு தாய்,
“காட்டில் கிணறுவெட்டி கல்லால் தொட்டிகெட்டி
மாடு பசி தீர்த்து வைக்கும் மகராசா எங்க அம்மான்”
என்றும்,
“மாடப் புறாவே நீமழைக்கெல்லாம் எங்கிருந்தாய்”
என்று பாடுகின்ற பாடல் வரிகள் பல்லுயிர் ஓம்புதலை உணர்த்தித் தமிழன் பண்பாட்டைப் பறைசாற்றுகிறது.
விருந்தோம்பல்
விருந்து என்ற சொல்லுக்கு ‘புதுமை”என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லதவராய் புதியவராக நம்மிடம் வரும் மக்களை “விருந்து” என்றனர் தமிழர். வரும் விருந்தினர்களை வரவழைத்து உபசரிப்பதில் தமிழனுக்கு நிகர் வேறு எவரும் இலர் எனலாம். ஒருநாள் என்ன, இரண்டுநாள் என்ன, பலநாள் பலரோடு வந்தால் தலைநாள் போல் உபசரிக்கும் பண்பு பண்டைத் தமிழனுக்கு உண்டு என்பார் ஔவையார். வள்ளுவரும்,
“செல்விருந்து ஓம்பிவருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”
என்கிறார்.
இதனையே ஒரு தாய் தன் தாலாட்டில் எப்படி உபசரிக்கிறாள் தெரியுமா?
“வாழையிலை நறுக்கு வந்தாரை கையமர்த்தி
தேடி விருந்தழைக்கும் திசையுள்ளோர் நாம்”
என்பதனை வழி விருந்தோம்பல் பண்பாட்டினை உணரலாம்.
ஒருவனுக்கு ஒருத்தி
ஆண்கள் முறைப்படி ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு முறையற்றுப் பல பெண்களை வைப்பாட்டியாக வைத்துள்ளனர். இவ்வழக்கு அக்காலத்தில் பரத்தன்மையாக இருந்தது. தலைவன் பரத்தையிடம் சென்றதனை வெறுத்த தலைவி புதல்வனையும் அவ்வழியே செல்க எனக் கடிந்துரைந்துரைக்கின்றாள்.
“தாயார் கண்ணியநல்லணிப் புதல்வனை
மாயப் பரத்தைஉள்ளியவழியும்”
என்பது தொல்காப்பியம். இக்கருத்தினைத் தாலாட்டு வெளிப்படையாக,
“வேசிக்குக் கொடுத்த பணம், உங்களப்பா
ஒரு வெள்ளி மடம் கட்டலாமே
தாசிக்குக் கொடுத்த பணம் உங்களப்பா
ஒரு தங்க மடம் கட்டலாமே”
என்று தலைவன் தன் குடும்பத்தை விடுத்துக் கூத்திக்குச் செலவு செய்த மனக்குமுறலை இப்பாடல் காட்டுகிறது. இந்நிலை ஆராயுங்கால், தமிழ்ப்பண்பாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது புரட்டாகத் தெரிகிறது.
இவ்வாறுபண்பாட்டின் கூறுகள் மூலமும், தாலாட்டுப் பாடல்கள் காட்டும் பண்பாடுகளும் ஏரளமாகஉள்ளன.
எந்த ஒரு பண்பாடும் ஆதிகாலம் தொட்டே ஒரே மாதிரியாக இருந்ததில்லையே. காலப்போக்கில் மற்ற நாட்டின் பண்பாடுகளிலிருந்து நமக்கு நிறைய பண்பாட்டுஅம்சங்கள் வந்து உள்ளனவே? நம் பண்பாட்டில் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் எங்கு இருந்து வந்தது? நம் சங்க இலக்கியங்களில் உள்ள திருமணம் பற்றிய பாடல்களில் தாலி பற்றிய குறிப்பு இல்லையே? பெண்கள் ஒரு காலத்தில் மார்புக் கச்சை அணிந்து, பின்புசேலை கட்டினர். இப்போது பெண்கள் வேறு விதமான ஆடைகளை அணிந்து கொள்கின்றனர். சேலை இன்னும் மறைந்து விடவில்லை. ஆண்கள் வேட்டியில் இருந்து வேறு உடைக்கு மாறி விட்டனர். ஆனால், வேட்டியும் பஞ்சகச்சமும் அழிந்து விடவில்லை. நமது ஆடைப் பண்பாடு அழிந்து அழகாக இருக்கின்றது என எண்ணுகிறேன். இஸ்லாமியர்களிடம் இருந்து பிரியாணி, வெள்ளைக்காரனிடம் இருந்து ரொட்டி என நமது உணவுப் பண்பாட்டில் புகுந்தாலும், இன்னும் பொங்கல், இட்லியை நாம் மறக்கவில்லை. இங்குள்ள தமிழர்கள் தங்கள் பண்பாட்டு அம்சங்களில் சிலவற்றை மறந்துவிட்டு இருக்கலாம். ஆனால், முக்கியமான சில இன்னும் உள்ளன. இன்னும் தாய்மார்கள் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டித்தான் விடுகிறார்கள். அத்தை மடி மெத்தையடி பாடி உறங்க வைக்கிறார்கள். இன்னும் பட்டுச்சேலையும் காசு மாலையும் அணிந்து கொள்கிறார்கள். பல இந்திய அமெரிக்கத் திருமணங்களில் தேவாலயத்தில் மாலை மாற்றி, தாலிக் கட்டி கல்யாணம் நடக்கின்றன.
பண்பாடு என்பது பெண்கள் அணியும் நகைகள், ஆடைகள் மட்டுமே சார்ந்து இருக்காமல் அதையும் தாண்டிப் பல்வேறு வகையில் நம் முன்னோர்கள் பண்பாட்டினைப் பேணிக் காத்துள்ளனர். தமிழரின் பண்பாட்டின் சிறப்பை அறிய விரும்பினால் தற்காலத்தில் நடைபெறும் விழாக்களே இதற்குத் தக்க சான்றாக அமையும். மேலும் என் தமிழ் மாந்தனின் பண்பாடு நாடகம், இலக்கியம் போனறவற்றுள் புதைந்து காணப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழி அடிப்படையில் காலத்திற்கு ஏற்றாற் போல பண்பாடு சிறந்து விளங்குகிறது.
என் தமிழ் மாந்தனின் பண்பாடு என்பது காலத்திற்கு ஏற்றாற் போல “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கு ஏற்பப் பல பண்பாட்டு மாறுதல்கள் வந்தாலும் அவை முறையான பண்பாடாக மட்டுமே உள்ளன. அவை பழைய பண்பாடுகளை மறைத்து விடும் வரையிலான பண்பாட்டினை என் தமிழ் மாந்தன் ஒதுக்கி விடுகின்றான் என்பதே எனது கருத்தும் இந்த ஆய்வுக் கட்டுரையின் மையநோக்கமாக இருக்கிறது.