தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
9. மு.வ. கரித்துண்டு நாவலில் சமூகச் சிந்தனைகள்
முனைவர் கோ. இரவிச்சந்திரன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த் துறை,
கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.
முன்னுரை
இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் கூடி வாழ்வதனையே சமுதாயம் என்பர். சமுதாயம் என்பது தனித்தனியே பிரிந்து கிடக்கும் தனிமனிதரின் கூட்டமன்று. அதில் மனிதர்களிடையே ஓர் ஒழுக்கமுடன் உறவு காணப்படும். இந்த உறவுகளின் அடிப்படையில் தான் குடும்பம், மதம், இனம் போன்றவை அமைகின்றன. அதனால் சமுதாயம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டம் எனலாம்.
சமுதாய நிகழ்வுகளை மையமிட்டுக் கதை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடம் பெறுபவர் மு.வ ஆவார். அவர்களின் எழுத்துக்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சி படிநிலைகளைப் பலவாறு உயர்த்தியதோடு சமூகத்திடம் பல்வேறு சீர்திருத்த மாற்றங்களை நிகழ்த்தியவர் என்பதனை அவரின் புதினங்கள் பறைசாற்றுகின்றன. அத்தகைய புதினங்களுள் ஒன்று கரித்துண்டு ஆகும். இவரது கரித்துண்டு புதினத்தில் சமூகச் சீர்திருத்த நிகழ்வுகளைப் பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அன்று முதல் இன்று வரை
விடுதலைக்கு முற்பட்ட காலத் தமிழ்ப் புதினங்களில் மிகுதியாகக் கையாளப்பட்ட பாடுபொருள்கள் எவை என்பதனை ஆராய்வது இன்றியமையாத ஒன்றாகும். பெரும்பாலும் வறுமை, தீண்டாமை, திருமணம், காதல், மூடநம்பிக்கை போன்ற பல நிகழ்வுகள் அக்காலக் கதைகளில் இடம் பெறுகின்றன.
மனித வாழ்வு என்பது எப்போதும் சிக்கல் நிறைந்தது. அச்சிக்கல்கள் அவன் வாழ்கின்ற நாள் முழுவதும் உயிரோடு இருக்கின்றன. மனிதன் மட்டுமே எப்பொழுதும் மாறிமாறி சிக்கல்களுக்கு ஆளாக்கப்படுகின்றான். அச்சிக்கல்களை வெளிப்படுத்தவே கதைகள் உருவாகின்றன.
“கதைகள் மனிதன் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், வாழ்க்கை என்பது வாழ்வின் பிரச்சனை, வளர்ச்சி என்பது வாழ்க்கையின் பிரச்சனை. எனது கதைகள் பொதுவாக பிரச்சனையின் பிரச்சனை” (1)
என்று ஜெயகாந்தன் கூறுவது நோக்கத்தக்கது.
பெரும்பாலும் வறுமை, இனக்கொடுமை, பெண்ணடிமை, மதுவிலக்கு, ஏழைப் பாகுபாடு, காதல், அன்பு, வெற்றி போன்ற பல செய்திகள் இக்காலத்தில் இடம் பெறுகின்றன. மு.வ கரித்துண்டு புதினத்தில் சமுதாயச் சிக்கல்கள் அடிப்படைப் பாடுபொருளாக அமைந்துள்ளன.
வறுமையின் கொடுமை
சமுதாயத்தில் காணப்படும் மிகப்பெரிய அவலம் வறுமை. பொருளாதார அடிப்படையில் வேறுபாடு மலிந்து போகவே உள்ளவன், இல்லாதவன் என்று மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டு அது தொடர்ந்து வருகிறது. இதனை,
“வறுமை இருக்கின்ற இடத்தில் மட்டுமல்ல, செல்வம் இருக்கும் இடத்தில் பலவிதமான பாவச்செயல்கள் நடைபெறுகின்றன” (2)
என்று அறிஞர் வினோபாவின் கருத்து போற்றத்தக்கது.
வறுமை வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமின்றி வளர்ந்த நாடுகளிலும் பலவகையான சமுதாயச் சிக்கல்களுக்குக் காரணமாக அமைகின்றது என்பதே குறிக்கத்தக்கது ஆகும்.
வறுமையின் கொடுமை பற்றி மு.வ. கரித்துண்டு புதினத்தில் முதன்மைப் பாத்திரங்களின் மூலமாகவும், துணைப்பாத்திரங்களின் வாயிலாகவும் விளக்கியுள்ளார்.
கரித்துண்டு புதினத்தில் வரும் திருவேங்கடமும், குமரேசனும் தெருவில் நடந்து கொண்டிருக்கும் பொழுது இரண்டு பெண்களைப் பார்க்கின்றனர். அதில் ஒரு பெண் குழந்தையைத் தெருவில் போட்டு அடிக்கின்றாள். அருகில் சென்று பார்த்த போது தான் அக்குழந்தை இறந்து கிடப்பதனை அறிகின்றனர் திருவேங்கடமும், குமரேசனும். பின்பு அப்பெண்கள் தெருவழியே செல்வோரைப் பார்த்து பிணத்தினை நாங்களே அடக்கம் செய்து கொள்கிறோம். ஏதாவது உங்கள் கையில் இருந்தால் போட்டுவிட்டுப் போங்கள் என்று அழுவதனைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர்.
ஒரு பெண்மை குழந்தை பெறுவதனால் தான் முழுமை அடைகிறது. பெற்ற குழந்தை இறந்தால் கூட அதற்காகக் கண்ணீர் வடிக்க வழியின்றி, இன்றையச் சூழலில் பெண்கள் அவதிப்படுகின்றனர் என்பதனைப் பாத்திரத்தின் வழியே ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
“வறுமையின் கொடுமையும், பணத்தின் பெருமையும் வளர்ந்து கொண்டே போனால், தங்கள் சொந்தக் குழந்தை செத்தாலும் இடுகாட்டுக்குக் கொண்டு போக மாட்டார்கள். பெற்றவர்களே அடுத்த வேளைக் கஞ்சி வேண்டுமே என்று நடுத்தெருவுக்கு கொண்டு வருவார்கள்” (3)
என்று வறுமையின் கொடுமையினை மிக அழகாகக் காட்டுகிறார் ஆசிரியர்.
ஈகைப்பண்பு
மு. வரதராசன் ஈகையைத் தலைச்சிறந்த பண்பாகப் போற்றுகிறார். பொருள் இருப்பவன் இல்லாதவனுக்கு உதவி செய்திட வேண்டும். அவர் சமுதாயத்தினை வாழ வைப்பன என்பது அவரின் நோக்கமாக இருந்திருக்கிறது.
சமுதாயத்தில் ஒருவர் துன்பப்படும் பொழுது மற்றவர் அதனைப் போக்க முன்வர வேண்டும். குறிப்பாக ஊனமுற்றோர்க்கு உதவுதல் மிகச்சிறந்த ஈகை ஆகும். மனிதனுக்கு மனிதன் உதவி செய்து கொள்ளும் உயர்ந்த எண்ணமே மனிதனின் சிறந்த பண்பாகும்.
கரித்துண்டு புதினத்தில் வரும் திருவேங்கடம் ஈகைப் பண்பு கொண்டவன். இவன் நீதிமன்றத்தில் எழுத்தாளராக பணிபுரிகிறான். தம்மிடம் உள்ள வருவாயைக் கொண்டு பிறருக்கு உதவி செய்கிறார். ஒருநாள் ஓவியனைக் காண்கிறார். அவரிடம் பணம் கொடுக்க, அதனை வாங்க ஓவியன் மறுத்துவிடுகிறார். அவர்க்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது,
“மணியார்டர் அனுப்பினாலும் வாங்கமாட்டாரே, இப்படிப்பட்டவருக்கு எப்படி உதவி செய்வது? பாரிமுனையில் ஓவியம் எழுதும் போது எல்லோரும் காசு போடும் போது நானும் போட வேண்டியது தான். வழி கொஞ்சம் பெரிய தொகையாகப் போட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்” (4)
என்று பாத்திரத்தின் ஈகைத்தன்மையை சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.
மேலும், இப்பாத்திரத்தின் வழியே ஊனமுற்றோர்க்கு உதவ வேண்டும் என்ற மனப் பாங்கினைச் சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை முன்வைக்கிறார் ஆசிரியர்.
இல்வாழ்க்கையின் சிறப்பு
குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவள் பெண். இல்லறத்தை நல்லறமாக நடத்திச் செல்லும் கடமை உணர்வு கொண்டவள் பெண். அதனால் பெண் என்பவள் நாணல் போன்று வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவளாக விளங்க வேண்டும். அதோடு இன்ப துன்பத்திலும், குடும்பத்தில் உள்ள அனைவரிடத்திலும் இன்முகத்துடன் உபசரிக்க உயர்ந்த பண்பினைப் பெற்றிருத்தல் வேண்டும். இத்தகைய நிலையே சிறந்த இல்லறப் பண்பு எனக் கூறுவர்.
கரித்துண்டு புதினத்தில் வருகின்ற பொன்னி, நாகு என்ற பெண்கள் சிறந்த பண்பு நலன்கள் கொண்டவர்களாகப் படைத்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். சமுதாயத்தில் உள்ள பெண்கள் இவர்களைப் போலச் சிறந்து விளங்க வேண்டும் என்ற கருத்தினை இக்கதையின் வழியே தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.
பொன்னி என்பவள் தன் கணவன் கொண்டு வரும் ஒரு ரூபாயைக் கொண்டு அன்றாட வாழ்க்கை நடத்துகிறாள். தனது கணவன் ஊனமுற்றவன் என அறிந்தும் அவனோடு ஓலைக் குடிசையில் வாழ்கிறாள். உணவுக்கே வழியின்றி இருக்கும் நிலையில் கூட, கால்வயிறுக் கஞ்சி குடித்துக் கொண்டு இன்பமான வாழ்வை நடத்துகிறாள். கணவனின் மனநிலையை அறிந்து கொண்டு அவனோடு செம்மையான வாழ்வை நடத்துகிறாள்.
நாகு என்பவள் திருவேங்கடத்தின் மனைவி. இவள் கணவனின் உணர்வுகளையும் பெண்ணின் கடமைகளை அறிந்து செயல்படும் பண்பு மிக்கவள். கணவன், பிள்ளைகளென அனைவருக்கும் செய்ய வேண்டிய பொறுப்புகளைத் தெரிந்து சிறப்பாகச் செய்கின்றவள். அத்தோடு இல்லறப் பெண்களின் சிறந்த பண்பாட்டினைக் கொண்டவள்.
இதனை,
“எவ்வளவோ பொறுப்பையும் துன்பத்தையும் தன்னந்தனியாகக் குடும்பமே தானாக ஏற்றுக் கொண்டு செயல்படுவாள்” (5)
என்ற வரிகளின் மூலம் தெளிவாக உணர முடிகிறது.
இருப்பதைக் கொண்டு இல்லற வாழ்க்கையில் இன்பமுடன் வாழ வேண்டும். அன்பு நெறியே அழகான வாழ்க்கையின் ஆணிவேர் என்ற கருத்தினை இப்பாத்திரத்தின் வழியே கூற விழைகிறார் ஆசிரியர்.
தொகுப்புரை
* மு. வரதராசனின் சமுதாய நோக்கு சூழ்ந்தும் அகன்றும் இருத்தலை அறிய முடிகிறது.
* வறுமை மனித குலத்தை எத்தகைய கீழ்நிலைக்குத் தள்ளுகிறது என்பதனை மு. வ பல கோணங்களில் காட்டுகிறார்.
* மனிதனாகப் பிறந்த அனைவரும் ஈகை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறார்.
* பெண்ணின் பெருமை இல்லறச் சிறப்பு ஒற்றுமை உணர்வு, பொருளாதார வாழ்க்கை, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியன இவரின் கரித்துண்டு புதினத்தில் காண முடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. வே. பதுமனார், சிறுகதைச் செல்வம், ப.19
2. அம்பிகா சிவம், சான்றோர்களின் பொன்மொழிகள், ப.33
3. டாக்டர் மு. வ., கரித்துண்டு, ப.52
4. மேலது, ப.69
5. மேலது, ப.119
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.