தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
96.வில்யாழ்
முனைவர் இரா. வசந்தமாலை
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 636 011
முன்னுரை
நரம்பிசைக் கருவிகளுள் மிகப் பழமையானது யாழாகும். 'சீறியாழ்பாண’ (புறம்.70) 'வில் யாழ் இசைக்கும்’ (பெரும் .182) 'செவ்வழி நல்யாழிசை’ (அகம்.14) 'இன்குரல் சீறியாழ்’ (நற்.380) இவை அனைத்தும் 'யாழ்’ குறித்த சங்க இலக்கியப் பதிவுகளாகும். 'செய்தி யாழின் பகுதியொடு தொகை’ (தொல்.அக.18) இது இலக்கண நூலில் காணலாகும் யாழ் குறித்த பதிவாகும். இச்சான்றுகளின் வழி யாழின் தொன்மையை உணரலாம். 'யாழ்’ எனும் சொல் இசைக்கருவியையும், பண்ணையும் குறிப்பதற்குரிய சொல்லாக அமைந்துள்ளது.
ஐவகை நிலத்தின் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன யாழுக்குரியனவாகவும் விளங்கியுள்ளன. சங்க காலத்தில் வில்யாழ், பேரியாழ், சீறியாழ் இடம் பெற்றிருப்பினும் வில்யாழ் காலத்தால் முற்பட்டது என்பது ஆய்வாளர்களின் துணிபு. இவ்வில்யாழ் பற்றிய குறிப்பினைச் சங்க இலக்கியங்களில் 'பெரும்பாணாற்றுப்படையில்’ மட்டுமே காண முடிகின்றது. வில்யாழ் குறித்த ஆய்வுகளை இவ்வாற்றுப்படை உணர்த்தும் பாடலின் வழி நின்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பெரும்பாணாற்றுப்படையில் 'வில்யாழ்’
நமது இலக்கியங்களில் 21 நரம்புகளையுடைய மகரயாழ், 14 நரம்புகளையுடைய சகோடயாழ், 7 நரம்புகளையுடைய செங்கோட்டுயாழ் பற்றிய செய்திகள் பரவலாகக் காணப்படுகின்றன. இவையன்றி நாரதயாழ், கீசகயாழ், தும்புருயாழ், கச்சபியாழ் குறித்த செய்திகளும் பண்டைய இலக்கியங்களில் 'பெரும்பாணற்றுப்படை’யில் மட்டுமே 'வில்யாழ்’ குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. அப்பாடல் பின்வருமாறு;
“ஒன்றமர் உடுக்கைக் கூழார் இடையன்
கன்றமர் நிரையொடு கானத்து அல்கி
அந்நுண் அவிர்புகை கமழக் கைமுயன்று
ஞெலிகோல் கொண்ட பெருசிறல் ஞெகிழிச்
செந்தீ தொட்ட கருந்துளைக் குழலின்
இன்தீம் பாலை முனையில் - குமிழின்
புழற் கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின்
வில்யாழ் இசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி…”(பெரும்பாணா வ.175-184)
“பாணனே! நீ செல்லும் காட்டிலே மாடு மேய்க்கும் இடையர்கள் கையில் குழல் இருக்கும் வில்யாழும் அலுத்தனையாயின் வில்யாழிசையைக் கேட்டு மகிழ்வாய் வில்யாழின் ஒலியோ வண்டொலி போன்று இருக்கும். அவற்றை நீ கேட்டு மகிழ்வாயாக!” என்று ஆற்றுப்படுத்துவதே இப்பாடலடிகளின் பொருளாகும்.
வில்இசைக்கருவி - வில்யாழ் தோற்றம்
பன்னிரு திருமுறை வரலாற்றில் வெள்ளைவாரணர் வில்இசை குறித்து விளக்கும் பொழுது, ‘வேட்டைத்தொழிலை மேற்கொண்டுள்ள மக்கள்… வில் நாணின் ஓசையைக் கேட்டு, அதன் இசை நுட்பமுணர்ந்து… வில் நாணின் நீளத்தைக் குறைத்துக் கூட்டிப் பல்வேறு இன்னிசைச் சுருதிகளைத் தோற்றுவித்தனர்’ என்பதன் வாயிலாக வில்இசையின் பழமையை உணரவியலும். இவ்வில் இசைக்கருவியே பிறகு வில் யாழாகத் தோற்றம் பெற்றுள்ளது என்பது இசை ஆய்வாளர்களின் கருத்து.
வில்யாழுக்குரிய உறுப்புகள்
‘குமிழின் புழற்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின்’ எனும் பெரும்பாணாற்றுப்படையின் பாடலடி, வில்யாழுக்குரிய உறுப்புகள் இரண்டைப் பற்றி விளக்கியுள்ளது. ஒன்று வில்லாக வளைந்துள்ள ‘குமிழன் கொம்பு’ மற்றொன்று அக்கொம்பினை வளைத்துக் காட்டும் ‘மரல் கயிறு’
“குமிழினது உட்பொய்யாகிய கொம்பிடத்தே வளைத்துக்கட்டின மரற்கயிறாகிய விரலாலே தெறித்து வாசிக்கும் நரம்பு”
(நச்சினார் உரை.ப.228)
என்று உரை வகுக்கப்பட்டதால், உட்துளையுடைய குமிழுங் கொம்பினால் ‘வில்’ செய்யப்பட்டது என்றும், மரல் நாராகிய நாணால் அவ்வில் கட்டப்பட்டது என்றும் ‘மரல்நால்’ எனும் விரலால் அது இசைக்கப்பட்டது என்பதும் தெரிய வருகின்றது.
1. குமிழின் கொம்பு
வில் யாழுக்குரிய குமிழின் கொம்பு எது என்பதற்கு “இது தேக்கு மரத்தின் இனத்தைச் சேர்ந்தது ஆகையால் இதற்கு ‘coombteak’ என்பதற்கு \Gmelina arborea’ என்றும் ஆங்கிலப் பெயர்கள் உண்டு. சென்னைப் (பேரகராதி) - தேக்கு இளகு நிலையானது ஆகையால் உட்துளை செய்வதற்கு ஏற்றது எனலாம்”
(தமிழிசை வளம்,ப.122) என்பார் வீ. ப. கா. சுந்தரம் ‘வெளிப்புறம் வயிரம் கொண்டு விளங்கும் குமிழமரம்’
(பாணர்கைவழி,ப.155)
2. மரல்
மரல் என்பது ஒருவகையான கற்றாழையாகும்.
“மால் = ஒரு கற்றாளை, மருள் அரலை, அரலை = மரல்
(நமச்சிவாய முதலியார் தமிழகராதி)
“மரல் = அரலை”
(வீரமாமுனிவர் சதுரகராதி)
“மரல் = மருள் “same as அரலை யு A Plant samseveiria”
“அரலை = The same as மரல் A Plant samseveiria”
(Rev.J.P. ராட்லர் தமிழ் ஆங்கில அகராதி)
“மரல் = மருள் A Shurb, the fiber of which is used for cordage.
அரலை = Plant மரல். Sanseeveria, zeylanica Bow string hemp - see அரலை”
(Rev. வின்ஸ்லோஸ் தமிழ் ஆங்கில அகராதி)
எனும் அகராதிக் குறிப்பின் வழி மரல் பற்றிய பொருள் விளக்கத்தினை அறியலாம். இவ்வகை அகராதிக் குறிப்பேடு, “நாம் தற்காலம் மருள் என வழங்குவதே மரல்’ எனப்படும் என அறிகிறோம். இதன் மடலினை நீரில் சில நாட்கள் ஊற வைக்க அவை அழுகிப் பதமாகி விடும். அதன் பின் அவற்றிலுள்ள நாரை எடுத்துத் தமக்கு வேண்டிய பருமனுக்குத் தக்க கயிறுகளாகத் திரித்துக்கொள்வர். இக்கயிறுகள் மிக வலுவாயிருப்பதாற்றான் இவற்றை விற்களுக்கு நாணாகக் காட்டுகிறார்கள்.
வில்லிலே நாணாகக் கட்டப்பட்ட இம்மரல் கயிற்றை நம் விரலாற் றெறித்தால் ஒலியெழும்”
(பாணர் கைவழி.ப.186) என்ற குறிப்பும் கிடைக்கின்றது. மேலும், வீ. ப. கா. சுந்தரம் மரல் என்னும் கற்றாழை பச்சைப் பாம்பு போல் புள்ளிகளுடன் மெல்லியதாய்ப் பச்சையாயிருக்கும், நீண்டு நிமிர்ந்து நிற்கும், நீளம் 2.5 அடி முதல் 3 அடி வரையிருக்கும், கற்றாழை அகலம் ஓரங்குலமிருக்கும்”
(தாழிசை வளம்,ப.123) என்கிறார். எனவே, பெரும்பாணாற்றுப்படையில் சுட்டிய ‘குமிழன் கொம்ப்’ ‘மரல்’ எனும் வில்யாழுக்குரிய உறுப்புகளின் விளக்கத்தை மேற்சுட்டிய மேற்கோள்களின் வழி உணரலாம்.
‘வில்யாழ் இசைக்கும் விரலெறி குறிஞ்சி’ - விளக்கம்
குழல் இசையைக் காட்டிலும் சீரிய பண்ணை ‘வில்யாழில்’ இசைத்துள்ளனர் எனும் குறிப்பினைப் பெரும்பாணாற்றுப்படை உணர்த்துகின்றது. வில்யாழில் குறிஞ்சிப்பண் பாடப்பட்டமைக்கான காரணத்தைக் கூறுமிடத்து, மென் சுவைகட்குரியது குறிஞ்சிப்பண்.
“துத்தம் குரலாகத் தொன்முறையி யற்கையின்
அம்தீம் குறிஞ்சி” (சிலப்.28:34-35)
என்றதால் படுமலைப் பாலையே குறிஞ்சிப்பன் ஆகும். அது இன்றைய ‘நட பைரவி’ ஆகும். (தமிழிசைவளம்.ப.122) என்பதன் வாயிலாக வில்யாழில் இசைக்கப்பட்ட குறிஞ்சிப்பண் ஏழு நரம்புகளை உடைய பெரும்பண்ணாகிய ‘நடனபைரவியே’ என்பது தெரியவருகின்றது. வில்லிசைக்கருவி, வில்யாழாக வளர்ச்சி கண்டபோது குமிழ மரகொம்பைக் குடைந்தும் வளைந்த வில்லாக நிறுத்தியும், அதில் நரம்புகள் பலவற்றைக் கட்டியும், மரல் நார்களைத் திரித்து மீட்டுகின்ற வில்லில் கட்டியும் யாழ் நரம்புகளின் மேல் இசைத்துள்ளனர் என்பதைப் பெரும்பாணாற்றுப் படையின் வாயிலாக உணரலாம்.
வில்யாழ் குறித்த ஆய்வுகளும் முடிவுகளும்
1. சங்க இலக்கியங்களில் குறிப்பாக, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படையின் வாயிலாக, பத்தல், போர்வை, திவவு முதலான யாழ் உறுப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. இருப்பினும் இவ்வுறுப்புகளில் ஒன்று கூட வில்யாழுக்குரியதாகப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடவில்லை. எனவே, சங்ககாலத்திற்கும் ஏனைய யாழ்களுக்கும் முற்பட்டதாகவே வில்யாழ் தோன்றி இருக்க வேண்டும்.
2. பெரும்பாணாற்றுப்படையில் ‘பேரியாழ்’ குறித்தும் அதன் உறுப்புகள் குறித்தும் விளக்குமிடத்திலேயே ‘வில்யாழ்’ குறித்த குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இதன் வழி, பேரியாழ் இடம் பெற்ற காலத்திலேயே வில்யாழும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதறியலாம். இருப்பினும் “பேரியாழ் மிக விரிவாக இருந்த காலத்திலேயே இவ்வில்லாகிய யாழ் புதுமையாய்த் தோன்றியிருக்க வேண்டும்” என்பது ஆ. அ. வரகுணரின் கருத்து. (பாணர் கைவழி.ப.184)
3. ‘விரலெறி குறிஞ்சி’ எனும் அடிக்கு ‘வில்யாழை மரற் கயிராகிய விரலால் தெறித்து இசைத்தனர். கின்னரி (வயலின்) மீட்டுவது போன்று வில்லால் (Bow) இழுத்து இசைத்தனர். வில்யாழ் பெரும் பண்ணை இசைத்தற்கு உரியதாகையால் ஏழினும் மிக்க இசை நரம்புகள் உடையது’(தமிழிசைவளம் பக்.123-124) என்பது வீ. ப. கா. வின் கருத்து. ஆனால் வரகுணரோ, ஒரு முழு நீளமுள்ள ஒரே நாணற்குழலின் பாலைப் பண்ணிற்கு உரிய ஏழு கேள்விகளையும் (சுரங்கள்) இசைப்பிக்கும் வழியினைத் தெரிந்து கொண்ட நம் முன்னோர்க்கு, இவ்வில் யாழின் ஒரே நரம்பினில் குறிஞ்சிப் பண்ணிற்குரிய ஏழு கேள்விகளையும் இசைப்பிக்கும் வழி தெரிந்தேதான் இருக்கும்’ (பாணர்கைவழி,ப.187) என்கிறார். எனவே, வில்யாழிற்கு உரிய நரம்பு ஒன்றுதான் என்பது இவர்தம் கருத்து.
4. வில்யாழ் குறித்த மேற்சுட்டிய செய்திகளின் வழி நின்று நாம் மேலும் சில முடிவிற்கு வரலாம்.
அதாவது;
அ. வில்யாழ் என்பது உள்ளீடு உடைய கொம்பு, மற்றும் நரம்புகளைக் கொண்டது. (புழல்கோடு - உள்ளீடுடைய கொம்பு).
ஆ. உள்ளீடு உடைய கொம்பைப் பயன்படுத்துவதற்கான காரணம் இசையை நன்கு எழுப்பச் செய்தற்கே ஆகும்.
இ. ஒரு நரம்பு மட்டுமே வில்யாழில் கட்டப்பட்டிருப்பின் இசையுடன் கூடிய ஒலியை உண்டாக்கலாமே தவிர இசை பொருந்திய பண்ணை உருவாக்குதல் கடினம்.
ஈ. ‘பத்தர்’ (குடம் போன்ற அமைப்பு) அமைப்புடன் கூடிய யாழாக வில்யாழ் அமையுமாயின் ஒரு நரம்பின் வழியே பண்ணுடன் கூடிய தொடர் இசையினை அமைக்கலாம். ஆனால் வில்யாழ் என்பது கொம்பினால் மட்டுமே உருவாக்கப்பட்ட, தொடக்ககால யாழ் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். (பத்தர்-பிற்காலயாழுறுப்பு)
உ. மூங்கில் குழலில் எவ்வாறு ஒரு துளையின் வழி பண்ணை எழுப்ப இயலாதோ அதைப்போல், உள்ளீடு உடைய கொம்பில் கட்டப்பட்டாலும் ஒரே நரம்பின் வழி பண்ணை இசைக்க இயலாது.
ஊ. குழலின் குறிப்பிட்ட அளவுவேறுபாட்டில் இடப்பட்ட துளைகளில் பண் உருவாவதைப் போல, குறிப்பிட்ட அளவு இடைவெளியில் கட்டப்பட்ட நரம்புகளே குறிஞ்சிப்பண்ணைத் தோற்றுவிக்கும். எனவே, உள்ளீடு உடைய கொம்பில் பல்வேறு நரம்புகளைக் கட்டி அதன் வழி குறிஞ்சிப் பண்ணைத் தோற்றுவித்துள்ளனர் என்ற முடிவிற்கு வரலாம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.