தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
99.தமிழர் பூதவாதக் கோட்பாடு
மு. விஜயசாந்தி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி, வீரப்பன் சத்திரம், ஈரோடு.
முன்னுரை
தமிழர்கள் இயற்கையோடு இயைந்து ஆண் - பெண் சரிநிகர் சமானமாய் வாழ்ந்திருந்த காலத்தில் தமிழகத்தில் வந்து குடியேறிய சமசுகிருதத்தை மொழியாகக் கொண்ட ஆரிய இனம் தனது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் தமிழின் மீதும் தமிழரின் மீதும் சிறிது சிறிதாகத் திணிக்க ஆரம்பித்தது. ஆனால் இவர்களின் சமயக் கருத்துக்கள் சில பகுத்தறிவு சிந்தனையாளர்களால் சிறிதும் ஏற்கப்படவில்லை. எனவே அதற்கு எதிரான மெய்யியல், தருக்கவியல் கோட்பாடுகள் பகுத்தறிவு சிந்தனையாளர்களால் உருப்பெற்று மக்களை விழிப்படையச் செய்தது. அவ்வகையில் தோன்றிய ஒரு அறிவியல்கோட்பாடே உலகாய்தம் என்னும் பூதவாதமாகும்.
பூதக்கோட்பாடு
ஐம்பூதக் கோட்பாடு என்பது தமிழர்களுக்கே உரியது. இவ்வைம்பூதங்களை ஆய்ந்ததினால் இவை பூதவாதம் என்று வழங்கப்படுகிறது. இது பண்டைய கலத்திலேயே தமிழகத்தில் அரும்பி மலர்ந்து மணம் வீசிய ஓர் அறிவியல் கோட்பாடாகும்.
உலகிலுள்ள அனைத்துக் கருத்துக்களையும் இரண்டு வகையில் பிரிக்கலாம். ஒன்று காட்சி, மற்றொன்று அநுமானம்.
நமது ஐம்பொறிகளால் உணரக்கூடிய, நேரடியாகக் கண்ணெதிரே காணக்கூடியவற்றைக் காட்சி என்கிறோம். இவையே காட்சி அளவை எனப்படுகிறது.
ஆனால் நேரடியாகக் காணமுடியாத, அறிய முடியாத ஒன்றை ஊகத்தின் மூலம் அறிந்து கொள்வது அநுமானம் எனப்படும். இந்த அநுமானம் என்பது தெளிவு பெறாத சற்று ஐயப்பாடு நிறைந்ததாகும். எனவே காட்சி அளவையை ஏற்கும் உலகாயதர்கள் அநுமானத்தை ஏற்கவில்லை.
உலகத் தோற்றம்
உலகத் தோற்றம் குறித்து உலகில் தோன்றிய அனைத்து சமயங்களும் தமது கருத்துக்களைக் கூறியுள்ளது. ஆனால் அண்டம், உலகு, உயிர் பற்றி முழுமையான அறிவியல் முறையில் ஆராய்ந்த ஒரு கோட்பாடு உலகாயதம் மட்டுமே.
காட்சிக்குப் புலனாகும் நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்குமே அடிப்படையானப் பொருள்கள். ஆகாயம் காட்சிக்குப் புலனாகாதது. அநுமானம் மூலமே அறியப்படுகிறது. எனவே ஐந்தாவது பூதமாக ஆகாயத்தை உலகாயதர்கள் ஏற்கவில்லை.
இந்த அடிப்படையான நான்கு பூதங்களும் வெவ்வேறு விதத்தில் ஒன்று சேர்வதால் உருவானதே இவ்வுடலும், உலகிலுள்ள பிறப் பொருள்களும் என்பது உலகாயதர் கொள்கை.
உலகத் தோற்றம் குறித்த கருத்துக்கள் நமது சங்க இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் காணக் கிடைக்கிறது. பூதவாதிகளின் கொள்கையை மெய்ப்பிக்கும் வகையில் தொல்காப்பியம்,
“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்” (தொல். மரபு -90)
என்கிறது. இவ்வாறே உலகம் தோன்றிய விதத்தை பரிபாடல் பின்வருமாறு வகைப்படுத்துகிறது.
“கருவளர் வானத்து இசையின் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்
செந் தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும் அவையற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடு உயர்வு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்”(பரிபாடல். 2: 5-12)
இப்பாடலின் பொருள் படி முதலில் அணுக்கள் வளர்வதற்கு இடமாகிய முதல் ஊழியான வானம் தோன்றி, அவ்வானத்தினின்று காற்று தோன்றி, அக்காற்றினின்றும் மூன்றாவது பூதமான தீ தோன்றி, அத்தீயினின்று பனியும், குனிந்த மழையும் ஆன நான்காவது பூதமான நீர் தோன்றி, அந்நான்கு பூத அணுக்களினூடே வெள்ளத்தில் மூழ்கிய நில அணு, மீண்டும் திரண்டு, செறிந்து ஆற்றல் மிக்க ஐந்தாவது பூதமான நிலம் தோன்றியது.
இக்கருத்துக்கள் இன்றைய அறிவியல் கோட்பாடான உலகத் தோற்றம் குறித்தப் பெருவெடிப்புக் கொள்கையை ஒத்துள்ளது மிகவும் வியப்புக்குரியது.
உயிர் உற்பத்தி
அநுமானத்தை ஏற்காத, காட்சி அளவைவாதிகளான உலகாயதர் கண்ணுக்கு புலப்படாத உயிர் என்ற ஒன்றை ஏற்கவில்லை. அவர்களுக்கு உயிரும் உடலும் ஒன்றே. பூதங்களில் சேர்க்கையால் உடல் உண்டாவது போல் அப்பூதங்களின் சேர்க்கையாலேயே உடலுக்கு உணரும் ஆற்றலும், சிந்திக்கும் ஆற்றலும் உருவாகிறது என்பது அவர்களின் கொள்கை. இதை மணிமேகலை பின்வருமாறு விளக்குகிறது.
“தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக் காளி பிறந்தாங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்” (மணிமேகலை 27: 264-266)
அத்திப்பூவையும், கருப்பு கட்டியையும் இட்டு, வேறு பல பொருள்களையும் கலக்க, கள்ளில் களிப்பு உண்டாவதைப் போல், பொருந்துகின்ற பூதங்களின் கூட்டத்தால் உணர்வு தோன்றுகிறது என்கிறது. அத்திப் பூவிற்கும், கருப்பட்டிக்கும், பிற பொருள்களுக்கும் தனித்தனியே இருக்கையில் போதை தரும் ஆற்றல் இல்லை. இவ்வாறு போதை இல்லாத பொருள்களைக் கொண்டு போதைப் பொருள் தயாரித்தலைப் போன்று, உயிர் இல்லாத பொருளிகளினாலேயே உயிர் உருவாகிறது என்பது உலகாயதர்களின் கோட்பாடு.
இயல்பு வாதம்
உலகாயதர்கள் இயல்பு வாதிகள், சுபாவ வாதிகள் எனப்பட்டனர். பொருள்களின் உற்பத்திக்கு அணுக்கள் காரணமானது போல், அப்பொருள்களின் தனித்தன்மைக்கு அதனதன் இயல்பே காரணமாக அமைகிறது. இதை இந்தியத் தத்துவ ஞானம் பின்வருமாறு விளக்குகிறது.
இயற்கையிற்காணும் சகல வேறுபாடுகளும், நல்லோர் துயருழத்தலும், அல்லோர் இன்பம் நுகரலும் இயற்கையின் சுபாவம் என்பதே அன்னோர் கருத்து. மயிலைச் சித்தரிக்கவும், குயிலைக் கூவிக்கவும் கடவுள் தேவை இல்லை. புனலில் தண்மையையும், அனலில் வெம்மையையும் அமைக்க ஓர் இறைவன் வேண்டா. அவையாவும் அவற்றின் சுபாவம் எனச் சுபாவவாதம் பேசுவர், சுபாவ வாதிகள் எனப்படும் இவ்வுலகாயதர்.
மேலும் இவ்வியல்புக் கோட்பாட்டை விளக்கும் புறநானூற்று பாடல்,
“மண்திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வனியும்
வளித்தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
அய்ம்பெரும் பூதத்து இயற்கை போல”(புறநானூறு 2: 2-7)
நிலப்பரப்பு, நிலத்தின் மேல் விரிந்த வானம், வானத்தில் மிதந்து வரும் காற்று, காற்றில் பற்றிய தீ, தீயிலிருந்து வரும் நீர் ஆகிய ஐந்து பூதங்களும் இயற்கையான சுழற்சியை உடையவை.
இவ்வாறே பூதங்களின் இயல்பை ராகுல் சாங்கிருத்யாயன் “நமது புலன்களை இயக்கி மூளையில் உணர்வுகளைத் தோற்றுவிப்பதுதான் பூதமாகும். நமது உணர்வுகளில் தோன்றும் உருவமுடைய எதார்த்தம்தான், இயல்புதான் பூதமாகும்” என்கிறார்.
இன்பியல் கோட்பாடு
உலகாயதர்கள் உயிர், இறைவன், மறுமை, பாவம், புண்ணியம் போன்றவற்றை மறுத்து வந்தனர். இவ்வுலக வாழ்வில் உயர்ந்த இன்பம் எதுவோ அதுவே உலகாயதர்களின் வாழ்க்கை லட்சியமாக இருந்தது.
இவ்வுலகில் அடைவதற்கான இன்பங்களை விட்டுவிட்டு மறுமையை எண்ணி அலைவதும், தவம் என்று உடலை வறுத்திக் கொள்வதும், கண்ணெதிரே உள்ள தண்ணீரை விட்டுவிட்டு காணல் நீரைத் தேடி ஓடுவது போன்று முட்டாள் தனமானது என்பது உலகாயதரின் கருத்து. அவ்வகையில் உலகாயதர் இல்லற வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். இவற்றைச் சங்க இலக்கிய அகப்பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.
தொல்காப்பியம்,
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொல் - பொருளியல் - 29)
என்கிறது. அதாவது இன்பம் என்பது உயிர்கள் அனைத்திற்கும் பொருந்துகின்ற விருப்பமுடையவை ஆகும்.
இவ்வாறே வள்ளுவமும்,
“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒன்டொடி கண்ணே உள” (குறள் - 1101)
என்கிறது. இந்த இன்ப வேட்கையைச் சங்க அக இலக்கியங்களில் தாராளமாகக் காண முடிகிறது. சங்கப் பாடல்களின் எண்ணிக்கைகளையும், பாடப்பட்ட புலவர்களின் எண்ணிக்கைகளையும், காண்கையில் அக்காலத்தவர் அகவாழ்விற்குத் தந்த முக்கியத்துவம் புலப்படுகிறது.
உலகாயதம் என்பது தனிப்பட்ட ஒருவரால் ஒரு நிறுவனமாக வளர்க்கப்படவில்லை. எனவே இக்கோட்பாடானது பண்டைய காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வியல் குறித்த அறிவியல் சார்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக இருந்து வந்துள்ளது.
இந்த 21 ஆம் நூற்றாண்டில் அறிவியல் உச்சகட்ட வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த அசாதாரண வளர்ச்சி எந்த இறைவனாலும் ஏற்பட்டதல்ல, மனித அறிவின் ஒருப் பகுதியே என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே. ஆனால் இந்த அறிவியல் காலத்திலும் தொடரும் மூட நம்பிக்கைகள் கிட்டதட்ட 3000 ஆண்டு கால கொள்கைப் போரைப் பயனற்றதாக்கி விடுகின்றன.
பல மெய்களைக் கொன்றும், திண்றும் வைதீகம் இன்று இந்துவாக விஷ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு மனிதனும் பகுத்தறிவுடன் சிந்தித்து இந்த ‘இந்து’ என்னும் கட்டமைப்பை தகர்த்து வெளிவரும் வரை நம் முன்னோர்கள் கண்ட கனவு நனவாக வாய்ப்பில்லை. எனவே அடுத்த தலைமுறையையேனும் ஒரு சிறந்த சிந்தனையாளர்களாக, முழுமையான தமிழர்களாக, சுதந்திரமான மனிதர்களாக உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்..
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.