கற்றல் - கற்பித்தல்
முனைவர் மா. தியாகராஜன்
2. மாணவர்களுக்குப் பண்பாட்டு நெறியில் தாய்மொழிக் கல்வி
முன்னுரை
மக்களின் வாழ்வியல் நெறிக்கு அடிப்படையாக விளங்குவது பண்பாடு. மக்கள் வாழ்க்கை நெறி நாட்டிற்கு நாடு சூழலுக்கேற்ப மாறுபடுவதால் பண்பாடும் அதற்கேற்ப அமையும். ‘பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ என்பார் திருவள்ளுவர். மேலும் அதுவன்றேல் மண்புக்கு மாய்வது மண், என்பார், அதாவது பண்புடையவர் உள்ளதால்தான் இவ்வுலகம் உள்ளது, இல்லை எனில் மண்ணுக்குள் மறைந்து அழிவது உறுதி என்கிறார். இவ்வாறு உலகம் செம்மையாக இயங்குவதற்கு பண்பாடுதான் அவசியம் எனும்போது அத்தகைய பண்பாட்டின் வழி மாணவர்களின் தாய்மொழிக் கல்வியை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராயலாம்.
பண்பாடு
பண்படுவது பண்பாடு, பண்படுதல் சீர்படுத்தல் அல்லது திருந்துதல், திருத்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் என்றும், திருந்திய உள்ளத்தைப் பண்பட்டவுள்ளமென்றும் சொல்வது வழக்கம் என்று பாவாணர் சுட்டிக்காட்டுவார். மேலும் பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம், அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது என்று விளக்கமாகக் கூறுவார். மக்கள் நாகரீகத்தின் உயர்ந்த நிலையே பண்பாடு இது வாழ்வியல் நெறியில் இன்றியமையாப் பண்பில் கலந்து இருக்கிறது. இதனடிப்படையில் நின்று பெறும் தாய்மொழிக் கல்வி என்றும் நிலைத்து நின்று பயன்தரும்.
பண்பாட்டு நெறியில் கற்பித்தல்
கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்பது வழக்கு. அவ்வாறு தோன்றிய தமிழ்குடிக்கு மொழி எந்த வகையில் பழமையானதோ அதே வகையில் பண்பாடும் பழமையானதாகும். இத்தகைய பண்பாடு ஒரு மனித சமுதாயத்தின் அடிப்படையானதாக அமைந்துள்ளது. இதனை இலக்கியத்தின்வழி உணர்த்தியதுபோக பண்பாட்டின் வழி கற்பிக்கும் புதிய முறை இன்று பெருகி வருகிறது. மாணவர்களும் தங்கள் குடும்பச்சூழலில் ஓரளவு பண்பாட்டுக் கூறுகளை உணர்ந்து வைத்திருப்பதால் மொழியாற்றலை பண்பாட்டு நெறியில் நின்று வளர்த்துக் கொள்வது எளிதாகிறது.
இலக்கணம் கற்பித்தலில் பண்பாட்டு நெறி
இலக்கணத்தில் ஒருமை பன்மை என்பது பின்பற்றப்படுகிறது. முதல்வர் அவர்கள் வருகிறார்கள், என்ற வார்த்தையில் மரபு கருதியும் மரியாதை கருதியும் ஒருமை, பன்மையாக விளிக்கப்படுகிறது அதாவது வந்தார் என்பதற்கு பதில் வந்தார்கள் என்று அழைக்கிறோம். இவ்வாறு தலைவர் அவர்கள் வருகிறார் என்றும் ஐயா அவர்கள் வருகிறார்கள் என்றும் அழைக்கிறோம் இவற்றில் அவர்கள் என்பது மரியாதை என்னும் பண்பு கருதி அழைக்கப்படுவதால் இவற்றில் ஒருமை பன்மை மரபு பண்பாட்டின் அடிப்படையில் அமைவதை உணரலாம்.
வினாக்கள் அமைப்பதிலும் விடை கூறுவதிலும் கூடப் பண்பாட்டு நெறிகள் துணைசெய்கின்றன.
சிலப்பதிகாரத்தை இயற்றியது யார்? எனும் வினாவை ஆசிரியர் மாணவரிடம் வினவினால், அதற்கான விடையை ஆசிரியர் தெரிந்து வைத்திருந்தும், அதன் விடை மாணவனுக்குத் தெரியாது என்பதால் இதனை அறிவினா என்று இலக்கண நூலார் குறிப்பிடுகின்றனர். இதில் என்ன பண்பாட்டு நெறி இருக்கிறது என்று நாம் கருதக் கூடும். இத்தகைய வினாவை எழுப்புவதன் மூலம், மாணவன் தனக்குத் தெரியாத செய்தியை ஆசிரியர் அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறார் எனும் உயர் மதிப்பீட்டை ஆசிரியர் மீது செலுத்த வாய்ப்புள்ளது. மேலும் வினாவிற்கான சரியான விடையை தெரிந்து கொள்வதோடு சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் பண்பாட்டுத் தகவல்களையும் அதன் வழியே மாணவன் அறிய வாய்ப்புள்ளது. மேலும் ‘காளை’ வந்தான், என்று கூறுவதை நாம் அறிந்திருப்போம். காளையைப் போன்ற வலிமையும், வீரமும் வாய்ந்த ஆண்மகனைக் குறிக்கவே காளை வந்தான் என்ற ஆகுபெயர் இலக்கணம் இங்கு பண்பாட்டு நெறியில் அதாவது காளையை அடக்கி கன்னியின் கழுத்தில் மாலை சூடும் பழமைப் பண்பாட்டுத் தகவலை இங்கே உணர்த்துகிறது.
நீ, நீர், நீவிர். தாங்கள், தங்கள், தேவவீர், சீமான், ஸ்ரீலஸ்ரீ முதலிய சொற்கள் முன்னிலையில் இருக்கும் ஒருவரை மதிப்புடன் கூறப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சொற்களின் பொருளை உணரச் செய்தால் அவற்றைப் பயன்படுத்தும் போது பயன் தரும். இடப்பெயர்கள் இலக்கணத்தில் விதியாக கூறப்பட்டிருக்கும், தன்மை, முன்னிலை, படர்கை, என்ற மூவிடங்காலும் பேச்சு எவ்வாறு அமைகிறது எனப் பார்ப்போம். பேசுவான் தன்மையும், தன்னைச் சார்ந்தோரையும் குறிப்பது தன்மை இடம். இதில் யான், நான், தன்மை ஒருமையாகும். யாம், நாம், நாங்கள் தன்மைப் பன்மையாகும். நீ, நீர், நீங்கள் என்பது முன்னிலைப் பன்மையாகும்.
சொல்வளம் பெருக்குதல்
கற்றல் கற்பித்தலில் மிகவும் எதிர்பார்க்கக் கூடியது குறைவான கற்பித்தலும் நிறைவான கற்றலும். இவற்றில் சொல்வளம் மாணவரிடையே நிரம்பக் கிடைக்கச் செய்வதில் மொழியாசிரியர்களின் பங்கு அதிகமாகிறது. மொழியாசிரியர்கள் பண்பாட்டு நெறி முறைகளின்படி சொல்வளத்தைப் பொருக்க முயற்சிக்க வேண்டும். மொழிக்குறியீடு பற்றி நாம் எளிதாய் முடிவு செய்துவிட முடியாது. மொழி மனித சமுதாயத்தின் கருத்துப் பரிமாற்றத்திற்கு முழுமையாக துணை நிற்கிறது.
மொழி அது தோன்றிய காலத்திற்கும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது. அதே நிலையில் தன்னுடைய பழமையையும் இலக்கண இலக்கியவளம் சிதையாமலும் தன்னை மாற்றிக் கொள்வதுதான் சிறப்பிற்குரியதாகும். இதனை நன்குணர்ந்து ஆசிரியர்கள் கற்பித்தல் பணியிலுள்ள சூழ்நிலை மாற்றங்களை தெளிவாகக் கடைபிடிப்பது இன்றியமையாத செயலாகும்.
மாணவர்களை பண்பாட்டு கலாச்சாரங்களை பின்பற்றி நடத்தப்படும் பொதுவிழாக்களுக்கு அழைத்துச் சென்று காட்டுவதன் மூலமோ அல்லது அவற்றை ஒளிப்பதிவு செய்து திரையிட்டுக் காட்டுவதன் மூலமோ பல்வேறு விதமான சொல்வளத்தைப் பெருக்கச் செய்ய முடியும்.
கோயில் திருவிழாக்களில் பல்வேறு பண்பாட்டு நெறிகள் பின்பற்றப்படுகின்றன. முருகன் கோயில்களில் அலகு குத்துதல், மஞ்சள் உடையணிந்து சிவப்புநிறக் கொடிகளைப் பிடித்துச் செல்லுதல், கையில் எலுமிச்சைப்பழம், பால்குடம் சுமத்தல், காவடியை சுமந்து செல்லுதல் முதலிய பொருள்களும் தேங்காய், வாழைப்பழம், குங்குமம், வெற்றிலை, சீவல், சூடம், சாம்பிராணி, ஊதுபத்தி, சந்தனம், மலர்கள் முதலிய பொருள்களும் மாணவரின் கண்ணில் படுகிறது. அவற்றின் பெயர்கள் மாணவனுக்குத் தெரிகிறது. அத்துடன் அவை ஏன் பயன்படுத்தப்பட வேண்டும் என்றக் காரணத்தையும் அவன் அறிந்து கொள்கிறான்.
சிங்கப்பூர் மாணவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு எந்தப் பொருள்கள் என்ன பெயரால் வழங்கப்பட வேண்டும் என்பதில் பெரும் தடையுள்ளது. இதற்குக் காரணம் பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் இங்கு வாழ்வதுதான் அவரவர் பண்பாட்டு நெறிமுறைகளின்படி பொருள்கள் பல்வேறு மொழிகளில் பல்வேறு பெயர்களால் வழங்கும் சூழல் உள்ளதுதான் எடுத்துக்காட்டாக பெயர்சூட்டு விழா ஒன்றில் நடைபெறும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை காண்போம். பிறப்பு இறப்பு ஆகிய இரண்டிற்கும் பதினாறாம் நாள் நடைபெறும் வைபவங்கள் பண்பாட்டு நெறியைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சியாகவே பெரும்பாலும் தமிழர்களிடையே பின்பற்றப்படுகிறது.
குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா நடைபெறுகிறதென்றால் வரவேற்க சந்தனம், கல்கண்டு, சாக்லெட், முதலிய பொருள்கள் வரவேற்பில் இடம் பெறும். வசதிக்கேற்ப அடுக்கு மாடி வீடாக இருந்தாலோ அல்லது மண்டபமாக இருந்தாலோ அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும், வகைவகையாக உணவு தயாரிக்கப்பட்டிருக்கும். இவையெல்லாம் பண்பாட்டின் தெரிவுகளை நமக்கு உணர்த்துவதால் இதன்மூலம் புதிய சொல், பொருள்முதலியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது,
சொல்லாக்கம்
வினைப் பகுதியை எச்சங்களாகவும் முற்றாகவும் மாற்றுதல் சொல்லாக்கம் எனப்படும்.
படி- உண்- செல்- இவை வினைச்சொற்களின் பகுதிகளாகும். வினைப்பகுதியின் வேர்ச்சொல் கட்டளைப் பொருளில் அமையும்.
‘படி’ என்னும் வினைப் பகுதியைக் கொண்டு ‘படித்த’ படித்து போன்ற பெயரெச்ச, வினையெச்சச் சொற்களையும் ‘படித்தான்’ போன்ற வினைமுற்றுச் சொற்களையும் உருவாக்கலாம்.
அதே போன்று,
உண்- உண்ட- உண்டு- உண்டான்
செல்- சென்ற- சென்று- சென்றான்
முதலிய சொற்களையும் பெற முடிகிறது.
இவ்வாறு பல புதிய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தினால் மாணவர்களின் சொல்லாற்றல் திறன் வளர்ந்து பெருகும்.
தின்- தின்ற- தின்று- தின்றான்
வை- வைத்த- வைத்து- வைத்தான்
முதலிய சொற்களைக் கவனித்தால் புதிய சொற்களை உருவாக்கும் வழியை மாணவர்கள் எளிதில் அறிய முடியும்.
இணை மொழிகள்
மரபுப்படியும் பண்பாட்டு நெறியின் வழியும் இணைமொழிகள் தாய்மொழியின் பயன்படுத்தப்படுவதை மாணவர்கள் அறிதல் நலமாகும்.
அல்லும் பகலும், பேரும் புகழும், நகமும் சதையும், வானும் நிலவும், மலரும் மணமும் போன்ற சொற்கள் அவற்றில் காணும் அழகுடன் அறிவது நலம். இவற்றை வாக்கியத்தில் அமைக்கும் போது அவை வாக்கியத்திற்குப் பெருமையும் அழகும் சேர்க்கும்.
பேரும் புகழும் - பாரதி பேரும் புகழும் பெற்ற கவிஞராக விளங்குகிறார்.
அல்லும் பகலும் - தொழிலாளர்கள் அல்லும் பகலும் பாடுபட்டுச் சிங்கப்பூரை உலகிலேயே உயர்ந்த நாடாக உருவாக்கி வருகிறார்கள்.
இவை போன்ற இணைமொழிச் சொற்களைக் கீழே காண்போம்.
அருமை பெருமை, ஆடல் பாடல், உயர்வு தாழ்வு, கல்வி கேள்வி, உற்றார் உறவினர், சீரும் சிறப்பும், தாயும் சேயும், மேடு பள்ளம், பட்டி தொட்டி, விருப்பு வெறுப்பு, பழக்க வழக்கம், நாளும் கிழமையும், வாடி வதங்கி
இவற்றை வாக்கியங்களில் பொருத்தமாக அமைக்கும் திறமை மாணவர்கள் பெறும் போது மொழி மரபும் பண்பாட்டு நெறியும் சிதையாமல் புதிய சொல்லாக்கத்தை மாணவர்கள் பெற முடிகிறது.
உறவுப் பெயர்கள்
உறவுப் பெயர்கள் நாட்டுக்கு நாடு மொழிக்கு மொழி வேறுபடுகிறது. தமிழ் நாட்டின் கலாச்சாரப் பண்பாட்டின்படி உறவுப் பெயர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதை இங்கே காணுதல் நலம். தாய் தந்தை இருவரின் வழியிலும் உறவுகள் உண்டு. நம் பெற்றோர்களை பெற்றவர்களைத் தாத்தா பாட்டி என்றும், பாட்டன் பாட்டி என்றும் அப்பத்தா, அம்மாயி, அம்மாச்சி என்றும் வட்டாரப் பண்பாட்டு நெறியின்படி அழைக்கப்படுகிறது.
நம் தந்தையுடன் பிறந்த சகோதர்களை மூத்தவரை பெரியப்பா என்றும் இளையவரை சித்தப்பா என்றும் அழைக்கிறோம். அதே சமயத்தில் சகோதரிகளை அத்தை என்றும் பொதுவாக அழைக்கிறோம். இவ்வாறு அழைக்கப்படுவது மரபாகக் கொள்ளப்படுவதால் இவற்றில் பண்பாட்டு நெறி கலந்துள்ளது.
அதைப் போலவே மகனுக்கு மனைவியாக வருபவரை மருமகள் என்றும், மகளுக்குக் கணவனாக வருபவரை மருமகன் என்றும் அழைக்கிறோம். பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை, மருமகள், மருமகன், மாமா, மாமி, கொழுந்தன், மைத்துனர், மைத்துனி, சகலர், பங்காளி முதலிய உறவுப் பெயர்களை இன்றைய மாணவர்கள் சரியாக அறிதல் நலம்.
கலாச்சாரங்களைக் கற்பித்தல்
சிங்கப்பூரை பொருத்தவரையில் கலாச்சாரங்களில் பன்னாட்டுக் கலப்பு இயல்பாகவே கலந்துள்ளது. இதன் தாக்கம் மொழியிலும், உணவு வகையிலும் இரண்டறக் கலந்துள்ளதை நாம் உணர வேண்டும்.
உணவுக் கலாச்சாரம்
தமிழ்நாட்டு உணவு வகைகள் பெரும்பாலும் மருத்துவ குணமுடையதாகத் தயாரிக்கப்பட்டவையாகும். சைவம் அசைவம் ஆகிய இரண்டு வகையான உணவிலும் மருத்துவக் குணங்கள் உண்டு.
சாம்பார், ரசம், மோர், அப்பளம், பாயாசம், உளுந்து வடை, காய்கறி கூட்டு, ஊறுகாய், கட்டித்தயிர், பச்சடி என பல்வேறு வகையான சுவைகளுடன் கூடிய உணவுப் பெரும்பாலான தமிழர்களின் அன்றாட உணவாக இருக்கிறது.
இவை அனைத்துமே `உணவே மருந்து மருந்தே உணவு’ என்னும் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும்.
பருப்பு, வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகு, வெந்தயம், கடுகு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, ஏலக்காய், பால் முதலிய அனைத்துமே ஒவ்வொன்றும் தனித்தனியாக மருத்துவ குணம் கொண்டவை, இவை வருமுன் காப்போம் என்பதற்கிணங்க நோய்கள் வராமல் தடுப்பதிலும், வந்தால் நீக்குவதுமாகிய மருத்துவக் குணங்கள் கொண்டதாகும். இவற்றைப் பயன்படுத்தி உணவு தயாரித்து பரிமாறப்படுவதைப் பன்னாட்டு நெறியாகவும் கலாச்சார வழிகாட்டுதலாகவும் கொள்ள வேண்டும்.
வெங்காயம் உடல் சூட்டைத் தணிக்கும். வெந்தயம் உடலுக்கு இரும்புச் சத்தை வழங்குவதோடு குடலில் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்தும். பூண்டு ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தைக் கட்டுபடுத்தி, புற்று நோய் வராமல் தடுக்கவும் பயன்படும். உணவுக் கலாச்சாரம் உடலையும் மனதையும் காக்க உதவுகிறது.
நம்முடைய உணவில் அன்றாடம் கீரை வகைகள் ஏதேனும் ஒன்றை உணவாகக் கொள்ள வேண்டும் என்பது தமிழ்ப் பண்பாட்டு உணவுக் கலாச்சாரத்தில் இயற்கையாக அமைந்துள்ளது. நம்மைச் சுற்றியுள்ள கீரைகள் பயன்தரகக் கூடியதாகும்.
இவ்வாறு ஆடை ஆணிகலன்கள் அவற்றின் பெயர்கள், நாம் கொண்டாடும் விழாக்கள், அவற்றிற்கான மாதங்கள், காரணங்கள், இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதன் மூலம் மாணவர்களுக்கு மரபு வழிக் கலாச்சாரப் பண்பாட்டு நெறிகளின் வழி புதிய சொல்வளம் கிட்டும்.
கேட்டல் திறனையும் பேச்சுத் திறனையும் எழுத்துத் திறனையும் வளர்த்தல்
இன்றைய உலகமயச் சூழலில் சிங்கப்பூரைப் போன்ற நாடுகளில் கற்பித்தலில் கேட்டல், பேசுதல், எழுதுதல் முதலிய திறனையும் சிந்தனைத் திறனையும் வளர்த்தல் மொழியாசிரியரின் மிகப் பெரிய கடமையாகும், இதனைக் கையாள்வதில் தேர்ந்த கல்வியும், புதுமையான சிந்தனையும், கடின உழைப்பும் எப்போதும் நிறைந்தவர்களாக மொழியாசிரியர்கள் விளங்க வேண்டும். மாணவர்களிடம் மேற்கண்ட திறன்களை வளர்க்க மொழியாசிரியர்கள் நன்கு திட்டமிட வேண்டும்.
எழுத்துத் திறன்
பின்வரும் வாக்கியங்களைக் கவனமாகப் படிக்கவும். இதில் கூறப்படும் தமிழ் மாதம் தொடர்டபான செய்திகளை ஏற்றுக் கொள்கிறாயா? உன் சரியான பதிலை சரி என்றால் சரி என்ற இடத்தில் சரி என்பதற்கான குறியீட்டையும், தவறு என்றால் தவறு என்பதற்கான குறியீட்டையும் குறியிடவும்.
என்ன நினைக்கிறாய்? (கேள்விகள் சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்டது)
1 தமிழ் மொழி மாதம் இந்த ஆண்டு (2010) ஏப்ரல் மாதம் கொண்டாடப்பட்டது.
2 தமிழ் மாதத்தின் கருப்பொருள் தமிழில் பேசுவோம் தமிழை நேசிப்போம்.
3 தமிழ் மொழி மாதத்தை அமைச்சர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.
4 தமிழ் மொழி மாதத்தில் நம் மூத்த அமைச்சர் திரு, லீ குவான் யூ கலந்து சிறப்பித்தார்.
5 தமிழ் மொழி மாதத்தில் சிங்கப்பூரில் இருக்கும் அனைத்துத் தமிழ் அமைப்புகளும் பங்கு பெற்றன.
இதைப் போன்ற சிங்கப்பூரில் நடைபெறும் உள் நாட்டு நிகழ்சிசகளை மாணவர்கள் எந்த அளவிற்குப் புரிந்து வைத்தள்ளனர் என்பதை அறிவதற்கு இதைப் போன்ற பயிற்சிகள் துணை நிற்கும். அதோடு சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் மாதம் பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதுக என்று மாணவர்களிடம் கூறிக் கட்டுரை எழுத வைக்கலாம். இதனால் எழுத்துத் திறனும் வளரும் நாட்டு நடப்பையும் எளிதில் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
கேட்டல் திறன்
அண்ணா போன்ற அறிஞர்களின் சொற்பொழிவுகளை, கலைஞர் எழுதிய கதை வசனம் கொண்ட திரைப்படங்களை ஒலிநாடா வழியாக மாணவர்களைக் கேட்கச் செய்தல்.
இலக்கிய மன்றம் ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டோர் ஆற்றிய உரையைக் கேட்டுக் குறிப்பெடுக்கச் செய்தல்.
பாரதி, பாரதிதாசன் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் முதலியவற்றைக் கேட்கச் செய்தல்.
உள்ளூர் வானொலியைக் (சிங்கப்பூர்) கேட்கச் செய்தல், அதில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுக்கச் சொல்லலாம்.
உள்ளூர்த் தொலைக்காட்சியான (சிங்கப்பூர்) வசந்தம் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் குறிப்பெடுத்து வரச்சொல்லலாம். தொலைக்காட்சி நிகழ்சியில் செய்தி வாசிப்பின் போது இடம் பெறும் புதுப்புது ஆங்கிலச் சொற்களுக்காகான மொழி பெயர்ப்புகளைப் பார்த்து மாணவர்கள் குறித்துக் கொள்ளும் போது இயற்கையாகவே சொல்வளமும் மொழி வளமும் பெருகுகிறது.
பேச்சுத் திறன்
ஊர்த்திருவிழா, விலங்குகள், ஆறுகள் பற்றி மாணவர்களை உரையாற்றக் கூறுதல்.
மாணவர்கள் விரும்பும் விளையாட்டு, பார்த்த நிகழ்ச்சி பற்றி விளக்கிக் கூறச் செய்தல்.
ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அது பற்றிய நிறை குறைகளைப் பட்டிமன்ற பாணியில் பேச வைத்தல்.
தலைப்புக் கொடுத்து அதுபற்றி எளிதாக விளக்கிக் கூறச் செய்தல்.
வகுப்பறைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை தொகுத்துக் கூறச் செய்தல்.
மேற்கண்ட முறைகள் மூலம் மாணவர்களின் பேச்சுத்திறனை நன்றாக வளர்க்க இயலும். இவற்றில் பழமொழிகள், புராணக் கதைகள் இவற்றில் காணப்படும் ஆழமான கருத்துக்களை விளக்கிக் கூறச் செய்தல் நல்லது.
சிந்தனைத் திறன்
பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் நீதிக் கதைகள் முதலிய கதைகளிலும் இராமாயணம், மகாபாரதம், இராவண காவியம், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு முதலிய கதைகளிலும் வரும் ஆழமான சிந்தனைகளை மாணவர்கள் கலந்துரையாடல் செய்தல் மூலம் அவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்க முடியும். நாட்டுப்புறக் கதைகளிலும் பண்பாட்டு நெறிகளைத் தேடல் நலம் பயக்கும்.
காப்பியங்களில் பண்பாட்டு நெறி
ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் தமிழ்ப்பண்பாட்டு நெறிகள் மிகுதியாகப் பொதிந்துள்ளன. கோவலன் கண்ணகி இருவரும் உணவு சமைத்து உண்ட நிகழ்வு, மனையறம் படுத்த காதையில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது, இதில் தமிழ்ப் பண்பாட்டு வழியில் இலையில் உணவு பரிமாறப்படுவதும், உணவிற்குப் பின் வெற்றிலை மடித்துக் கொடுத்த நிகழ்வும் இனிய பண்பாட்டுத் தகவல்களாகும். இவ்வாறு மணிமேகலையில் அமுதசுரபியின் மூலம் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய செய்தி, பசித்தவர்க்கு உணவு வழங்க வேண்டும், அதாவது யாவருக்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்ற திருமூலரின் சிந்தனை, மணிமேகலையில் காட்டப்படுகிறது.
முடிவுரை
தாய்மொழியாம் தமிழ்மொழி ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழி என்பதால் அவற்றில் ஏராளமான பண்பாட்டு நெறிகளும் பழக்க வழக்கங்களும் மரபுத் தொடர்களும், இணைமொழிகளும், பழமொழித் தொடர்களும் நிரம்பிக் கிடக்கின்றன. அவற்றை புதுச் சிந்தனையுடன் இன்றைய மாணவர்களின் உள்ளம் ஏற்கத்தக்க வகையில் சூழல்களை ஏற்படுத்திப் பழமையின் சிறப்பும் புதிய வரவுகளின் பயன்பாட்டையும் மொழியாசிரியர்கள் நன்குணர்ந்து மாணவர் சமூகம் பயன் தரத்தக்க வகையில் அவற்றைப் பயிற்றுவித்தால் பண்பாட்டின் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட மொழிக்கல்வி தழைத்துப் பயன்தரும். எளிமையிலிருந்த கடினம் (Easy to difficult) என்ற முறைப்படி ஆசிரியர்கள் மாணவர்களக்குக் கற்பித்தால் மாணவர்களுக்குப் பாடங்கள் சுமையாக இல்லாமல் சுவையாக அமையும். இனிய எளிய வழியில் தமிழைக் கற்பிப்போம் எளிதில் அதனை மாணவர்கள் மனதில் பதியச் செய்வோம்.
துணை நூல்கள்
1. 1. சிற்பி பாலசுப்ரமணியம், உலகத் தமிழாசிரியர்களுக்கான பண்பாட்டுச் சிறப்புப் பயிற்சி வகுப்பு, உரைக்கோவை, சென்னை, முதற்பதிப்பு 2004
2, தட்சிணாமூர்த்தி அ, தமிழர் நாகரிகமும் பண்பாடும், சென்னை, மறுபதிப்பு, பிப்ரவரி 1999.
3. அனந்தகுமார்.பா, இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும், நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, 2004.
4. வைத்தியலிங்கம் செ, தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1996.
5. விமலானந்தம் மது.ச. பேராசிரியர் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, டிசம்பர் 1987.
6. சி,பாலசுப்பிரமணியம் டாக்டர், தமிழ் இலக்கிய வரலாறு, நறுமலரப் பதிப்பகம், சென்னை, பதினாறாம் பதிப்பு, 1983.
7. Tamil culture handbook, International Tamil heritage foundation. Singapore, 2000
8. குறிஞ்சி உயர்நிலைப் பாடநூல், பாடதிட்டட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு கல்வி அமைச்சு, சிங்கப்பூர், 2003.
9. தமிழ் மொழிப்பாடத்திட்டம், தொடக்கநிலை, பாடதிட்டட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு கல்வி அமைச்சு, சிங்கப்பூர், 2002.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|