பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
38. வீடு
மனிதன் மகிழ்வாக வாழ உணவு, உடை, உறையுள் இவை மூன்றும் தேவை. இவற்றை வாழ்வின் அடிப்படைத் தேவைகள் என்பர். இத்தேவைகள் மனிதனுக்கு நிறைவேறினால் மகிழ்ச்சி ஏற்படும். இதில் ஏதாவதொன்றில் குறைவு நேரிடின் மன அமைதியின்மை ஏற்படும். உறையுளை இருப்பிடம் என்றும் வீடு என்றும் குறிப்பிடுவர். வீடு என்பதற்கு குறிப்பாகப் பல்வேறு நிலைகளில் வேறு பொருள் வழங்கப்பட்டு வருகின்றன.
வீடு என்பதற்குச் சிலர் “வீடுபேறடைதல், முக்தி அடைதல், இறைவனது திருவடியடைதல்” என்றும் பொருள் கொள்வர். ஆனால் பழமொழிகளில் வீடு என்பது மனிதன் குடியிருக்கும் இல்லத்தையே குறிக்கின்றது. வீடு குறித்த பழமொழிகள் மக்களுக்குப் பண்பாட்டு நெறிகளைப் புகட்டுவனவாக அமைந்துள்ளன,
வீடும் – யானையும்
வீடும், யானையும் செயல்களில் ஒன்று போல் காணப்படுகின்றன. வீடும் யானையும் நிற்கும். நின்று கொண்டேதான் யானை தூங்கும். பெரும்பாலும் படுப்பது என்பது குறைவு. யானை அதிகமாக இரையுண்ணும் இயல்புடையது. தன்னுடைய உடலை விட அதிகமாக இரையைத் தின்னும் தன்மை கொண்டது. யானைக்குத் தீனி போடுவது என்பது யாராலும் முடியாது, வசதி படைத்தோரால் மட்டுமேதான் போடமுடியும். யானை எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கும், அசைந்து கொண்டே இரை திண்ணும் இயல்புடையது.
யானையைப் போன்று வீடும் அதிகமாகச் செலவு வைக்கும் தன்மையுடையது ஆகும், அசையாது செலவினை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். வீட்டில் ஒரு பழுது ஏற்பட்டால் அப்பழுதை நீக்க முற்படும் போது அதைத் தொடர்ந்து பல்வேறு வேலைகள் வந்து கொண்டே இருக்கும், நாம் ஒரு கணக்குப் போட்டுக் கொண்டு வீட்டு வேலையைச் செய்யத் தொடங்கினால் நாம் போட்ட கணக்கையும் மீறி செலவாகிவிடும். இதனை,
“யானை அசைஞ்சு திங்கும்
வீடு அசையாமத் திங்கும்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. கூடுதலான செலவினை யானையும் வீடும் ஏற்படுத்தும் என்ற உலக நடைமுறையை இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது.
வீடு கட்டுதலும் திருமணமும்
வீடு கட்டுதல் என்பதும் திருமணம் முடித்தல் என்பதும் குறிப்பிடத்தக்க செயல்களாகும். ஒவ்வொன்றாகப் பார்த்துச் செய்ய வேண்டிய செயல்கள் இரண்டிலும் நிறைய உள்ளன. கல், மணல், செங்கல், வேலையாட்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வாங்கி வீட்டினைக் கட்டி முடிக்க வேண்டும். இல்லையேல் வீட்டைக் கட்டுதல் இயலாது. அதுபோன்று திருமணம் என்பது பெண்பார்ப்பது, பேசிமுடிப்பது, உறவுகளை அழைப்பது எனத் தொடர்ந்து ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். அப்பபோதுதான் யாரையும் மனம் நோகாது மகிழ்வுடன் திருமணத்தை முடிக்க முடியும்.
ஏதாவது ஒன்றில் குறை ஏற்படுமானால் மன அமைதி குலைந்து விடும். அதனால் இரண்டு வேலைகளிலும் கவனமாகச் செயல்படவேண்டும் என்ற விழிப்புணர்வை,
“வீட்டைக் கட்டிப் பார்
கல்யாணத்தைப் பண்ணிப் பார்”
என்ற பழமொழி நவில்கிறது.
இரு வேலைகளையும் ஒரு மனிதன் செய்கின்ற போது முழுமையான ஒரு அனுபவம் அவனுக்குக் கிடைக்கும் என்பதை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் உணர்த்தி இருப்பது நோக்கத்தக்கதாகும்.
கட்டிய வீடும் குறைபாடும்
வீடுகட்டி அதில் குடிபோவதற்கு முன்னர் உறவினர்களை அழைத்து அவ்வீட்டில் விருந்து வைப்பதென்பது நமது பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. சிலர் புதுமனை புகுவிழாவிற்கு வருகை தருகின்ற போது புதுவீட்டைப் பார்த்து, இதை அப்படிச் செய்யலாம், இப்படிச் செய்யலாம், இது தவறு இருக்கிறது, அதில் தவறு உள்ளது என்று குறைகூறிக் கொண்டே இருப்பர். அவ்வாறு கூறுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
வீடு கட்டியவருக்குத்தான் அதனுடைய கஷ்ட நஷ்டங்கள் தெரியும். வீட்டைப் பார்க்க வந்தவருக்கு அது குறித்து எதுவும் தெரிய வாய்ப்பில்லை. நன்கு கட்டியிருக்கிறாரா? என்று பார்த்து வாழ்த்த வேண்டுமே தவிர ஆலோசனை எனும் பெயரில் பிறர் மனம் புண்படும் வண்ணம் எதையாவது கூறிக் கொண்டிருத்தல் கீழ்த்தரமான செயலாகும். இதனை யாராயிருந்தாலும் தவிர்த்தல் வேண்டும் என்பதனை,
“கட்டிய வீட்டுக்கு நொட்டனம் சொல்லாதே”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. பிறர் மனம் புண்படுமாறு எதனையும் கூறக்கூடாது என்பது இப்பழமொழியின் உள்ளீடாக உள்ளது.
கட்டினவன் கட்டாதவன்
யாருக்கும் எதுவும் நிலையானது கிடையாது, நிலையானது என்று கருதினால் அது அறிவீனமான செயலாகும், இதனை உணர்ந்து மனிதன் வாழ்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும். இதனை விடுத்து ஆணவத்துடன் நடந்தால் அது அழிவிற்கு வித்திடும், சொந்தமாக வீட்டைக் கட்டியவன் அந்த ஒரு வீட்டிலே மட்டுமே குடியிருப்பான். ஆனால், சொந்த உறைவிடம் இல்லாதவன் எங்கு இடம் கிடைக்கின்றதோ அங்கு சென்று தங்கிக் கொண்டிருப்பான்.
மனிதனுடைய வாழ்வும் அது போன்றதே ஆகும். மனிதன் வாழ்க்கைப் பாதையில் பயணித்துக் கொண்டே செல்லவேண்டும். பாதையை விட்டு விலகுதல் கூடாது. விலகினால் துன்புற நேரிடும். இத்தகைய நன்னெறியை,
“கட்டினவனுக்கு ஒருவீடு
கட்டாதவனுக்குப் பலவீடு”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. உடையவனுக்கு ஓரிடம் மட்டுமே சொந்தம். இல்லாதவனுக்கு எல்லா இடமும் சொந்தம், கல்லாதவனுக்கு அவனுடைய இருப்பிடத்தில் மட்டுமே மதிப்பு. ஆனால் கற்றவனுக்குச் சென்ற இடம் எல்லாம் மதிப்பு என்ற பொருளடிப்படையிலும் இப்பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வீடும் காடும்
மனிதர்களின் வாழ்க்கை நிலையற்றது. நிலையற்ற வாழ்வினை, மனிதன் நிலைபேறுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை பொருளுடையதாக (அர்த்தமுள்ளதாக) அமையும். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்தையும் செய்து முடித்தல் வேண்டும். காலங்கடந்து எதனையும் செய்ய முனைந்தால் செயல் நிறைவேறாது. இதனை,
“வீடு போ போங்குது காடு வா வாங்குது”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
வயது முதிர்ந்து உடலில் தளர்ச்சி ஏற்பட்டு விட்டால் வீட்டிலே உள்ளவர்கள் யாரும் வயதானவரை மதிக்க மாட்டார்கள். கீழ்த்தரமாகவும் கேவலமாகவும் நடத்துவர். எப்போது போவார் (இறப்பார்) என்று நினைக்கத் தொடங்கி விடுவர். அதனால் அனைத்துக் கடமைகளையும் முடித்துக் கொண்டு உடல் நலம் நன்றாக இருக்கின்ற போதே நோய்நொடி இன்றி இறந்து விட வேண்டும், அதுவே நல்லது. இல்லை என்றால் பிறர் நம்மை மிகவும் இழிவாக நடத்த முற்படுவர். முதுமையில் இறப்பை நோக்கி நாம் நகர்ந்து வாழ்வதால் சுடுகாடானது எப்போது வருவான் என்று முதியோரை அழைத்துக் கொண்டே இருக்கும். உறவினர்களின் மனநிலையையும் உலக வாழ்க்கையின் இயல்பினையும் விளக்குவதாக மேற்குறித்த பழமொழி அமைந்திலங்குகின்றது.
வீடும் வாயிற்படியும்
வீடுகள் பலவாக இருப்பினும் அவ்வீட்டில் உள்ளோரின் மனநிலைகளும் பலவாகவே அமைந்துள்ளன. எண்ணங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொருவரிடத்திலும் வேறுபட்டு அமைகின்றன. எண்ணங்கள் ஒருவருக்கொருவர் ஒன்று போலிருப்பது கிடையாது, மாறுபட்டே காணப்படுகின்றது.
இவ்வெண்ண மாறுபாடுகளால் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களிடையே பிரச்சனைகள் எழுகின்றன. பிரச்சனைகள் இல்லாத வீடுகள் உலகில் இல்லை எனலாம். வீட்டில் (குடும்பத்தில்) பிரச்சனைகள் இருக்கின்றதே என்று மனக் கவலைப்படல் கூடாது, அவ்வாறு மனக்கவலையுற்றால் உடலில் நோய்கள் உருவாகிவிடும். இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும். பிரச்சனைகளைக் கண்டு கலங்காது அவற்றை எதிர்நோக்கி அதிலிருந்து மீளுதல் வேண்டும். இதனை,
“வீட்டுக்கு வீடு வாசப்படிதான்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
வீடு என்பது குடும்பத்தைக் குறிக்கும். அதாவது; வீட்டில் இருக்கின்ற குடும்ப உறுப்பினர்களைக் குறிக்கும். வாசல்படி என்பது பிரச்சனைகளைக் குறிக்கும். பிரச்சனைகள் என்பது குடும்பத்தில் இருப்பதென்பது இயற்கை. அதிலிருந்து மீண்டு பிரச்சனைகளைச் சமாளிப்பதே வாழ்க்கையின் இன்பமே அடங்கியுள்ளது என்பதை இப்பழமொழி விளக்கி நமக்குத் தன்னம்பிக்கையையும் ஊட்டுவதாக உள்ளது.
வீட்டுக்குரிய மரம்
வீட்டை மனை, இல் என்றும் குறிப்பிடுவர். வீடு கட்டுவதற்கும் கட்டிய வீட்டில் வைப்பதற்கும் சிலவகையான மரங்களையே பயன்படுத்துதல் வேண்டும். அதுவே நல்லது என்பர். வீட்டில் உள்ள கதவுநிலை காலதர் (சாளரம் - ஜன்னல்) ஆகியவற்றிற்கு வேப்ப மரத்தையே பயன்படுத்துதல் வேண்டும். இவ்வேப்ப மரத்தை நாட்டுத் தேக்கு என்று குறிப்பிடுவர். அதுபோன்று வீட்டிற்குப் பின்புறம் முருங்கை மரம் வைத்து வளர்த்தல் வேண்டும். இம்முருங்கை மரத்தை வளர்ப்பதால் உண்பதற்குக் கீரை, காய் ஆகியவை கிடைப்பதுடன் நிலத்தடிநீரும் தூய்மையடையும். அதனால்தான் நமது முன்னோர்கள் வேம்பினைப் புனிதமாகக் கருதினர். வீடுகட்ட வேம்பினையும் வீட்டில் வளர்க்க முருங்கையையும் பயன்படுத்துதல் வேண்டும் என்பதை,
“மனைக்கு வேம்பு மண்ணுக்குக் கொன்னை”
“வீட்டுக்கு முருங்கை மரம்
வெயிலுக்கு வேப்பமரம்”
என்ற பழமொழிகளின் வாயிலாகக் குறிப்பிட்டுள்ளனர்.
வெயில் காலத்தில் வேம்பின் நிழல் மிகுந்த குளிர்ச்சியைத் தரும். நோய்க் கிருமிகளைப் போக்கும். அதனாலேயே வேப்பமரத்தை நிழல் தரும் மரமாகவும் வளர்க்க வேண்டும் என்று பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டனர்.
கண்ணாடி வீடு
குடும்பத்திலுள்ள பிரச்சனைகளைப் பேசியே தீர்க்க வேண்டும். அதுவே நல்லது. அதை விடுத்து நானா? நீயா? என்று பார்த்துக் கொண்டிருந்தால் உறவுகளும் குடும்பமும் சீர்குலைந்துவிடும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு செயல்களையும் கூடச் சிலர் பெரிதுபடுத்துவர். அவ்வாறு பெரிதுபடுத்தினால் மனத்துன்பம் ஏற்படும். குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படும். அதனால் ஒவ்வொருவரும் தங்களுக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் வேண்டும். அதுவே சிறந்த ஒன்றாகும். அதனை விடுத்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டால் குடும்பத்தின் மதிப்பு குலையும். சமுதாயத்தில் உள்ளவர்கள் குடும்பத்தவரைப் பார்த்துப் பழிப்பர். இதனை உணர்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதை,
“கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்துகிட்டுக்
கல்லெறிஞ்ச கதைதான்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
(கண்ணாடி வீடு – குடும்ப உறுப்பினர்கள், கல் எறிதல் – ஒருவருக்கொருவர் சண்டையிடல்)
கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிந்தால் கண்ணாடி முழுவதும் உடைந்து சிதறிவிடும். அதனால் கல்லெறிவதைத் தவிர்த்தல் வேண்டும். அதாவது குடும்பத்திலேற்படும் பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் பெரிதுபடுத்திக் குடும்பத்தைச் சிதைக்காது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்தல் வேண்டும் என்று இப்ழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் பண்பாட்டு நெறியைப் பகர்ந்துள்ளனர்.
நன்கு திட்டமிட்டு வாழ்ந்து, வீட்டினைக் கட்டி குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதை வீடு குறித்த பழமொழிகளின் வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்துகின்றனர். முன்னோர்கள் கூற்றுவழி நடந்து வீட்டு நலம் காத்து வாழ்வோம். வீடும் மகிழ்வுறும். நாடும் மகிழ்வுறும். எங்கும் வளம் பெருகும். வளமுடன் வாழ்வோம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.