பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
39. காரியம்
தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் இடத்திற்கேற்றாற் போன்று ஒவ்வொரு பொருள் வழங்கப்படுகிறது. இது தமிழின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று சொற்கள் தமிழில் பலவாறு வழங்கப்டுவதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வழங்கப்படும் சொற்களுள் ஒன்றே காரியம் என்ற சொல்லாகும். இக்காரியம் என்பது வழக்கில் இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமக்கடன்களைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டு வருவது நினைத்தற்குரியது. இத்தகைய இறப்புச் சடங்கினைப் பெரிய காரியம் என்று குறிப்பிடுவர்.
பெரிய காரியம் என்பது இறப்பினைக் குறித்தும் மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது. இறப்பு வீட்டிற்குச் சென்று வந்தவரைப் பார்த்து எங்கே போய்விட்டு வருகிறீர்கள் என்று கேட்டால் அவர் ‘நான் ஒரு பெரிய காரியத்திற்குச் சென்று வருகிறேன் என்று கூறுவார். கோவிலில் செய்யப்படும் செயல்முறைகளைக் கோவில் காரியம் என்று குறிப்பிடுவர், கோவிலில் நடைமுறைச் செயல்களைச் செய்பவர்களைக் காரியக்காரர்கள் என்று கூறுகின்றனர்.
பாரதி புதுமைப்பெண்ணைப் பற்றிக் குறிப்பிடும்போது,
“காதலொருவனைக் கைபிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்தே”
என்று காதலனின் செயல்களுக்கு உதவி செய்து வாழவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
காரியம் என்பது – செயல் என்றும் காரியம் செய்பவர் – காரியக்காரர் என்றும் வழங்கப்படுவது நோக்கத்தக்கது. இக்காரியம் என்ற சொல்லை வைத்துப் பல பழமொழிகள் மக்களிடையே வழக்கில் வழங்கி வருகின்றன. அவை வாழ்வியல் நெறிகளை மக்களுக்குப் புகட்டுவனவாக அமைந்துள்ளன.
ஆரியக் கூத்தும் – காரியமும்
மனிதர்களுள் சிலர் எந்தச் சூழலிலும் தங்களது செயல்களிலேயே கவனமாக இருப்பர். அத்தகையவர்களைக் காரியக்காரர்கள் என்பர். அவர்கள் மனதில் தங்களின் செயலையே நினைத்துக் கொண்டிருப்பர். இவ்வாறு இருப்பதைச் சிலர் தமது கொள்கையாகக் கருதுவர். நமது செயல்களில் விழிப்புணர்வுடன் இருப்பதென்பது வேறு தன்னலத்துடன் இருப்பதென்பது வேறு. எது எப்படி இருப்பினும் அனைவரும் கவனமுடனும் விழிப்புடனும் இருப்பதே வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்குரிய வழியாகும்.
இத்தகைய விழிப்புணர்வுச் சிந்தனையை,
“ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இருக்கணும்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
ஆரியக்கூத்து என்பது மூங்கில் கழிகளை இடைவெளிவிட்டு ஊன்றி அதில் கயிற்றினைக் கட்டி அக்கயிறின் மேல் சிறு மூங்கில் கழியை எடுத்துக் கொண்டு நடப்பதும் அக்கயிறின் மேல் நின்று வித்தைகள் செய்து காட்டுவதையும் குறிக்கும். இவ்வாறு கயிற்றில் நடக்கும் போது தரையில் அமர்ந்து சிறு முரசினை ஒலிப்பர். இந்த ஆரியக் கூத்து கண்ணையும் மனதையும் ஒருங்கே கவரும் தன்மை கொண்டதாகும். இதுபோன்று எது நிகழ்ந்தாலும் நாம் விழிப்புணர்வுடன் இருந்து செயலாற்ற வேண்டும் (காரியத்தில் கண்ணாக இருத்தல்) என்ற விழிப்புணர்வுச் சிந்தனையை இப்பழமொழி மொழிகிறது. எப்போதும் கவனமாகச் செயல்படுபவன் எந்தவித இடையூறுகளுக்கும் ஆளாக மாட்டான் என்பதையும் இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் மொழிந்துள்ளனர்.
பதறாத காரியம்
எந்தச் செயலைச் செய்தாலும் திட்டமிட்டுச் செய்தல் வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும்? எதற்காக, யாருக்காக, ஏன் என ஒவ்வொன்றாக சிந்தித்துச் சிந்தித்து விழிப்புணர்வுடன் எந்த ஒரு செயலையும் செய்தல் வேண்டும். அவ்வாறு சிந்தித்துச் செயலாற்றவில்லை எனில் எந்த ஒரு செயலையும் மனநிவைடன் முடித்தல் முடியாது. வள்ளுவரும்,
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு”
என்று குறிப்பிடுகின்றார்.
மனஅமைதியுடன் திட்டமிட்டுப் பொறுமையாக ஒரு செயலைச் செய்தால் அச்செயல் முழுமையாக வெற்றியடையும். மனப் பதற்றத்துடனும் முடிக்க வேண்டும் என்ற அவசரத்துடனும் ஒரு செயலை நாம் செய்தால் அது முழுமை பெறாதுபோய்விடும். அவரப்பட்டு எச்செயலையும் நாம் செய்ய முயலக்கூடாது. இத்தகைய வாழ்வியல் நெறியை,
“பதறாத காரியம் சிதறாது”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
பதற்றமின்றி மன அமைதியுடன் திட்டமிட்டுச் செயல்படும் செயலானது எவ்விதக் குறையுமின்றி சிறப்பாக நிறைவுளூம். அதனால் மனப்பதற்றமடையாது திட்டமிட்டுச் செயல்களைச் செய்ய வேண்டும் என்பதை இப்பழமொழி நமக்கு அறிவுறுத்துகிறது.
பதற்றம் அடையும்போது மனமும் நமது எண்ணங்களும் ஒரு நிலைப்படாது. அதனால் நமது செயல்களில் கவனம் செலுத்த முடியாது. கவனச் சிதறல் ஏற்படும். உடல் நலத்தையும் இப்பதற்றமானது பாதிக்கும். அதனால் எந்த ஒரு செயலையும் பதற்றமடையாது திட்டமிட்டுச் செய்தல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை நமது முன்னோர்கள் இப்பழமொழி வாயிலாக மொழிந்துள்ளனர்.
காரியமும் கழுதையும்
மனிதர்களில் பலர் மனக்கோணல் உடையவர்களாக உள்ளனர். யார் எக்கேடுகெட்டுப் போனாலும் பரவாயில்லை. தன்னுடைய காரியம் (செயல்) நிறைவேறினால் போதும் என்று கருதும் மனிதர்களே இன்று அதிகம். தனது செயல்கள் நிறைவேறும் வரையில் மற்றவர்களிடம் பேசி நடித்துக் காரியத்தை முடித்துக் கொள்வர். அவ்வாறு காரியம் நிறைவேறியவுடன், “நீங்க யாரு?” எனக்குத் தெரியாதே?” என்று கேட்டு அதிர்ச்சிக்குள்ளாக்குவர்.
இத்தகையவர்கள் உண்மையானவர்கள் கிடையாது. நட்பு, உறவு ஆகியவற்றிற்குத் துரோகம் இழைக்கும் துரோகிகள் ஆவர். இவர்களின் இயல்பை,
“உள்ளத்தில் ஒன்று வைத்துப்
புறத்திலே ஒன்றைச் செய்து
நல்லவன்போல் நடிப்பார் ஞானத்தங்கமே
அவர் நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே”
என்று புலவரொருவர் குறிப்பிடுவர்.
இத்தகையோரைப் பாரதியார் நடிப்புச் சுதேசிகள் என்று குறிப்பிடுவார்.
இவர்களின் இழி செயலை,
“காரியம் முடியறவரைக்கும் கழுதையும் காலப்புடினானாம்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
தனக்கு வேண்டியவை நடந்து முடிகின்ற வரையில் இத்தகைய இழிகுணம் கொண்டோர் நடித்துக் கொண்டிருப்பர் என்று இப்பழமொழி கூறுகிறது. யாராக இருந்தாலும் அவர்களை அடுத்திருந்து அவர்களைக் கொண்டு நமது குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அவன் எத்தகைய இழிகுணம் கொண்டோனாக இருந்தாலும் அது குறித்துக் கவரையுறாமல் அவரைப் பயன்படுத்திக் கொண்டு இலக்கை அடைய வேண்டும். இதற்காகத் தயங்கக் கூடாது என்று வேறு வகையிலும் இப்பழமொழிக்குப் பொருள் கூறுவர்.
குறிக்கோள் நிறைவேற வேண்டுமே தவிர அது யாரால் முடிந்தாலும் சரி. எப்பாடுபட்டாவது ஒருவன் தனது இலக்கை அடைதல் வேண்டும் என்றும் பொருள் கொள்வதற்கு இப்பழமொழி இடம் தருகிறது.
நல்ல செயல்களைச் செய்து நல்லோர் போற்ற வாழ வேண்டும் என்ற பண்பாட்டுக் கூறுகளை இப்பழமொழிகளின் வாயிலாக நமது முன்னோர்கள் எடுத்துரைத்துள்ளனர். நாளும் நற்செயல்களைச் செய்வோம்: நலமுடன் வாழ்வோம்; வாழ்வில் வசந்தம் வீசும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.