பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
63. விடுதல்
விடுதல் என்பது விடு என்பதன் வினையடியாகப் பிறந்த சொல்லாகும். விடுதல் என்பது கைவிடுதல், பழக்கத்தை விட்டுவிடுதல், நீக்குதல் என்ற பொருள்களில் வழங்கப்படுவது நோக்கத்தக்கது. நீக்கப் பொருள்களிலேயே இச்சொல்லின் பொருள் அமைந்துள்ளது. விடுதல் என்ற சொல்லை வைத்து நம் முன்னோர்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தக் கூடிய பல்வேறு பழமொழிகளைக் கூறியுள்ளனர். அப்பழமொழிகள் பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை நமக்கு விளக்குவதாக அமைந்துள்ளது.
தும்பும் வாலும்
நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டுமானால் விரைந்து சரியான நேரத்தில் சரியான நபர் மூலம் செய்தல் வேண்டும். காலம் தாழ்த்திப் பின்னர் செய்வோம் என்று இருந்து விட்டால் அதனைச் செய்ய முடியாமல் போய்விடும். பின்னர் செய்தாலும் அதனை வெற்றிகரமாகச் செய்தல் என்பது இயலாது. அதனைப் போன்றே ஒருவர் தவறு செய்கின்றார் என்று தெரிந்தால் அவரைக் கண்டித்து அவரது தவறைத் திருத்துதல் வேண்டும். சரியான நேரத்தில் அவரைத் திருத்தினால் அவர் தனது தவறை உணர்ந்து நல்வழியில் செல்வார்.
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டால் அவரை நல்வழிப்படுத்துதல் என்பது இயலாமல் போய்விடும். அதனால் அவர் திருந்தாமலே போய்விடக்கூடும். சரியான நேரத்தில் அவருக்கு அவரது தவறினைக் கூறி அவரைத் திருத்துதல் வேண்டும். அவர் போக்கிற்கு விட்டுவிட்டு இடையில் அவரைத் திருத்தலாம் என்றால் குன்று முட்டிய குருவியின் கதையினைப் போன்று ஆகிவிடும். அதனால் தவறு கண்டபோது, அதனைத் தயங்காது சுட்டிக்காட்டி ஒருவரைத் திருத்துதல் வேண்டும் என்பதை,
“தும்பை விட்டுட்டு வாலப் பிடிக்கிற கதைதான்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இப்பழமொழியுடன்,
“செயத்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க அல்ல
செய்யாமை யானும் கெடும்”
என்ற திருக்குறள் ஒப்புநோக்கத் தக்கதாக உள்ளது.
ஒரு மாட்டினை எளிமையாகப் பிடிப்பதென்றால் கயிற்றைப் பிடித்துப் (தும்பை) பிடித்தல் வேண்டும். அதைவிடுத்து வாலைப் பிடித்து மாட்டைப் பிடிக்கின்றேன் என்று முயன்றால் அந்த மாடு ஓடுமே தவிர, அதனை எளிதில் பிடிக்க இயலாது. அதுபோன்றே எந்த ஒரு செயலையும் எளிதில் முடிக்கக் கூடிய தருணத்தில் முடிக்க வேண்டுமே தவிர, அதனை விடுத்து காலமல்லாத காலத்தில் அதனை முடிப்பதற்கு முயலக் கூடாது. அவ்வாறு முடிக்க முயல்வது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் செயலைப் போன்றதாகும் என்ற வாழ்க்கை நெறியை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
விளாம்பழமும் ஆசையும்
மனிதன் ஆசையை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். எதிலும் பற்றில்லாது நடந்து கொள்ள வேண்டும். அதாவது தாமரை இலைத் தண்ணீர் போன்று இருந்துவிட்டால் அவனுக்கு எந்தவிதமான துன்பமும் நேராது. மனிதன் விளாம்பழத்தைப் போன்ற வாழ்வை வாழ வேண்டும்.
விளாம்பழமானது காயாக இருக்கும்போது அதன் சதைப் பகுதி ஓட்டுடன் ஒட்டி இருக்கும். அக்காயானது முதிர முதிர அந்த சதைப் பகுதி ஓட்டுடன் ஒட்டாது போய்விடும். அதைப் போன்றே நமது வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வயது அதிகரிக்க அதிகரிக்க மனம் பக்குவப்பட்டு உலக பந்தங்களிலில் இருந்து விடுபடுதல் வேண்டும். அப்போதுதான் எந்தவிதமான துன்பங்களும் நம்மை அணுகாது. நமது ஆசை விளாம்பழம் போன்று இருக்க வேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை,
“விட்டதடா ஆசை விளாம்பழத்து ஓட்டேர்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
காடு-ஆடு, ஆறு-நாணல், ஊரு-நூலு, மூன்று-முதலி
வெள்ளாடு அடர்ந்த காட்டில் நுழைந்து விட்டால் அதனை விரைந்து அழித்துவிடும். எவ்வளவு அடர்த்தியான காடும் ஆடானது அழித்துவிடும். அதனால் வெள்ளாடுகளை காடுகளில் தானாக விடுதல் கூடாது. அதைப் போன்றே ஆற்றில் நாணல் அதிகமாக வளர்ந்தால் அது ஆற்றையே அழித்துவிடும். அதனால் அவ்வப்போது ஆற்றினைத் தூய்மைப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும். அப்போதுதான் ஆறானது தூர்ந்து போகாது இருக்கும். ஊரில் இருப்போரின் உள்ளத்தைக் கெடுத்து ஊரை இரண்டுபடுத்த வேண்டுமானால் பூணூல் அணிந்திருக்கும் புரோகிதரை ஊருக்குள் விடுதல் வேண்டும். ஏனெனில் அவர்கள் மூடநம்பிக்கையை வளர்த்தெடுத்து அவர்கள் பிழைப்பதற்குரிய வழிகளையெல்லாம் செய்துவிடுவர். மக்கள் ஒற்றுமையாக இராது மூடநம்பிக்கையைப் பின்பற்றி வாழ்க்கையை அழித்துக் கொள்வர். இவற்றையெல்லாம் கெடுக்க வேண்டுமானால் முதலியை விடவேண்டும். அவர்கள் இவையெல்லாவற்றையும் கெடுத்துவிடுவார்கள் என்று இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. இவை எதனால் கூறப்பட்டது என்பது மேலும் ஆய்வுக்கு உரியது. முதலி, நூல் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்கின்றதா? அல்லது இவை குறிச்சொற்களா? என்பதை முழுமையாக ஆராய்தல் வேண்டும்.
விந்தும் நோதலும்
இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் ஒருவன் அளவோடு உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து அளவுக்கதிகமாக பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பெண்பித்தனாகத் திரிந்தால் அவனது வாழ்க்கை சிதைந்துவிடும். அதனால் ஆசையை அடக்கித் தன் மனையாளுடன் மட்டுமே இருந்து வாழ்தல் வேண்டும். தவறான நடத்தை நடந்தால் வயது ஆக ஆக பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரும் என்ற இல்லற நெறியை,
“விந்து விட்டவன் நொந்து கெட்டான்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. அளவான வாழ்க்கை, அதிலும் பிறரைக் கெடுக்காத வாழ்க்கை, பற்றற்ற வாழ்க்கை உள்ளிட்ட வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை விடுதல் குறித்த பழமொழிகள் நமக்குத் தெளிவுறுத்துகின்றது.
பண்பட்டு வாழ்வோம்; பாரினில் உயர்வோம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.