மனிதனின் வாழ்வியற் பருவங்களுள் குறிப்பிடத்தக்க பருவங்கள் இரண்டு. அவையாவன1. இளமைப் பருவம், 2. முதுமைப் பருவம் என்பன ஆகும். இப்பருவங்களை வாழ்க்கையில் தொடக்கம், முடிவு என்று குறிப்பிடுவர். இவ்விரு பருவங்களும் வாழ்வில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் இயல்பை உடையன. இளம்பருவத்தில் பலர் சாதனையாளர்களாக விளங்குவதைப் போல முதுமைப் பருவத்திலும் உலகில் பலர் சாதனைகள் புரிந்துள்ளனர். சாதிப்பதற்கு வயதில்லை என்பதனையே இது காட்டுகிறது. நமது முன்னோர்கனள் இவ்விருபருவங்களையுப் பற்றியும் பல அரிய கருத்துக்களைப் பழமொழிகள் வழி கூறியுள்ளனர்.
இளமை
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் விரும்பும் பருவம் இவ்விளமைப் பருவமே ஆகும். இளங்குழவிப் பருவம், குழந்தைப் பருவம், இளமைப் பருவம்(குமரப் பருவம்) எனப் பருவங்கள் பல இருப்பினும் இவ்விளமைப் பருவம் மட்டுமே மனிதனி் மனதில் பல மாற்றங்களுக்கு வழி வகுக்கும் மகிழ்ச்சி நிறைந்த பருவமாகும். உடலும், உள்ளமும் விரைந்து செயல்படக் கூடிய பருவமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பருவத்தினை,
‘‘ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு’’
என்று வழக்கில் மக்கள் வழங்குவர்.
பாம்பு விரைந்து ஓடும் தன்மை வாய்ந்தது. அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடி அதனை மிதிக்கக் கூடிய வேகமும் துடிப்பும் மிக்கவர்கள் இளைமையுடையோரோ ஆவர் என்பதை மேற்கூறிய தொடர் நமக்குத் தெளிவுறுத்துகிறது.
இளமையின் வேகம்
இளம் வயதுதான் துணிச்சல் மிக்க வயது. உடலும் உள்ளமும் ஈடுகொடுத்துச் செயலாற்றக் கூடிய தன்மை இவ்வயதிலேயே ஒருவருக்கு வாய்க்கும் எனலாம். இவ்விளம்பருவம் எதைக் கண்டும் அஞ்சாது. இத்தகைய சிறப்புடைய இளமைப் பருவத்தின் தன்மையினை,
‘‘இளங்கன்று பயமறியாது’’
என்ற முதுமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.
இம் பசுங்கன்று எங்கும் ஓடித் திரியும். பயம் என்பது அறியாது. அதுபோன்றே இளம் வயதுடையவர்களும் எது குறித்தும் அஞ்சாது னெ்ன செய்துவிடும் பார்த்துக் கொள்வோம் என்று பிறர் செய்யத் தயங்குவதனையும் செய்து முடிப்பர்.
மகாபாரதத்தில் வரும் அருச்சுனன் மகன் அபிமன்யு இளம் வயதில் அனைவரும் வியக்கத்தக்க அஞ்சத்தக்கச் செயலான துரோணரின் வியூகத்தை பயமறியாது உடைத்து உள்ளே புகுந்து போரிட்டுப் பலரால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டான். இளமை பயமறியாது செயல்படும் தன்மை கொண்டது என்பதனை விளக்குவதாக இப்பழமொழி அமைந்திலங்குகிறது.
இளமையும் கல்வியும்
இளம் வயதில்தான் அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியும். பச்சை மரத்தில் ஆணி அடித்தால் எங்ஙனம் அதிவேகமாக இறங்குமோ அதுபோன்று இளம் வயதில் விரைவில் அனைத்தையும் கற்கலாம். மனமானது எதனையும் உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் வாய்ந்தது இளமைக் காலம். இதனைக் கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள்,
‘‘இளமையில் கல்’’
என்று பழமொழி வாயிலாகக் கூறியுள்ளனர். இளமையில் கற்கும் கல்வி அடிப்படையானது. இளமையில் கற்பது அனைத்திற்கும் அஸ்திவாரம் போன்றதாகும். அதனால்தான் நமது அரசும் உலகி்ல் உள்ள ஏனைய அரசுகளும் தொடக்க நிலைக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துக் கட்டாயக் கல்வியினைச் சட்டமாக்கியுள்ளன என்பது நோகத்தக்கது.
இளமை – உழைப்பு
இளமைக் காலத்தில் கடினமாக உழைத்தால் வாழ்வில் என்றும் உன்னத நிலையை அடையலாம். அவ்விளமைக் காலம் ஒருவனது வாழ்வில் பல்வேறுவிதமான முன்னேற்றங்களுக்கு மூல காரணமாக விளங்குகிறது. இதில் பாடுபட்டு உழைத்தால் அடுத்து வரும் முதுமைப் பருவம்இனிமையானதாக அமையும். முதுமைப் பருவத்தில் மகிழ்வுடன் ஒருவன் வாழ விரும்பினால் இளமைக் காலத்தை வீணாக்காது, சோம்பலுறாது உழைத்தல் வேண்டும். இத்தகைய வாழ்வியல் முன்னேற்றக் கருத்தினை,
‘‘இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை’’
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது. இளம் வயதிலேயே உழைக்கின்ற எண்ணமும் பழக்கமும் ஒருவனிடததிலே ஏற்பட்டுவிட்டால் அவன் வாழ்வு சிறப்படையும் என்பதை இப்பழமொழி வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
வழக்கில் மூத்தது என்றும் ஒன்றுமில்லாதது என்பர். மூத்தவராகப் பிறப்பவரை மூத்தது, மூத்தவர் என்று கூறுவர். இளையது, இளையவன், இளையவர் என்று இளமையானவரைக் குறிப்பிடுவர். இளையவர்களை வேகம் நிறைந்த துடிப்புடன் விளங்குபவராகச் சமுதாயத்தில் கருதுவர். இதனை,
‘‘மூத்தது மோளை
இளையது காளை’’
என்ற பழமொழி விளக்குகிறது. வயதில் மூத்தோர் சற்று யோசித்து நிதானமாகச் செயல்படுவர். இளையோர் எந்தச் செயலிலும் விரைந்து காளை வேகமாக ஓடுவது போன்றும் செயல்படுவது போன்றும் செயல்படுவர் என்பதை மேற்குறிப்பிட்ட பழமொழி தெளிவுறுத்துகிறது.
முதுமை
முதுமை பெருமைக்குரியது. முதியவர்களைப் பெரியவர் என்று மரியாதையுடன் வழக்கில் அழைப்பதே இதனைத் தெளிவுறுத்தும். வயது முதிர்ந்தேரே முதியவர் ஆவார். இப்பெரியோர் சொல்வதைக் கேட்டு வா்க்கையில் வாழ வேண்டும். அவ்வாறு நடந்தால் வாழ்க்கையில் இடர் ஏற்படாது. இன்பம் என்றும் நீடித்திருக்கும். பெரியோர்கள் தங்கள் அனுபவத்தினால் நல்வழி காட்டுவர்.
மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களும், நீதி நூல்களும் பெரியோர் கூறுவதைக் கேட்டு நடத்தல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. பீஷ்மர், துரோணர் கண்ணன் உள்ளிட்ட பெரியோரின் கூற்றுப்படி நடந்ததால் பாண்டவர்கள் வென்று புகழுடன் மீண்டும் நாட்டை ஆண்டனர். பெரியோர் கூறியதைக் கேட்காமல் நடந்ததால் துரியோதனன் தனது சுற்றத்துடன்அழிந்தான். இதனை,
‘‘மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தம்’’
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி’’
என்ற பழமொழிகள் எடுத்துரைக்கின்றன.
அமிழ்தம் உண்டாரை நீண்ட நாள் வாழச் செய்யும் தன்மை உடையது. அதுபோல் பெரியோரான முதியோரின் நல்லுரை துன்பமின்றி நெடிது வாழத் துணைபுரிவதாகும். அதனாலேயே பெரியோர் வார்த்தையை அமிழ்தம் என்று கூறினர் எனலாம்.
பெரியவர்கள் தெய்வத்திற்குச் சமமானவர்கள். அவர்களது வாயிலிருந்து வருவபவை வாழ்வை வளப்படுத்தும் நல்லுரைகளாகும். பெரியவர்கள் கூறியதை அப்படியே கைக்கொண்டு வாழ்தல் வேண்டும். அவ்வாறு வாழ்வோரது வாழ்க்கை வளமுறும் என்பதையும் பெரியோர்கள் காக்கும் கடவுளாகிய பெருமாளைப் போன்றவர்களாவர் என்பதையே மேற்கூறிய பழமொழி தெளிவுறுத்துகிறது.
வாழ்வில் எந்தத் துன்பமும் வராமல் பெருமாளாகிய திருமால் எவ்வாறு உயிர்களைப் பாதுகாக்கின்றாரோ அது போன்று பெரியோர்கள் தங்களைச் சார்ந்தோரை நல்லறிவுரைகளால் என்றும் துன்பம் வராமல் பாதுகாப்பர் என்ற அரிய கருத்தினையும் இப்பழமொழி உணர்த்துவது நோக்கத்தக்கதாகும்.
முதுமையை இழிவுபடுத்துதல்
வயது முதிர்ந்த காரணத்தால் இம்முதியோரை ஆணாக இருந்தால் கிழவன் என்றும், பெண்ணாக இருந்தால் கிழவி என்றும் கூறுவர். சிலர் இவர்களை, ‘பெரிசு’ என்றும் கூறி இழிவாக நடத்துவர். அவ்வாறு வயது முதிர்ந்தோரை இழிவாக நடத்துவதோ, பேசுவதோ தவறான செயலாகும். சிலர் முதியவர்களின் உடல் தளர்ச்சியையும் அவர்கள் வயதின் காரணமாகப் படும் துன்பத்தையும் கண்டு கேலிபேசிச் சிரிப்பர். அவ்வாறு முதியவர்களைக் கேலி பேசிச் சிரித்தல் கூடாது. இத்தகைய செயல்களை விடுத்து முதியோர்களுக்கு நாம் உதவுதல் வேண்டும். இதனை,
‘‘பழுப்போலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்’’
என்ற பழமொழி விளக்குகிறது. நாமும் ஒருநாள் இந்நிலையை அடைவோம் என்பதை உணர்ந்து நடந்து கொண்டால் இத்தகைய செயல்பாடுகளில் யாரும் ஈடுபடமாட்டார்கள்.
குருத்தோலை (இளைஞர்) ஒருநாள் பழுப்போலையாக (முதியவராக) மாறுவர் என்பதை உணர்ந்து செயல்பட்டால் இத்தகைய சூழல் சமுதாயத்தில் நிலவாது. மாறாக முதியோர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே வலுப்பெறும் எனலாம்.
இப்பழமொழியை,