பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
18. சொல்லும் செயலும்
மக்கள் பலநிலைகளில் செயல்களுக்குத் தகுந்தாற்போன்றும் சூழல்களுக்குத் தகுந்தாற் போன்றும் பேசுவர். அவர்ளின் சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் இருக்கிறதா? எனில் இல்லை என்றே கூறலாம். ஒழுக்கத்தைப் பற்றி விரிவாகப் பேசுவர். பல உதாரணங்களைப் பல அறிஞர்களின் நூல்களில் இருந்து எடுத்துக் காட்டுவர். ஆனால் அவர் தாம் பிறருக்குக் கூறும் அறிவுரைகளில் ஒன்றையேனும் கடைப்பிடித்து நடக்க மாட்டார்கள். ஏன் இந்த நிலை? இதற்குப் பல காரணங்கள் உண்டு. மனிதர்களுக்குத் தகுந்தாற்போன்றும், இடம், சூழல்கள் ஆகியவற்றிற்கு ஏற்பவும் மனிதர்களின் பேச்சு அமைகின்றது.
மனிதனின் உருவத் தோற்றத்திற்கும் பேச்சிற்கும் செயலுக்கும் தொடர்பு இருக்கிறதா? எனில் தொடர்பில்லை என்றே பதில் வருகிறது. நன்றாக உடை உடுத்தி இருப்பார். ஆனால் பேசும் பேச்சுக் கீழ்த்தரமானதாக இருக்கும். சிலர் கிழிந்த உடை உடுத்தி இருப்பார். ஆனால் அவர் நல்லவிதமாகப் பேசுவார். இன்னும் சிலரோ தோற்றத்திலும் பேச்சிலும் நல்லவர்களாகக் காட்சியளிப்பர். ஆனால் அவர்களின் செயல் மிகவும் கீழ்த்தரமானதாக இருக்கும். இத்தகைய மனிதர்களின் பண்பினை வெளிப்படுத்துவதாகப் பழமொழிகள் அமைந்திருப்பது வியப்பிற்குரிய ஒன்றாகும்.
ஊருக்கு உபதேசம்
அனைவருக்கும் இன்று எளிதில் கிடைக்கும் ஒன்று அறிவுரை. பெரியவர் முதல் சிறியவர் வரை அவரவர்களுக்குத் தகுந்தாற் போன்று அறிவுரைகளை மற்றவருக்குக் கூறுகின்றனர். இங்ஙனம் அறிவுரை கூறுபவர்கள் முதலில் தாங்கள் கூறிய வண்ணம் தம் வாழ்வில் நடக்கின்றனரா? எனில் இல்லை எனலாம். ஒரு சிலர்தான் பின்பற்றுகின்றனர். மற்றவருக்குக் கூறும் முன்னர் அதனைத் தாம் கடைபிடித்தல் வேண்டும். அப்போதுதான் அவ்வறிவுரைக்கு மதிப்பு ஏற்படும். பிறரும் அதனைக் கேட்டு நடப்பர். ஆனால் பலர் அவ்வாறு நடப்பதில்லை. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருப்பர். அவர்களிடம் சென்று, ‘‘என்ன நீங்கள் சொன்னதற்கும் செயல்படுவதற்கும் பொருந்தாமல் இருக்கிறதே? நீங்கள் இவ்வாறு நடக்கலாமா?’’ என்று கேட்டால் அவர்,
‘‘ஊருக்குத்தான் உபதேசம்
உனக்கும் எனக்கும் இல்லைன்னானாம்’’
என்று கூறுவர். இதனைப் பற்றி வேடிக்கையாக ஒரு கதை மக்களிடத்தில் வழங்கப்படுகின்றது.
ஒரு பேச்சாளர் ஒருவர் இருந்தார். அவர் எதைப் பேசினாலும் பிறர் மனதில் பதியுமாறு பேசுவார். இதனைப் பலரும் ரசித்துக் கேட்பர். அவர் ஒருமுறை தனது மனைவியுடன் ஒரு கூட்டத்திற்குச் சென்றார். அக்கூட்டத்தில் வரதட்சணை வாங்கக் கூடாது என்பது குறித்து மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசினார்.
வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம். அவர்களுக்கு வாழ்வில் நிம்மதி கிடைக்காது. அவ்வாறு வரதட்சணை வாங்குபவர் நரகத்திற்குத் தான் செல்வர் என்று பேசியதைக் கேட்ட மக்கள் அவரைப் பாராட்டினர்.
அவருடைய மனைவி தனது கணவனைப் பெருமை பொங்கப் பார்த்தார். அவரும் தனது கணவரைப் பாராட்டினார். மறுநாள் அவர்களிருவரும் தங்களது மகனுக்குப் பெண் பார்க்கப் பெண் வீட்ற்குச் சென்றனர். பெண்ணும் பிடித்து விட்டது. பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளையைப் பிடித்து விட்டது.
அடுத்துப் பெண் வீட்டார் செய்ய வேண்டிய செய்முறைகள் குறித்தும் வரதட்சணை குறித்தும் பல நிபந்தனைகளை மகனின் சார்பாக பேச்சாளர் கேட்டார். அதனைக் கேட்டதும் அவரின் மனைவிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவரது மனைவி அவரைத் தனியே அழைத்துச் சென்று,
‘‘என்னங்க என்ன இப்படிப் பெண்வீட்டாரிடம் வரதட்சணை கேட்கிறீர்கள். நீங்க நேற்று மேடையில அப்படி வீராவேசமா பலருக்கும் அறிவுரை கூறிப் பேசினீங்க இன்று இப்படி நடந்துக்குறீங்க! கொஞ்சங்கூட இது சரியில்லைங்க’’ என்றார்.
இதனைக் கேட்ட பேச்சாளர், மனைவியைப் பார்த்து, ‘‘அடிப்போடி கூறு கெட்டவளே, விவரம் கெட்டவளா இருக்கியே. ஊருக்குத் தான்டி உபதேசம். உனக்கும் எனக்கும் இல்லைடி’’ என்று கூறினார். மனைவி வாயடைத்துப் போனார்.
அறிவுரை என்பது பிறருக்கத்தான் தமக்கு இல்லை என்பதுபோல் பலரும் இன்று நடந்து கொள்கின்றனர். இது கயமைத்தனமாகும். இத்தகைய கயமைத் தனமுள்ளவர்களின் உளக்கீழ்மையை இப்பழமொழி எடுத்துரைப்பதாக உள்ளது. தாங்கள் சொன்னவற்றை முதலில் தாங்கள் கடைபிடித்து வாழ்ந்ததால்தான் காந்திமகான், புத்தர், ஏசுபெருமான் உள்ளிட்டோர் கூறியவற்றை அனைவரும் தட்டாது கேட்டு நடந்தனர். ஆனால் இன்று அத்தகையோர் குறைந்து விட்டதனால் அறிவுரை கூறினாலும் அதனைக் கேட்டு யாரும் நடப்பதில்லை என்பதை உணர்த்துவதுடன் அறிவுரை கூறும் முன்பு தாம் அவற்றைக் கடைப்பிடித்து நடத்தல் வேண்டும் என்ற வாழ்வியல் நெறியையும் இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.
படிப்பதும் - இடிப்பதும்
பலரின் சொல்லும் செயலும் முரண்பட்டுக் காணப்படும். இனிமையாகவும், உயர்ந்த கருத்துக்களையும் கூறுவர். ஆனால் அதற்கு மாறாக மிகவும் கீழ்த்தரமான செயல்களைச் செய்வர். இராவணன் சாமகீதம் பாடுவதில் வல்லவன். சிவபக்தன். சிவவழிபாடு செய்த பின்னரே அனைத்தையும் செய்வான். இசையில் வல்லவன். வீரம் நிறைந்தவன். இப்படிப்பட்டவன் உயர்ந்தவனாகத்தானே இருக்க வேண்டும். அவனது செயலோ கீழ்த்தரமாக இருந்தது.
தன் மனைவி இருக்கப் பிறன் மனைவியைக் கவர்ந்தான். இராவணனது இவ்விழி செயலை,
‘‘பேசுவது மானம் பேணுவது காமம்
கூசுவது மானிடரை நனிநம கொற்றம்’’
என்று கும்பகர்ணன் வாயிலாகக் கம்பர் குறிப்பிடுகின்றார்.
இராவணனைப் போன்று சொல்லுக்கும் செயலுக்கும் ஒவ்வாது நடப்போரின் பண்பினை,
‘‘படிக்கிறது இராமாயணம்
இடிக்கிறதெல்லாம் பெருமாள் கோயில்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
பெருமாளின் புகழ் பாடும் நூல் இராமாயணம். அதனைப் படித்துக் கொண்டே பெருமாளின் கோவிலை இடிப்பது குணக்கேடான செயலாகும். இவ்வாறு சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மனிதன் நடக்கக் கூடாது என்ற பண்பாட்டு நெறியையும் இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் நமக்கு எடுத்துரைத்து இருப்பது போற்றுதற்குரியதாகும்.
சொல்வதும் செய்வதும்
நல்லனவற்றை யாராவது கூறினால் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். பலர் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாது அவர்கள் ஏன் நமக்கு மட்டும் நல்ல கருத்துக்களைக் கூற வேண்டும் என்று காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பர். உலகில் எல்லோரும் ஏற்கக் கூடிய உண்மைகளைக் கூட அவர்களால் ஏற்க இயலாது அவர்கள் காரணம் காண முயல்வர். இத்தகையவர்களின் இயல்பினை,
‘‘தோசையைத் திண்ணுடான்னா
தோசையில இருக்கிற ஓட்டையை
எண்ணிக் கொண்டிருந்தானாம்’’
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
பசிப்பவனுக்கு உண்ணத் தோசையைக் கொடுத்தால் அவன் உண்ணாது அதில் உள்ள துளைகளை எண்ணிக் கொண்டிருப்பது சொல்லுகின்ற கருத்துக்களை விட்டுவிட்டு அவருக்குத் தோன்றுகின்றவற்றையே செய்து கொண்டிருப்பர். இத்தகையோர் யாருடைய கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. பிறர் சொல்லுகின்ற கருத்தில் மனதைச் செலுத்த மாட்டார்கள். இவர்களின் இத்தகைய பண்பினையே இப்பழமொழி மொழிகின்றது.
சொல்வதும் கேட்பதும்
நம்மில் சிலர் நாம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருப்பர். எதற்கும் மறுப்புக் கூறாது புரிந்ததுபோல் கேட்பர். சரி அவருக்கு நாம் கூறியவை நன்றாகப் புரிந்து விட்டது என்று கருதினால் அவரோ ஆமாம் இவ்வளவு நேரம் என்னமோ சொன்னீர்களே? என்ன சொன்னீர்கள்? நான் கவனிக்கவில்லை. எனக்கு மீண்டும் கூறுங்கள் என்று கேட்பர். சரி அவர் கேட்கிறாரே என்று மீளவும் கூறினால் திரும்பவும் புரியவில்லை என்று புரியாத வினாக்களைக் கேட்டுக் கொண்டே இருப்பர். இவர்களின் இத்தகைய மனநிலையை,
‘‘விடிய விடியக் கதைகேட்டு
சீதைக்கு ராமன் சித்தப்பன்னானாம்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
இராமனின் மனைவி சீதை. இஃது அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் எதனையும் புரிந்து கொள்ளாத மனநிலை கொண்டவர்கள் தவறாகவே புரிந்து கொள்வர். இத்தகைய மனப்பண்பை உடையவர்களைத் திருத்துவது என்பது அரிது. அவர்கள் திருந்த மாட்டார்கள். அத்தகையோரை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்துத்தலையும் இப்பழமொழி வாயிலாக நம் முன்னோர்கள் செய்துள்ளனர்.
சொல்லும் செயலும் முரண்படாது வாழ்வில் நடந்து கொள்ள வேண்டும். சொல் வேறு, செயல் வேறு என்றிருந்தால் நம்பகத்தன்மை குறைந்து பிறர் நம்மை மதிக்காத நிலைமை ஏற்படும். நமது தன் மதிப்பும் தரமும் குறைந்து நாளடைவில் சமுதாயத்தில் மதிப்பிழந்து விடுவோம். அதனால் சொல்வதைச் செய்து செய்வதைச் சொல்லி நேர்பட வாழ்வோம். வாழ்வு வளமுறும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.