பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
26. பரத்தமை மற்றும் பரத்தையர்
பரத்தமை என்பது தொன்று தொட்டு நெடுங்காலமாக சமுதாயத்தில் இருந்து வரும் கொடிய பழக்கமாகும். இப்பரத்தமையைச் சரி என்று நியாயப்படுத்துவாரும் உண்டு. சங்க இலக்கியங்களிலும், இலக்கணங்களிலும் பரத்தமை, பரத்தையர் குறித்த செய்திகள் காணக்கிடக்கின்றன.
பிரிவினைக் கூறவரும் இலக்கண ஆசிரியர்கள், ஓதல் (கற்றல்), பகை, தூது என்று பிரிவிற்கான காரணங்களை மட்டும் கூறாது பரத்தையர் பிரிவு என்று ஒருவகைப் பிரிவினையும் அவற்றுடன் இணைத்துக் கூறி இருப்பது சிந்தனைக்குரியது.
அக்காலத்தில் பரத்தமை என்பது இயல்பாக ஏற்றுக் கொள்ளப் பெற்றிருந்தமையையே இத்தகைய இலக்கண விளக்கங்கள் உறுதிப்படுத்துகின்றன. சங்க மருதப்பாடல்கள் அனைத்தும் தலைவன் தலைவியின் ஊடலைக் குறித்துப் பேசுகின்றன. எதனால் ஊடல் பெரும்பாலும் தலைவன் தலைவியருக்குள் ஏற்படுகிறது எனில் பரத்தையர் காரணமாகவே ஏற்படுகின்றது என்பது நோக்குதற்குரியது.
இப்பரத்தையரை உரையாசிரியர்கள் இற்பரத்தை, சேரிப்பரத்தை, ஊர்ப்பரத்தை என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். பரத்தையரின் செயலை,
‘‘கப்பல் கவிழ்ந்தவுடன் உயிர்பிழைக்க ஒரு மரப் பலகையைப் பற்றி அதனைப் பிடித்துக் கொண்டு கரையேறிவிட வேண்டும் என்று நினைத்துக் கடலில் தத்தளிப்போர் எங்ஙனம் கைகளை நீட்டி அந்தப் பலகையைப் பிடிக்க முயல்வார்களோ அதுபோன்று தலைவன் தனது வீட்டுக்கு வரவேண்டும் என்று ஒவ்வொருவரும் கைநீட்டி அழைக்கின்றனர்’’ என சங்க இலக்கியமொன்று குறிப்பிடுகின்றது.
பொருளுக்கு ஆசைப்பட்டோ அல்லது உடலிச்சை காரணமாகவோ பிற சமுதாயக் காரணங்களுக்காகவோ இத்தகைய இழி நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனர். சங்க காலந்தொட்டு இக்காலம் வரை இத்தகைய அவலநிலை நீடித்து நிலவுவது சமுதாயத்தின் சாபக்கேடாகும். ஒரு பக்கம் இலக்கியங்களும் பெரியோர்களும் இத்தகைய இழிநிலை கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் மறுமுனையில் இப்பரத்தமை என்பது ஆண், பெண் ஆகிய இருநிலையிலும் இயல்பான நிலையில் நிகழ்ந்து கொண்டிருப்பது வருந்தற்குரிய செயலாகும்.
பழமொழிகளில் நமது முன்னோர்கள் இத்தகைய பரத்தமை நடத்தையைப் பற்றியும், பரத்தையரைப் பற்றியும் பல்வேறு கருத்துக்களைக் கூறிப்போந்துள்ளனர்.
தாய் – மகள்
பழமொழிகள் பரத்தைமையை ‘அவுசாரி யாடல், அவுசாரி போதல்’ என்று குறிப்பிடுகின்றன. சமுதாயத்தில் பரத்தையர்களை, ‘வேசையர், தேவடியார் (தேவரடியார்-தெய்வத்திற்கு அடிமை(தொண்டு) செய்பவர்கள்) என்று சுட்டுகின்றனர்.
குடும்பத்தில் மகளானவள் தாய்க்கு அடங்கியவளாக இருத்தல் வேண்டும். அப்போது தான் அவள் ஒழுக்கமான பண்பினளாக வாழ்க்கையில் முன்னேற இயலும். முக்கியமானவர்களுடன் தாயானவள் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்விடத்திற்கு மகள் வந்து தொடர்பின்றித் தாய் பேசிக் கொண்டிருந்த நபரிடம் பேசினாலோ அல்லது ஏதும் தொடர்பின்றிப் பேசினாலோ கோபமுற்றுப் பெரியவர்கள் பேசும்போது குறுக்கிடலாமா? என்று கேட்க, அப்போது மகள் ஏதாவது தாயைப் பார்த்துப் பேசினால்,
‘‘ஆமாடி, நிறுத்துடி, தாய அடக்கி மக அவுசாரி போன கதையாவுள்ள இருக்கு’’
என்று கூறுவர்.
பரத்தையர் குடியில் வழிவந்த தாயினைப் பார்த்த பரத்தைமை ஒழுகத்தினை உடையவன், பரத்தையின் மகளைப் பார்த்தவுடன் தாயினை ஒதுக்கிவிட்டு மகளுடன் உறவாட நினைக்கிறான். அப்போது தாய் தடுக்க, மகள் அவளை அடக்கி வைத்து விட்டு அங்கு வந்தவனுடன் உறவாடுகிறாள். இதனைக் குறிப்பதாக இப்பழமொழி அமைகிறது.
மகள் தாய்க்குக் கட்டுப்பட்டு நடவாத தன்மையை வெளிப்படுத்துவதாகவும் மேற்குறித்த பழமொழி அமைந்துள்ளது. பரத்தமை ஒழுக்கம் உடையவர்களின் பண்பினை எடுத்துரைப்பதாகவும் இப்பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முகம், உடம்பு, வாய்
பரத்தமை ஒழுக்கமுடையவர்கள் தம்மை செயற்கையாக நன்கு அழகுபடுத்திக் கொள்வர். உடலழகை வெளிப்படுத்திக் காட்டும் வகையில் ஆடைகளை அணிவர். பிறர் கண்களையும் மனதையும் உறுத்தும் வகையில் அவர்களுடைய செயல்பாடுகளும், அங்க அசைவுகளும் இருக்கும்.
ஆனாலும்கூட அவர்களது வாழ்க்கை என்றும் இருள் மூடியதாகவே இருக்கும் என்பது ஆன்றோரின் உறுதியான கருத்தாகும். ஒரு பெண் விரும்பினாலும் அவள் பரத்தமை ஒழுக்கத்தில் ஈடுபட்டு விட முடியாது என்பர். அனைத்தும் விதிப்படியே நடக்கின்றது என்று கூறுவர். நல்லவள் கெட்டவளாவதும், கெட்டவள் நல்லவளாவதும் விதிப்படியே நிகழ்கின்றன என்பது விதிக் கொள்கையில் நம்பிக்கை உடையவர்களின் கூற்றாகும்.
இதனை வழக்கில் ராசி என்பர். ராசி இருந்தால்தான் எதுவும் நடக்கும் என்பர். இதனை எடுத்துரைப்பதாக,
‘‘அவுசாரியாடப் போனாலும் மொகராசி வேணும்’’
என்ற பழமொழி அமைந்துள்ளது.
பழங்காலததில் நாடகத்தில் நடக்கும் பெண்களையும், நடனம் ஆடுபவர்களையும் தேவிடியா என்று கூறுவர். இத்தேவடியாரை அவுசாரி என்று வழக்கில் கூறுவர். நாடகத்தில் நடிப்பதற்கு நல்ல அழகான முக அமைப்பு (முகராசி-முகவெட்டு) உடையவர்களையேத் தேர்ந்தெடுப்பர். மற்றவர்களுக்கு வாய்ப்புத் தரமாட்டார்கள். நல்ல முக அழகு உடைய நடிகைகளையே நடிப்பதற்கு அழைத்துச் செல்வர். இத்தகைய பழங்கால வழக்கத்தைத் தெளிவுறுத்துவதாகவும் இப்பழமொழி அமைந்துள்ளது. இப்பழக்கம் இன்று திரையுலகில் நிலவுவது நோக்கத்தக்கது.
கோயிலில் இறைவனுக்கு அடிமையாக இருந்து தொண்டு புரிபவர்களையே தேவரடியார் என்று அழைத்தனர். பழங்காலத்தில் இச்சொல் உயர்ந்த பொருண்மை உடையதாக விளங்கி வந்து காலப்போக்கில் பலருடன் தவறான உடலுறவு கொள்ளும் பெண்களைக் குறிக்கும் இழிந்த பொருளை வழங்கும் சொல்லாக மாறிவிட்டது எனலாம். இஃது காலத்தின் கோலமாகும் இச்சொற்களைப் போன்றே மனிதர்களுடைய வாழ்வும் அமைந்திலங்கும் போலும்.
சிலர் உடலால் கெடுவர். சிலர் வாயால் கெடுவர். சிலர் இரண்டிலும் கெடும் வாய்ப்பும் உள்ளது. அதிமாகப் பேசிப்பேசியே சிலர் பிறரருது ஏச்சுப் பேச்சுக்களுக்கு ஆளாவர். அத்தகையவர்களைப் பார்த்து,
‘‘சிலபேரு உடம்பால அவுசாரியாப் போவாங்க
ஆனால் நீ வாயால அவுசாரி போறவள்’’
என்று கூறுவர். எதுவும் செய்ய இயலாதவர்கள் உடலுறவு குறித்துப் பேசி அத்தகைய இன்பத்தை அடைவர்.
களவானி – அவுசாரி
பிறர் பொருள்களைக் கவர்பவர்களைக் கள்வன், திருடன் என்று கூறுவர். வழக்கில் பிறர் பொருளைக் கவர்பவர்களைக் களவானிப் பயல், களவானி என்று கூறுவர். பிறர் பொருளை அவரறியாமல் எடுத்துக் கொள்வது இவர்களின் செயற்பாடாகும். இவர்ளைப் போன்ற செயல்பாடுகளில் இருப்போர் பொருட்பெண்டிராகிய பரத்தையர் ஆவர்.
இப்பரத்தையர் பிறரை மயக்கி அவரிடமிருந்து பொருள்களைக் கவர்ந்து கொள்வர். அவர்களுக்கு இன்னார் இனியார் என்று தராதரம் பார்த்தல் கிடையாது. அவர்கள் பொருள் மீது நாட்டம் கொண்டு அதனைக் கவர்வதிலேயேக் கண்ணாக இருப்பர்.
ஆனால் இருவர் வீட்டிற்கு அருகில் வாழ்வதில் வேறுபாடு இருக்கிறது. கள்வர் வீட்டில் குடியிருந்தால் சிக்கல்கள் ஏதும் வரவாய்ப்பில்லை. ஆனால் பரத்தையர் வீட்டிற்கருகில் இருந்தால் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படும்.
பொருட்பெண்டிராகிய அவர்கள் வீட்டிற்கு வருவோர் அருகில் உள்ள வீட்டுப் பெண்களையும் பரத்தையராகவே கருதி அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்த்துத் தவறாக நடந்து கொள் முயற்சிப்பர். குடும்பப் பெண்களும் பாதிப்புக்குள்ளாவர். அவர்களின் நற்பெயருக்கும், நடத்தைக்கும் களங்கம் ஏற்படும். பரத்தையர் வீட்டருகில் இருப்பது அவப்பெயரை ஏற்படுத்தும். அதனால் பரத்தையருடனோ, அவர் வீட்டருகிலோ குடியிருக்க மாட்டார்கள். இத்தகைய மனப்பான்மையை,
‘‘களவானிபோட குடியிருந்தாலும் இருக்கலாம்
அவசாரியோட குடியிருக்க முடியாது’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழியானது சில பகுதிகளில் மக்களால்,
‘‘அவுசாரியோட குடியிருந்தாலும் இருக்கலாம்
களவானியோட குடியிருக்க முடியாது”
என்றும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது அந்தந்தச் சூழல் மற்றும் மனநிலையைப் பொறுத்து மாற்றி வழங்கப்படுவதாகக் கொள்ள முடிகிறது. ஏனெனில் சமூக வழக்காறுகளில் எதுவும் இருக்கின்ற சூழலைப் பொறுத்தே அமைத்துக் கொள்ளப்படுகிறது என்பது சிந்தனைக்குரியதாகும்.
சமுதாயத்தில் பரத்தைமை ஒழுக்கத்தால் ஏற்படும் இழிநிலைகளைப் புலப்படுத்துவதாகப் பழமொழிகள் உள்ளன. ஆனால் இப்பரத்தைமை ஒழுக்கத்தைக் கண்டிப்பனவாக இப்பழமொழிகள் அமைந்துள்ளன. பரத்தைமையற்ற பரத்தையரற்ற நன்னெறிச் சமுதாயம் மலர வேண்டுவதே இப்பழமொழிகளின் அடிக்கருத்தாகும். நன்னெறியில் சென்று நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து நலமான வாழ்க்கை வாழ்வோம் வாழ்வு இன்புறும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.