அரசன் ஆனையும் பூனையும் தின்பவனா?
அரசனைப் புகழ்ந்து பாடி பரிசு பெறுவதற்காகப் புலவர் ஒருவர் அவைக்குள் வந்தார். சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மன்னரைப் பார்த்து, "பாராளும் மன்னனிவன் ஆனையும் தின்பான்; பூனையும் தின்பான்" என்றார்.
அரசனுக்கு அதிர்ச்சி, "நிறுத்தும் புலவரே! இதுதான் புகழ்ந்து பாடும் லட்சணமா?" என்றான் கோபத்துடன்.
அதற்குப் புலவர், "மன்னா! தாங்கள் ஆ+நெய், அதாவது பசுவின் நெய்யையும், பூ + நெய் அதாவது பூவிலிருந்து கிடைக்கும் தேனையும் உண்பீர்கள் என்றுதான் சொன்னேன். வருந்தற்க" என்றார்.
பரிசும் பெற்றுச் சென்றார்.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.