மாபாவியோர் வாழும் மதுரை
சங்கரதாஸ் சுவாமிகள் மதுரையில் நாடகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். நாடகத்தின் ஒரு காட்சியில் “மாபாவியோர் கூடி வாழும் மதுரை” என்று ஒரு வசனம் வந்தது.
இதைக் கேட்ட ரசிகர்கள் கோபம் கொண்டு கொதித்து எழுந்தனர். கற்களையும், நாற்காலிகளையும் வீசி எறிந்தனர். பெரும் அமளி ஏற்பட்டது.
இதை உணர்ந்த சங்கரதாஸ் சுவாமிகள் மேடையில் ஏறினார். அனைவரையும் அமைதியாய் இருக்கும்படி வேண்டினார். யாரும் கேட்கவில்லை.
”முதலில் “மாபாவி” என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்கள்.
உடனே சுவாமிகள், “முதலில் மாபாவி என்பதற்கு விளக்கம் தருகிறேன். அது தங்களுக்கு சரியாகப்படவில்லையென்றால் நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன்” என்றார்.
ரசிகர்கள் சற்று அமைதியானார்கள்.
பின் அதை சுவாமிகள் விளக்கினார்.
“மா” என்றால் மலைமகள், “பா” என்றால் கலைமகள், “வி” என்றால் திருமகள். ஆக வீரம், கல்வி மற்றும் செல்வம் கூடி வாழும் மும்மாடக் கூடல் என்பதைத்தான் மாபாவி என்றோம்.
கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.