மூன்றாம் தர ஆட்சி

கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது நிலச் சீர்திருத்தம், தொழிலாளர் மேம்பாடு, எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் என்று பல வழிகளில் கவனம் செலுத்தி மக்களின் பாராட்டைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
மக்களிடையே அவரது அரசுக்கு ஏற்பட்டு வந்த ஆதரவு கண்டு, அதைப் பொறுக்க முடியாத நிலையிம் எதிர்க்கட்சி வரிசையிலிருந்த டாக்டர் எச்.வி.ஹண்டே சட்டமன்றத்தில் முதல்வரை நோக்கி, "இந்த அரசு மூன்றாம் தரமான அரசு" என்றார்.
அதுகேட்டு அவரது கட்சியினர் ஆரவாரம் செய்தனர். ஆளுங்கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். மிக மட்டமான அரசு (Third Rate) என்ற பொருளில் அவர் கூறியதே அதற்குக் காரணம்.
கலைஞர் எழுந்தார். அவை சற்று அமைதியாயிற்று. அவர் சொன்னார்:
"உறுப்பினர் சரியாகச் சொல்லவில்லை; இது மூன்றாம் தர அரசல்ல. இது நான்காம் தரத்தினர் ஆள்கிற அரசு. அதனால்தான் நான்காம் தரத்தினருக்கான மேம்பாட்டில் அதிக அக்கறை காட்டுகிறது"
பிராமணர், சத்திரியர், வைசியர், வேளாளர் என்ற நான்கு வருணத்தினரில் கடைப்பட்டவரது ஆட்சி இது" என்ற அவரது பதிலைக் கேட்ட போது, ஆளுங்கட்சியினர் மட்டுமின்றி எதிர்க்கட்சியினரும் அவரது வாக்கு சாதுர்யத்தை வியந்து பாராட்டினர்.
பின்னர்,
சோழ மன்னன் ஒருமுறை ஒளவையாரிடம், "நான்கு வருணத்தினரில் யாருடைய ஆட்சி மக்களுக்குப் பெரிதும் நன்மை செய்யும்" என்று வினவினான்.
"நான்காம் வருணத்தவரது ஆட்சியே மாட்சி தரும். பிற மூவருடைய ஆட்சிகளும் ஒவ்வொரு வகையில் குறைபாடுடையவை" என்ற பொருளில் ஔவையார் பாட்டாலே பின் வருமாறு பதில் தந்தார்.
"நூலெனிலோ கோல்சாயும்; நுந்தமரேல் வெஞ்சாமராம்;
கோலெனிலோ ஆங்கே குடிசாயும்; நாலாவான்
மந்திரியுமாவான், வழிக்குத் துணையாவான்,
அந்த அரசே அரசு."
மூன்றாம் தரமானது என்ற கேலிப் பேச்சுக்கு சினம் கொள்ளாமல் கலைஞர் கருணநிதி அளித்த பதில் எதிர்க்கட்சியினரையும் கைதட்ட வைத்தது.
- சித்ரா பலவேசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.