மாப்பிள்ளை பார்க்கப் பொண்ணு வந்திருக்கே...?
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: முள்ளை முள்ளாலதான் எடுக்கனும்னு சொல்றாங்களே...! அதுவும் ஒடிஞ்சு காலில குத்திட்டா?
அப்பாவி சுப்பையா: அதையும் இன்னொரு முள்ளால எடுக்கனும்.
*****
போலீஸ்: காணாமல் போன உங்கள் வேலைக்காரியோட அடையாளம் சொல்ல முடியுமா?
அப்பாவி சுப்பையா: வலது மார்பில ஒரு மச்சம் இருக்கும் சார்
*****
காதலி: நம்ம காதலை அப்பாகிட்ட சொல்லச் சொல்லி அவசரப்படுத்துறீங்களே...ஏன்?
அப்பாவி சுப்பையா: அப்போதான் உனக்கு வேற இடத்தில சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.
*****
சோதனை அதிகாரி: உங்க வீட்டில ஐம்பது கிலோ தங்கம் இருக்குன்னு எங்களுக்குத் தகவல் வந்திருக்கு...!
அப்பாவி சுப்பையா: ஆமாங்க என் மனைவி தங்கம் ஐம்பது கிலோ எடை இருப்பாள்.
*****
வங்கி அதிகாரி: உங்களுக்கு எந்த மாதிரியான லோன் வேணுமின்னு விருப்பப்படுறீங்க?
அப்பாவி சுப்பையா: திருப்பிக் கட்டாத லோன் இருந்தா கொடுங்க...
*****
ஒருவர்: பொய் சொல்லக் கூடாது. பிறர் பொருள் மேல் ஆசைப்படக் கூடாது. பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
அப்பாவி சுப்பையா: இந்த உலகத்திலே வாழக்கூடாதுன்னு சொல்லிடுங்க...
*****
ஒருவர்: உன் மாமனாருக்குக் கால் வீக்கமாமே. போய்ப் பார்த்தியா...?
அப்பாவி சுப்பையா: கால் வீக்கத்தை என்ன பார்க்கிறது... முழு வீக்கமான பின்னால போய்ப் பார்த்துக்கலாமுன்னு இருக்கேன்.
*****
ஒருவர்: சார் என்னைத் தெரியுதுங்களா...?
அப்பாவி சுப்பையா: நீங்க நல்லாத் தெரியுறீங்க... ஆனால் நீங்க யார்? எந்த ஊர்? என்கிற விபரம்தான் தெரியல...!
*****
ஒருவர்: என் இரண்டு பொண்ணுகளையும் கட்டிக்கிறதாச் சொல்றீங்க...? உங்களுக்கு ஒரு பையன்தானே இருக்கான்.
அப்பாவி சுப்பையா: நான் ஒருத்தன் இருக்கேனே...!
*****
ஒருவர்: என்னங்க மாப்பிள்ளை பார்க்கப் பொண்ணையும் கூப்பிட்டு வந்திருக்கீங்க...?
அப்பாவி சுப்பையா: நீங்க பெண் பார்க்க மாப்பிள்ளையையும் கூப்பிட்டு வந்தீர்களே...?
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.