எனக்கு யாரையும் திட்ட வராதே...!
தேனி.எஸ்.மாரியப்பன்
ஒருவர்: நாய் கடிச்சதுக்கு ஊசி போட நாயோட போறீங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம். டாக்டர் கடி வாயிலே ஊசி போடனும்னு சொன்னார்.
*****
டாக்டர்: உங்க வியாதி குணமாகனுமின்னா கோழி சாப்பிடுறத நிறுத்தனும்.
அப்பாவி சுப்பையா: கோழி கண்டதைச் சாப்பிடும். அதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்...!
*****
டாக்டர்: ஒரு வாரமாக இருமலுன்னு சொல்றீங்க... இதுவரைக்கும் என்ன செய்து கொண்டிருந்தீங்க...?
அப்பாவி சுப்பையா: இருமிக் கொண்டேதான் இருந்தேன்.
*****
டாக்டர்: உங்களைத் தினம் ஒரு பச்சை முட்டை சாப்பிடச் சொன்னேனே... சாப்பிட்டீங்களா?
அப்பாவி சுப்பையா: பச்சை முட்டையே கிடைக்கலை டாக்டர்... எல்லாக் கடைகளிலும் வெள்ளை முட்டைதான் கிடைக்குது.
*****
ஒருவர்: உங்களைத் திட்டக்குழுவிலே சேர்த்திருக்காங்க...
அப்பாவி சுப்பையா: அய்யோ... எனக்கு யாரையும் திட்ட வராதே...
*****
ஒருவர்: ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் எவ்வளவு இடைவெளி விட்டீங்க...?
அப்பாவி சுப்பையா: ஐந்தடி இடைவெளி விட்டுத்தான் படுக்க வைக்கிறேன்.
*****
மனைவி: நான் மூணுமாசமா முழுகாம இருக்கிறேங்க...
அப்பாவி சுப்பையா: அதனால்தான் இப்படி நாற்றமெடுக்குதா...?
*****
ஒருவர்: உற்பத்தியைப் பெருக்குவது அவசியம்னு விவசாயத்துக்குத்தான் சொன்னோம்.
அப்பாவி சுப்பையா: நாங்க பிள்ளைங்களைப் பெத்துக்கச் சொல்றீங்களோன்னு... பத்துப் பிள்ளைகளைப் பெத்துக்கிட்டோம்.
*****
ஒருவர்: தொண்டை கட்டி இருக்குன்னு டாக்டர்கிட்டே போக வேண்டியதுதானே...?
அப்பாவி சுப்பையா: அவர் கட்டின்னு சொன்னால் ஆபரேசன் பண்ணச் சொல்வாரே...!
*****
ஒருவர்: டாக்டர் உங்களுக்கு ஆபரேசன் வேண்டாமின்னு சொல்லிட்டாராமே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம். மருந்துலேயே கொன்னுடுறேன்னு சொல்லிட்டார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.