இவர் ஒரு சிறந்த விரிவுரையாளர். நற்செய்திப் போதனையாளர். பக்திப் பரவசமூட்டும், நெஞ்சத்தைத் தொடும் ஆன்மீக சொற்பொழிவுகளால் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். மக்களால் நன்கு மதிக்கப்பட்டவர். சிறந்தத் தமிழ்ப் புலவர். தமிழ் இலக்கியங்களில், குறிப்பாக நாட்டுப்புற இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். கிறிஸ்தவ இலக்கியப் பணியாற்றியவர். சிறந்த கவிஞர். இறைவனின் எழுத்தாணி. இசை ஞானமுடையவர். கர்நாடக இசையில் கரை கண்டவர். இசைக்கருவி மீட்டுவதில் வல்லவர். மது நிறை மலர் நாடும் வண்டுக் கூட்டமென இவர் வயலின் இசையில் மயங்கித் தழைத்தது மக்கள் கூட்டம். கவிதைகள், பாடல்கள் மூலம் சீரிய முறையில் பிரசாரம் செய்தவர். சிறந்த பாடகர். திருவிழாக்களிலும், வாரச் சந்தையிலும் பாடல்கள் பாடுவார். இசை மூலம் ஏசுவின் செய்திகளைக் கூறுவதில் இவருக்கு நிகர் இவரே. கிராமங்களில் அதிகக் காலம் வாழ்ந்ததால் இவருடைய கீர்த்தனைகளில் கிராமிய மணம் வீசும். கிராமிய ஊழியத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். பாடல்கள் எழுதி, இசை அமைத்து, இசைக்கருவி மீட்டி, இனிமையாகப் பாடக்கூடிய அருள்திரு.வே. மாசிலாமணி ஐயர், இறைவனின் சாகாவரம் பெற்றவர்.
கவிஞரின் 11 பாடல்கள் “கிறிஸ்தவக் கீர்த்தனையில்” இடம் பெற்றுள்ளன. அத்தனையும் முத்துக்கள்;. காலத்தைக் கடந்து இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் கவிக்குயில் கானங்கள். இதுவே இவரின் சிறப்புக்கும், திறமைக்கும், பெருமைக்கும் எடுத்துக்காட்டாகும்.
திரு. மாசிலாமணி ஐயர், திருவண்ணாமலையில் போதகராய்ப் பணியாற்றிய துவக்கக் காலத்தில், பாவ மன்னிப்புப் பற்றிய நிச்சயமற்றவராய், அமைதி குலைந்து இருந்தாராம். அவ்வேளையில், அவருடைய அன்புக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் உறுதுணையாய் இருந்த நண்பர் திரு. விசுவாசம் அவர்கள்,
“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை”, (யோவான்:-6:37)
-என்ற வேதவசனத்தைச் சுட்டிக்காட்டி, நம்பிக்கை ஒளியை அவர் உள்ளத்தில் சுடர் விடச் செய்தாராம். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் எழுதிய பாடல் தான் (144),
“பாவி, என்னிடம் வர
மனதில்லையா! ஓ!
சரணங்கள்
1
பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீ,
சீவன் தனைப்பெறவே, - ஓ! பாவி
6
எனதிடம் அருகும் எவரையுந் தள்ளேன்
ஷணத்தில் விரைந்திடுவாய் - ஓ! பாவி”
கவிஞர், இப்பாடல் மூலமாய் பாவங்கள் புரிந்து, தடுக்கி விழுந்து, தடுமாறிக் கொண்டிருக்கும் சமுதாயத்துக்கு வழிகாட்டுகிறார். ஆண்டவர் நம்மைப் பார்த்து, பாவத்தை விட்டுவிட்டு தன்னிடம் வர அன்பாய் அழைப்பதாய் அமைந்த நெஞ்சத்தைத் தொடும் பாடலாகும். கவிஞர் தான் அனுபவித்த பாவமன்னிப்பின் நிச்சயத்தையும், சந்தோஷத்தையும் இப்பாடல் மூலமாய் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இந்தக் கவிதை அவரின் அனுபவத்தைப் பேசுகிறது.
திருவண்ணாமலையில் போதகர் வாழ்ந்த காலத்தில் வாரச்சந்தை கூடும். அவ்வூரைச் சுற்றிலுமுள்ள பல கிராமங்களிலிருந்து மக்கள் பற்பல பொருட்களை வாங்கவும், விற்கவும் குவிவார்கள். சந்தையில் வரிசை வரிசையாக தட்டியிலான தற்காலிகக் கொட்டகைக் கடைகள் இருக்கும். மக்கள் கூட்டமும் அங்கு அதிகமிருக்கும். அந்த இடத்தில் போதகரும், அவரது நண்பர்களில் சிலரும் நின்று கொண்டு, கவிஞரின் பின்வரும் பாடலைப் பாடுவார்களாம். அந்தப் பாடல் தான் (139),
“தாகம் மிகுந்தவரே, அமர்ந்த
தண்ணீரண்டை வாரும் - ஓ!
2
காசுபணமது அற்றுலகந்தன்னில்
கஷ்டப்படுவோரே – விசு
வாசமாய் என்னிடம் வந்து விலையின்றி
வாங்கியே சாப்பிடுமே .. .. .. ... – ஓ
3
பாரச்சுமையோடு பாரில் வருத்தங்கள்
பட்டு உழல்வோரே, – வாரும்
நேரே, உமக்கிளைப்பாறுதலாவியை
நேசமாய்த் தந்திடுவேன்ஸ ஸ ஓ”
என்பதாகும்.
இந்தப் பாடலின், இரண்டாவது சரணத்தில், “காசுபணம் இல்லாமல் கஷ்டப்படுவோரே, நம்பிக்கையோடு என்னிடம் வந்து விலையில்லாமல் கிடைக்கும் ஞானஆகாரத்தை வாங்கி சாப்பிடுங்கள்”, என்று சந்தைக்குப் பொருள் வாங்க வருபவர்களைப் பார்த்து கடவுள் அழைப்பதாய் கவிநயத்தோடு கவிஞர் பாடியிருப்பது எத்தனைப் பொருத்தம்!
மூன்றாம் சரணத்தில், பொருட்கள் நிறைந்த பாரமான கூடையைத் தலையில் சுமந்து கொண்டு சந்தைக்கு வரும் மக்களின் இயல்பான வாழ்க்கையில் வரும் இன்னல்களையும், துன்பங்களையும் பார்த்து, பரிதவிக்கும் கவிஞர், “பாரச்சுமையோடு உலகில் வருத்தப்பட்டு வருந்துவோரே, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தந்திடுவேன்”, என்று கூறுவதில், ஏசுவானவர், “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”, (மத்தேயு:- 11:28) என்ற வேதவசனத்தைக் காண்கிறோம்.
இந்த அருட்கவிஞர்; ஒரு சிறந்த பாடகர். வயலின் வாசிப்பதில் வல்லவர். சந்தைத் திடலில் நின்று கொண்டு ஒரு பாடலின் இராகத்தை வயலினில் இசைப்பாராம். மகுடிக்கு மயங்கும் நாகம் போல், மக்கள் இவர் இருக்கும் இடம் நோக்கி திரண்டு வருவார்களாம். அப்போது ஐயர் அவர்கள், “தாகம் மிகுந்தவரே”, என்ற பாடலையும், “பாவி என்னிடம் வர”, என்ற பாடலையும் இனிமையாகப் பாடி, பாட்டின் அடிகளுக்கு வேதவசன விளக்கம் சொல்லி, போதனை செய்வாராம். மக்கள் கூட்டம் இசையோடு தெய்வச் செய்தி கேட்டு பயன் பெறுவார்களாம்.
தொடக்க காலத்தில், கவிஞர் திருப்புவனத்தில் போதகராய்ப் பணிபுரிந்து வந்த காலத்தில் அவர் இயற்றிய ஒரு இனிமையான பாடல் தான்,(286),
“தந்தானைத் துதிப்போமே:- திருச்
சபையாரே, கவி பாடிப்பாடி”- என்ற பாடலாகும்.
இப்பாடலில்,
“விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர் நன்மை மிகமிகத்”,
தந்தவரைத் துதிப்போம் என்கிறார் கவிஞர்.
4.
“தூரம்திரிந்த சீயோனே, - உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை .. .. தந்”
இந்த நான்காவது சரணத்தில், கவிஞர், வேதாகமத்தின் அடிப்படையில், திருச்சபையை ஆரங்கள் பூட்டிய, அலங்கரித்த மணவாட்டியாகவும், ஏசுகிறிஸ்துவை மணவாளனாகவும் சித்தரித்துச் சொல்வதில் கவிநயம் தெரிகிறது.
5.
“சிங்காரக் கன்னிமாரே – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
மங்காத உன் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும்” - -- தந்
இது ஒரு கும்மிப் பாடல் வகையாகும். இப்பாடலின் ஐந்தாவது சரணத்தைப் படிக்கும் போது இதனை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம். கும்மிப்பாட்டுக்கு ஏற்ப உசேனி ராகத்தில், ரூபகதாளத்தில் இப்பாடல் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.
இனிமையான இப்பாடலை நாம் இன்றும் கிராமப்புற, நகர்புறத் திருச்சபைகளில் அடிக்கடி பாடிக் கொண்டிருக்கிறோம். எளிதில் நம் மனதில் புகுந்து, பதிந்து, இடம் பிடித்து, நம்மால் மறக்க முடியாத பாடலாய் நிலை நிற்கும் விதத்தில் கவிஞர் இப்பாடலை எழுதியிருப்பது வியப்பாயிருக்கிறது! கிராமிய மணம் வீசும் பாடல் இது. காலத்தை வென்ற கவிஞரின் பாடல்களில் இதுவும் ஒன்று!
கடவுளை, எப்படித் துதிக்க வேண்டும்? எதற்காத் துதிக்க வேண்டும்? இதற்கான விடையை, கவிஞர் பாடலில் (6), சொல்லிக் கொண்டு செல்லும் போதே கடவுளிடம் இரண்டு விண்ணப்பங்களையும் ஏறெடுக்கிறார்.
1.
“சீர்மிகு வான்புவி தேவா தோத்தரம்,
சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்தரம்
ஏர்குணனே, தோத்ரம், அடியார்க்கு
இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா.
2.
மாறப் பூரண நேசா, தோத்ரம்,
மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம்,
தாராய் துணை, தோத்ரம், இந்தத்
தருணமே கொடு தோத்ரம், மா நேசா.”
ஜீவன், சுகம், பெலன், அனுதின நன்மைகள், ஆத்தும நன்மைகள், அதிசய நடத்துதல் யாவையும் ஈவும் ஆண்டவனுக்கு “தோத்ரம்”, என்று சொல்ல நம்மைப் போதிக்கிறார். அத்தோடு, “அடியார்க்கு இரங்கிடுவாய்” என்றும், “தாராய் துணை- இந்தத் தருணமே கொடு”, என்றும் விண்ணப்பங்களை இறைவனிடம் ஏறெடுக்க நம்மை வழி நடத்துகிறார்.
அடிக்கடி பாடப்படும் இனிமையான, எளிமையான, ஆனால் கருத்தாழம் பொதிந்த பாடல் இது. பள்ளிக்கூடங்களில் காலை வழிபாட்டில் பாடப்படும் இறைவணக்கப் பாடல்களில் இதுவும் ஒன்று. யாவராலும் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடிய சங்கராபரணம் ராகத்தில், ஆதித்தாளத்தில் அமைந்த ஒரு சிறந்த பாடலாகும்.
கடவுளை நன்றியோடு துதித்துப் பாடும் முகத்தான் விண்ணப்பங்களையும் அவர் சமூகத்தில் ஏறெடுப்பதில், கவிஞரின் கவித்திறன் பளிச்சிடுகின்றது! கவிஞரின் மற்றுமொரு துதிப்பாடல் தான்,(11),
“வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! - இது
வரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத் தந்தனம்”,
என்ற பாடலாகும்.
கவிஞர் வாழ்ந்த காலத்தில் கிராமியக்கலைகளில் ஒரு அங்கம் தெருக்கூத்தாகும். அதில் பங்கேற்கும் கலைஞர்கள் (கூத்து கட்டுபவர்கள்), ஆரம்பத்தில் மேடையில் வந்து, “வந்தனம், வந்தனம், சபைக்கு வந்தனம் தந்தேனையா”, என்று கூத்துப் பார்க்க வந்திருப்பவர்களுக்கு தங்கள் வணக்கத்தைத் தெரியப் படுத்துவார்கள். அது போலவே, ஐயர் அவர்களும், கிராமப்புறங்களில் அதிகக் காலம் பணியாற்றியதாலும், கிராமிய இசையில் நாட்டம் கொண்டிருந்தபடியாலும், தன் பாடலில், “வந்தனம், வந்தனம்... ... ... தந்தனம்”, என்னும் கிராமிய மணம் வீசும் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
“ஆர் இவர் ஆராரோ - இந்த – அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார்?”
அழகான, முத்தான இயேசு குழந்தையை “ஆராரோ”, என்று கூறி தாலாட்டும் கவிஞரின் மிக அற்புதமான பாடல் (34), இது. ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் எல்லோராலும் விரும்பி கேட்கப்படும், பாடப்படும் பாடல் இது. டாக்டர். ஆனந் செல்லப்பா, திரு. மோகன்தாஸ், திரு. ஜாலி ஆபிரகாம் போன்றவர்களால் பாடப்பட்டு, குறுந்தட்டிலும், ஒலிநாடாவிலும் பதிவான இனிமையான பாடல் ஆகும்.
இப்பாடலில், கவிஞர். வே. மாசிலாமணி ஐயர், ஒரு கேள்வி கேட்கிறார். அதாவது, “யார் இவர்...? இவ்வற்புத பாலகன் யார்?”, இதற்கு சரணங்களில், கேள்விகளின் வாயிலாகவே பதிலையும் மிகவும் நயம்படத் தருகிறார் கவிஞர். எடுத்துக்காட்டாக, “பரம் பொருள் தானிவரோ?”, என்று ஆச்சரியமாய் கேட்கிறார். அதாவது இப்பாலகன் தான் பரம்பொருள் என்பது உள்ளடக்கம். இவ்விதமாய், சிருஷ்டிகர்த்தா, மேசியா, நல்ல மேய்ப்பன், நமக்காய் மரித்தவர், தித்திக்கும் தீங்கனி, தேவனின் கண்மணி, விண்ணொளி, பட்டத்து இளவரசர், நம்மை ஆள்பவர், நம் பாவங்களை மன்னிப்பவர், ஜீவ அப்பம், ஜீவதண்ணீர், ஏழைகளின் அடைக்கலம் என்று பாலகன் ஏசுவைப் பற்றிய குணாதிசயங்களை எடுத்துரைத்திருப்பது கவிஞர் கடவுள் மேல்கொண்ட பற்றையும், கவிதையின் சிறப்பையும் புலப்படுத்துகிறது.
நூற்றுக்கும் மேலான ஆண்டுகளைக் கடந்து வந்த இப்பாடல், இன்றும் புதிய பாடல் போல் கிறிஸ்மஸ் காலங்களில் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பது கவிஞரின் கவிதைக்கும், இசைக்கும் கிடைத்த வெற்றியென்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் இந்தக் கவிஞரை நினைவுபடுத்தும் ஒரு அழகான பாடல் தான்,(359),
“ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்..
அனுபல்லவி
ஞானரட்சகர், நாதர் நமை - இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் - - புகழ்
சரணங்கள்
3
பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும்,
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை - இத்
தரைதனில் குறை தணித்தாற்றியதால் .. – புகழ்”.
என்ற பாடலாகும். இப்பாடலில் பஞ்சம், பசி, யுத்தம், கொள்ளைநோய், வி~தோ~ம் இவைகளிலிருந்து நம்மை தவிர்த்து, காத்த, தஞ்சரட்சகரை அகமகிழ்ந்து அனைவரும் புகழ்ந்து, ஆனந்தமே ஜெயா ஜெயா என்று பாடிடுவோம் என்கிறார், கவிஞர். வருடப்பிறப்பன்று அநேகமாக எல்லா ஆலயங்களிலும் பாடப்படும் கவிஞரின் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று.
“சமயமிது நல்ல சமயம், உமதாவி
தரவேணுமே சாமி..”
இந்தப் பாடலில்,(115), ஏசுகிறிஸ்துவின் மேல், நேசம், பக்தி, விசுவாசம், நம்பிக்கை, சமாதானம் மங்கிப் போகுதே - ஜெபமோ, தவமோ, தேவதியானமோ, வாஞ்சையோ, செய்யும் சுயமுயற்சியெல்லாம் தொய்ந்து போகக் காரணமென்ன?-செய்கின்ற பிரசங்கம், ஓசையெழுப்பும் கைத்தாளம் போல் ஒலிக்குதல்லாமல், பலன் இல்லாமல் போகுதே!- என்று கவலை கொள்ளும் கவிப்போதகர், அடியான் மீது அனல்மூட்டி உயிர்தர— “சமயமிது நல்ல சமயம், உமதாவி தரவேணுமே சாமி”, என்று ஆண்டவனிடம் அங்கலாய்த்து, பரிசுத்தாவிக்காக வேண்டுதல் செய்கிறார். பரிசுத்தாவியைப் பற்றிய வேதாகமச் சான்றுகளோடு கூடிய கருத்தாழம் கொண்ட கவிஞரின் பாடல் இது! (எசேக்கியல்:- 37—10, அப்போஸ்தலர்:- 2—4). போதகராய்ப் பணியாற்றிய கவிஞர்,
“ஓதும் பிரசங்கமும், ஓசைக்கைத்தாளம் போல்
ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை”,
அதனால்,
“சமயமிது நல்லசமயம், உமதாவி
தரவேணுமே சாமி”,
அதாவது, பயனுள்ள பிரசங்கம் செய்ய உமது பரிசுத்தாவியைத் தாரும் சாமி, என்ற கருத்தை இப்பாடலில் கவிஞர் கூறும் போது, அருள்திரு.என்.பி. ஹான்சன், 1897ம் ஆண்டு, சீலோவாம் ஆலயத்தில், “எல்லோரும் பிரசங்கம் பண்ணலாம், ஆனால் எல்லோரும் சாட்சி சொல்ல முடியாது”, என்று அவர் கூறிய பிரசங்க வாசகத்தால், உள்ளத்தில் உணர்த்தப்பட்ட திரு.வே. மாசிலாமணி ஐயர், கடவுளை வேண்டி, பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்று, தன்னை ஒரு உண்மையான ஊழியக்காரராய் தகுதிப்படுத்திக் கொண்ட நிகழ்வை, கண் முன் படம் பிடித்துக் காட்டுகிறது இப்பாடல்.
தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அனுபவத்தை கவிஞர் இப்பாடலில் தந்திருப்பதால், இப்பாடல் சாகாவரம் பெற்று, சகலர்க்கும் பயனுள்ளதாய் அமைந்திருப்பது, கவிதையின் சிறப்புக்குச் சான்றாகும்.
“விலைமதியா ரத்தத்தாலே
மீட்கப்பட்டீரே-
சரணம்
1.
உலையும் பொன் வெள்ளி
உலோகத்தாலல்ல, – ரீ-ரீ-ரீ-ரீ
சிலுவையி லேசுபரன் - வலத்
திருவிலாவில் வடியும் -விலை”
கவிப்போதகர், பொன், வெள்ளியால் அல்ல, சிலுவையில் தொங்கிய இயேசுவின் வலது திருவிலாவிலிருந்து வடிந்த ரத்தத்தால் நாம் மீட்கப்பட்டோம் என்கிற வேதாகமச் செய்தியை யாவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாய் இப்பாடலில்(133), சொல்லியிருப்பது போற்றுதற்குரியது. எளிமையாகவும், இனிமையாகவும், மனதில் பதியும்படி திருமறைக் கருத்துக்களை கவிதையில் கையாண்டிருப்பதிலிருந்து, திரு.மாசிலாமணி ஐயர், தான் ஒரு போதகர் என்பதையும், கவிஞர் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
“தாரகமே, - பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாறேன்.
அனுபல்லவி
சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர், - தார”,
திருவிருந்து ஆராதனை வேளையில் பாடுவதெற்கென்றே எழுதப்பட்ட கவிஞரின் சிறந்த, வேதவசனங்களை உள்ளடக்கிய, கருத்தாழமிக்க ஒரு இனிய பாடலாகும். (309).
இதில், பாவம் அகல, தேவகோபம் ஒழிய, பாடுபட்டு நீர் உயிர் விட்டீர். மேலும் ஜீவபோஜனம் எனக்கு ஈய, உம்மையே அந்தச் சிலுவையில் கொடுத்தீர். என்னை நெருங்கி வரும் பாவத்தை விட்டு, உம்மை சேவித்து உயிர் பிழைக்க, தாரகமே, ஆத்தும பசிதாகத்துடன் உம்மிடம் வருகின்ற என்னை ஒரு போதும் தள்ளிடேன் என்றீர். நீர் தந்த திருவசனம் உந்தன் இராபோசனம். இதை நான் மனதில் கொள்ள தேவனின் பரிசுத்தாவியை அருளுமே!” என்கிறார் கவிஞர். எத்துனை இனியக் கருத்துக்கள், அத்தனையும் இக்கவிதையில், போதனை செய்யும் கவிஞர் - கவிப்போதகர்.
“உதவி செய்தருளே! – ஒருவர்க்கொருவர் யாம்
உதவி செய்திடவே.”
இப்பாடலில் (265) கவிஞர், பிறர்க்கு நாங்கள் உதவி செய்திட இறைவா எங்களுக்கு நீர் உதவியருளும்” என்று கடவுளிடம் மன்றாடுகிறார்.
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கவும், சகோதரன் கஷ்டத்தில் நல்மனதோடு பங்கு பெறவும், ஒத்தாசை தருவாய் என்று வேண்டுகிறார். பிறன்பால் அன்பு செலுத்திடவும், உமதண்டை நெருங்கி வரவும், நீர் தயை செய்திடும் என்றும் ஆண்டவரிடம் இறைஞ்சுகிறார் கவிஞர். இப்பாடலில் கவிப்போதகர், கிறிஸ்தவன் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும், ஒழுக்கத்தையும், போதனையாகத் தெள்ளத் தெளிவாய் கவிநயத்தோடு இயம்பியிருப்பது பாராட்டுதற்குரியது. கிறிஸ்தவம் உள்ளளவும் கவிப்போதகர், வே. மாசிலாமணி ஐயரின் தேன்சுவைக் கீர்த்தனைகள் நிலைத்து நிற்கும். கவிஞர் எல்லோர்க்காகவும், எல்லாவற்றையும், ஏற்றமுற நிறைவாய்ப் பாடியிருக்கிறார். எளிமையான, இனிமையான பாடல்கள் அவருடையது. கவிதைகளில் கருத்து, வடிவம், ஓசை, சுவை மிகுந்தது.
அருள்திரு. வே. மாசிலாமணி ஐயரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு குறிப்புகள் நல்கி உதவிக்கரம் நீட்டிய, மரியாதைக்குரிய, அருள்திரு. வே. ஜோசப் பெஞ்ஞமீன் ஐயர், அவர்களின் பேத்தி, திருமதி. மேரி மங்கையர்கரசி ஷெர்மன், திருவண்ணாமலை, அவர்களுக்கும், அருள்திரு. வே. சந்தியாகு ஐயர், அவர்களின் பேத்தி, திருமதி. எல்சி எட்வின், மதுரை, அவர்களுக்கும், என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அருள் திரு. மாசிலாமணி ஜயரின் தந்தை பெயர் திரு. வேதமுத்து என்று திருவண்ணாமலையிலிருந்து கிடைக்கப் பெற்ற குறிப்பிலும், திரு. வேதம் என்று மதுரையிலிருந்து கிடைக்கப் பெற்ற குறிப்பிலும் காணப்படுகிறது.
அருள்திரு. வே. மாசிலாமணி ஐயரைப் போலவே, அவருடைய சகோதரர்களில், அருள்திரு. வே. ஜோசப் பெஞ்சமீன் ஐயர், அருள்திரு. வே. சந்தியாகு ஐயர் ஆகிய இருவரும் கவிஞர்களாகவும், பாடகர்களாகவும், கர்நாடக இசை ஞானம் பெற்றவர்களாகவும் இருந்தனர். இவர்கள் இருவரின் இனிய கீர்த்தனைப் பாடல்கள், “கிறிஸ்தவக் கீர்த்தனைகள்” பாடல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன என்பதும் போற்றுதற்குரியது.