சால்னா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
4. சிக்கன் மசாலா - 1/2 தேக்கரண்டி
5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. மல்லித்தழை - சிறிது
வறுத்து அரைக்க
8. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
9. மல்லி - 2 மேசைக்கரண்டி
10. சோம்பு - 1/2 தேக்கரண்டி
11. மிளகு - 1/2 தேக்கரண்டி
12. பட்டை - சிறிது
13. கிராம்பு - 1 எண்ணம்
அரைக்க
14. தேங்காய்த் துருவல் - 4 மேசைக்கரண்டி
15. பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
16. முந்திரிப்பருப்பு - 4 எண்ணம்
17. கசகசா - 1/2 தேக்கரண்டி
தாளிக்க
18. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
19. பட்டை - சிறிது
20. கிராம்பு - 1 எண்ணம்
21. வெங்காயம் (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
22. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு கடாயை அடுப்பில் வைத்துச் சூடானதும், அதில் மிளகாய் வற்றல், மல்லி, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு எல்லாவற்றையும் போட்டு ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைத்து விடவும்.
3. வறுத்தவை ஆறிய பின்பு அதை திரித்து வைக்கவும்.
4. ஒரு கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிச் சூடானதும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்துச் சுருண்டு வரும் வரை வதக்கிச் சிறிது நேரம் ஆற விடவும்.
5. வதக்கிய வெங்காயம், தக்காளி ஆறிய பின் அதைக் கொஞ்சம் கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
6. அரைக்கக் கொடுத்திருக்கும் தேங்காய் துருவல், பொட்டுக் கடலை, முந்திரிப்பருப்பு, கசகசா போன்றவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.
7. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு போட்டுப் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
8. வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
9. அதில் திரித்து வைத்துள்ள மசாலாப் பொடி, உப்பு, சிக்கன் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து அதோடு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
10. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதைச் சேர்த்துச் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
11. பின்னர், அதில் அரைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் கொதிக்க விடவும். (பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது)
12. கடைசியாக மல்லித் தழையை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.