வெங்காய சாம்பார்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு - 50 கிராம்
2. சின்ன வெங்காயம் - 15 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. சாம்பார் பொடி - 1/2 மேஜைக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. புளி - நெல்லிக்காய் அளவு
7. காயம் - 1/2 தேக்கரண்டி
8. மல்லித்தழை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
அரைக்க
10. தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
தாளிக்க
11. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
12. கடுகு - 1 தேக்கரண்டி
13. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
14. சின்ன வெங்காயம் - 4 எண்ணம்
15. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. புளியைத் தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
2. தாளிக்கக் கொடுத்துள்ள சின்ன வெங்காயத்தை மட்டும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். மீதமுள்ள சின்ன வெங்காயத்தை நறுக்கத் தேவையில்லை. தேங்காயை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
3. குக்கரில் துவரம் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணீர், காயம் சேர்த்து அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
4. அடுப்பில் கடாய் வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் சின்ன வெங்காயத்தை போட்டுப் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.
5. அதேக் கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கித் தனியாக வைக்கவும்.
6. ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளித்தண்ணீருடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
7. மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து 3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
8. கடைசியாக வேக வைத்த பருப்பைச் சேர்த்துக் கொதி வந்ததும் சிறிது மல்லித் தழையைத் தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
9. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
10. கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
11. வெங்காயம் நன்கு பொன்னிறமானதும் எடுத்துக் குழம்பில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.