கொள்ளு ரசம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கொள்ளு – 50 கிராம்
2. புளி – எலுமிச்சை அளவு
3. தக்காளி – 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
5. பூண்டு – 5 பல்
6. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
8. கருவேப்பில்லை – சிறிது
9. மல்லித்தழை – சிறிது
10. கடுகு – 1 தேக்கரண்டி
11. வெந்தயம் – 1 தேக்கரண்டி
12. எண்ணெய் – தேவையான அளவு
13. ரசப்பொடி – 2 தேக்கரண்டி
14. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. கொள்ளை ஒரு நாள் முன்பு இரவு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். காலையில் இரண்டு அல்லது மூன்று முறை புதிதாக தண்ணீரை ஊற்றி நன்றாகக் கழுவி வடிகட்டி, சுத்தம் செய்யப்பட்ட கொள்ளை தண்ணீர் ஊற்றிக் குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
2. புளியைச் சிறிது தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துப் பின்னர் கரைக்கவும்.
3. குக்கரிலிருந்து கொள்ளைத் தண்ணீரோடு எடுத்து, தண்ணீரைத் தனியாக பிரித்து வைக்கவும்.
4. தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
5. சிறிய உரலில் அல்லது கல்லால் பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
6. நறுக்கி வைத்த தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, கொள்ளுத் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, கருவேப்பிலை, மல்லித்தழை போட்டு நன்றாகக் கலக்கவும்.
7. பிறகு தாளிக்கும் கரண்டியில் எண்ணையை ஊற்றி, கடுகு மற்றும் வெந்தயத்தையும் போட்டு நன்றாக தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
8. ரசகலவை கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதியில் நல்ல நுரையாக எழும்பி வரும்போது சிறிது தண்ணீர் ஊற்றி, இறக்கவும்.
குறிப்பு:
தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது கடுகு, உளுந்து மற்றும் ஒரு காய்ந்த மிளகாயை போட்டு தாளித்து, வேகவைத்துத் தனியாக வைத்த கொள்ளுடன் சேர்த்துக் கலந்து சுண்டலாக சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.