உருளைக்கிழங்கு குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 2 எண்ணம்
2. தக்காளி -1 எண்ணம்
3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
4. கரம்மசாலா பொடி - 1/2 தேக்கரண்டி
5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
பொடிக்க
7. மிளகாய் வத்தல் - 3 எண்ணம்
8. கொத்தமல்லி - 3 மேசைக்கரண்டி
9. சீரகம் - 1 தேக்கரண்டி
அரைக்க
10. தேங்காய்த் துருவல் - 1/4 கப்
11. பாதாம் பருப்பு - 4 எண்ணம்
12. மல்லித்தழை - சிறிது
தாளிக்க
13. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
14. பட்டை - சிறிது
15. கிராம்பு - 2 எண்ணம்
16. வெங்காயம் (நறுக்கியது) - 25 கிராம்
17. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. உருளைக்கிழங்கைக் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும், உருளைக்கிழங்கை எடுத்துச் சிறிது நேரம் ஆற விடவும்.
2. அதன் பிறகு, உருளைக்கிழங்கைத் தோலுரித்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
3. தக்காளியைச் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும், அந்தச் சூட்டில் பொடிக்கக் கொடுத்துள்ள மூன்றையும் போட்டுக் கிளறிச் சிறிது நேரம் ஆற விடவும்.
5. நன்கு ஆறிய பிறகு மிக்சியில் திரித்துக் கொள்ளவும்.
6. பாதாம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
7. தேங்காய்த் துருவல், பாதாம் பருப்பு, மல்லித்தழை மூன்றையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
8. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
9. வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
10. பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
11. தக்காளி சுருள வதங்கியதும் திரித்து வைத்துள்ள பொடி, மஞ்சள்தூள், கரம் மசாலாப் பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
12. அதன் பிறகு, அவித்து வைத்துள்ள உருளைகிழங்கைச் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
13. மசாலா வாடை அடங்கியதும், அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.