மெக்ரோனி புளிக்குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மெக்ரோனி - 150 கிராம் (சங்கு, சக்கரம் என சில வடிவங்களில் கிடைக்கிறது)
2. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
3. தக்காளி - 5 எண்ணம்
4. புளிக்கரைசல் - 1 தேக்கரண்டி
5. இஞ்சிப் பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
6. மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
7. மல்லித்தூள்- 1/2 தேக்கரண்டி
8. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
9. சோம்பு - 1/4 தேக்கரண்டி
10. எண்ணெய்- 50 கிராம்
11. உப்பு - தேவையான அளவு
12. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. மெக்ரோனியை சுடுநீரில் போட்டுக் கொதி வந்தவுடன் வடித்து, மறுபடியும் நீர் ஊற்றி வடித்து வைக்கவும்.
2. ஒரு வாணலியில் வெந்தயத்தை இலேசாக வறுத்து, சோம்பு, தக்காளி, வெங்காயத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது,மஞ்சள் பொடி போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. அத்துடன், ஏற்கனவே அரைத்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
5. எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது மிளகாய்த்தூள், மல்லித்தூள்,உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.
6. பின்னர் அதில் புளிக்கரைசல் மற்றும் 2 டம்ளர் தண்ணீரைச் சேர்க்கவும்.
7. நன்றாகக் கொதித்து வரும் போது, மெக்ரோனியைப் போட்டு அடுப்பைக் குறைத்து வைத்து 5 நிமிடம் மூடி வைத்துக் கொதிக்க விடவும்.
8. அதன் பிறகு அடுப்பிலிருந்து இறக்கி மேலாக மல்லித்தழையினைப் போட்டுப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.