ஒவ்வொரு காய்கறியையும் எப்படி தரம் பார்த்து வாங்கவேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருந்தால், நல்ல காய்கறியைத் தேர்வு செய்ய முடியும்.
அவரைக்காய்
ஒவ்வொரு காயையும் தொட்டுப் பார்க்கவும். அதில் விதைகள் பெரியதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். தோல் மெத்தென்று அடர்த்தியா இருக்க வேண்டும். தோல் மெலிந்து, விதைகள் உப்பலாகத் தெரிந்தால் அது முற்றிய காய். இளசாக இருக்கும் காய்களில் விதைகள் சிறியதாக இருக்கும், நார் அதிகம் இருக்காது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது.
இஞ்சி
இலேசாகக் கீறிப் பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்.
உருளைக்கிழங்கு
நல்ல கெட்டியாக இருக்க வேண்டும். பச்சை நிறம் வெளியில் தெரியக்கூடாது. கிழங்கில் இரு வகை உண்டு. வெளிறின தோல் கிழங்கு எனில், தோல் பளபளப்பாக இருக்க வேண்டும். அடர்ந்த பிரவுன் நிறத் தோல் கிழங்கு எனில், தோல் சொரசொரவென இருக்க வேண்டும். முளை இல்லாமல் இருக்க வேண்டும். முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும் இதுதான் நல்ல உருளைக்கிழங்குக்கு அடையாளம். சுவையாகவும் இருக்கும். தழும்புகள், ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
கத்தரிக்காய்
தோல் மென்மையாக இருப்பது போல் பார்த்து வாங்கவும். ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும் என்பதால், சிறு ஓட்டைகூட இல்லாமல் நன்றாகப் பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். காய் முழுக்க ஒரே நிறத்தில் பளபளவென்று இருப்பது நல்ல காய். பச்சை நிறத்தில் உள்ள கத்தரிக்காய் மீது வெள்ளை வரிகள் இருந்தால் அது கசக்கும்.
கருணை கிழங்கு
முழுதாக வாங்கும் போது பெரியதாகப் பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்.
காலிபிளவர்
பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக, காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும். மொட்டு மொட்டாக, நெருக்கமாக இருப்பதை வாங்குங்கள். பூத்திருக்கக் கூடாது. கரும்புள்ளிகளும் தெரியக் கூடாது.
குடை மிளகாய்
தோல் சுருங்காமல் பிரெஷ்ஷாக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிறக் குடை மிளகாய்களும் ஒரே சுவையில்தான் இருக்கும்.
கேரட்
கலர் வெளுத்து இருக்காமல் நல்ல சிவப்பாக இருக்க வேண்டும். வேர்க்கணு அதிகமாக வெளியில் தெரியாதவையாக இருக்க வேண்டும்.
கோவைக்காய்
முழுக்கப் பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்திருந்தால் ருசி இல்லாமல் இருக்கும்.
சர்க்கரை வள்ளிகிழங்கு
உறுதியான கிழங்கு இனிக்கும், அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்.
சின்ன வெங்காயம்
பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாகத் தெளிவாக இருப்பதை வாங்கவும்.
சுரைக்காய்
நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
சேப்பங்கிழங்கு
நீண்டிருக்கும் கிழங்கு சுவை தராது. உருண்டையாக இருக்கும் சேப்பங்கிழங்காகப் பார்த்து வாங்கவும். மேலே கீறிப் பார்த்தால் உள்ளே வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு.
சௌசௌ
வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாதவாறு பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
தக்காளி
தக்காளி நல்ல சிவப்பில் இருந்தால் அதை வாங்கலாம். நன்கு சிவப்பாக, பழுத்ததாக முழுமையாகக் கல் போல இருக்க வேண்டும். உடனே சமைக்க வேண்டுமானால் சிவந்த, கனிந்த, கனத்த பழமாகப் பார்த்து வாங்க வேண்டும்.
தேங்காய்
நிறம் ரொம்ப வெளிறியும் ரொம்பவும் கறுப்பாகவும் இல்லாமல் நடுத்தரப் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். குடுமி ஈரமாக இருக்கக் கூடாது. அதோடு கனமான காயாகப் பார்த்து வாங்க வேண்டும். காயைக் குலுக்கினால் நீர் குறைவாக உள்ள காயே நன்கு விளைந்த காய்.
பச்சை மிளகாய்
நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும். கரும்பச்சையாக இருந்தால் நன்கு முற்றியது. மெல்லியதாய் குச்சி போல் இருந்தால் ரொம்பப் பிஞ்சு. இரண்டிற்கும் நடுத்தரத்தில் இருந்தால் அதுதான் நல்ல பச்சைமிளகாய். காயும் காம்பும் பச்சையாக இருந்தால் ஃப்ரெஷாக இருக்கும். காம்புகள் சுருங்கி, கறுத்தப் போயிருந்தால் பழையது என்று அர்த்தம். மிளகாய் நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். அதுவே குண்டாக இருந்தால் காரம் அதிகமாக இருக்கும்.
பரங்கிக்காய்
கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்.
பாகற்காய்
பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது.
பீட்ரூட்
மெல்லிய தோலுடன், பளபளவென்று கருஞ்சிவப்பாக திண்ணமாக இருக்க வேண்டும்.
பீர்க்கங்காய்
அடிப்பகுதி குண்டாக இல்லாமல், காய் முழுதும் ஒரே சைசில் இருக்கும்படி பார்த்து வாங்குவது நல்லது. பார்ப்பதற்கு பச்சைப் பசேல் என்று இருப்பதை வாங்கவேண்டும். காயின் மேல் நரம்புகள் எடுப்பாகவும் வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றல் என்று அர்த்தம். பீர்க்கங்காயில் உள்ள கோடுகள் நெருக்கமாகவும் அதிகம் படராமலும் இருக்க வேண்டும். காய் கனமாக இருக்க வேண்டும். காய் முற்றிவிட்டால் நீர்ச்சத்து குறைந்து, கனமும் குறைந்துவிடும் ருசி இருக்காது.
பீன்ஸ் பிரன்ச்
பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. தோல் மென்மையாக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்.
பீன்ஸ்
ப்ரெஷ் பீன்ஸ் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். உடைத்தால் பட்டென்று உடையும். அதுதான் சமையலுக்குச் சுவையாக இருக்கும். வெளிர்பச்சை நிறத்தில் இருந்தால் அது முற்றிய பீன்ஸ், நாள்பட்ட பீன்ஸும் வதங்கி வெளிர் பச்சையாகக் காட்சியளிக்கும். தவிர்க்கவும். வில் மாதிரி நன்றாக வளைவதை வாங்குங்கள். அதுவே நல்ல பீன்ஸ்.
புடலங்காய்
கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகுதி குறைவாக, சதைப்பகுதி அதிகமாக இருக்கும்.
பூண்டு
பல் பல்லாக வெளியேத் தெரிவது நல்லது. வாங்கலாம்.
பெரிய வெங்காயம்
மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்.
மக்காச்சோளம்
இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்திப் பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அது நல்ல மக்காச்சோளம்.
மாங்காய்
தேங்காயைக் காதருகே வைத்து தட்டிப் பார்ப்பது போல மாங்காயும் தட்டிப் பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும். சதைப்பகுதி நிறைந்திருக்கும்.
முட்டைக்கோஸ்
இலைகள் வெள்ளையாக இருக்கக்கூடாது; பச்சை உள்ளவையாகப் பார்த்து வாங்கவேண்டும். அதுதான் இளசு. முட்டைக்கோஸ் அளவில் சிறியதாகவும் கனமாகவும் இருந்தால் சுவையாக இருக்கும். நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருக்கவேண்டும். தவறினால் அது பழையது என்று அர்த்தம். இதழ்கள் நெருக்கமாகக் கனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே வெட்டி வைத்திருக்கும் கோஸை விட முழுசாக வாங்குவது நல்லது.
முருங்கைக்காய்
லேசாக நீள வாக்கில் முறுக்கிவிட்டால் மீண்டும் விறைத்து பழைய நிலைக்கு வர வேண்டும். முருங்கைக்காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களைப் பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கைக்காய். கரும்பச்சை நிறத்திலும் சற்று உருண்டையாகவும் இருக்கும் முருங்கைக்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் உள்ளே சதை இருக்காது என்பதால் தவிர்க்கவும். இரு முனைகளைப் பிடித்து லேசாக முறுக்கினால் வளைத்து கொடுக்க வேண்டும். அதுவே இளசான காய். அதுவே முறுக்கும்போது மளமளவென்று சத்தம் கேட்டால், அது முற்றல். தவிர்க்கவும்.
முள்ளங்கி
லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு, நல்ல காய். முள்ளங்கி காய் நீண்டு, தலைப்பகுதி காம்பு நிறம் மாறி வாடிவிடாமல் பச்சையாக இருக்க வேண்டும். நகத்தால் லேசாகக் கீறிப் பார்க்கும்போது தோல் மென்மையாக இருந்தால் அது இளசு, சமைக்க உகந்தது.
மொச்சைக்காய்
கொட்டை பெரிதாகத் தெரியும் காய் பார்த்து வாங்கவும்.
வாழைத்தண்டு
மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டுப் பகுதி சிறுத்தும் இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும்.
வாழைக்காய்
திண்ணமாக விடைத்து, தோல் நன்கு பரந்து ஒட்டி இருந்தால் அதுதான் நல்ல வாழைக்காய். காம்பு ஒடிந்த இடத்தில் வெள்ளையாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. வாங்கி வந்தபிறகு சுத்தமாகக் கழுவிவிட்டு தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.
வாழைப்பூ
மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா எனப் பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம். காம்பில் பால் காயாமல் பிசுக்கென்று இருந்தால் ரொம்ப பிரஷ். முதல் இதழை நீக்கிப் பார்த்தால், பூ உள்ளே கறுப்பாகத் தெரிய்தால் அது பழைய வாழைப்பூ.
வெங்காயம்
வெங்காயம் பெரிதோ, சிறிதோ இரண்டையுமே எடுத்து நன்றாக அழுத்திப் பாருங்கள். ஈரம் இருக்கக்கூடாது. திண்ணமாகக் காய்ந்து இருக்க வேண்டும். வால் ரொம்ப நீளமாக இருக்கும் வெங்காயத்தையும் தவிர்த்து விடுங்கள்.
வெள்ளை வெங்காயம்
நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்.
வெண்டைக்காய்
அடர்ந்த பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். ரொம்பவும் நீளமாக இருக்கக் கூடாது. மேற்புறம் வரிவரியாக விடைத்து கட்டை போல் இருக்கக் கூடாது. நுனியை வளைத்தால் ஒடிய வேண்டும். நுனியை உடைத்தால் படக்கென்று உடையவேண்டும், அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்தாலோ, இரண்டாகப் பிளந்தாலோ அல்லது காம்பு சுருங்கியிருந்தாலோ அது முற்றல்.
வெள்ளரிக்காய்
மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்.