* கோதுமை மாவில் வண்டு வராமல் இருப்பதற்காக, சிறிதளவு உப்பைக் கலந்து வைத்திட வேண்டும்.
* இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
* உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி அளவு ஊற்றிச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
* வற்றல் குழம்பு வைக்கும்போது, சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து, அதனைத் தூளாக்கி குழம்பில் சேர்த்து இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
* உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களைக் கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
* ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.
* காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
* வெங்காயப் பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து மாவுடன் சேர்த்துப் பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
* சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
* தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரைத்தால், சட்னி கசக்காமல் ருசிக்கும்.
* பீன்ஸ், பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் நன்றாகக் குழைய வேகவைக்க, முதலில் உப்புப் போடாமல் வேகவைத்து, அது வெந்த பிறகு உப்பு சேர்க்க வேண்டும்.
* பன்னீர் மசாலா செய்யும்போது பன்னீரை வறுத்தவுடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பன்னீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.
* சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
* பயணத்திற்கான சாப்பாட்டுப் பொட்டலம் கட்டும் போது, வாழை இலையைப் பின்புறமாகத் திருப்பி நெருப்புத் தணலில் லேசாகக் காட்டிய பின்னர் கட்டினால் இலை கிழியாமல் இருக்கும்.
* சாம்பார் பொடி மற்றும் ரசப்பொடி பாக்கெட்டுகளை பிரிஜ்ஜின் பிரீஸரில் வைத்து உபயோகித்தால். மணம் குறையாமல் இருக்கும்.
* மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடைக் கழற்ற முடியாமல் இருந்தால், அதைக் கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரைக் கீழே ஊற்றி விட்டுப் பிளேடைக் கழற்றினால் எளிதில் கழற்றலாம்.
* காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.
* சுவர்களில் ஆணி அடித்துத் துளை ஏற்பட்ட இடத்தில், சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப, வண்ணக் கலவையைப் பற்பசையில் கலந்து துளையிருக்கும் இடத்தில் அடைத்தால் துளை தெரியாமல் மறைந்துவிடும்.
* விஷேசங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு புடவையை களைந்து, அதை உடனே மடித்து வைக்க கூடாது. பட்டுப்புடவையினை நிழலில் காற்றாட இரண்டு அல்லது மூன்று மணி நேரம் உலரவிட்டு, பின்பு அதனை கைகளால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கலாம்.