பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரைக் காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி கிடைக்கின்றது. இதனைப் பனை வெல்லம், பனாட்டு, பனை அட்டு என்று சொல்வார்கள். தென் மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படும் பனை மரங்கள் மூலம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி எனும் ஆறு மாதங்கள் மட்டுமே பதனீர் கிடைக்கும். பங்குனி, சித்திரை மாதங்கள் பதநீர் இறக்குவது அதிகமாக இருக்கும். அந்தச் சமயங்களில் கருப்பட்டி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
வட்ட வடிவிலான இரும்புப் பாத்திரமே கருப்பட்டி காய்ச்சப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தாச்சு என்று பெயர். இதில் சுமார் 15 லிட்டர் பதநீரை ஊற்றி இரண்டு மணி நேரம் கிளறி, பதம் வந்ததும் எடுத்து அச்சுகளில் வார்த்து எடுத்தால் அதிகபட்சம் 3 கிலோ அளவிற்கேக் கருப்பட்டி கிடைக்கும். இதன் காரணமாக, கருப்பட்டி உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்கே மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், ஆண்டு முழுவதும் சில்லுக் கருப்பட்டியின் தேவையுள்ள காரணத்தால் அதில் வேறு சேர்க்கைகள் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, கருப்பட்டி வாங்கும் போது நல்ல தரமான கருப்பட்டிதானா? என்பதைக் கண்டறிந்து வாங்குதல் வேண்டும்.
கருப்பட்டியின் தரம்
* நல்ல தரமான கருப்பட்டி என்பது சீக்கிரமாகக் கரையாது. தண்ணீரில் ஒரு துண்டுக் கருப்பட்டியைப் போட்டால், அது முழுதாகக் கரைய ஒன்றரை மணி நேரம் ஆகும். போலியான கருப்பட்டி என்பது சீக்கிரமேக் கரைந்து விடும்.
* கருப்பட்டியை நாவில் வைத்து சுவைக்கும் போது கரிப்புத் தன்மையுடன் கூடிய இனிப்பு சுவையாக இருக்கும். அதுபோல், கருப்பட்டியில் உட்புறப் பகுதி என்பது கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலானதாக இருக்கும். இதுவேப் பளபளப்பாகக் காட்சி தந்தால் அது போலி கருப்பட்டி என்று கொள்ளலாம்.
* அதுபோல் விவரமறிந்தவர்கள் கருப்பட்டியின் அடிப்பாகத்தை நுகர்ந்து, சோதித்துப் பார்த்து வாங்குவது நலம். ஏனென்றால், உற்பத்திக் குறைவு, பனை மரம் இன்மை போன்றவைகளால் சற்று விலை கூடுதலாகத்தான் கருப்பட்டி கிடைக்கும்.
கருப்பட்டி மருத்துவக் குணங்கள்
* கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கச் செய்கிறது. இரத்த அழுத்தத்தைக் குறைத்து அதன் மூலம் இதயப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது.
* கருப்பட்டியுடன் சீரகம் கலந்து பொடித்து உண்ணும் போது நல்ல பசி ஏற்படுகிறது. குழந்தைகள் உணவு சாப்பிடாமல் அடம் பிடிக்கும் போது சீரகக் கருப்பட்டி உருண்டையைச் செய்து கொடுத்து விடுங்கள். பிறகு குழந்தைகள் நன்றாகச் சாப்பிட ஆரம்பித்து விடும். காலச்சூழலில் கருப்பட்டி பயன்பாடு குறைந்து விட்ட போதிலும், தற்போது மீண்டும் கருப்பட்டிப் பலகாரங்கள் பல கடைகளில் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.
* கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின், சிறிய துண்டு எடுத்துச் சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டி, எளிதில் உணவு செரிமானம் அடையச் செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது.
* கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டிக் காபியை குடிக்கலாம். ஏனெனில், உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போ ஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது, எனவே ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கிறது.
* கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்தப் பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்துக் களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலுப் பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.
கருப்பட்டியின் நன்மைகள்
* கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. கருப்பட்டி இயற்கையாகவே உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விடப் பாதிக்கும் கீழாகக் குறைக்கிறது.
* கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால்தான், இரத்த சோகைப் பிரச்சனை ஏற்படும். எனவே, இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்தால் இரத்த சோகை ஏற்படாது.
* நாம் சாப்பிடும் உணவு வகைகளிலிருந்து அருந்தும் குடிநீர் வரை அனைத்திலும் சிறிய அளவில் மாசுகள் நிறைந்திருக்கவேச் செய்கின்றன. இந்த மாசுகள் நமது உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது. சிறிதளவு கருப்பட்டியில், சிறிது சுண்ணாம்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கி இருந்த நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் தூய்மை அடையும்.
* நமது உடலில் அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகளாகும். வயது ஏற ஏற எலும்புகள் வலிமை குறைவதைத் தடுக்க முடியாது. கருப்பட்டி கால்சியம் மற்றும் தாது சத்துகள் அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.
* கருப்பட்டி அல்லது பனை வெல்லம் ஒற்றை தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். அதற்குக் கருப்பட்டியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது குடிக்கும் டீயில் கருப்பட்டி சேர்த்துக் குடிக்கலாம்.
* கர்ப்பிணிகள் கருப்பட்டியை உணவில் சேர்த்துக் கொள்வதால், அது உடலில் இரும்புச்சத்தின் அளவைச் சீராகப் பராமரிப்பதோடு, ஏழாவது மாதத்தில் இருந்து பெண்கள் சந்திக்கும் வலியைத் தடுத்து, பிரசவம் சுகமாக நடக்க உதவும்.
* கருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக இருக்கிறது. இனிப்பு உணவுகளில், நாம் பெரும்பாலும் வெள்ளைச் சர்க்கரையைச் சேர்த்துப் பயன்படுத்தும் இந்த வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டியை இனிப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குக் கால்சியம் அதிகம் கிடைத்து நமது உடலில் பற்களும், எலும்புகளும் வலுப்பெறும்.
* குளிர் காலங்களிலும், குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடும் போதும் ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கில் நீர் வடிதல் மற்றும் இருமல் போன்றவை ஏற்பட்டு, நம்மை மிகவும் அவதிக்குள்ளாக்குகிறது.
* குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் நெடுநாட்களாக இருக்கும் சளித் தொல்லை முற்றிலும் நீங்கும்.
* கருப்பட்டி ஒரு இயற்கைச் சுவையூட்டி. இதில் வேதிப்பொருள் ஏதும் கலக்காமல் தயாரிப்பதால், இது மிகவும் ஆரோக்கியமானது. மேலும் கருப்பட்டி சேர்த்து சமைக்கும் எந்த ஒரு இனிப்புப் பண்டமும் மிகவும் சுவையாக இருக்கும்.
* குழந்தை பெற்ற பெண்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமானதாகும். ஒரு சில புதிதாகக் குழந்தை பெற்ற பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பது குறைகிறது. இப்படியான பெண்கள் சுக்கு, மிளகுப் பொடியைக் கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். இந்தக் கருப்பட்டியில் இருக்கும் சத்துகள் தாய்ப்பால் மூலமாக குழந்தைகளுக்கும் சென்று சேரும்.
* நமது உடலைப் போர்வை போல் மூடி இருக்கும் தோல் உடலை வெளிப்புற வெப்பம் மற்றும் குளிரிலிருந்து பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கிறது. வயதாகும் போது பெரும்பாலானோருக்கு தோலில் சுருக்கங்கள் வருவதோடு பளபளப்பும் குறைகிறது. கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்குத் தோலில் ஈரப்பதம் இருப்பதோடு சருமம் பளபளப்பு அதிகரித்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
* கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் இது நரம்புகளின் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி புரியும்.
* பெரும்பாலானவர்களை பாதித்திருக்கும் நீரிழிவு நோய் வந்தவர்கள் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி சாப்பிடுவதை தவிர்த்து, கைக்குத்தல் அரிசியுடன் கருப்பட்டி கலந்து சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். நீரிழிவு நோயும் கட்டுப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படாமல் தடுக்கும். விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
* உப்பிய வயிறு மற்றும் உடலில் நீர்த்தேக்கப் பிரச்சனை கொண்டவர்கள், கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், இப்பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, உடனடி நிவாரணமும் கிடைக்கும்.
* ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பொட்டாசியம், மக்னீசியம், காப்பர், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்றவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, கிருமிகள் மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். ஒருவர் தினமும் கருப்பட்டியை உட்கொண்டால், நோய்கள் அண்டாமல் தடுக்கலாம்.
* ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவருக்கு நன்கு பசி எடுக்க வேண்டும். ஆனால், ஒரு சிலருக்கு உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளால் பசியின்மை ஏற்படுகிறது. சீரகத்தை நன்கு வறுத்து, சுக்கு கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை நீங்கி, நன்கு பசி எடுக்கும். உணவை எளிதில் செரிமானம் செய்யவும் உதவும்.
* பெண்களின் வாழ்வில் ஒரு முக்கியமான பருவம் பூப்படையும் காலமாகும். இக்காலத்தில் பெண்களின் கருப்பை பலம் பெறும் வகையிலான உணவுகளைச் சாப்பிட வேண்டும். பருவம் அடைந்த பெண்களுக்குக் கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து, உளுந்தங்களி செய்து சாப்பிடக் கொடுத்து வருவதால் அவர்களின் கருப்பை வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்கும். மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியைப் போக்கப் பனங்கருப்பட்டி சாப்பிடலாம்.
* உணவு உட்கொண்ட பின் கருப்பட்டியைச் சிறிது உட்கொண்டால், அது செரிமான உறுப்புக்களைத் தூண்டி, எளிதில் செரிமானம் நடைபெறச் செய்யும். அதுவும் கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும். ஒருவரது உடலில் செரிமானம் சீராக நடைபெற்றால், குடலியக்கமும் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும்.
* உடலில் இருக்கும் வாதம் தன்மை அதிகரிப்பதாலும், வாயுத் தன்மை அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும் உடலில் வாயு அதிகரித்து, தசைப்பிடிப்பு மற்றும் இன்ன பிற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கருப்பட்டியுடன் ஓமத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை விரைவில் நீங்கும்.
* அடிக்கடி விக்கல் வந்தால், வெதுவெதுப்பான நீரில் சிறிது இஞ்சித் துருவல் மற்றும் கருப்பட்டியைச் சேர்த்துக் குடித்துப் பாருங்கள். விக்கல் நின்று விடும்.