1. மோர் மிளகாயை தேவைக்கும் அதிகமாக வறுத்து, அது மிச்சமானால் மொறுமொறுப்பின்றி போய்விடும். இதை மிக்ஸியில் போட்டு தூள் செய்து வைத்துக் கொண்டால் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். இந்த மோர் மிளகாய்ப் பொடியில் சிறிது எண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
2. பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு எண்ணெயையோ அல்லது இரண்டு பல் பூண்டையோ போட்டால் பருப்பு வேகமாக வெந்து விடும்.
3. பொங்கல் செய்யும் போது, தாளிக்கப் பயன்படுத்தும் மிளகை அப்படியே முழுசாக போடுவதால் அதை வெளியில் எடுத்துப் போட்டுவிடும் வழக்கம் சிலரிடம் உள்ளது. இதற்கு மிளகை இலேசாகப் பொடித்துப் போட்டுத் தாளிக்கலாம்.
4. பாலை உறைக்கு ஊற்றும் போது அதில் கொஞ்சம் அரிசிக்கஞ்சியை கலந்தால் பெயர்த்து எடுக்கும்படி கெட்டித் தயிராக மாறிவிடும்.
5. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
6. பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
7. கேக்கிற்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரடி தேன் சேர்த்து பிசைந்தால் கேக்கில் முட்டை வாடை இருக்காது.
8. சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது அரை கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
9. சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய் இவற்றை வதக்கும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்கினால் கொழகொழவென்று சேராமல் சிவந்து முறுமுறுவென்று ஆகும்.
10. பாயாசத்திற்கு திராட்சைக்குப் பதிலாக பேரிச்சம் பழத்தைப் பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்துப் போட்டால் சுவையாக இருக்கும்.
11. வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்தால் பக்கோடா மொறு மொறுவென்று இருக்கும்.
12. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது கடலைமாவு உப்பு, மிளகாய்த்தூளை நீராகக் கரைத்து அதில் தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கை ஊறவிடுங்கள் பிறகு எடுத்து ஒரு மெல்லிய சுத்தமான துணியில் ஈரம்போக காய விடுங்கள் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சிப்ஸ் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.