* தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலைச் சீவி விட்டு கொஞ்சம் தட்டி, தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
* எவர்சில்வர் பாத்திரத்தில் இருக்கும் கரையை போக்க கரை இருக்கும் இடத்தில் சிறிது புளி வைத்து தேய்த்து கழுவினால் கறை போய் விடும்.
* காய்ந்த மிளகாயை வறுக்கும் போது சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
* பச்சை மிளகாயைக் காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
* சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது... நீர்த்தும் போகாது.
* நகைகளில் உள்ள அழுக்கை எடுக்க ஒரு தேக்கரண்டி உப்பை நீரில் கலந்து அதில் நகைகளை போட்டு, சிறிது நேரம் ஊற விடவும். பின் மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்தால் நகைகளில் உள்ள அழுக்குகள் போய் விடும்.
* தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.
* பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைத்தால் பால் பொங்கி கீழே வராது.
* முகம் பார்க்கும் கண்ணாடியை பழைய செய்தித்தாள் கொண்டு துடைத்தால் கண்ணாடி பளிச்சென்று ஆகிவிடும்.
* அரிசியில் பூச்சி வராமல் இருக்க, வர மிளகாய் அல்லது பிரியாணி இலை இதில் ஏதாவது ஒன்றை அரிசியில் போட்டு வைத்தால் பூச்சி வராது.
* ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு சிறிது வசம்பைத் தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
* ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க ஊறுகாயில் சிறிதளவு குக்கிங் வினிகர் சேர்த்து கலந்து வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.
* ஏலக்காயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பொடி செய்தால் ஏலக்காய் பொடியாக அரைத்து விடும்.
* பிரிஜ்ஜை சுத்தப்படுத்த 1/2 தேக்கரண்டி பற்பசையை எடுத்து தண்ணீரில் கலக்கி மெல்லிய காட்டன் துணியால் துடைத்து, பின்னர் வெறும் தண்ணீரில் துடைத்தால் பிரிஜ் பளிச்சென்று ஆகி விடும்.
* முட்டை வேக வைக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை தோல் எளிதாக உரிக்க முடியும்.
* வாழைப்பூ சுத்தம் செய்யும் போது, கையில் எண்ணெய் தடவிக் கொண்டால் கையில் காரை ஒட்டாது.
* கருவேப்பிலை நீண்ட நாள் வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, கருவேப்பிலையைத் தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது.
* ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.
* தினமும் உபயோகிக்கும் பாத்திரங்களை சோப்புத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் பளிசசென்று ஆகி விடும்.
* சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது.
* மிளகாய் வத்தலை மிக்சியில் தூள் செய்யும் போது சிறிது கல் உப்பைச் சேர்த்து திரித்தால் நன்கு தூளாகி விடும்.